ஜிகினா



மீனாக்காவிற்குக் கதை சொல்ல ரொம்பப் பிடிக்கும். அதன் காரணமாகவே அவளைச் சுற்றி எப்போதும் ஒரு கூட்டம் இருக்கும்.

முதல்நாள் சினிமா பார்க்க முடியாத ஸ்டோர் குடித்தனக்காரர்கள் எல்லாம் படம் ரிலீசான மறுநாள் மீனாக்கா வீட்டில் கூடுவது வழக்கம்.
அக்கா எழுத்து போடுவதில் தொடங்கி ஒவ்வொரு காட்சியாக விரித்துக்கொண்டே போகும்போது கேட்பவர்கள், ஷோபா அழுதால் அவர்களும் அழுவார்கள், ராதிகா செருப்பால் வில்லனை அடித்தால் அவர்களும், “நல்லா வேணும் அந்தக் கடன்காரனுக்கு...” என்று பல்லைக் கடிப்பார்கள்.

மொத்தம் ஐந்து வீடுகள் வரிசையாக இருக்கும் ஸ்டோர் அது. ‘ஆனந்த பவனம்’ என்று பெயர். அருகில் ஒரு ப்ரைமரி பள்ளிக்கூடம் வேறு இருக்கும். தினமும் பிள்ளைகள் வரிசையாக நின்று, ‘நீராரும் கடலுடுத்த...’ பாடி முடிக்கும் போதுதான் எல்லா வீடுகளிலும் உலை பொங்கும்.

முதல் பீரியட் முடிந்து மணி அடித்து பாதி பிள்ளைகள் வாசலில் ஒரு பெஞ்சில் நான்கைந்து கூடைகளில் நவ்வாப்பழம், கமர்கட்டு, ஜவ்வு மிட்டாய், கல்கோனா போன்ற தின்பண்டங்களை விற்கும் பாட்டியிடம் பத்து பைசாவிற்கு ஏதாவது திங்க வாங்க வரும்போதுதான் மீனாக்கா வெளியில் வந்து ஒரு நோட்டமிடுவாள்.

மீனாக்கா தலை தெரிந்ததும் அதற்காகவே காத்திருந்தது போல ஓரிரண்டு பெண்கள் சிரித்தபடி புடவைத் தலைப்பில் கையைத் துடைத்துக் கொண்டு வெளியில் வருவார்கள். நானும் குடுகுடுவென்று என் அம்மா தலைப்பின் பின்னால் ஓடுவேன்.“பரிமளா உங்க வீட்டில் இன்னிக்கு என்ன மோர்க்குழம்பா?” என்றதும் பரிமளா “எப்படிக்கா கரக்டா கண்டுபிடிச்சீங்க...” என்றால் அம்மா “ஆமா உன் வீடு கடல் தாண்டி இருக்கு. எல்லாம் பத்துக்கு பத்து ரூமு, தீப்பெட்டி அடுக்குனா மாதிரி அடுத்தடுத்து... இதில் கண்டுபிடிக்கப் பெருசா என்ன இருக்கு?” என்பாள்.

அதற்குள் ரேஷன் கடையில் வெள்ளன சென்று ரேஷன் பொருட்களை வாங்கிக் கொண்டு அவுதி அவுதியாக சௌந்தரம் நுழைந்தபடி “மீனா, கதையை ஆரம்பிச்சிடாதே... நான் ரெண்டு நிமிசத்தில் பையை வீட்டில் வச்சுட்டு வர்றேன்...” என்று ஓடி வருவாள். சில நாட்கள் அப்படியே ரேஷன் பையோடு மீனாக்கா வீட்டுத் திண்டில் சாய்ந்து உட்கார்ந்து விடுவதும் உண்டு.

மற்ற குடித்தன வீடுகளுக்கு இல்லாத வசதி மீனா வீட்டிற்கு மட்டும் உண்டு. மீனா வீடு அந்த லைனில் கடைசி வீடு என்பதால் அந்த வரிசையைத் தாண்டி பெரிய சுவர் எழுப்பி அதற்குப் பின்னே பொதுக் கழிப்பறைகளையும் குளியல் அறைகளையும் வீட்டுக்காரர் கட்டி, முன்னால் கொஞ்சம் இடம் இருந்தது என்று அந்தச் சுவரில் நீளமாக ஒரு திண்ணையைக் கட்டி விட்டிருந்தார்.

