அடிமைகளின் காதலி!



சந்தோஷத்தில் துள்ளிக் குதித்து குதூகலிக்கிறார் ஸ்ருதிஹாசன். விஜய் சேதுபதியின் ஜோடியாக நடித்து வரும் ‘லாபம்’ படத்தின் க்ளைமேக்ஸ் ஷூட் பரபரப்பதால் அதில் பங்கேற்க மும்பையில் இருந்து சென்னைக்கு பறந்து வந்துவிட்டார். அதில் இமான் இசையில் ஒரு பாடலையும் பாடியிருக்கிறார்.  
இது தவிர, தானே பாடல் எழுதி, இசையமைத்த பாடல்களை எல்லாம் தன்னுடைய யூ டியூப் சேனலில் பதிவேற்றி அங்கும் லைக்ஸை குவித்து வருகிறார்.

இப்போது டோலிவுட்டில் ரவி தேஜாவுடன் அவர் நடித்த ‘க்ராக்’ ரிலீஸுக்கு ரெடி. பவன்கல்யாணின் ‘வக்கீல் சாப்’ (‘நேர்கொண்ட பார்வை’யின் ரீமேக்) படத்தில் கேமியோ ரோல். ஆக, எட்டுத் திசையிலும் ஸ்ருதி ஒலிக்கிறது! லாக்டவுன் டைம்ல மும்பைல இருந்தீங்களாமே?
ஆமா. லண்டனோ இந்தியாவோ... வீடு என்பது நமக்கான ஸ்பேஸ். பேண்டமிக் டைம்ல மும்பை வீட்ல தனியாதான் இருந்தேன். இசையும், எழுத்துமா பொழுது போச்சு.

என் இயல்புகளான hard, weird... கலர்ஃபுல்லான விஷயங்களை எல்லாம் மிக்ஸ் பண்ணின மாதிரி வீட்டை பார்த்துப் பார்த்து அமைச்சிருக்கேன்.   வீட்டுக்குள்ள சுவர்கள் எல்லாமே க்ரே கலர்ல கான்கிரீட் பாலீஷ் டச் கொடுத்திருக்கேன். அந்த கலருக்கு மேட்ச் ஆகுற மாதிரி எனக்கு ரொம்ப பிடிச்ச பிங்க்கை மிக்ஸ் பண்ணியிருக்கேன். அதாவது பிங்க் கலர்ஸ்ல டாய்ஸ், அக்சஸ்சரீஸ், பர்னீச்சர்ஸ் எல்லாமே செட் பண்ணி வச்சிருக்கேன்.
அமெரிக்காவோ லண்டனோ, ஃபாரீன் ட்ராவல் ஆகும் போது எனக்குப் பிடிச்ச பிங்க் கலர்ஸ்ல வித்தியாசமான பொருட்கள் இருந்தால் அதை வாங்கிடுவேன்.

அப்படித்தான் கிறிஸ்துமஸ் தாத்தா மாதிரி இருக்கும் rude gnome பொம்மை வாங்கினேன். இண்டோர் செடிகளுக்கு மத்தியில் அவரை நிற்க வச்சிருக்கேன். இன்னொரு ரூமை என் பியானோ அலங்கரிக்குது. தபேலா, கிடார், தம்புரானு நான் மீட்டுற இசைக் கருவிகள் எல்லாம் அங்கதான் இருக்கும்.அப்புறம் எப்பவும் ஜில்லுனு இருக்கட்டும்னு நான் வாங்கின அவார்ட்ஸை ஃப்ரிட்ஜ் மேல வச்சிருக்கேன்! வீட்டுக்கு வர்ற ஃப்ரெண்ட்ஸ் எல்லாருமே பிங்க்ல ஜொலிக்கற ‘3 குரங்கு’ பொம்மைகளை ஆச்சரியமா பார்க்கறாங்க.

