லவ் ஸ்டோரி- கலாப்ரியாமணப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பது நாமாக இருக்கலாம்...ஆனால், மனைவியைத் தேர்ந்தெடுப்பது நம் கையில் இல்லை!

சோமசுந்தரம் என்ற இயற்பெயர் கொண்ட கலாப்ரியா, இன்றைய புதுக்கவிதைகளின் முன்னோடிகளில் ஒருவர். நெல்லையைச் சேர்ந்த இவர், திராவிட இயக்கப் பற்றாளர். வெகுஜன கவிதைப் போக்கை முற்றிலும் மாற்றி அமைத்ததில் சிறுபத்திரிகை இயக்கத்தைச் சேர்ந்த இவரது கவிதைகளுக்கு கணிசமான பங்கு உண்டு.

80களின் இறுதியில் குற்றாலத்தில் தன் நண்பர்களுடன் சேர்ந்து இவர் நடத்திய ‘கவிதைப் பட்டறை’ தமிழ்ச் சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்
படுத்தியது.இப்பொழுதும் தீவிரமாக இயங்கியபடி கவிதைகளும், நாவல்களும், கட்டுரைகளும் எழுதி வரும் இவரது லவ் ஸ்டோரி, இன்றைய தலை
முறையின் வாழ்வியலுக்கான உரைகல்...

எங்கள் கூட்டுக் குடும்பம் பெரியது. அப்பொழுது என்னை ‘பண்ணையார்’ என அழைப்பார்கள். கடைசிப் பையன் என்பதால் பிரத்யேக அன்பும் செல்லமும் கிடைத்தது. அப்பா எனக்கு சோமசுந்தரம் எனப் பெயரிட, அம்மா, அவர் அப்பாவின் பெயரான கோபால் என பெயர் சொல்லி அழைக்க, நான் கலாப்ரியாவாக அறிமுகம் ஆகியிருந்தேன். சொந்தக்காரர்களைவிட நண்பர்களே எனக்கு நெருக்கமாகி இருந்தார்கள். அவர்களால் நான் உயிர்ப்பிக்கப்பட்டுக் கொண்டு இருந்தேன் என்பதே உண்மை. பிறகு என் ஒருவனின் சம்பாத்தியத்தில் மட்டும் குடும்பம் ஆதாரமாக இருக்க வேண்டியதாகிவிட்டது.

என் முதல் பெண்ணான அம்மாவை மறக்க முடியாது. அவரின் சொலவடைகள் என் ஞாபகத்தில் இன்னமும் திமிறிக்கொண்டு இருக்கின்றன. அம்மாவின் அன்பு தான் என் ஆதாரமாக ஆகியிருக்கும்போல. எல்லோரோடும், எல்லாவற்றோடும் இருந்தாலும்… என் துக்கம் பரிவாக மாறிக்கொண்டிருந்தது. பள்ளிக்கூடத்தில் சசிகலா என்னோடு படித்தார். இளம் பருவத்துத் தோழி என நான் மட்டுமே கூறிக்கொள்ள முடியும்.

அப்பொழுது இந்தக் காலம்போல் இல்லை. மனதில் நினைத்ததை கடத்தவோ சொல்லிக் கொள்ளவோ முடியாது. அது ஓர் அபூர்வமான காதல். கடைசிவரை சொல்லிக்கொள்ளப்படவில்லை. இப்பொழுதும் அது குறித்து யாருக்கும் யார் மீதும் புகார் இல்லை. எங்கள் பெயர்கள் பள்ளியில் வருகைப் பதிவில் அடுத்தடுத்து வாசிக்கப்படும். அந்தக் கணங்களின் சுவையை இதுநாள் வரை நான் வேறெங்கும் அறிந்தது கிடையாது.

அப்பொழுதெல்லாம் காதல் தெய்வீகமானது. புனிதப்பட்டது. சொல்ல முடியாமல் மனதில் ஆழப் புதைந்த காதல்களே அநேகம். யாருக்கும் தெரியப்படுத்திவிட துணிச்சல் வராது. ஆயிரத்தில் ஒன்றுகூட காதலுக்கு அடுத்த கட்டத்துக்கு வராது. காதலில் முறிவோ இழப்போ அப்போதுஇல்லை.

