பழகிய குரல்கள்... பார்க்காத முகங்கள்...பழகிய குரல்கள்... பார்க்காத முகங்கள்... த்ரிஷா முதல்

நயன்தாரா வரை ஆசிஷ் வித்யார்த்தி முதல் அமீர்கான் வரை

டப்பிங் கலைஞர்கள்!


நாம் இந்தக் குரல்களை பலமுறை கேட்டிருக்கிறோம். நள்ளிரவில் எழுப்பிக் கேட்டாலும் குறிப்பிட்ட வசனத்தை பிசிறில்லாமல் பலர் சொல்வார்கள். அச்சு பிசகாமல் மிமிக்ரி செய்வார்கள். ஒருசிலர் டிக்டாக்(இருந்தபோது)கில் இந்தக் குரல்களில் பொழுதைக் கழித்திருக்கிறார்கள்.ஆனால், இந்தக் குரல்களுக்கு உரியவர் யார்... அவர்களது பெயர் என்ன... முகம் எப்படியிருக்கும்... என்றெல்லாம் நாம் அறிந்துகொள்ளவேயில்லை... அப்படிப்பட்டவர்களில் ஒருசிலரை அறிவோம் வாருங்கள்...

ஸ்ரீஜா

‘‘நாற்பத்தஞ்சு வருஷங்களா... அதாவது 1975ல இருந்து இந்தத் துறைல இருக்கேன். தேவயானி, ஷாலினி, கெளசல்யா, வினோதினி, ரம்பா, ரோஜா, லைலா, ‘இதயம்’ ஹீரா, சுவலட்சுமி, வனிதா விஜயகுமார், ப்ரீத்தா விஜயகுமார்னு பலருக்கு தமிழிலும்; பேபி ஷாலினி, பேபி ஷாமிலி, பேபி அஞ்சு, பேபி மீனாக்கு எல்லாம் மலையாளத்திலும் டப்பிங் பேசியிருக்கேன்.

நாயகிகள் வரிசைல ஷாலினி, சுனிதா, சார்மிளா, மாது, காவ்யா மாதவன், நயன்தாரா, நந்தினி (கெளசல்யா), லைலா, ஜூஹி சாவ்லா, கத்ரீனா கைஃப்னு கிட்டத்தட்ட 125 நாயகிகளுக்குப் பேசியிருப்பேன்.‘3 ரோஸஸ்’ படத்துல தமிழில் ரம்பா, இந்தியில் ஜோதிகானு பேசினது மறக்கமுடியாத மொமெண்ட். டயலாக் பேசுவது ஒரு சேலஞ்ச்னா... ரியாக்‌ஷன் மூலம் பேசுவது மிகப்பெரிய சவால். டப்பிங் எனக்குப் பிடிக்கும். அதனாலேயே சவாலை எதிர்கொள்கிறேன்.

இதுவரை தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 5 மொழிகள்ல 1500 படங்களுக்கும்; பெங்காலி, ஆங்கில விளம்பரப் படங்களுக்கும் டப்பிங் பேசியிருக்கேன்!
கேரள அரசு விருதை 4 முறையும், தமிழக அரசு விருதை ஒருமுறையும் வாங்கியிருக்கேன்...’’
என்கிறார் ஸ்ரீஜா.

கதிர்

‘‘தற்செயலா இந்தத் துறைக்கு வந்தேன். அப்பா டி.என்.பாலு, தயாரிப்பாளர் + இயக்குநர். கமல் சார் நடிச்ச முதல் டபுள் ஆக்‌ஷன் படமான ‘சட்டம் என் கையில்’ படத்தைத் தயாரித்து இயக்கியது அப்பாதான். படிக்கிறப்பவே டைரக்‌ஷன்ல ஆசை. கல்லூரி முடிச்சதும் இயக்குநர் பி.வாசு சார்கிட்ட உதவியாளரா சேர்ந்தேன். கன்னடத்துல சில படங்கள் இயக்கியிருக்கேன். டைரக்‌ஷன்தான் என் லட்சியம். ஆனா, விதி டப்பிங் பக்கம் என்னை கொண்டு வந்துடுச்சு.

என் இயக்குநர்தான் ஒரு வில்லனுக்கு வாய்ஸ் கொடுக்க வைச்சார். அது இப்ப தொடருது. என் கனவு நிறைவேற சினிமால தொடர்ந்து நான் இருக்கணும். அதுக்கு இந்த டப்பிங் துறை உதவுது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட் கார்ட் பெற ராதாரவியும் பி.வாசு சாரும் உதவினாங்க. ‘எந்திரன்’ படத்துல போரா டேனி டேன்சோன்பாவுக்கு பேசின பிறகுதான் பலரும் என்னை கவனிக்க ஆரம்பிச்சாங்க.  