லைன் குடித்தனக்காரர்கள் மொட்டை மாடியில் போய் வற்றல், வடகம் காயப்போட சிரமப்பட வேண்டாம் என்பது அவரது நோக்கம். நாளாவட்டத்தில் பக்கத்துப் பள்ளிக்கூடத்தில் கல்யாண முருங்கை மரம் ஒன்று நிகுநிகுவென்று வளர்ந்து நிழலை அந்தத் திண்ணை மீது பரப்பியதால் ஸ்டோர் குடித்தனப் பெண்கள் கூடும் வட்டமேஜையானது அந்தத் திண்ணை.

“நேத்து படம் பார்த்துட்டியாக்கா?’’ என்று கோகிலா கேள்வியைத் தொடங்கினாள்.“டைரக்டரு புதுசு போல..?” என்ள் நான்காம் வீட்டில் வசிக்கும் சுகந்தி.“புதுசு இல்லை, ஏற்கனவே சத்யராஜ், ராதிகாவை வச்சு ஒரு படம் எடுத்துட்டாரு...” என்றாள் பரிமளம்.
“உங்க வூட்டுக்காரு உன்னை வச்சுத் தாங்குறாருடி. லைப்ரரிக்காரன் தினம் ஒரு புஸ்தகமா கொண்டுவந்து போடுறான். அதான் சினிமா நியூசெல்லாம் டாண் டாண்ணு விரல் நுனியில வச்சிருக்க...” என்று கோகிலம் புகைந்தாள்.

“ஏன் நீயும் உன் புருஷன் கிட்ட சொல்லேன்?” என்று சௌந்தரம் தூண்டி விட்டாள்.“ஆமாம். உடனே வாங்கிக் கொடுக்கப்போறாரு பாரு. பெரியவன் ரெண்டு நாளா ஜாமெட்ரி பாக்ஸ் வேணும்னு ரகளை பண்றான், அதுக்கே வழியைக் காணும்...” என்று கோகிலம் பெருமூச்சு விட்டாள்.
“இருடி, என் கடைசி பொண்ணு போனவாரம்தான் பரீட்சை முடிச்சா. எடுத்து வச்சிருப்பா... வாங்கித் தர்றேன்...” என்றாள் அம்மா பரிவாக.
“ஆளாளுக்கு அவங்க ராமாயணம் பேசாதீங்க. அக்கா மீனாக்கா நீ கதையைச் சொல்லு...”
“ரேவதி அப்பாவுக்கு ரெண்டு பொண்ணுங்க. அவரு ஒரு மிடில் கிளாஸ் ஆசாமிதான்...”
“நம்மளை மாதிரி...”

“நாம லோவர் மிடில் கிளாஸ்டி...” என்றாள் பரிமளம்.“குறுக்க குறுக்க பேசினா நான் கதையை நிப்பாட்டிடுவேன்...” மீனாக்கா மிரட்டினாள்.
“சொல்லுக்கா...”“ரெண்டாவது பொண்ணை பொண்ணு கேட்டு மோகன் வர்றான். நம்ம மைக் மோகன்தாண்டி. டீசண்டா பண்ணியிருக்காண்டி. பார்க்கறதுக்கும் ஷோக்கா இருக்கான்...’’ மீனாக்கா தன்னை மறந்து சொல்லத் தொடங்கினாள்.

ஒவ்வொரு காட்சியிலும் ரேவதி என்ன உடை அணிந்திருந்தாள்... நகைகளின் அழகு... என சகலத்தையும் அக்கா விவரித்தாள். என் அம்மா உட்பட ஸ்டோர் பெண்கள் அனைவரும் துருவித் துருவி இந்தத் தகவல்களையும் பெற்றனர். ‘‘ஃபர்ஸ்ட் நைட்டில் கிரே கலரில் சிவப்பு பார்டர் போட்டு ஒரு பட்டுப் புடவை கட்டியிருப்பா. சும்மா டக்கரா இருக்கும். பி.சி.ராம்னு புதுசா யாரோ கேமரா. ஒவ்வொரு ஃபிரேமிலும் ரேவதிய எவ்ளோ அழகாக் காட்டியிருக்காங்க தெரியுமா! கல்யாணம் முடிஞ்சு மோகன் அவளை தில்லிக்குக் கூட்டிட்டுப் போயிடறான்.

