வீட்டில் கேன் வாட்டர் பயன்படுத்துகிறீர்களா..? உங்களுக்கு காலரா, டெங்கு காய்ச்சல் வரும்!



உலக நிலத்தடி நீர் பயன்பாட்டில் 25% நிலத்தடி நீரை இந்தியா மட்டுமே  பயன்படுத்துகிறது...இந்தியாவிலேயே அதிக அளவில் நிலத்தடி நீரை  உறிஞ்சும் மாநிலம் தமிழகம்தான்... குடிநீர் தரத்தில் இந்தியாவிலே இரண்டாவது மோசமான இடத்தில் சென்னை இருக்கிறது...

கடந்த வாரம், நம் அடிப்படை தேவைகளில் அத்தியாவசிய கூறான நீர் பற்றிய இரு செய்திகள் முக்கிய கவனம் பெற்றன. ஒன்று, சென்னையில் விற்கப்படும் கேன் குடிநீரில் 45% தரமற்றவை என்பது.

மற்றொன்று, தமிழகம் முழுவதும் சட்டவிரோதமாக நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்ட பொது நல வழக்கு. அதில் “ஏழை மக்களுக்கு தண்ணீர் வழங்காத நிறுவனங்களை மேற்கொண்டு செயல்பட அனுமதிக்க வேண்டியதில்லை. அவைகளை உடனடியாக மூட உத்தரவிடலாம்...” என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இதனோடு “நிலத்திலிருந்து எடுக்கப்படும் தண்ணீரின் அளவை கணக்கிடும் Flow meter என்னும் கருவியைப் பொருத்து வதற்கு கட்டணம் நிர்ணயிக்க அரசு ஏன் கொள்கை முடிவெடுக்கவில்லை...” என்று அரசுக்கு கேள்வியும் எழுப்பினர்.இது குறித்து அடைக்கப்பட்ட (கேன்) குடிநீர் சங்கத்தின் பொறுப்பாளர்களிடம் பேசினோம்.

“நாளிதழில் வந்த செய்தியின் எதிரொலியாக பசுமை தீர்ப்பாயமே முன் வந்து விசாரித்த போது, கேன் குடிநீரில் 45% தரமற்றவை என்று சென்னை மாநகராட்சி 2016ம் ஆண்டு அறிக்கை சமர்ப்பித்தது. அதை ஏன் 2020ல் விவாதப் பொருளாக மாற்றியுள்ளனர் என்று தெரியவில்லை...” என்பதுடன் முடித்துக் கொண்டனர்.

சரி... நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த நிலை எப்படியிருக்கிறது என்று தெரிந்துகொள்ள மாநகராட்சியை தொடர்பு கொண்டோம். “ஃபுட் டிப்பார்ட்மெண்டிடம் பேசுங்கள்...” என்றார்கள். உடனே ஃபுட் டிப்பார்ட்மெண்ட் அலுவலகத்துக்கு போன் செய்தோம். ரிங் மட்டுமே சென்றது. யாரும் எடுக்கவில்லை.  நிலைமை இப்படி இருக்க, இந்த வழக்குகள் குறித்தும், கேன்களில் அடைத்து விற்கப்படும் குடிநீர் பாதுகாப்பானதா என்பது குறித்தும் விளக்கமான பதில் அளித்தார் சூழலியல் பொறியாளரான வீ.பிரபாகரன்.  

‘‘ஒரு கேன் வாட்டர் கம்பெனி நடக்க வேண்டுமென்றால் NOC மற்றும் ISI, FSSAI தரச் சான்றிதழ்கள் தேவை. இம்மூன்றும் யார் யாருக்கெல்லாம் இல்லையோ அந்த நிறுவனங்களை மூடினார்கள். தமிழகத்தில் இருக்கக் கூடிய 1800 குடிநீர் நிறுவனங்களில் 1200 நிறுவனங்களுக்கு நிலத்தடி நீர் எடுப்பதற்கான NOCயும், 132 நிறுவனங்களிடம் ISI, FSSAI- சான்றிதழ்கள் இல்லை என்பதும் தெரிய வந்தது. இதன் அடிப்படையில் கடந்த பிப்ரவரி மாதம் 650 நிறுவனங்களுக்கு சீல் வைக்கப்பட்டது.

