பொஹீமியன் ராப்சோடி



இசையின் மீது காதல் கொண்டவர்கள் தவறவிடக்கூடாத ஓர் ஆங்கிலப் படம், ‘பொஹீமியன் ராப்சோடி’. ஹாட்ஸ்டாரில் காணக்கிடைக்கிறது.
உலகையே உலுக்கிய ஒரு கோர நிகழ்வு எத்தியோப்பியா பஞ்சம். 1983 முதல் 1985 வரை நீடித்த இந்தப் பஞ்சத்தில் 12 லட்சம் பேர் மரணமடைந்தனர். 4 லட்சம் பேர் எத்தியோப்பியாவை விட்டு அகதி களாக வெளியேறினர். 2 லட்சம் குழந்தைகள் அனாதைகளாகினர்.

எத்தியோப்பியா பஞ்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக நிதி திரட்ட உலகெங்கும் இசை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் ஜூலை 13, 1985ல் லண்டன் வெம்பிளி ஸ்டேடியத்தில் நடந்த ‘லைவ் எய்ட்’ என்ற நிகழ்ச்சி குறிப்பிடத்தக்கது. இதில் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘குயின்’ இசைக்குழுமத்தின் 21 நிமிட இசை நிகழ்ச்சி ராக் இசை வரலாற்றிலேயே தலைசிறந்த ஒரு நிகழ்வாக இன்றும் கொண்டாடப்படுகிறது. இதற்கு மூல காரணமாக இருந்தவர் குயினின் முன்னணி பாடகரான ஃப்ரடி மெர்குரி. இவரது அசாதாரணமான வாழ்க்கைக் கதையே இந்தப் படம்.

எழுபதுகளில் லண்டன் விமான நிலையத்தில் பேக்கேஜ்களைக் கையாளும் வேலை செய்து வருகிறார் ஃப்ரடி. நன்றாக பாடக்கூடிய ஃப்ரடிக்கு பல் வரிசை சீராக இல்லை. இதை சரி செய்தால் குரல் வளமாகும் என்று பலரும் அவருக்கு ஆலோசனை சொல்கின்றனர். எதையும் கேட்காமல் அந்தப் பற்களுடனே பாடி அசத்துகிறார். அவருக்கு திறமைசாலியான டிரம்மர் மற்றும் கிதார் இசைக்கலைஞரின் அறிமுகம் கிடைக்கிறது.

இவர்களுடன் இணைந்து ‘குயின்’ என்ற இசைக்குழுமத்தை ஆரம்பிக்கிறார். இந்தக் குழுமம் ராக் இசையில் புது மாற்றங்களைச் செய்து உலகம் முழுவதும் கச்சேரிகளை நடத்துகிறது.இன்னொரு பக்கம் அவர் ஆண், பெண் என்று இரு பாலினரிடமும் உறவில் ஈடுபடுகிறார். இது சமூகத்தில் அவருக்கு பல நெருக்கடிகளைத் தருகிறது. இசைக்குழுமத்துக்குள்ளும் பிரச்னைகள்.

தனியாக கச்சேரி நடத்தத் தொடங்குகிறார். ஆனால், அவரால் திறம்பட செயல்பட முடியவில்லை. இதுபோக தனக்கு எய்ட்ஸ் என்று தெரியவர உடைந்துபோகிறார். ஆனால், பாடுவது மட்டுமே அவருக்கு ஆறுதலாக இருக்கிறது. இந்நிலையில் ‘லைவ் எய்ட்’ நிகழ்ச்சி வருகிறது. மீண்டும் குயினுடன் இணைந்து அந்த நிகழ்ச்சியில் இடைவிடாமல் ஃப்ரடி பாடுகிறார். இந்தச் சம்பவம் ராக் இசையில் மறக்கமுடியாத ஒரு நிகழ்வாக மாறுவதோடு படம் முடிகிறது.

சிறந்த நடிகர் உட்பட நான்கு ஆஸ்கர் விருதுகளை அள்ளிய இந்தப் படத்தின் இயக்குநர் ப்ரையன் சிங்கர். ஃப்ரடி வாழ்ந்த வாழ்க்கையை அருகில் இருந்து பார்ப்பதைப் போல ஒரு பர்ஃபாமென்ஸைக் கொடுத்து ஆஸ்கரையும் தட்டியிருக்கிறார் நடிகர் ராமி மாலிக். ஃப்ரடி எழுதிய பாடலான ‘பொஹீமியன் ராப்சோடி’யையே தலைப்பாக வைத்தது சிறப்பு. எய்ட்ஸ் பாதிப்பால் 45வது வயதில் மரணமடைந்தார் ஃப்ரடி. ‘குயின்’ இசைக்குழுமம் இன்றும் இயங்கிக்கொண்டிருக்கிறது.