அதுல் குல்கர்னி, சாயாஜி ஷிண்டே, ரவிகாளே, ஆசிஷ் வித்யார்த்தி, சரத் லோகிதஸ்வானு பல வில்லன் நடிகர்களுக்குப் பேசியிருக்கேன். தமிழ் டூ தெலுங்கு, தெலுங்கு டூ தமிழுக்கு வரும் 90% படங்கள்ல பிரகாஷ்ராஜ் சாருக்கு குரல் கொடுத்திருக்கேன். தமிழ், தெலுங்கு, ஆங்கிலம் உட்பட இதுவரை 800 படங்களுக்கு மேல பேசியிருக்கேன்.

இயக்குநர்கள் கெளதம் வாசுதேவ் மேனனும், மகிழ்திருமேனியும் தொடர்ந்து எனக்கு வாய்ப்பு கொடுக்கறாங்க. ‘பில்லா 2’ படத்துல ரஷ்ய மொழில பேசினதை சாதனைனு சொல்லலாம். ஏன்னா, இதுவரை யாரும் ரஷ்ய மொழில பேசினதில்லை...’’ என்கிறார் கதிர்.

சவீதா

‘‘நான் பிறந்தது பாண்டிச்சேரி. வளர்ந்தது தமிழ்நாடு. எத்திராஜ் கல்லூரில பிஏ, அண்ணாமலை யுனிவர்சிட்டில எம்பிஏ. யூஜி படிக்கிறப்பவே ‘வாலி’, ‘ஜீன்ஸ்’, ‘குஷி’ படங்கள்ல சிம்ரன், ஜோதிகாவுக்கு பேச ஆரம்பிச்சுட்டேன்.என் பயணத்தை ‘இராமாயணம்’ டூ ‘ரோமியோ ஜூலியட்’னு வரிசைப்படுத்தலாம்.

கிட்டத்தட்ட 25 வருஷங்களா இந்தத்துறைல இருக்கேன். லூப் சிஸ்டத்திலிருந்து 8 டிராக் தொழில்நுட்பம் வரை பேசிக்கிட்டிருக்கேன். முன்னாடி நாள் கணக்குல காத்திருந்து பேசணும். இப்ப ஒரு மணி நேரத்துல பேசிடலாம். இப்ப வரை ஹீரோயின்ஸுக்குதான் வாய்ஸ் கொடுத்துட்டிருக்கேன். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தினு 40 நாயகிகளுக்கு டப் பண்ணியிருக்கேன். எப்படியும் ஆயிரம் படங்களுக்கு பேசியிருப்பேன்.

சாய்குமார், ரவிசங்கர், ராம் கிருஷ்ணா, ஏ.எம்.ரத்னம்... இவங்கதான் தெலுங்குல நான் டப்பிங் பேச காரணம். என்னை ஊக்குவிப்பதில் இவங்களுக்கு பெரும் பங்குண்டு.  தமிழ்ல டப்பிங் கலைஞர்களுக்கு முதல் ஸ்டேட் அவார்ட் அறிமுகமானப்ப ‘பிரியமானவளே’ படத்துக்கு வாங்கினேன். 2வது விருது ‘சந்திரமுகி’ (ஜோதிகா).நான் பேசிய பல வசனங்கள் இப்பவும் பேசப்படுது. அதுல ‘பிதாமகன்’ படத்துல இடம்பெற்ற ‘லூசாப்பா நீ...’, ‘பாஸ் என்கிற பாஸ்கரன்’ படத்துல ‘பாடன்...’ ‘ஜெயம்’ படத்துல ‘போயா... போ...’ போன்ற வசனங்களை சொல்லலாம்.

குரல் என்பது வயலின் மாதிரி. டியூன் பண்ணினால் பேஸ் நோட்டிலும் வாசிக்கலாம். தின் நோட்டிலும் வாசிக்கலாம். டியூன் பண்ணினால்தான் ஸ்ருதி வரும். அதுமாதிரிதான் டப்பிங். இதுவும் ஒரு கலைதான். கடினமான குரலிலும் பேசலாம். மெலிதான குரலிலும் பேசலாம்.
இந்த ஆர்ட் வேண்டும் என்கிறவர்களுக்கு ஒரு மணி நேரம் ஒர்க் ஷாப் நடத்தறேன். இந்தத் துறைல மூணு ஜெனரேஷன் பார்த்துட்டேன்.
குரலுக்கு வயதே இல்லை!’’ என்கிறார் சவீதா.

