அணையா அடுப்பு-21



தூக்கம் தொலைத்த துணையே!

வடலூரில் தருமச்சாலை உருவான பின்பு, அதன் பராமரிப்பு மற்றும் அபிவிருத்திப் பணிகளின் பொருட்டு அங்கேயே வள்ளலார் பெரும்பாலான நாட்களைக் கழிக்க வேண்டியிருந்தது.அதுவே ‘சன்மார்க்க சங்க’த்தின் தலைமை அலுவலகமாகவும் ஆனது.வழிபாட்டுக்கு மட்டுமின்றி சங்கம் சார்ந்த பிற பணிகளும் இங்கிருந்தே நடந்தன.அப்பாசாமி செட்டியார், தருமச்சாலையின் முழு நிர்வாகத்தையும் மிகத்திறமையாகக் கையாண்டார்.நமச்சிவாயம் பிள்ளை, சண்முகம் பிள்ளை போன்றோர் முழுநேர அலுவலர்களாக தங்களை ஈடுபடுத்திக் கொண்டனர்.

இவர்கள் தவிர்த்து மேலும் இருபதுக்கும் மேற்பட்டோர், அப்போது வள்ளலாருடன் இருந்ததாகத் தெரிகிறது.தருமச்சாலை சிரமமின்றி இயங்க நாடெங்குமிருந்து உதவிகள் குவிந்தன.ஒரு மகத்தான ஸ்தாபனமாக சங்கம் உருவெடுத்தபிறகு, அதன் நிர்வாகம் மற்றும் எதிர்காலம் குறித்த கவலை வள்ளலாருக்கு எப்போதும் இருந்து வந்ததாகத் தெரிகிறது.தாம் முன்னெடுக்கும் அறப்பணிகள் தமது காலத்துக்குப் பிறகும் தலைமுறை தலைமுறையாக சிறப்பாக நடந்தேற வேண்டுமே என்று எப்போதும் யோசித்துக் கொண்டிருப்பாராம்.

எனவே -கவலைகளை மறக்க அடிக்கடி தவத்தில் ஆழ்ந்திருக்கிறார்.ஒருநாள் அதிகாலைத் தவத்தில் தனக்கு இறைவன் காட்சி தந்ததாகவும் எழுதியிருக்கிறார்.

‘காலையிலே நின்றன்னைக் கண்டுகொண்டேன் சன்மார்க்கச்
சாலையிலே இன்பம் தழைக்கிறேன்...’
- என்று குறிப்பிடுகிறார்.

இன்னொரு சமயம், தானொரு அதிசய நிகழ்வைக் காண நேர்ந்ததாக, தருமச்சாலையின் நிர்வாகத்தில் இருந்த சண்முகம் பிள்ளை குறிப்பிடுகிறார்.
அடிக்கடி சூரியன் தகிக்கும் உச்சி வேளையில் வெட்ட வெளியில் அமர்ந்து தியானிப்பது வள்ளலாரின் வழக்கமாக இருந்திருக்கிறது.
அம்மாதிரி ஒருமுறை தியானத்தில் ஆழ்ந்தார்.ஏதோ அலுவல் தொடர்பாக வள்ளலாரைத் தேடிக் கொண்டிருந்த சண்முகம் பிள்ளையிடம், ‘சாமிகள் நிஷ்டையில் இருக்கிறார்...’ என்று சொல்லியிருக்கிறார்கள்.

அலுவல் அவசரம் என்பதால் வள்ளலார் தியானித்துக் கொண்டிருந்த இடத்துக்கே சென்றிருக்கிறார் சண்முகம் பிள்ளை.அங்கே அவர் கண்ட காட்சி அவரை மூச்சடைக்க வைத்திருக்கிறது.வள்ளலாரின் தலை தனியாக, உடல் தனியாக, கை கால்கள் தனித்தனியாக என்று அங்கங்கள் ஆங்காங்கே பிரிந்து நிஷ்டையில் ஈடுப்பட்டிருந்தது போன்ற தோற்ற மயக்கம் அவருக்கு ஏற்பட்டிருக்கிறது.

‘ஆண்டவனே!’ என்று அதிர்ச்சியில் கதறியவாறு மயங்கும் நிலைக்கு அவர் போகும்போது, உடல் உறுப்புகள் இணைந்து முழு வள்ளலார் காட்சி தந்திருக்கிறார்.அப்போது அவரது தலைக்கு மேலாக சூரியனிலிருந்து ஓர் ஒளிக்கற்றை தெரிந்திருக்கிறது.கண்களைத் திறந்த வள்ளலார், “இப்படி திடீர் திடீரென்று இங்கே வராதீர்கள்…” என்று தனக்கு சொன்னதாக சண்முகம் பிள்ளை சொல்கிறார்.தருமச்சாலையில் கிட்டத்தட்ட நான்காண்டுகள் வசித்தார் வள்ளலார்.