அதெல்லாம் அற்றதே காதல். உள்ளே வைத்திருந்து பூஜித்து நின்றதே நடந்திருக்கிறது. அது ஒரு கொதி நிலை. இடுப்பில் வைத்த குழந்தை மாதிரி அதை தூக்கிக்கொண்டு திரிந்திருக்கிறேன்.அவர்களுக்கு இதே அளவு அன்புதானா எனத் தெரியாது. ஒரு தடவை நான் கொடுத்த கல்லூரி விழாவுக்கான அழைப்பிதழை அவர்கள் கிழித்துப் போட்டதாகச் சொன்னார்கள். அதுகூடப் பின்னால் அறிந்தது தான்.

எனவே காதல்தான் உறவு. உறவுதான் காதல். இவற்றுக்கு அழிவோ முறிவோ கிடையவே கிடையாது. பிற்பாடு என் சரஸ்வதிக்கு சசியைக் காட்டியபோது ‘நல்லாத்தாங்க இருக்காங்க...’ என்றாள். அவர்கள் மனதில் என்ன ஓடிக்கொண்டு இருக்கிறது என்று தெரியாது. யார் மனதில் என்ன ஓடுகிறது என்று யாருக்குத் தெரியும்! நான் சசியைப் பார்த்து 35 வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது.

அவள் இன்னும் இருந்துகொண்டு இருப்பாள் என்றே நம்புகிறேன். எனக்கு சசி என்பது வெறும் சொல்லா, உறவாவென எல்லாம் தெரியாது. அவளுக்கு அழிவில்லை என்பது மட்டும் தெரியும்.அப்புறம்தான் இந்த சரஸ்வதி வந்தாள். மிக அமைதியாக அணுக்கமான முறையில் வந்து சேர்ந்தாள்.

என்னோடு வாழ்வது கடினமானது. முற்றிலும் கனவுலகில் வாழும் ஒரு மனிதனோடு வாழ்க்கைப்பட்டு இருப்பது எவ்வளவு பெரிய சவால்! அதை சிரமேற்கொண்டு எளிமையாக்கினாள். என் பிரியங்களை அவளிடம் சொல்லித் தீர்த்தபோது புன்னகையோடு சரி என்றாள். ஒரு நாளும் எரிந்து விழுந்து கடிந்தது கிடையாது. கணவன் சொந்தக் கதையின் புறங்களைத் தாண்டி இரண்டு பேசும் சித்திரங்களைப் பெற்றாள். அவளே அதிகமும் வளர்த்து தனம் பெருக்கினாள்.

இப்பொழுது இரு பெண் குழந்தைகளும் வளர்ந்து விட்டார்கள். முதல் பெண் அகிலாண்ட பாரதி மருத்துவர் படிப்பு படித்திருக்கிறார். அப்பனின் கையைப் பிடித்து வளர்ந்தவள், அவனைப் போலவே எழுதுகிறாள். கற்பனையும் நல் நடையும் அவள் கைவசம் ஆகிவிட்டது.

இளையவள் தரணி பொறியாளர் ஆகிவிட்டாள். அவள் சாதி மாற்றுத் திருமணம் செய்ய நாங்கள் சந்தோசமாக ஆமோதித்தோம்.

உலகம் அறியாதவர்களாக என் கை பற்றித் திரிந்தவர்கள் இப்பொழுது எனக்கே பக்குவம் சொல்லித் தருகிறார்கள். என்னைப் பேணிக் காக்கிறார்கள். நாங்கள் அவர்களைச் சீராட்டியதைத் திரும்பச் செய்கிறார்கள்.