னிவாசமூர்த்தி

‘‘குழந்தையா இருந்தப்பவே இந்த ஃபீல்டுக்கு வந்துட்டேன். ஒரு மாடலாதான் என் பயணத்தை ஆரம்பித்தேன். அப்பா ஏ.வி.என்.மூர்த்தி, தெலுங்குப் பாடகர் கம் டப்பிங் ஆர்டிஸ்ட். எஸ்.வி.ரமணன் சார் இயக்கிய ஒரு பனியன் விளம்பரத்துல குழந்தைப் பருவத்துல நடிச்சேன். அப்ப ஆரம்பிச்சு கல்லூரி வரை ஏராளமான விளம்பரப் படங்கள்ல நடிச்சேன். பிறகு டப்பிங் துறைக்கு வந்துட்டேன்.

தெலுங்குலதான் என் கேரியர் ஆரம்பமாச்சு. அஜித், விக்ரம், சூர்யா, பிரபுதேவா நடிச்ச படங்கள் தெலுங்குல டப் ஆகறப்ப நான்தான் அவங்களுக்கு வாய்ஸ் கொடுப்பேன். தமிழ்ல கசான்கான், ஆசிஷ் வித்யார்த்தி, மனோஜ் கே.ஜெயன், அம்ரீஷ் பூரி, ‘வீரம்’ முகேஷ் ரிஷி, சோனு சூட், அஷுதோஷ் ராணா, பிரதீப் ராவத்னு நிறைய வில்லன்களுக்குப் பேசியிருக்கேன்.

சூரியன் எஃப் எம்மின் ‘கேளுங்க... கேளுங்க... கேட்டுக்கிட்டே இருங்க...’ என் குரல்ல பல வருஷங்கள் ஒலிச்சது. ‘சிங்கம்’ படம் தெலுங்குல டப் ஆனப்ப சூர்யா சாருக்கு பேசினேன். ‘உங்க குரலால தெலுங்கு வெர்ஷனுக்கு வெயிட் கூடியிருக்கு’னு அவர் பாராட்டினார். ‘விருமாண்டி’ தெலுங்குக்கு போனப்ப பசுபதிக்கு குரல் கொடுத்தேன். ‘ஹே ராம்’ படத்துல ஷாருக் கானுக்கு வாய்ஸ் தந்தேன்.

டேனியல் கிரேக் நடித்த ஜேம்ஸ் பாண்ட் படங்களுக்கு தொடர்ந்து பேசறேன். ‘அயன் மேன்’ ராபர்ட் டவுனிக்கும், ராக் என்று அழைக்கப்படும் ட்வேன் ஜான்சனுக்கு ‘ஃபாஸ்ட் அண்ட் ஃபியூரியஸ்’ சீரிஸுக்கும், அர்னால்ட், ஸ்டோலன், வின் டீசல், ஜாக்கிசான் போன்ற ஹாலிவுட் கலைஞர்களுக்கு தெலுங்கு, தமிழிலும் வாய்ஸ் கொடுக்கறேன்.

சிரஞ்சீவி நடிச்ச ‘சைரா நரசிம்மா ரெட்டி’, கன்னட வெர்ஷனுக்கு குரல் தந்தேன். விரைவில் வெளிவரவுள்ள மோகன்லால் சாரின் ‘மரைக்காயர்’  படத்துக்கு தெலுங்கு, கன்னட மொழிகள்ல அவருக்கு பேசியிருக்கேன். என் தம்பியும் இதே துறைதான். ‘பாகுபலி’யில் மகன், பிரபாஸுக்கு பேசியிருக்கார்.

மகள் டாக்டர், மகன் என்ஜினியர். சுதீப் நடிச்ச ‘பயில்வான்’, மோகன்லால் நடித்த ‘ஒடியன்’ படத்துக்கு வசனம் எழுதியிருக்கேன். ‘தாரை தப்பட்டை’, ‘ஹலோ நான் பேய் பேசுறேன்’, ‘சர்வம் தாளமாயம்’ போன்ற படங்கள்ல நடிச்சிருக்கேன். இப்ப டப்பிங் யூனியன்ல பொருளாளரா இருக்கேன்...’’ என்கிறார் னிவாசமூர்த்தி.

