சீரியஸ் மென்



காந்தி ஜெயந்தி அன்று நெட்பிளிக்ஸில் வெளியாகி, இந்திய அளவில் அதிகம் பார்க்கப்பட்ட திரைப்படமாக டிரெண்டாகியிருக்கிறது ‘சீரியஸ் மென்’. இந்த இந்திப் படம் தமிழ் டப்பிங்கிலும் காணக் கிடைக்கிறது.ஒரு பக்கம் பாராட்டுகள் குவிந்தாலும் இன்னொரு பக்கம் தலித் சமூகத்தை தவறாக சித்தரிக்கிறது என்ற விமர்சனமும் இப்படத்துக்கு எழுந்துள்ளது.

பெற்றோர் தங்களின் கனவுகளை, ஆசைகளை குழந்தைகளின் மீது திணிக்கும்போது அந்தக் குழந்தை என்ன மாதிரியான இன்னல்களுக்கு ஆளாகிறது... அது பெற்றோர்களையும் எவ்விதம் பாதிக்கிறது... என்பதை போகிற போக்கில் சொல்லிச் செல்கிறது இந்தப் படம்.மும்பையில் உள்ள தேசிய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனத்தில் பெரிய பொறுப்பில் இருப்பவர் ஆச்சார்யா. உயர் சாதியைச் சேர்ந்தவர். ஏலியனைப் பற்றிய ஆராய்ச்சியில் பல தகிடுதித்தங்கள் செய்து தன்னை ஒரு பெரிய மேதை போல காட்டிக்கொள்கிறார்.

இவரின் உதவியாளரான அய்யன் மணி ஒரு தலித். தமிழ்நாட்டில் இருந்து மும்பைக்கு புலம் பெயர்ந்தவர். அய்யனை ஓர் அடிமை போலவே நடத்துகிறார் ஆச்சார்யா. அவரை ஒரு மனிதனாகக் கூட கருதுவதில்லை. அய்யனுக்கும் ஆச்சார்யா மீது பெரிய மரியாதை இல்லை.

சாக்கடைகள் சூழ்ந்த ஒரு நெருக்கடியான ஹவுஸிங் போர்டில் வாழ்ந்துவரும் அய்யனுக்கு ஆதி என்ற ஒரு மகன் இருக்கிறான். மும்பையின் செல்லப் பிள்ளை, சூப்பர் ஹீரோ, ஜீனியஸ் என புகழ் வெள்ளத்தில் மிதக்கிறான் ஆதி.

உண்மையில் ஆதி ஜீனியஸ் இல்லை. போலியாக பல தில்லு முல்லுகளைச் செய்து மக்கள் மத்தியில் மகனை ஜீனியஸ் போல உருவாக்கியிருக்கிறார் அய்யன். இதனால் தனது குழந்தைப் பருவத்தை இழந்து மன அழுத்தத்துக்கு ஆளாகிறான் ஆதி. அவனால் இயல்பாக இருக்க முடியவில்லை.
அய்யன் மணி, ஆச்சார்யாவைப் பற்றிய உண்மைகளை உடைக்க, ஆச்சார்யாவும் பதிலுக்கு ஆதியைப் பற்றிய உண்மைகளை வெளிச்சத்துக்குக் கொண்டு வர... சூடு பிடிக்கும் திரைக்கதை நாம் எதிர்பார்க்காத ஓர் இடத்தில் போய் முடிகிறது.

பெற்றோர்களின் கனவை நனவாக்குவதற்காக குழந்தைகள் பிறக்கவில்லை; அவர்களின் போக்கில் வாழவே பிறந்திருக்கிறார்கள் என்பதை அழுத்தமாகச் சொல்கிறது இந்தப் படம்.ஒரே சாதி அமைப்பில் வெவ்வெறு அந்தஸ்தில் இருப்பவர்கள் தங்களுக்குக் கீழ் இருப்பவர்களிடம் எப்படி குரூரமாக நடந்துகொள்கிறார்கள், அவர்களை எப்படி சுரண்டுகிறார்கள்...

தேவையற்ற ஆராய்ச்சிகளுக்காக மக்களின் வரிப் பணம் எப்படியெல்லாம் வீணாகிறது... என்பதை இப்படம் கோடிட்டுக் காட்டுகிறது.அய்யன் மணியாக நவாசுதீனும் ஆச்சார்யாவாக நாசரும் கச்சிதம். ஆதியாக வரும் சிறுவன் ஆக்‌ஷத்தின் நடிப்பு வெகு இயல்பு. மனு ஜோசப்பின் நாவலைத் தழுவி உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் சுதிர் மிஸ்ரா.