வீ.கே.ராமசாமிதான் மோகனோட மேனேஜர். பொண்டாட்டியை மயக்கணும்னா அவளுக்கு முதலில் ஒரு அசத்தலான பரிசு வாங்கிக் கொடுக்கணும்னு சொல்றாரு. மோகன் என்ன பண்றான், அவளை ஒரு ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயி விதம் விதமா திங்க வாங்கிக் கொடுத்துட்டு, வர்ற வழியில் உனக்கு என்ன வேணும்னு மோகன் கேட்க... ரேவதி என்ன கேட்பா சொல்லு?” என்று மீனாக்கா கோகிலாவைப் பார்த்துப் பொடி வைத்து நிறுத்தினாள்.

‘‘காசு மாலையா?”
“பிளசரா?”
ஆளாளுக்கு ஒவ்வொரு பொருளைச் சொன்னார்கள். “விவாகரத்து கேட்பா...” சிரித்தாள் மீனாக்கா.“அடிப்பாவி இந்தக் காலத்துப் பிள்ளைங்களுக்கு விவாகரத்து அத்தனை சல்லிசாப் போயிடுச்சு...” என்று சௌந்தரம் உறுமினாள். அம்மாவும் உடன் தலையாட்டினாள். “இயக்குநரு இங்கதான் ட்விஸ்ட் வைக்கிறாரு. ரேவதியோட ஃபிளாஷ்பேக்கைச் சொல்றாரு...” தொடங்கிய மீனாக்கா எழுந்து கொண்டாள்.

அவள் புருஷன் நீலமேகம் சைக்கிளில் வந்து கொண்டிருந்தான். காக்கைகள் கூட்டத்தில் அண்டங்காகம் வந்தது போல அத்தனை பெண்களும் கலைந்து போயினர். உள்ளே நுழைந்த நீலமேகம் முகத்தில் சுரத்தே இல்லை.நீலமேகத்திற்கு நிரந்தரமான வேலை எதுவுமில்லை. வாய்ப்பந்தல் போடுவதில் சாமர்த்தியசாலி. ஒருமுறை கமிஷன் ஏஜண்டாக அவதாரம் எடுப்பான். ஒருமுறை சரக்கைக் கைமாற்றி விடும் தரகனாக அவதாரம் எடுப்பான். இன்னொரு முறை வீடு புரோக்கர். மற்றொரு முறை காய்கறிகளை மொத்தமாக வாங்கி கடை கடையாகப் போட்டு வருவேன் என்பான். சீட்டுப் பிடிப்பதாகச் சொல்வான்.

அந்தப் பேச்சில் மயங்கித்தான் மீனா அவளது பதின்பருவத்தில் அவன்மீது காதல் கொண்டு அம்மா அப்பாவை எதிர்த்து இந்த லைன்வீட்டுக் குடித்தனத்தில் வந்து விழுந்தாள். நீலமேகத்திற்கு சீட்டு, ரேஸ் போன்ற பழக்கங்களும் உண்டு. எத்தனை நாள்தான் ஒட்டுத் தோகையில் பெண்மயிலின் முன் நடனம் ஆடுவது? கடனுக்கு மேல் கடன் வாங்கி அவனது எல்லா இறகுகளும் உதிர்ந்து வெறும் நரம்புகளுடன் கூடிய தோகையுடன் நின்றான். ஆனால், அவனது வீம்பும் ஆணவமும் குறையவே இல்லை. மீனாவை அடிப்பான். வீட்டில் உள்ள பாத்திரங்களை வீசி எறிவான்.
“இன்னிக்கு இவ்வளவு சீக்கிரம் வந்துட்டீங்களே?”