ரேணுகா கதிரவன்

‘‘அப்பாவும் டப்பிங் ஆர்ட்டிஸ்ட்தான். அவர் கூட டப்பிங் ஸ்டூடியோவுக்கு சின்ன வயசுல நானும் போவேன். அப்படித்தான் இந்தத் துறைல ஆர்வம் வந்தது. 20 வருஷங்களா டப்பிங் பேசிட்டிருக்கேன்.  ‘பிரியாத வரம் வேண்டும்’ படத்துல ஹீரோயின் ஷாலினிக்கு முதல்ல குரல் தந்தேன். அடுத்து ‘காதல் வைரஸ்’ தேவிக்கு. இந்தப் படங்களுக்கு முன்னாடியே பல படங்கள்ல சின்ன கேரக்டர்களுக்கு பேசியிருக்கேன்.  

த்ரிஷாவுக்கு ‘கில்லி’, ‘திருப்பாச்சி’னு பத்துக்கும் மேற்பட்ட படங்களுக்கு டப்பிங் பண்ணியிருக்கேன். அனுஷ்காவுக்கு ‘சிங்கம்’, ‘வேட்டைக்காரன்’ போன்ற படங்களுக்கு வாய்ஸ் கொடுத்திருக்கேன். மீரா ஜாஸ்மினுக்கு பல படங்கள். ‘தூள்’, ‘செல்லமே’ படங்கள்ல ரீமாசென்னுக்கு. சதாவுக்கு ‘உன்னாலே உன்னாலே’. ஹன்சிகாவுக்கு ‘வேலாயுதம்’, ‘மான்கராத்தே’. நயன்தாராவுக்குச் சில படங்கள். ப்ரியங்கா சோப்ராவுக்கு ‘தமிழன்’. இப்ப ரகுல் ப்ரீத் சிங்குக்கு பேசறேன். ஹன்சிகா, ரகுல் ப்ரீத் சிங் மாதிரி வட மாநிலங்களைச் சேர்ந்தவங்க தமிழ் மொழியின் அர்த்தம் தெரியாம உச்சரிப்பாங்க. இவங்களோட லிப் சிங்குக்கு தகுந்தா மாதிரி பேசணும்.

அசம் ஷெரீப்

‘‘எனக்கு சினிமா பின்னணி இல்ல. இந்தத் துறைக்கு வருவேன்னு நினைச்சுக்கூட பார்க்கலை. வங்கில வேலை பார்த்துட்டு இருந்தேன். என் நண்பர் டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அவர் கூட தற்செயலா ஒரு முறை ஸ்டூடியோ வந்தேன். டப்பிங் மேல ஆர்வம் வந்துடுச்சு. 13 வருஷங்களா இந்தத் துறைல இருக்கேன். 200 படங்களுக்கு மேல டப்பிங் பேசியிருக்கேன். ராணா டகுபதிக்கும் இப்போதைய இளம் வில்லன் நடிகர்களுக்கும் ரெகுலரா பேசறேன். ‘ஹீரோ’ வில்லன் அபய் தியோலுக்கு என் குரல்தான். தெலுங்கு நடிகர் நானிக்கும் பேசியிருக்கேன்.

தமிழ் டூ தெலுங்கு, இந்தி டூ தமிழ்ப் படங்கள் நிறைய செய்திருக்கேன். ஹிருத்திக் ரோஷன், சல்மான்கான், அமீர்கான் போன்ற பாலிவுட் ஸ்டார்களுக்கு பேசியிருக்கேன். நமக்குப் பிடிச்சா மாதிரி டப்பிங் பேசக் கூடாது. கேரக்டர்களுக்கு தகுந்தா மாதிரிதான் பேசணும். என் குரலை ரசிகர்கள் கண்டு
பிடிச்சுட்டாங்கனா டப்பிங் ஆர்ட்டிஸ்ட்டா நான் தோத்துட்டேன்னு அர்த்தம்!

‘பாகுபலி’ல பிரபாஸை கொலை செய்யும்போது ஒரு டயலாக் வரும். ‘பாகுபலி... அமரேந்திர பாகுபலி... அமரேந்திர பாகுபலியாகிய நான் மகிழ்மதி மக்களின் உடல் பொருள் மானம்...’ இந்த டயலாக் பேசறப்ப சார்ஜ் ஏறினா மாதிரி ஃபீல் பண்ணினேன்.

