தல! sixers story-21 ஒருநாள் திருடன்!இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த ஜான் ரைட் ஓய்வு பெற்றபோது, அணி தன்னுடைய கட்டமைப்பை முற்றிலுமாக மாற்றக்கூடிய நிலை ஏற்பட்டிருந்ததை அப்போதைய கேப்டன் கங்குலி உணர்ந்திருந்தார்.புதிய பயிற்சியாளராக பேட்டிங் ஜாம்பவான் கிரேக் சாப்பலை நியமிக்க வேண்டுமென முதலில் பரிந்துரைத்தவரும் அவரே.

கறாரான கிரேக் சாப்பல், பயிற்சியாளர் ஆவது குறித்த பதற்றம் அணியின் முன்னணி வீரர்கள் சிலருக்கு இருந்தது.ஏனெனில் -பவுலிங்கில், பேட்டிங்கில், ஃபீல்டிங்கில் என்னதான் சாதித்தாலும் முன்னணி வீரர்களாக இருந்தாலும் பயிற்சியில் எல்லோரையும் போல முழுமையான ஈடுபாட்டோடு செயல்பட வேண்டும். ஃபிட்னஸ்ஸில் கவனம் செலுத்த வேண்டும் என்றெல்லாம் கிரேக் சாப்பல் எதிர்பார்த்தார்.

பின்னாளில் பல சர்ச்சைகளுக்கு சாப்பல் உள்ளானார் என்றாலும், அவர் எழுதிவிட்டுப் போன இந்த கறாரான விதியே இன்றளவும் இந்திய அணியை கரை சேர்த்துக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுக்க முடியாது.புதுமுகமான தோனியைப் பொறுத்தவரை ‘ராமன் ஆண்டால் என்ன, ராவணன் ஆண்டால் என்ன’ என்கிற நிலைதான்.

பாகிஸ்தானுடனான விசாகப்பட்டினம் போட்டியில், தான் யார் என்பதை ஏற்கனவே நிரூபித்திருந்தார் தோனி.இருப்பினும் -அணிக்கு, தான் தவிர்க்கப்பட முடியாத வீரர் என்பதை நிலைநிறுத்தும் ஒரு வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்திருந்தார்.அப்போது இலங்கை அணியுடனான டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டித் தொடர் நடந்தது.உலகையே தன் மாயச்சுழலால் அச்சுறுத்திக் கொண்டிருந்த முத்தையா முரளிதரன், இலங்கை உருவாக்கிய மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளரான சமிந்தா வாஸ் ஆகியோரை எதிர்கொள்ளும் அற்புதமான வாய்ப்பு.

இத்தொடருக்கு ராகுல் திராவிட், கேப்டனாக பொறுப்பேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரே அடிப்படையில் விக்கெட் கீப்பர் என்றாலும், தோனியும் அணியில் இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.முதல் போட்டியில் சேவாக்கும், டெண்டுல்கரும் களமிறங்கினர். கங்குலியைப் போலவே திராவிட்டும் தன்னைத்தான் ஒன்டவுனில் களமிறக்குவார் என்று நினைத்து காலுறை மாட்டி தயாராக இருந்தார் தோனி.

ஆனால் -சேவாக்கின் விக்கெட் விழுந்ததுமே யாரும் எதிர்பாராவிதமாக பவுலரான இர்ஃபான் பதானை பேட்டிங் செய்ய அனுப்பினார் திராவிட்.
இந்த அதிரடி மாற்றத்துக்கு பலன் இருந்தது. 70 பந்துகளில் 83 ரன்கள் விளாசினார் பதான். அதுதான் ஒருநாள் போட்டியில் அவரது அதிகபட்ச ஓட்டமும் கூட.

டெண்டுல்கர் 93 ரன்கள், திராவிட் 85 ரன்கள் விளாசினார்கள். ஆறாவது பேட்ஸ்மேனாகத்தான் தோனிக்கு வாய்ப்பு கிடைத்தது. இரண்டு சிக்ஸர்கள், மூன்று பவுண்டரிகளோடு 38 ரன்கள் அடித்தார்.350 ரன்கள் எடுத்த இந்திய அணி, 152 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கையை ஊதித் தள்ளியது.

அடுத்த போட்டியில் 122 ரன்களிலேயே இலங்கை அணி ஆல் அவுட் ஆகிவிட, இரண்டே விக்கெட்டுகளை இழந்து 21வது ஓவரில் இலக்கை எட்டியது இந்தியா. இப்போட்டியில் தோனிக்கு ஆட வாய்ப்பே கிடைக்கவில்லை.அக்டோபர் 31, 2005 அன்று ஜெய்ப்பூரில் நடந்த போட்டிதான் தோனியின் இடத்தை இந்திய அணியில் நிரந்தரப்படுத்தியது.

முதலில் ஆடிய இலங்கை சங்கக்கராவின் அபாரமான ஆட்டத்தால் (138 ரன்கள் - நாட் அவுட்) 298 ரன்கள் எடுத்தது. ஜெயவர்த்தனே (70 ரன்கள்) இந்த இமாலய ஸ்கோரை எட்டுவதற்கு உதவியாக இருந்தார்.பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு இவ்வளவு பெரிய ஸ்கோரை சேஸிங் செய்வதெல்லாம் அசாத்தியம்.வழக்கம்போல வீரேந்திர சேவாக்கும், சச்சின் டெண்டுல்கரும் களமிறங்கினார்கள்.முதல் ஓவரிலேயே சச்சின் அவுட்.ஒன்டவுனுக்கு இம்முறை தோனியை அனுப்பினார் திராவிட்.