அதுதான் அவரது ஒட்டுமொத்த வாழ்நாளுக்கான அர்த்தம் மிகுந்த ஆண்டுகள் என்று கருதலாம்.அவரது தோற்றம் மிகவும் பொலிவு மிக்கதாக இருந்தது என்று அப்போது அவரை நேரடி யாகக் கண்டவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.மிகவும் ஒல்லியான தேகம். உயரமும் அல்லாத குள்ளமும் அல்லாத நடுத்தர உயரம். நல்ல சிவப்பு நிறம். எப்போதும் தலை நிமிர்ந்தே காட்சி தருவார். கருணையான கூர்மையான கண்கள்.

அவரை புகைப்படம் எடுக்க சிலர் முயன்றும் தோற்றிருக்கிறார்கள். ஒவ்வொரு முறை படமெடுத்தும் அப்படங்கள் முழுக்க ஜோதியாகவே பதிவாகி இருக்கின்றன என்கிறார்கள்.பொதுவாக துறவிகள் எனப்படுவோர் காவியுடைதான் அணிவார்கள்.

வள்ளலார் எப்போதுமே தூய்மையான வெண்ணிற ஆடைகளைத்தான் விரும்பி அணிந்தார். தத்துவத்தை வென்றோருக்கு வெள்ளாடையே போதுமென்று சொல்வாராம். எப்போதும் கைக்குட்டை வைத்திருப்பார். அதுவும் வெண்ணிறம்தான். கைக்குட்டையை இடையில் செருகியிருப்பார்.

இளம் வயதிலிருந்தே அவருக்கு உணவில் ஈடுபாடு இல்லை. பெரும்பாலான நாட்கள் ஒருவேளை உணவுதான் எடுத்துக் கொண்டிருக்கிறார். சில சமயம் இருவேளை. இறுதிக் காலத்தில் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு முறைதான் உண்பார் என்பார்கள், அதன் பிறகு வெறுமனே நாட்டுச் சர்க்கரை கலந்த வெந்நீரை மட்டும் அருந்தி, உணவை முற்றிலுமாக நிராகரித்தாராம்.

வள்ளலாருக்கு தூங்கப் பிடிக்காது. இளமையில் ஒரு நாளைக்கு வெறுமனே மூன்று மணி நேரம்தான் உறங்கியிருக்கிறார். பின்பு படிப்படியாக இரண்டு மணி நேரம், ஒரு மணி நேரம் என்று குறைந்து கொண்டே வந்து கடைசியில் அவர் தூங்குவதே இல்லை என்கிற நிலை ஏற்பட்டது.

எனவேதான் -‘தூக்கம் தொலைத்த துணையே’ என்று இறைவனை அழைப்பார்.

பெரும்பாலும் அவரை கைகட்டிய நிலையிலேயே பார்க்கலாம். நடக்கும்போது கூட கைகளை வீசி நடக்கமாட்டாராம்.அக்காலக்கட்டத்தில் துறவிகள் பெரும்பாலும் காலுக்கு செருப்பு அணிய மாட்டார்கள். அவ்வாறு அணிவதாக இருந்தாலும் மரத்தால் செய்த பாதக்குறடு களையே அணிவார்கள்.வள்ளலாரைப் பொறுத்தவரை அன்பர்கள் விரும்பித் தரும் செருப்புகள் எதுவாக இருந்தாலும் அணிவாராம். அடிக்கடி செருப்பு மாற்றும் வழக்கம் அவருக்கு இருந்ததாகத் தெரிகிறது.

ஆனால் - வெயிலுக்கு குடை பிடிக்கும் வழக்கம் அவருக்கு இருந்ததில்லை. யாராவது குடை பிடித்தாலும் தவிர்க்கச் சொல்லி விடுவாராம்.
துறவிகள் முழுக்க மொட்டை அடித்திருப்பார்கள் அல்லது நீளமாக முடியை வளர்த்திருப்பார்கள்.வள்ளலார், இந்த விஷயத்திலும் வேறுபட்டவர். அவருக்கு அளவாக முடியிருக்கும். மெல்லிய மீசையும் உண்டு என்பது நேரில் கண்டவர்கள் சாட்சியம்.

யாரேனும் அன்பர்கள் இல்லங்களுக்கு விஜயம் செய்யும்போது, அங்கே உயரமான ஆசனம் போடப்பட்டிருந்தால்  அதில் அமருவதற்கு நாணுவாராம். அதுபோலவே திண்ணைகளில் அமரும்போதும் காலை கீழே தொங்கவிடாமல் சம்மணம் போட்டே அமருவாராம்.

(அடுப்பு எரியும்)

- தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்