தீபா வெங்கட்

‘‘சின்ன லெவல்ல ஆரம்பிச்சுதான் இந்த நிலைக்கு வந்திருக்கேன். தொடக்கத்துல ஒரு சீன், இரண்டு சீனுக்கெல்லாம் பேசியிருக்கேன். முழு முதல் படம்னா அது ‘அப்பு’ல தேவயானிக்கு குரல் கொடுத்தது. எனக்கு இந்தி தெரியும். அப்ப சில வசனங்களைக் கொடுத்து பேசச் சொல்வாங்க. அது டப்பிங்னு அப்ப தெரியாது! தமிழ், தெலுங்குப் படங்கள் இந்திக்குப் போறப்ப சின்னச் சின்ன கேரக்டர்ஸுக்கு இந்தில டப் பண்ணுவேன். அப்புறம் முறைப்படி யூனியன்ல மெம்பர் ஆனேன்.

டப்பிங் பண்றது ஈசியில்ல. சில நடிகைகள் முழுமையா வசனம் பேசியிருக்க மாட்டாங்க. இதை டப்பிங் கலைஞர்கள்தான் மேனேஜ் செய்யணும். வட்டார மொழியைச் சரியா உச்சரிப்பது, இயக்குநரின் எதிர்பார்ப்பை கச்சிதமா நிறைவேற்றுவதுனு தொழில்ல சின்சியரா இருந்தா நிச்சயம் புகழ் பெறலாம்.

எனக்குப் பெயர் வாங்கிக் கொடுத்த படங்கள் நிறைய உண்டு. சில சின்ன படங்கள் கூட எனக்கு புகழைக் கொடுத்திருக்கு.
‘கன்னத்தில் முத்தமிட்டால்’ படத்துல சிம்ரன் மேடத்துக்கு பேசினது செமயா ரீச் ஆச்சு. அனுஷ்காவுக்கு ‘தெய்வத் திருமகள்’. டாப்ஸிக்கு ‘கேம் ஓவர்’.
என்னுடைய பெயர் ரொம்ப பாப்புலரானது நயன்தாராவின் கம் பேக் படங்கள் வழியாதான். அவர் தன்னுடைய கேரக்டர், உடை, தோற்றம்னு ஒவ்வொன்றிலும் கவனம் செலுத்துவார். இதே அக்கறையோடுதான் அவருக்கு டப் பண்ணணும். ‘ராஜா ராணி’, ‘இமைக்கா நொடிகள்’, ‘அறம்’, ‘பிகில்’னு அவர் கூட தொடர்ந்து பயணிக்கறேன்.

ஜோதிகாவுக்கு ‘செக்கச் சிவந்த வானம்’, ‘ராட்சசி’, ‘தம்பி’ உட்பட ஏராளமான படங்களுக்கு டப்பிங் பேசியிருக்கேன்.
படப்பிடிப்புல நடிகைகளுக்கு அதிக அவகாசம் கிடைக்கும். ஆனா, டப்பிங் செய்ய அப்படி நேரம் கிடைக்காது. அந்த மாதிரி சூழ்நிலைகள்ல குறிப்பிட்ட காட்சிகளை இரண்டு, மூன்று முறை பார்ப்போம். சில இயக்குநர்கள் நாயகி கேரக்டர் பத்தின குறிப்பைக் கொடுப்பாங்க. எமோஷனல் சீன்ஸ், சென்டிமென்ட் காட்சிகள்னு தனித்தனியா நாட்களை ஒதுக்கிப் பேசுவோம்.

‘பிகில்’ படத்துல வர்ஷா பொல்லம்மாவிடம் நயன்தாரா பேசும் அந்த ஒரு காட்சியை மட்டும் பாதி நாள் எடுத்தோம்.
அதேபோல டயலாக் தாண்டி சிணுங்கல்கள், செல்லம் கொஞ்சறதுக்கு எல்லாம் எஃபெக்ட் கொடுப்பது கடினம். தொழில்நுட்ப வளர்ச்சி எங்க வேலையை எளிதாக்கியிருக்கு. ஹாரர் சீன்ல நீண்ட நேரம் கத்தணும்னா அதுக்கு தனி கவனம் செலுத்துவேன்...’’ என்கிறார் தீபா வெங்கட்.

மானஸி

‘‘பிறந்தது, வளர்ந்தது எல்லா மும்பைல. சின்ன வயசுல முறைப்படி இந்துஸ்தானி கத்துக்கிட்டேன். பின்னணிப் பாடகியாதான் என் கேரியர் ஆரம்பமாச்சு. இசையமைப்பாளர் செல்வகணேஷ் சார் இசைல ‘நிர்ணயம்’ படத்துல ஒரு பாடல் பாடப் போயிருந்தேன். அதன் இயக்குநர் சரவணன் என் குரல் நல்லா இருக்கறதா சொல்லி ‘டப்பிங் ட்ரை பண்ணுங்க’னு ஆலோசனை வழங்கினார். இப்படிதான் டப்பிங் ஆர்டிஸ்ட்டா மாறினேன்.