பெரிய ஸ்கோரை எட்ட வேண்டும் என்கிற நிலையில் விக்கெட்டை இழந்துவிடாமல் நிதானமான ஆட்டத்தையே இருவரும் தொடர்ந்தார்கள்.
15வது ஓவரில் 100 ரன்களை எட்டுவதற்கு முன்பாக சேவாக்கும் அவுட்.அனுபவமிக்க சச்சின், சேவாக் இருவரின் விக்கெட்டையும் இழந்த நிலையில் இந்திய அணிக்கு நிச்சய தோல்வி என்றே அனைவரும் கருதினார்கள்.

ஒருமுனையில் திராவிட் போராடிக் கொண்டிருக்க மறுமுனையிலோ, இலங்கைப் பந்து வீச்சாளர்களை அச்சம் சிறிதுமின்றி பவுண்டரிகளும், சிக்ஸர்களுமாக வறுத்தெடுத்துக் கொண்டிருந்தார் தோனி.டெண்டுல்கரின் விக்கெட்டை வாஸ் கபளீகரம் செய்திருக்க, ஏற்கனவே சேவாக்கை தூஸ்ரா பவுலிங் மூலம் எல்பிடபிள்யூ செய்திருந்த முரளிதரன், திராவிட்டின் விக்கெட்டையும் பறித்தார்.

அடுத்து வந்த யுவராஜ்சிங்கும் 18 ரன்களோடு திருப்திப்பட்டுக் கொண்டார்.இந்தியாவின் பேட்டிங் வரிசையையே சீர்குலைத்துவிட்ட இலங்கை அணியால் ஒன்மேன் ஆர்மியாக செயல்பட்ட தோனியை எதுவுமே செய்ய முடியவில்லை.ஒருமுனையில் விக்கெட்டுகள் விழுந்துகொண்டிருந்தாலும், மறுமுனையில் ராஞ்சிப் புயல் வலுவாக நிலைகொண்டிருந்தது.பத்து சிக்ஸர்கள், பதினைந்து பவுண்டரிகள், 183 ரன்கள்.

47வது ஓவரின் முதல் பந்தை சிக்ஸருக்கு வின்னிங் ஷாட்டாக தோனி அடிக்க, 303 ரன்கள் அடித்து வெற்றிக் கோட்டை எட்டியது இந்தியா.

அதுநாள் வரை ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்சம் என்பது ஆஸ்திரேலியாவின் கில்கிறிஸ்ட் அடித்த 172 ரன்கள்தான்.
அந்த சாதனையை முறியடித்தார் தோனி.

இருபது ஆண்டுகள் கடந்த நிலையிலும் இன்றைய தேதி வரையிலும் அதுவே உலக சாதனையாக நீடிக்கிறது.சுவாரஸ்யமான ஒரு புள்ளிவிவரம் என்னவென்றால், இன்று வரையில் இலங்கை அணியைச் சேர்ந்த ஒரு விக்கெட் கீப்பரின் அதிகபட்ச ரன்கள் என்கிற சங்கக்கராவின் (138 நாட் அவுட்) சாதனை படைக்கப்பட்ட அதே போட்டியிலேயே பதிலடியாக இந்திய கிரிக்கெட் அணியைச் சேர்ந்த விக்கெட் கீப்பரான தோனி, உலக சாதனை படைத்தார் என்பதே.

“ரசிகர்களின் உள்ளங்களை மட்டுமல்ல, இந்த ஒரு நாள் மொத்தத்தையுமே திருடிவிட்டார் தோனி...” என்று புகழ்ந்தார் எதிரணி கேப்டன் அட்டப்பட்டு.
தொடர்ச்சியாக 50 ஓவர்கள் விக்கெட் கீப்பிங். அடுத்து அவருக்குக் கிடைத்த ஓய்வு ஒரே ஒரு ஓவர் கூட இல்லை. தொடர்ந்து 47 ஓவர்கள் களத்தில் நின்று நாட் அவுட்டாக பேட்டிங் செய்ததின் மூலம் தன்னுடைய உடல் மற்றும் உள்ளத்தின் உறுதியை உலகுக்கு நிரூபித்தார் தோனி.

அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் அவுட் ஆவதைப் பற்றி கவலையே படாமல் ‘தன் பணி ரன் சேகரிப்பதே’ என்று பந்தை எல்லைக்கோட்டுக்கு விரட்டுவதே தன் வாழ்நாள் கடமையென ஆடும் பேயாட்டம், அன்று தொடங்கி தொடர்ந்து வெளிப்பட்ட தோனியின் தனித்துவம்.

இன்று உலகின் ஒவ்வொரு அணியுமே தன்னுடைய வீரர்களிடம் இத்தகைய அர்ப்பணிப்பைத்தான் எதிர்பார்க்கிறது. அதற்கு அவர்கள் உதாரணம் காட்டுவது தோனியின் இந்த இமாலய சாதனையையே.

(அடித்து ஆடுவோம்)

 - யுவகிருஷ்ணா

ஓவியம்: அரஸ்