எங்க அப்பாவோட டேபிள்ல ‘தீயவை பேசாதே, தீயவை பார்க்காதே, தீயவை கேட்காதே...’னு மாரல் சொல்ற மரத்தாலான மூணு குரங்கு பொம்மைகள் இருக்கும். அதோட இம்பாக்ட்ல நானும் இந்த குரங்கு பொம்மைகளை வச்சிருக்கேன்.

இது தவிர என் ஃப்ரெண்ட் ஒருத்தரோட கல்ச்சுரல் ஷாப்ல ஒரு ஓவியம் வாங்கினேன். அதையும் என் மும்பை வீட்லதான் மாட்டி வச்சிருக்கேன்.
வீட்ல சமையலும் நானேதான். சப்பாத்தி, அதுக்கு மேட்ச்சிங்கான தக்காளி வெங்காய சட்னினு ரெடி பண்ணிடுவேன். டின்னரும் அதான்.
அப்புறம், காலைல வீட்ல இருந்தா, எங்க ஏரியாவில் உள்ள தெரு நாய்களுக்கு சாப்பாடு வைப்பேன். அதுல மனசும்
திருப்தியாகும்.

நாங்கல்லாம் உங்க ஆக்ட்டிங்குக்கு அடிக்ட்...  உங்க அடிக்‌ஷன் என்ன..?
ட்ராவல் ரொம்ப பிடிக்கும். இசையைப் போலவே வாக்கிங்குக்கும் நான் அடிமை. வீட்ல இருந்தா ட்ரெட் மில்ல வாக்கிங் போயிடுவேன். ட்ராவல் அண்ட் வாக்கிங் ரெண்டுமே எனர்ஜியை அதிகரிக்கும். இதைத் தவிர மொபைல்ல கேண்டி க்ரஷ் விளையாடுவேன். என் ஆல்டைம் அடிக்ட் அதான். எனக்கு காஃபி பிடிக்காது. டீதான் ஃபேவரிட். அதிலும் பால், சுகர் கலக்காத டிப் டீதான் குடிப்பேன். டீ டைம் இஸ் மை ஃபேவரிட் டைம்.

இப்படி சில விஷயங்களுக்கு நான் அடிக்ட். அடிமை. ஸோ, நான் அடிமையின் காதலி அல்ல... அடிமைகளின் காதலி!
முதன் முதலா நடிச்ச ‘தேவி’ ஷார்ட் ஃபிலிம் அனுபவம் எப்படியிருந்தது?

ஃபென்டாஸ்டிக். என்னோட நடிச்சவங்க எல்லாமே சூப்பர் சீனியர்ஸ். முழுக்க முழுக்க பெண்கள் நடிச்ச குறும்படம் அது. கஜோல் மேம், நீனா
குல்கர்னி, நேஹா தூபியா, முக்தா பார்வி, சந்தியா மஹ்ரேனு எல்லாருமே சாதனை பண்ணின பெண்கள்.சின்ன வயசில இருந்து கஜோல் மேமின் ரசிகை. அவங்களோட ‘குச் குச் ஹோத்தா ஹை’ அவ்ளோ பிடிக்கும். என் ஃபேவரிட் படமும் அதுதான்! அவங்களோட சேர்ந்து நடிச்சது மறக்க முடியாத அனுபவம்.

என்னோட ஃப்ரெண்ட்ஸான நீரஜ், ராயன் ரெண்டு பேரும் என்கிட்ட ‘தேவி’யோட கான்செப்ட் பத்தி சொன்னாங்க. அவங்களோட ஐடியா பிடிச்சிருந்து. பெண்களின் வலிமையை உணர்த்தும் படம்.அதுல முழுக்கவே பெண் கேரக்டர்கள்தான் நடிக்கப் போறாங்கனு சொன்னதும் எக்ஸைட்டாகிட்டேன். இப்ப ‘புத்தம் புது காலை’ அந்தாலஜியில் ஒரு கதைல நானும் நடிச்சிருக்கேன். இந்த ட்ராவலும் சந்தோஷமா இருக்கு.

மை.பாரதிராஜா