ரிலீஸைப் பொருத்தவரை ஸ்வாதிக்கு பேசிய ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படம் முதல்ல வெளிவந்தது. ஹிட் என்றால் சமந்தாவுக்கு பேசிய ‘அஞ்சான்’ படம்.நிக்கி கல்ராணிக்கு ‘டார்லிங்’, ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’, காஜல் அகர்வாலுக்கு ‘மாரி’, ரித்திகா சிங்கிற்கு ‘ஓ மை கடவுளே’, ஹன்சிகாவுக்கு ‘மீகாமன்’, மாளவிகா மேனனுக்கு ‘பேட்ட’, தமன்னாவுக்கு ‘பாகுபலி’, ‘தோழா’, ‘தர்மதுரை’, ‘தேவி’, ‘பெட்ரோமாக்ஸ்’... இப்படி பட்டியலே இருக்கு.

பாடகியாக இருந்தாலும் டப்பிங் பேசுவது பிடிச்சிருக்கு. 150 பாடல்கள் பாடியிருக்கேன். 80 படங்களுக்கு டப்பிங் செய்திருக்கேன்.
தமிழ், தெலுங்குனு எந்த மொழில நடிச்சாலும் தமன்னா என்னை சிபாரிசு செய்யறாங்க. இதை எனக்குக் கிடைச்ச அங்கீகாரமா பார்க்கறேன். அதே மாதிரி தமன்னாவும் த்ரிஷாவும் பல பேட்டிகள்ல என் பெயரைக் குறிப்பிட்டு கிரெடிட் கொடுத்திருக்காங்க...’’ நெகிழ்கிறார் மானஸி.

கெளதம்

‘‘சொந்த ஊர் தஞ்சாவூர். வளர்ந்தது சென்னைல. அடிப்படையில் நான் என்ஜினீயர். சிங்கப்பூர்ல எம்பிஏ, லண்டனில் எம்எஸ் முடிச்சேன். சினிமா... நான் விரும்பி வந்த துறை. ஆர்.ஜே.வாகத்தான் என் பயணத்தை ஆரம்பிச்சேன். என் குரலைக் கேட்டுவிட்டு ‘லீலை’ ஹீரோவுக்கு பேச வைச்சார் அதன் இயக்குநர் ஆண்ட்ரூ.

தொடர்ந்து ‘கத்தி’ படத்தில் நீல் நித்தின் முகேஷ், ‘ஐ’ படத்தில் உபின் பட்டேல், ‘சாஹோ’வில் நீல் நித்தின் முகேஷ், ‘தர்பார்’ படத்தில் சுனில் ஷெட்டினு இதுவரை 95 படங்கள்ல டப்பிங் செய்திருக்கேன். பெரும்பாலும் வில்லன்களுக்குத்தான். தெலுங்கு நடிகர்கள் பிரபாஸ், மகேஷ்பாபு போன்றவர்களுக்கும் டப்பிங் கொடுத்திருக்கேன்.

இப்ப ‘பூமி’, ‘கே.ஜி.எப் - 2’ படங்கள்ல வில்லன்களுக்கு பேசியிருக்கேன். ‘எய்தவன்’, ‘கொலைகாரன்’ படங்கள்ல வில்லனாகவும் நடிச்சிருக்கேன்.
விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் வாழ்க்கையை மையமாக வைச்சு உருவான ‘நான் மீண்டும் வருவேன்’ படத்துல அவர் குரல்ல பேசினது மறக்க முடியாதது. தமிழ்ல அந்தப் படம் ரிலீசாகலை. எங்கள் யூனியன்ல 2000 பேர் இருக்கோம். அதுல 100 பேருக்குத்தான் வேலை இருக்கு. 10 பேர்தான் முன்னணில இருக்காங்க...’’ என்கிறார் கெளதம்.

