அரசியல் மார்க்கெட்டிங் பிதாமகன் மோடி!



FaceB(JPook - மினி தொடர் 7

மோடி யைப் போல் தொழில்நுட்ப வளர்ச்சியை, இணையதளங்களின் சாத்தியத்தை அதன் வழியே புதிய சமூகங்களின் உருவாக்கத்தை மிக முன்னதாகவே புரிந்துகொண்ட ஓர் அரசியல் தலைவர் இந்திய அரங்கில் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டம் என்னவென்றால் அதை அவர் நேர் வழியில் அல்லாது குறுக்கு வழியில் செல்வதற்கான வாகனமாகக் கண்டதுதான்.

ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் சொன்னால் ஒரு பொய் உண்மையின் வரலாற்று அந்தஸ்தை அடைந்துவிடும் மோசமான காலத்தில் இருக்கிறோம்.
இதை கோயபல்ஸ் பாணி என்பார்கள். ஹிட்லரின் அபிமான பத்திரிகையாளரான கோயபல்ஸ், அவரின் நாஜி சிந்தனைகள் மக்களின் மனதில் இடம்பெற பல்வேறு பிரசார உத்திகளைக் கையாண்டார். அதில் ஒன்று பொய்களைப் பரப்பும் கலையைக் கண்டறிந்தது.

‘எளிய பொய்களை அல்ல; மகத்தான பொய்களைச் சொல்லுங்கள். அப்போதுதான் மக்கள் நம்புவார்கள்’ என்றார் கோயபல்ஸ். ஏனெனில் எளிய பொய்கள் மக்களுக்கானவை. மக்கள் தங்கள் அன்றாட வாழ்வில் பல எளிய பொய்களைச் சொல்கிறார்கள். அரசியல்வாதிகளும் எளிய பொய்கள் சொல்லும்போது அவர்கள் அதை எளிதாகக் கண்டுபிடித்து நிராகரித்து விடுவார்கள்.

ஆனால், மகத்தான பொய்களைச் சொல்ல எளிய மக்கள் துணிய மாட்டார்கள். சிக்கிக் கொள்வோம் என்ற அச்சம் இருக்கும். எனவே, யாரும் மகத்தான பொய்கள் சொன்னால் அதுவும் அச்சு இதழ்கள் சொன்னால் மக்கள் அதை பொய் என நம்பத் தயங்குவார்கள் என்று கோயபல்ஸ் கருதினார். இந்தக் கருத்து ஒரு முழு வெற்றி பெற்ற சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டும். ஹிட்லரின் யூத இன வெறுப்பு உட்பட பல விவகாரங்களில் இந்த மகத்தான பொய்கள் பெரிய அளவில் அவருக்கு உதவின.

ஹிட்லர் மற்றும் கோயபல்ஸ் செயல்படுத்திய ராஜதந்திரத்தைத்தான் மோடியும் அமித்ஷா வும் செயல்படுத்தினார்கள்; செயல்படுத்துகிறார்கள்.
ஆனால், அதற்கு அவர்கள் பயன்படுத்திய வாகனங்கள் ஹிட்லர் காலம் போல், பழையவை அல்ல. நவீன ஹைடெக் தொலைத்தொடர்பு சாதனங்கள். இணையதளம், சமூகவலைத்தளம், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்றவைதான் அவர்களின் மகத்தான பொய்களின் வேட்டை நிலமாக இருந்தன; இருக்கின்றன. கோயபல்ஸின் ஃபார்முலா இப்போதும் தோற்கவில்லை என்பதுதான் பெரும் சோகம்.

மோடி குறித்து ஒவ்வொரு தகவலுமே மிகத் துல்லியமான திட்டமிடலுடன் தயாரிக்கப்பட்டன. அவை, பொய் என்றும் உண்மை என்றும் வடிவமைக்கப்பட்டன. பொய்யையும் உண்மையையும் ஒன்றாகவே பரப்பினார்கள். ஒருவர் பொய்யை நம்பினாலும் உண்மையை நம்பினாலும் எதைப்பேசினாலும் மோடியைத்தான் பேசவேண்டும் என்பதுதான் அந்தத் திட்டத்தின் உள்ளார்ந்த நோக்கமே. அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்.

இன்றல்ல நேற்றல்ல... மோடியின் பொய்கள், மோடி குறித்த பொய்கள் அவர் பிரதமராவதற்குப் பத்து வருடங்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது.
அப்போது குஜராத்தின் முதலமைச்சராக இருந்தார் மோடி. அந்நாளைய குஜராத் அரசின் முதலமைச்சர் இணையதளம் ஒன்றில் மோடி தன் இளம் வயதில் 1974ம் ஆண்டு நடந்த ‘நவ நிர்மான் அந்தோலான்’ என்ற போராட்டத்தின் ஒரு பகுதியை தலைமை ஏற்று நடத்தினார் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இது ஒரு பொய்யான தகவல் என்று ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ அம்பலப்படுத்தியது. ‘நவ் நிர்மான் அந்தோலான்’ - புதிய சமூகத்தை நிர்மாணிப்பதற்கான போராட்டம் - என்பது அந்நாளில் குஜராத்தில் நடைபெற்ற மிகப் பெரிய மாணவர் எழுச்சி. அதிலிருந்து பல இளம் தலைவர்கள் உருவாகி வந்தார்கள்.