“கள்ள புருஷனை இன்னும் வெளியில் அனுப்பலியா? அவன் போனப்பறம் வேணா வரட்டுமா?”மற்ற குடித்தனக்காரர்களுக்குக் காது கூசி, ச்சீ என்றானது.“.... மூடிக்கிட்டு சோத்தைப் போடுடி..” என்றான் நாராசமாக. தெரு முழுக்க கேட்டது.மொத்தம் மூன்றே அறைகள் அந்த வீட்டில். ஒரு வெராந்தா, ஒரு கூடம், ஒரு சமையல்கட்டு. சமையல்கட்டில் ஒரு பலகையைப் போட்டு முன்னால் தட்டு ஒன்றை வைத்தாள்.“யாரு வந்து கேட்டாலும் நான் இன்னும் டியூட்டியிலிருந்து வரலைன்னு சொல்லு. செல்லையா பணம் வசூலிக்க வருவான் போலிருக்கு...”
“ஏன் கடனுக்கு மேல் கடன் வாங்கறீங்க?”

எங்கிருந்து அவனுக்கு ஆத்திரம் வந்ததோ தெரியாது. பலகையின் முன்பு வைத்திருந்த தட்டை எடுத்து வீசினான். அவளது நெற்றிப் பொட்டில் பலமாகத் தாக்கி கீழே விழுந்து சிதறியது. “தரித்திரம் புடிச்சவளே. உன்னைய ஏன்தான் அன்னிக்கு அந்தப் பொறுக்கிப் பையன் கிட்டேயிருந்து பஸ் ஸ்டாண்டில் காப்பாத்தினேனோன்னு இன்னிக்கு வருத்தப்படறேன். உன்னை என்னிக்குக் கட்டிக்கிட்டேனோ அன்னியிலருந்துதாண்டி எனக்குக் கேடு காலம்...”மீனாக்கா அவள் பெற்றோர் இருந்த ஏரியாவில் தினமும் பள்ளிக்கூடத்திற்குச் செல்லும்போது இரண்டு மூன்று இளவட்டங்கள் பின்னால் திரிவார்கள். அப்போது ஒரே ஒருவன் துணிச்சலாக அவளுக்கு லெட்டர் கொடுக்கப் போக ரசாபாசமாகி அங்கு வந்து கொண்டிருந்த நீலமேகம் அவனைத் துவைத்து எடுத்து விட்டான்.

நீலமேகத்திற்கும், மீனாவிற்கும் லெட்டர் இல்லாமலே காதல் அரும்பியது.“நான் மட்டும் நல்லாவா இருக்கேன்? எப்ப பாரு சாக்கடை பெருச்சாளி மாதிரி மறஞ்சு மறஞ்சு ஒரு வாழ்க்கை...”“என்னடி சொன்ன?” என்று அவள் கூந்தலைப் பற்றி அவள் முதுகில் ஓங்கிக் குத்தினான்.
வாசலில் சமாதானம் பேச முற்பட்ட சௌந்தரத்தின் வீட்டுக்காரருக்கும் நாலு அர்ச்சனை விழுந்தது. சைக்கிளை எடுத்துக்கொண்டு போனவன் மூன்று நாட்கள் வீடு திரும்பவில்லை.

‘ஆனந்த பவன’மே கம்மென்று ஆனது. அடுத்தநாள் சுகந்திதான் வலுக்கட்டாயமாக அவள் வீட்டிலிருந்து கொண்டு வந்த காபித் தண்ணியைக் கொடுத்து மீனாக்காவைக் குடிக்க வைத்தாள். கோகிலம் வீட்டிலிருந்து புளிக்குழம்பும் முட்டைப் பொரியலும் வந்தது. பரிமளம் சோறு கொண்டு வந்து கொடுத்தாள். தான், வாங்கிய அடியும் உதையும் ஸ்டோர் முழுக்கத் தெரிந்து விட்டதே என்ற அவமானம்தான் மீனாக்காவுக்கு இருந்தது.

மூன்றாவது நாள் மீனாக்காவின் புருஷன் வந்துவிட்டான். இப்போது அவன் துணிமணி சேல்ஸ்மேனாக அவதாரம் எடுத்திருந்தான்.
சனிக்கிழமை, நான்தான் சும்மா இல்லாமல் “அக்கா அன்னிக்கு சொல்லாம விட்ட ரேவதி படக் கதையை சொல்லுங்கக்கா..” என்றேன்.
சௌந்தரம்மா முனிசிபல் பைப்பில் தண்ணி விட்டதால் இடுப்பில் ஒரு குடமும் கையில் ஒரு வாளியுமாக எதிர்ப்பட்டு “மீனா... மீனா... நில்லு. நான் வந்துடறேன்...” என்று ஓடினாள்.