ரவீணா

‘‘படிச்சது பேங்க் மேனேஜ்மெண்ட். எங்க குடும்பத்துல நான் மூணாவது தலைமுறையா டப்பிங் பேசறேன். பாட்டி கண்ணூர் நாராயணி. மம்மூட்டி, மோகன்லால் கூட கேரக்டர் ரோல்ல நடிச்சிருக்காங்க. அம்மா ஜா, முன்னணி டப்பிங் ஆர்ட்டிஸ்ட். ஒண்ணே முக்கா வயசுலயே டப்பிங் பேச ஆரம்பிச்சுட்டேன். ‘தொட்டாசிணுங்கி’ படத்துல தேவயானிக்கு அம்மா டப்பிங் பேசினப்ப கைக் குழந்தையா இருந்த என்னையும் அழைச்சுட்டு போனாங்க. அப்ப ‘தொட்டாசிணுங்கி’ டைட்டிலை மழலைக் குரல்ல அடிக்கடி நான் சொல்றதைக் கேட்ட இயக்குநர் அதியமான், அதையே விளம்பரத்துல பயன்படுத்தினார்.

கல்லூரிக்கு போனதுமே ஹீரோயின்களுக்கு பேச ஆரம்பிச்சுட்டேன். ஒருநாள் காலேஜ் முடிச்சுட்டு வந்து ‘சாட்டை’ மகிமாவுக்கு டப்பிங் பேசினேன். அதுதான் என் முதல் படம். தியேட்டர்ல படத்தைப் பார்த்துட்டு அம்மா அழுதுட்டாங்க. அப்பவே நான் ஜெயிச்சுட்டேன்னு புரிஞ்சுது!
தொடர்ந்து எமி ஜாக்சனுக்கு ‘ஐ’, மடோனா செபஸ்டியனுக்கு ‘காதலும் கடந்து போகும்’, திவ்யா, ராஷி கண்ணா, கேத்ரீன் தெரசா, மலையாளத்தில் நயன்தாரா, அமலா பால்னு ஏராளமான ஹீரோயின்களுக்கு பேசிட்டு வர்றேன்.

இப்ப மாளவிகா மேனனுக்கு ‘மாஸ்டர்’, மஞ்சிமா மோகனுக்கு ‘களத்தில் சந்திப்போம்’, த்ரிஷாவுக்கு ‘ராங்கி’, மகிமாவுக்கு ‘ஐங்கரன்’, நிதி அகர்வாலுக்கு ‘பூமி’ படங்கள்ல குரல் கொடுத்திருக்கேன். நயன்தாராவின் முதல் மலையாளப் படமான ‘மனசின் அக்கற’ படத்திலிருந்து அம்மாதான் அவங்களுக்கு பேசினாங்க. ஆனா, அவரோட கம் பேக் படமான ‘பாஸ்கர் தி ராஸ்கல்’ படத்திலிருந்து நான் பேசிட்டு வர்றேன்!

‘ஒரு கிடாயின் கருணை மனு’வுக்குப் பிறகு செலக்டிவ்வா படங்கள்ல நடிக்கவும் செய்யறேன். இப்ப ‘வட்டார வழக்கு’, ‘ராக்கி’, ‘காவல்துறை உங்கள் நண்பன்’ படங்கள்ல நடிச்சு முடிச்சிருக்கேன்...’’ என்கிறார் ரவீணா.

பாலமுருகன்

‘‘சொந்த ஊரே சென்னைதான். சின்ன வயசுல இருந்தே இசை, மிமிக்ரில ஆர்வம். டிப்ளமோ படிக்கிறப்ப மேடைல பாட எங்க ஆசிரியர் அழைச்சுட்டுப் போனார். ஃபாரின்ல சில வருஷங்கள் இருந்தேன்.மருதபரணியும், பாலகிருஷ்ணனும் டப்பிங் சார்ந்த நுட்பங்களை எனக்கு சொல்லிக் கொடுத்தாங்க.

இப்ப துணை நடிகர்களுக்குதான் டப்பிங் பேச வாய்ப்பு கிடைக்குது. அதையும் தாண்டி ‘அட்டு’ படத்துல ஹீரோவுக்கு சென்னை வட்டார மொழில பேசினேன். ‘இஞ்சி இடுப்பழகி’ல இரண்டாவது ஹீரோவுக்கு பேசினேன். ‘ஜித்தன் 2’ல ரமேஷ் சாருக்கு குரல் கொடுத்தேன்.