அப்போதைய குஜராத் முதல்வர் சிமன்பாய் பட்டேலின் ஊழலுக்கு எதிராக உருவான அப்போராட்டத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் பலர் இறந்தார்கள். இந்தப் போராட்டங்களில் ஒன்றைத்தான் மோடி தலைமையேற்று நடத்தினார் என்று குஜராத் அரசின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அந்நாட்களின் கலவரங்கள் குறித்து பல வரலாற்று நூல்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அதில் எதிலுமே மோடியின் பெயர் எந்தப் பக்கத்திலும் இல்லை.

இவ்வளவு ஏன், மோடி சார்ந்திருக்கும் ஆர்எஸ்எஸ் அமைப்பு வெளியிடும் ‘சாதனா’ என்ற பத்திரிகையாசிரியர் விஷ்ணு பாண்டியா இது தொடர்பாக இரு நூல்கள் வெளியிட்டுள்ளார். அந்நூல்களில்கூட எங்குமே மோடியின் பெயர் இடம்பெறவில்லை என்பதை நாம் நோக்க வேண்டும்.

இப்படி வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரின் கண்ணிலும் மண் தூவி விட்டு, குஜராத்தின் எந்த ஊரில் மோடி போராடினார் என்றுதான் யாருக்குமே தெரியவில்லை.

இந்த விஷயத்தில் மோடியின் பொய் அம்பலமானதுமே மோடி குறித்த அந்த இணையதளம் அவரது தொண்டர்களால் நடத்தப்
படுகிறது என்றும், அந்தத் தகவலை யாரேனும் தொண்டர்கள் தவறாக உள்ளிட்டிருக்கலாம் என்றும் சப்பைக் கட்டு கட்டப்பட்டது. நிலாஞ்சன் முகாபாத்யாய எழுதிய ‘நரேந்திர மோடி’ என்ற நூலில் இந்தத் தகவல் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.

இது ஒரு தொடக்கம் மட்டுமே. இதைத் தொடர்ந்து மோடி தன்னைப்பற்றி உருவாக்கிய எல்லாச் செய்திகளிலுமே நம்பகத்தன்மை என்பது முழு கேள்விக்குறியாக இருக்கிறது. சரியாகவோ தவறாகவே எதுவாகப் பேசப்பட்டாலும், தான் பேசப்பட வேண்டும் என்பதே அவரது ஒரே தாரக மந்திரம்.
இப்படி, ஒரு கருத்தை ஒரு புகழ் விரும்பி அல்லது விளம்பரப் பிரியர் கொண்டிருந்தால் அதில் நாம் சொல்ல எதுவுமே இல்லை.

ஒரு நாட்டின் தலைவனுக்கு இந்த மனநிலை இருந்தால் அந்நாடு என்னென்ன பாடுபடும் என்பதற்கு இன்றைய நமது இந்தியாவே மிகப் பெரிய சாட்சி.
ராஜேஷ் ஜெயின் போன்ற மீடியா தரகர்கள் மோடிக்கு இப்படியான பொய்ப் பிரசாரங்களைச் செய்து கொடுத்துதான் தங்கள் பாக்கெட்டை நிரப்பிக் கொண்டார்கள்.

‘ஃப்ரெண்ட்ஸ் ஆஃப் பிஜேபி’ அமைப்பு இந்தியாவின் மத்தியதர வர்க்கத்தை பாஜக பிடியில் சேர்ப்பதை நோக்கமாகக் கொண்டு களமாடியது.
இந்த அமைப்பைத் தொடங்கிய பின் 2010ம் ஆண்டில் மோடியுடனான தனிப்பட்ட சந்திப்பு ஒன்றுக்குப் பிறகு ஜெயின் மேலும் உக்கிரமாகச் செயல்படத் தொடங்கினார். மோடி அலை ஒன்றை உருவாக்குவதுதான் அவரது நோக்கமாக இருந்தது.

2014ம் ஆண்டு மோடி பிரதமராக வேண்டும் என்றால் இப்போதிலிருந்தே (2010ல் இருந்தே) மோடி மீதான எதிர்பார்ப்பு ஒன்றை கட்டமைக்க வேண்டும் என்று திட்டமிடப்பட்டது.ஜெயினுக்கு அப்போது புதிதாக ஒரு நபர் அறிமுகப்படுத்தப்பட்டார். அவர்தான் டாக்டர் ஹிரான் ஜோஷி. குஜராத் அரசில் மோடியின் மிக நம்பிக்கைக்குரிய கை.

பதினெட்டு ஆண்டு கால கல்விப் பணிக்குப் பிறகு மோடியுடன் கைகோர்த்த ஜோஷி மிக விரைவில் மோடியின் மிக நம்பிக்கைக்குரிய ‘மேன் ஃப்ரைடே’ என்ற அந்தஸ்துக்கு உயர்ந்தார்.

இப்போது, பிரதம மந்திரி அலுவலகத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவில் ஓஎஸ்டி எனப்படும் சிறப்பு கடமை அதிகாரி யாகப் பணியில் இருக்கிறார்.இப்படியாக, மோடியை பிரதமராக்குவதற்கான ஒரு ரகசியப் படை மெல்ல மெல்ல உருவாக்கப்பட்டது. அதில் இன்னமும் பல கைகள் இணையத் தொடங்கின.

(தொடர்ந்து தேடுவோம்)

இளங்கோ கிருஷ்ணன்