மனைவி சரஸ்வதி என் சுமை தீர்க்கிறாள். என் பணி ஓய்வுக்குப் பிறகு 40 புத்தகங்களுக்கு மேல் எழுதி முடித்திருக்கிறேன். அவளே பிழை திருத்தித் தருகிறாள். அதிகம் பேசப்பட்ட ‘நினைவின் தாழ்வாரங்கள்’ கூட அவள் பிழை திருத்தித் தந்ததுதான். ‘என்ன இவ்வளவு தைரியமாக எழுதியிருக்கிறீர்களே’ என உறவினர்கள் கேட்டால், பிழை திருத்தியதே சரஸ்வதிதான் என அவர்களை அடுத்துப் பேச முடியாதபடி செய்திருக்கிறேன்.

பெண்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நாம்தான் நினைத்துக் கொண்டிருக்கிறோம். எல்லாம் தெரிந்து கொண்டு நம்மை பேரன்பில் வைத்துக்கொண்டு ஆசீர்வதிப்பது அவர்களே.மணப் பெண்ணைத் தேர்ந்தெடுப்பது நாமாக இருக்கலாம். ஆனால், மனைவியைத் தேர்ந்தெடுப்பது நம் கையில் இல்லை. அது இறைவனின் பெருங் கருணை. தாகூர் ‘என்னுடைய ஆசைகளை மறுத்ததன் மூலம் என்னைக் காப்பாற்றிவிட்டாய்’ என எழுதியிருப்பார். அதேதான் எனக்கும் நடந்தது.

பழக்கம் இல்லாத மனிதர்களுக்கு மத்தியில் நன்றாகத் தெரிந்த ஒரு முகத்தைப் பார்த்தால் எவ்வளவு சந்தோசம் வரும். அதுமாதிரி சரஸ்வதி வந்து சேர்ந்தாள். டீச்சராக இருந்ததால் அவளே பிள்ளைகளுக்கு பாடம் சொல்லி வளர்த்தாள். என் பங்காக தமிழ் அறிஞர் என்ற பிரிவில் பாரதிக்கு மருத்துவப் படிப்பில் ஓர் இடம் கிடைத்தது. கலைஞரின் காலம் கனிந்த அன்பு அது.

சரஸ்வதி இவ்வளவும் செய்ததுபோக நன்றாக வாய்க்கு ருசியாக ஆக்கிப்போட்டாள். நண்பர்களாக வந்துபோன அத்தனை எழுத்தாளர்கள்… சுஜாதா முதல் வள்ளிக்கண்ணன் வரை அவளது விருந்தோம்பலை வியந்திருக்கிறார்கள். கி.ராஜநாராயணன் மாமா கணவதி அத்தையோடு வந்தபோது இரண்டு நாள் தங்கினார். ‘அப்படியே எல்லா வேலைகளையும் சரஸ்வதிகிட்ட விட்டுட்டு எழுதுறதை மட்டும் பாரு’ எனச் சொல்லிட்டுப் போனார். அவள் செய்த சொதியை கணவதி அத்தையே வியந்தார் என்றால் பாருங்கள்.

எல்லாவற்றிற்கும் முக்கியமானது அன்பு. மனசாட்சியோடும் சக மனிதர்கள் மீதான கரிசனத்தோடும் வாழ்வதுதான் வாழ்க்கை. அவ்வளவு காலம் உருண்டுபோய் இப்பொழுது ஒரு கனிவான காலகட்டத்தில் இருக்கிறோம். திரும்பிப் பார்த்தால், இழந்ததாக ஒன்றுமில்லை.

சரஸ்வதி என் வாழ்க்கையை அமைதிப்படுத்தித் தந்திருக்கிறாள். வாழ்க்கை இவ்வளவு அழகாகக் கடந்து போனதற்கு இந்த அமைதி கூடக் காணமாக இருந்திருக்கலாம். இந்த அமைதிக்கு நீங்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளுங்கள்… இப்ப வாழ்க்கை நல்லபடியாக இருக்கு. அது போதாதா!‘உனக்காக நான் இருக்கிறேன்’ என்று சொல்லிக்கொள்ளாமல் வந்து, அப்படி இருப்பது பேரன்பு இல்லையா!

செய்தி: நா. கதிர்வேலன்

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்