அந்த நேரத்தில் சில நிறுவனங்கள் NOC வாங்க அவகாசமும், இந்த NOC முறையே தவறு என்று சில நிறுவனங்கள் வாதாடவும் செய்தனர்.
NOC ஏன் முக்கியம்? உலக நிலத்தடி நீர் பயன்பாட்டில் 25% நிலத்தடி நீரை இந்தியா மட்டுமே பயன்படுத்துகிறது. இதில் இந்தியாவிலேயே அதிக அளவில் நிலத்தடி நீரை உறிஞ்சும் மாநிலமாக தமிழகம் இருக்கிறது. இதனால் நிலத்தடி நீரின் பாதுகாப்பினை முன்வைத்து சில நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது. அதில் ஒன்றுதான் இந்த NOC.

Central Government Groundwater Authority Revised Guidelines on Ground water extraction - 2018ன் படி நிலத்தடி நீர் பகுதிகள் Safe, Semi-Critical, Critical & Over Exploited என நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டிருக்கின்றன. இதில் Critical, Over exploited பகுதிகளில் உள்ள நிலத்தடி நீரை பயன்படுத்தியும் Metro Water நீரை பயன்படுத்தியும் குடிநீர் ஆலைகள் இயங்கும் பட்சத்தில் அதற்கு NOC வழங்கப்படுவதில்லை.

இப்போது தமிழகத்தில் Over exploited பகுதிகள் அதிக அளவில் உள்ளன. இதேபோல் ISI, FSSAI சான்றிதழ் வாங்காத நிறுவனங்களின் தரம் குறைவாகவே இருக்கும்...” என்று கூறும் பிரபாகரன், “நாம் தினமும் குடிக்கும் கேன் வாட்டர் எங்கிருந்து வருகிறது, அது சுத்தமானதா என்று அறியாமலேதான் குடித்துக் கொண்டிருக்கிறோம்...’’ என்ற வெடிகுண்டை வீசினார்.

‘‘நாம் குடிக்கும் குடிநீர் சரியானதாக இருப்பதற்கு 33 பாரா மீட்டர்ஸ் மீட் இருக்க வேண்டும். அரசாங்கம் கொடுத்திருக்கும் அந்த 33 விஷயங்களும் சரியான அளவில் இருந்தால்தான் அது குடிப்பதற்கு உகந்த நீர். நம்மால் கலங்கியிருத்தல், நிறம் மாறி இருப்பது, சுவை, மணம்… போன்று ஆறு பாராமீட்டர்ஸ்தான் கண்டுபிடிக்க முடியும்.  

இது இல்லாமல் மெக்னீசியம், கால்ஷியம், சிங், அமோனியம்… என்று நிறைய கனிமங்கள் நீரில் கலந்திருக்கும். இவைகள் எல்லாம் சரியான அளவில் இருக்கிறதா என்பது முக்கியம். இதனோடு குரோமியம், மெர்குரி, லெட்… போன்ற விஷத்தன்மை கொண்ட கனிமங்களும் தொழிற்சாலைகள் நிறைந்த பகுதிகளில் கலந்துவிடும். அதிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ISI, FSSAI சான்றிதழ் வைத்திருப்பவர்களும் வருடம் ஒரு முறை ஆடிட்டிங் வரும்போது மட்டும் சோதனை செய்கிறார்களா அல்லது மாதா மாதம் செய்கிறார்களா என்பது நமக்குத் தெரியாது. இப்படி மாதம்தோறும் பரிசோதனை செய்யப்படாத நிறுவனங்கள் பல இங்கிருக்கின்றன. அவர்கள் கொடுக்கும் குடிநீர் தரமானதா என்பது கேள்விக்குறிதான்.