‘போகன்’ படத்துல அரவிந்தசாமிக்கு டிராக் வாய்ஸ் பேசினேன். ‘பாகுபலி’ல ‘மகாராஜா வரும் சமயம் இது... யாவராயினும் மேற்கு வாசல் வழி செல்லுங்கள்...’னு அனுஷ்காவை பார்த்து கேலி செஞ்சு கை துண்டிக்கப்படும் கேரக்டருக்கு நான்தான் குரல் கொடுத்தேன். அதே படத்தில் ஒரு போர் வீரன் ‘கிழக்குப்புறம் உதயகிரி மலைகளால்...’னு கர்ஜிக்கும் குரலும் என்னுடையதுதான்.

பிருத்விராஜ், மாதவன், அர்விந்தசாமினு பலருக்கு டிராக் வாய்ஸ் பேசறேன். ஹீரோக்களுக்கு பெரும்பாலும் அவங்களே பேசிடுவாங்க. சில சமயம் சென்சாருக்கு உடனடியா அனுப்பணும் என்கிற சூழல்ல என்னுடைய டிராக்கை அப்படியே வைச்சு அனுப்பிடுவாங்க. ‘விவேகம்’, ‘வேதாளம்’ படங்கள்ல வில்லன்களுக்கு பேசினதை மறக்க முடியாது. ‘வேதாளம்’ படத்துல ஒரு வெள்ளைக்காரர் ‘என்னை நீ இப்போ கொன்னுடலாம். ஆனா, என்னைவிட நல்லவன், நேர்மையானவன் ஒருத்தன் வருவான். அவன் உன்னைக் கொல்லுவான்...’னு அஜித் சார் என்ட்ரிக்கு முன் பேசுவார். அது என் குரல்தான்.

நான் மிமிக்ரி ஆர்டிஸ்ட். அதனால மிமிக்ரி அடிப்படையிலான டப்பிங்குக்கு என்னை கூப்பிடறாங்க. இப்ப விளம்பரப் படங்கள்லயும் நடிக்கறேன். பாலகிருஷ்ணா நடிச்ச ‘கெளதமி புத்ர சாதகர்ணி’ படத்துல வைரமுத்து எழுதிய ஒரு பாடலைப் பாடியிருக்கேன்.

டிஸ்கவரி தமிழ் சேனல்ல ‘எக்ஸ்பெக்ட்டேஷன் அன்னோன்’, ‘ரெஸ்ட்டாரண்ட் டேக் அவுட்’ போன்ற நிகழ்ச்சிகள்ல என் குரலை அடிக்கடி கேட்கலாம்...’’ என்கிறார் பாலமுருகன்

மோனிஷா

‘‘பாடகியும் டப்பிங் ஆர்டிஸ்ட்டுமான மானஸி, என் அக்காதான். ‘நிர்ணயம்’ படத்துக்கு அக்கா டப்பிங் பேசப் போனப்ப நானும் கூடப் போயிருந்தேன். அந்தப் படத்துல செகண்ட் ஹீரோயினுக்கு என்னையே பேசச் சொல்லிட்டார் இயக்குநர். இப்படித்தான் நான் இந்தத் துறைக்கு வந்தேன். ‘தனி ஒருவன்’ல அபிநயாவுக்கு பேசினது சவாலா இருந்தது. அந்தப் படத்துல பைலட் காப்பி இல்லாம பேசினேன். படம் பார்த்தவங்க ரியலிஸ்டிக்கா இருந்ததா சொன்னாங்க.  

பார்வதி நாயருக்கு ‘என்னை அறிந்தால்’, ஐஸ்வர்யா தத்தாவுக்கு ‘தமிழுக்கு எண் 1-ஐ அழுத்தவும்’, மியா ஜார்ஜுக்கு ‘இன்று நேற்று நாளை’, மெஹ்ரீனுக்கு ‘பட்டாஸ்’... அப்புறம் சிருஷ்டி டாங்கேவின் அனைத்துப் படங்களுக்கும் பேசியிருக்கேன்.

‘இக்ளூ’ படத்துல அஞ்சு குரியனுக்குப் பேசினதை மறக்க முடியாது. படத்துல அவர் கேன்சர் பேஷண்ட். ஒரு நோயாளியின் மனநிலையை டப்பிங்குல எமோஷனலா வெளிப்படுத்தினேன். இண்டஸ்ட்ரில எனக்கு நல்ல பெயர் கிடைச்சது.

‘தர்மதுரை’ படத்துல சிருஷ்டி டாங்கே குடிச்சுட்டு விஜய் சேதுபதிகிட்ட ப்ரபோஸ் பண்ணுவாங்க. ஒரு பெண் ப்ரபோஸ் பண்றது புதுசு. அந்தக் காட்சியை சவாலா எடுத்து பேசினேன்...’’ என்கிறார் மோனிஷா.