கேங் லீடர்குடும்பத்துடன் கண்டுகளிக்க ஓர் அருமையான தெலுங்குப் படம், ‘கேங் லீடர்’. மீண்டும் ஒரு பழிவாங்கல் கதை என்று ஒதுக்கிவிட முடியாதபடி, தான் எடுத்துக்கொண்ட கதைக்களத்தில் சிக்ஸர் அடித்திருக்கிறது இந்தப் படம்.சிறுமி, டீன் ஏஜ் கேர்ள், இளம் பெண், அம்மா, பாட்டி என ஐந்து பெண்கள் ஓர் ஆணுடன் சேர்ந்து தங்களின் எதிரியைப் பழிவாங்குவதுதான் ‘கேங் லீடர்’. ஆறு பேர் கொண்ட குழு ஒன்று வங்கியில் ரூ.300 கோடியை கொள்ளையடிக்கிறது. பணப்பையுடன் வங்கியிலிருந்து தப்பிக்கும்போது ஆறாவது நபரால் மற்ற ஐந்து பேரும் கொலை செய்யப்படுகின்றனர்.

பணத்தை அந்த ஒருவனே சுருட்டிக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறான். அவனைத் துரத்திக்கொண்டு போகும் காவல்துறை வெறுங்கையோடு ஸ்டேஷனுக்கு திரும்புகிறது. நாளடைவில் இந்தக் கொள்ளைச் சம்பவத்தைக் காவல்துறையே மறந்துவிடுகிறது. 14 மாதங்களுக்குப் பிறகு கொலையுண்ட அந்த ஐந்து பேருக்கும் நெருக்கமான பெண்கள் கொலைகாரனைக் கண்டுபிடித்து பழிவாங்க சபதம் மேற்கொள்கின்றனர்.

கொலைகாரனைக் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் ஒரு திறமையான வழிகாட்டி வேண்டும். அதற்காக, பழிவாங்கும் கதைகளை எழுதி புகழ்பெற்றிருக்கும் க்ரைம் நாவல் மன்னன் பென்சில் பார்த்தசாரதியின் உதவியை அவர்கள் நாடுகின்றனர். அவர் ஹாலிவுட் படங்களைப் பார்த்து கதைகளை எழுதும் போலி என்று தெரியவர, அந்தப் பெண்கள் ஏமாந்துபோகின்றனர். மட்டுமல்ல, பென்சிலும் ஐந்து லட்சம் தந்தால் கொலைகாரனைக் கண்டுபிடிக்க உதவுகிறேன் என்று பந்தா காட்டுகிறார்.

இந்நிலையில் தனது 29வது நாவலை வெளியிட பதிப்பாளரைச் சந்திக்கிறார் பென்சில். முன்பு வெளியிட்ட புத்தகங்களே சரியாகப் போகவில்லை, இப்போது இன்னொன்றா... என்று நொந்துபோகிறார் பதிப்பாளர். அப்போது அவரிடம், தான் சந்தித்த பெண்கள், கொள்ளை மற்றும் கொலைச் சம்பவம், பழிவாங்க அவர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளைச் சொல்கிறார் பென்சில்.

ஆச்சரியமாகும் பதிப்பாளர் அந்தப் பெண்களுக்கு உதவி செய்யும்படி பென்சிலிடம் வேண்டுகோள் வைப்பதோடு, கொலைகாரனைக் கண்டுபிடிக்க அவர்கள் மேற்கொள்ளும் திட்டங்களையும் கதையாக எழுதச் சொல்கிறார். சொத்தை விற்றாவது புத்தகத்தை வெளியிடுவேன் என்று சத்தியமும் செய்கிறார்.

உற்சாகமாகும் பென்சில் அந்த ஐந்து பெண்களுடன் கூட்டு சேர்ந்து கொலைகாரனை எப்படி கண்டுபிடிக்கிறார் என்பதே சுவாரஸ்யமான திரைக்கதை. மட்டுமல்ல; அவர் உண்மையாக எழுதப்போகும் முதல் நாவலின் கதையும் இதுதான்! ஆறு நிமிடங்களுக்கு மேல் நிகழும் வங்கிக் கொள்ளைச் சம்பவம் ஹாலிவுட் படங்களுக்கே சவால் விடுகிறது. அந்த ஐந்து பேரும் வங்கியில் கொள்ளையடிப்பதற்குப் பின்னணியாக இருக்கும் காரணம் நெகிழ்ச்சி. பென்சில் பார்த்தசாரதியாக அட்டகாசம் செய்திருக்கிறார் நானி.அமேசான் ப்ரைமில் காணக்கிடைக்கும் இந்தப் படத்தின் இயக்குநர் விக்ரம் குமார்.

தொகுப்பு: த.சக்திவேல்