இதற்குள் நெற்றியில் படர்ந்த வியர்வையைத் துடைத்துக் கொண்டு கோகிலம் வந்து விட்டாள். புடைப்பதற்குக் குருணையை முறத்தில் போட்டு எடுத்துக் கொண்டு சுகந்தி திண்ணையில் வந்து அமர்ந்தாள்.“மீதிக் கதையைச் சொல்லு மீனா. நீ சொல்லிட்டா அப்புறம் பாட்டு சீனு மட்டும் ஒளியும் ஒலியில பார்த்துக்குவோம்...” என்றாள் அம்மா.“எதுவரைக்கும் சொன்னேன்?” மீனாக்காவிடம் பழைய சுரத்து இல்லை.“காரத்திக் அறிமுகக் காட்சி...’’ என்று நான்தான் எடுத்துக் கொடுத்தேன்.

“ஆ... ரேவதி ஒரு பஸ் ஸ்டாப்பில் நின்னுக்கிட்டு இருப்பா. அப்போ கார்த்தி ஒருவனைப் புரட்டி புரட்டி எடுத்துகிட்டு அங்கே வருவான். அதோட விடாமல் அவனையும் அவன் கூட்டாளிங்களையும் துரத்தித் துரத்தி அடிப்பான். இளையராஜா பின்னணி இசையைக் கேட்கணும் கோகிலா, என்னமா அடிச்சிருக்காரு தெரியுமா! பாட்டெல்லாம் செமையா இருக்கு.

அப்புறம் போலீஸ் வந்து, அடி வாங்கினது மினிஸ்டர் பிள்ளை... கும்பலில் யாராவது அடிச்சவனை அடையாளம் காட்ட முடியுமான்னு கேட்பாரு. ரேவதி, நான் காட்டறேன்னு சொல்லும்...”“மீனாக்கா... ரேவதி கார்த்திக்கை பஸ் ஸ்டாப்பில் பார்க்க மாட்டா. ரெஸ்டாரண்ட் ஒண்ணில் வச்சுப் பார்ப்பானு என் பிரண்டு சொன்னான்..” என்று நான் குறுக்கிட்டேன்.

அம்மா என் கரத்தைப் பிடித்து என்னை மேற்கொண்டு பேசவிடாமல் தடுத்தாள். அம்மா எதற்காக என் கைகளைப் பிடித்துத் தடுத்தாள்? புரியவில்லை.
மீனாக்கா நான் சொன்னதைக் கேட்டு “அட ஆமாம் இல்ல! சரி சரி, மேல சொல்றேன்...” என்று தான் கண்ட காட்சிகளை ஒரு கலிடாஸ்கோப் சின்னச் சின்ன துணுக்குகளைக் கொண்டு வண்ண வண்ண ஓவியங்களைத் தீட்டுவது போலத் தீட்டத் தொடங்கினாள்.

அக்காவின் முகத்தில் கதை விரிய விரிய உற்சாகம் தொற்றிக் கொண்டது. அப்போது அக்காவிற்கு எல்லாமே மறந்துபோய், தான் ரேவதியாக உருமாறி தன் கண்முன் காட்சிகள் விரிவதைப் போல கதை கூறத் தொடங்கினாள்.எனக்கு நன்றாக நினைவில் இருக்கிறது.

அப்போது என் அம்மா, மீனாக்கா பக்கத்தில்தான் இருந்தாள். அக்கா கதை சொல்லும்போது அம்மா அவள் தலைமுடியை ஒதுக்கி நெற்றியில் இருந்த ஆழமான காயத்தின் பொறுக்கைத் தொட்டுப் பார்த்தாள்.“ஆழமா இருக்கே மீனா. டாக்டர்கிட்டே போயிக் காட்டேன்...”
“ஆமா... அதுக்கு வேற யாரு தண்டம் அழுவது?”“தர்மாஸ்பத்திரியில காட்டேன். நானும் கூட வர்றேன்...”