ஏன் இப்படிச் சொல்கிறோம் தெரியுமா..? இந்தியாவில் மட்டும் ஆண்டுக்கு 2 லட்சம் பேர் பாதுகாப்பற்ற குடிநீர் குடிப்பதால் உயிரிழக்கிறார்கள் என்கிறது புள்ளிவிபரம். இதை புறக்கணிக்க முடியாது.சட்டம் என்ன சொல்கிறது..? மக்களுக்கு பாதுகாப்பான குடிநீரை இலவசமாக வழங்குவது அரசுகளின் கடமை என்கிறது.

மக்கள் கேன் குடிநீர் மீது வைத்திருக்கும் நம்பிக்கையில் ஒரு சதவிகிதத்தைக் கூட குழாய் குடிநீரில் வைக்கவில்லை. இதனால்தான் நாடு முழுவதும் 6 ஆயிரம் அனுமதி பெற்ற கேன் குடிநீர் ஆலைகள் இயங்குகின்றன. இதில் 55% ஆலைகள் தென் இந்தியாவில்தான் உள்ளன. தமிழகத்தில் மட்டும் 1800 ஆலைகள். இப்படி பொதுவில் கிடைக்க வேண்டிய நீர் வணிகப் பொருளாக மாற்றப்பட்டதன் முக்கிய காரணம் அரசு குழாய் குடிநீரின் தரத்தைக் குறைத்ததுதான்.

கடந்த 2019 நவம்பர் மாதம் Bureau of Indian Standards (BIS) இந்தியாவில் உள்ள பெரும் நகரங்களில் மக்களுக்கு வழங்கப்படும் குழாய் குடிநீரின் தரத்தை சோதித்து ஆய்வறிக்கை ஒன்றை வெளியிட்டது. இந்த ஆய்வுக்காக சென்னையில் 10 இடங்களில் (அயனாவரம், கொளத்தூர், பெரம்பூர், முகப்பேர், கிண்டி, சோழிங்கநல்லூர், அடையார், வேளச்சேரி, தி.நகர், எழும்பூர்) ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த 10 இடங்களிலும் மக்களுக்கு பாதுகாப்பற்ற குடிநீரே வழங்கப்படுவதும், குடிநீர் தரத்தில் சென்னை இந்தியாவிலே இரண்டாவது மோசமான இடத்தில் இருப்பதும் தெரியவந்தது. சென்னையில் பரிசோதிக்கப்பட்ட குடிநீர் மாதிரிகளில் Boron, chloride, fluoride, ammonia, Turbidity போன்றவையும், மலேரியா, காலரா, டெங்கு, வயிற்றுப்போக்கு, Hepatitis E போன்ற  நோய்த் தொற்றுகளைப் பரப்பக்கூடிய E-coli, Coliform பேக்டீரியாக்களும் அதிக அளவில் இருப்பது கண்டறியப்பட்டது.

அதாவது, சுத்திகரிக்கப்பட்டு அனுப்பப்படும் குடிநீர் 30 - 35 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் பழமையான துருப் பிடித்த குழாய்கள் மூலம் வருவதால் மாசு அடைகிறது.பாதுகாப்பில்லாத குழாய் குடிநீரை குடிப்பதால் மக்களுக்கு நீர் தொற்று நோய்கள் ஏற்படும் அபாயம் இருப்பதால் அரசு விரைந்து நடவடிக்கை எடுத்து, சேதம் அடைந்திருக்கும் பழைய குழாய்கள், கசிவு மற்றும் உடைப்பு ஏற்பட்டிருக்கும் குழாய்கள், துருப்பிடித்திருக்கும் குழாய்கள், தண்ணீர்த் தொட்டிகள், சாக்கடை நீர் குடிநீருடன் கலக்கும் இடங்கள்… ஆகியவற்றைக் கண்டறிந்து சரி செய்ய வேண்டும்...’’ என்கிறார் வீ.பிரபாகரன்.  

அன்னம் அரசு