“வேணாம் ரங்கம்மா. இப்பதான் சரியாயிடுச்சு இல்லே?” என்றபோது மீனாக்காவின் மடியிலிருந்து சுருண்ட ஐந்து ரூபாய் நோட்டு ஒன்று கீழே விழுந்தது. அம்மா எதுவும் பேசாமல் அவளிடம் எடுத்துக் கொடுத்தாள்.

“இது எங்க வூட்டுக்காரு கொடுத்தார். அடிச்சதுக்கு சமாதானம் செய்யிறாராம்...”
“அப்போ போயி டாக்டர்கிட்டே காட்டேன்...”
“அடுத்த வாரம் லட்சுமி ரகுவரன் நடிச்ச விசு படம் ஒண்ணு வருது. அதுக்கு யாருகிட்ட காசு கேட்கிறது?” என்று மீனாக்கா வெள்ளந்தியாகச் சிரித்தாள்.  

வெல்கம் டைரக்டர்!

சிவகார்த்திகேயனின் ‘ஹலோ’ கைகொடுக்காமல் போனாலும், வெங்கட் பிரபுவின் ‘மாநாடு’ கை தூக்கிவிடும் என்ற எதிர்பார்ப்பில் சிலிர்க்கிறார் கல்யாணி ப்ரியதர்ஷன்.  ‘‘முழு ஸ்கிரிப்ட்டும் கேட்டுட்டேன். படத்துல எனக்கும் நல்ல ஸ்கோப் இருக்கு...’’ என்கிறார் ஹேப்பியாக! ‘‘கோலிவுட்டில் சில ஹிட்டுகளைக் கொடுத்து ஹீரோயினாக பெயரெடுத்த பின், அப்பா ப்ரியதர்ஷனைப் போல இயக்குநராகவும் ஆவேன்’’ என்கிறார்
சிரித்துக்கொண்டே!

மரப் பெண்!

‘மாயவன்’ லாவண்யா திரிபாதி, தெலுங்கில் காமெடி ஜானரில் பரபரக்கிறார். இதுதவிர, கார்த்திகேயா கும்மகொண்டாவின் ஜோடியாக டார்க் காமெடி படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் உத்தரகாண்ட்  சகஸ்ரதாரா ஆன்மீகத் தலத்திற்கு ட்ரிப் அடித்தவர் அங்கே மரம் நட்டுவைத்து சிலிர்த்துத் திரும்பியிருக்கிறார்.

விஸ்கி ஜூஸ்!

தமிழில் ‘புருஸ்லீ’க்குப் பின் மீண்டும் பாலிவுட்டுக்கே பறந்த கிர்தி ஹர்பந்தா, நீண்ட இடைவெளிக்குப் பின் துல்கரின் ‘வானு’க்காக கோலிவுட் வந்தார். லாக்டவுனுக்குப் பிறகு அதன் ஷூட்டை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார் கிர்தி. எப்போதும் இன்ஸ்டாவில் பிசியாக புன்னகைப்பவர், சமீபத் தில் பிரபலமான பிராண்டட் விஸ்கியைக் கொண்டு புதுவிதமான ஜூஸ் ஒன்றை ரெடி செய்து அசத்தியதுடன் அதை தனது இன்ஸ்டா பக்கத்திலும் செய்முறை விளக்கத்தோடு பதிவிட்டுள்ளார்!

அப்பாடா... நெகட்டிவ்!

டோலிவுட் ‘ஆர்.எக்ஸ்.100’ பாயல் ராஜ்புத், சின்னத்திரையில் இருந்து பெரியதிரைக்கு வந்தவர். பாயல் பாய்ச்சல் காட்டிய பஞ்சாபி படம் ‘Ishqan de lekhe 2’ செப்டம்பர் 21ம் தேதியன்று ரிலீஸானது. விஷயம் அதுவல்ல. சமீபத்தில் தெலுங்கு படப்பிடிப்பில் பங்கேற்றவருக்கு கொரோனா டெஸ்ட் செய்யப்பட்டது. ‘‘கொரோனா டெஸ்ட்டுக்காக மூக்குல குச்சியை விட்டு செக் பண்ணினப்ப, என் கண்ணுல பொலபொலனு கண்ணீர் வந்திடுச்சு. நல்லவேள எனக்கு நெகட்டிவ்னு வந்திடுச்சு..’’ என்கிறார் பயத்துடன்!

சத்தியப்பிரியன்