அப்பா பாத்திரங்களை வாடகைக்கு விட்டார்...



நான் ஓவியனாக இருந்து Wild life Photographer ஆகி  இன்று ஒளிப்பதிவாளராக பயணம் செய்கிறேன்...

“இன்னிக்கும் நான் சினிமாவுக்கு வந்ததை நினைச்சால் ஆச்சர்யமாயிருக்கு. அப்பா பாத்திரங்களை வாடகைக்கு விடுகிற கடை வைச்சிருந்தார்.

ஓவியங்கள் வரைவதில் அதிக ஆர்வம் இருந்தது. பள்ளிக்கூடத்தில் ஓவிய டீச்சராக போக இருந்தவனை சென்னை ஓவியக் கல்லூரியில் சேர வழிகாட்டியவர் எஸ்.கே.ஜெகநாதன் அவர்கள். அவரை மறக்கவே முடியாது. சென்னைக்கு வந்தால் ஓவிய உலகமே வேற மாதிரி இருக்கு. பார்த்து வரைதலும், தெய்வங்களையும் வரைஞ்சு பார்த்தவனுக்கு இங்கே எல்லாமே புதுசாயிருக்கு.

வண்ணங்களால் ஆனது இந்த உலகம். பூமியில் வாழ்கிற ஒவ்வொரு மனிதனுக்கும், மண்ணுக்கும், உயிருக்கும் ஒரு வண்ணமிருக்கு. ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒரு பிரத்யேக குணமிருக்குன்னு புரியுது. ஒரே ஃப்ரேமில் வாழ்க்கையைச் சிறப்பாகப் பதிவு செய்யும் ஒரு புகைப்படம், சிறந்த இலக்கியப்படைப்புக்கு நிகரானதுன்னு அடுத்து புரியுது. அப்படியே போட்டோகிராபி பக்கமாகப் போறேன்.

அப்புறம் ‘விகடனில்’ நான் எடுத்த போட்டோவை ஒளிப்பதிவாளர் ரவியாதவ் செலக்ட் செய்கிறார். அவரைச் சந்திக்க நேர்ந்ததும், பிற்பாடு சேது ராமிடம் உதவியாளராகச் சேர்ந்ததும் எனது அடுத்த பயணம். ‘மைண்ட் ஸ்கிரீனில்’ ஒளிப் பதிவு படித்தது நல்ல அனுபவம். முதல் படமாக இயக்கு நர் கோகுேலாடு ஆரம்பித்த ‘ரௌத்திரம்’ என் திரையுலக புது வாழ்க்கையை ஆரம்பித்தது...” நிதானமாகப் பேச ஆரம்பிக்கிறார் ஒளிப்பதிவாளர்
என்.சண்முகசுந்தரம்.

‘ரௌத்திரம்,’ ‘ஆண்டவன் கட்டளை’யைத் தொடர்ந்து இப்போது ‘96’ இவரை உச்சம் கொண்டு போனது.ஒவ்வொருத்தருக்கும் ஒளிப்பதிவு மீதான கருத்து வேறு வேறானதாக இருக்கு…ஒவ்வொருத்தரும் கதையை உண்டாக்குகிற விதம் முக்கியம். அதில் ஆழமாகப் போய் ஒரு பயணம் போய்க்கிட்டு இருக்கும்போதே மனதில் காட்சிகள் இப்படித்தான் நிர்ணயம் ஆகி காத்திருக்கும்.

‘ஆண்டவன் கட்டளை’யில் மணிகண்டன், ‘96’ல் பிரேம்குமாரோடு செய்யும்போது இன்னும் கூடுதலாக இருக்கும். இரண்டு பேருமே ஒளிப்பதிவாளர்களாக இருப்பதும், அதனால் இரண்டு பேர் உணர்வுகளும், நெருங்கி வந்து எப்படி படத்தைக் கொண்டு வரலாம்னு முடிவாகிடும்.
அற்புதமான தருணங்களாக அமையும் பேச்சின் சாரத்தை எடுத்து இயக்குநர் கோடி காட்ட ஆரம்பிச்ச உடனே ஒரு நல்ல சினிமா வருவதற்கான எழுச்சி வந்திடும்.

‘96’ல் படம் முழுக்க வேரோடி யிருந்த காதல் உணர்வை எல்லோரும் உணர்ந்தார்கள் இல்லையா! வெள்ளத்தனைய மலர் நீட்டம் என்பார்கள் இல்லையா, அதேதான். ஒரு சமயத்தில் ஒளிப்பதிவாளரும், இயக்குநரும் கூடி நிற்பது நடக்கும். படத்திற்கு செம்மை கூட்டுவதில் எல்லோருக்குமே அக்கறை இருப்பது உண்மை. ஒளியின் தன்மையை ரசிகர்கள் உணரத் தொடங்கி விட்டார்கள் என்பதற்கான அடையாளம் வெளிப்படையாகத் தெரிகிறது. அதனால் நமக்கு பொறுப்பு கூடி விட்டது. இதை ஈடு செய்ய முடிகிறவர்கள் இங்கே நிலைக்கிறார்கள்.

எப்பவும் கதையை தொட்டுக்கிட்டே ஒளிப்பதிவு போனால் சினிமாவுக்கு நல்லது. அப்படிச் செய்வதால் சினிமா ஓட்டத்திலிருந்து ரசிகர்களின் மனம் திரும்பாமல் இருக்கிற சூழல் அமையும். இமேஜ் குவாலிட்டி, கதைக்கான அணுகுமுறை முக்கியம். ஒரு சரியான ஒளிப்பதிவு அமையும்போது, அதுவே மக்களை படத்துக்கு நல்ல ரசிகர்களாக்கி விடும்.

‘ஆரோகணம்’ படத்தை 5D கேமராவில் துல்லியமாக படம் பிடித்ததை கே.பாலச்சந்தர் பாராட்டியது மனதில் நிற்கிறது. கன்னட ஸ்டார் புனித் ராஜ் குமார் நடித்த ‘சக்ரவியூகா’ படத்தில் ஒளிப்பதிவு செய்த வாய்ப்பும் முக்கியமானது. தமிழ்நாட்டின் கோயில்களில் இருக்கிற மடப்பள்ளிகள் குறித்து எடுத்த என் ஆவணப்படம் தேசிய விருது பெற்றது.

விஜய் சேதுபதியோடு அதிகம் படம் செய்திருக்கிறீர்கள்…
அதெல்லாம் அருமையான அனுபவ வகையில் சேரும். அவர் ஒரு நல்ல நடிகர் என்று சொல்வதெல்லாம் பழையதாகிவிட்டது. பல இடங்களில் அவர் எல்லோரையும் அசைத்துப் பார்த்து விடுகிறார். எந்தவொரு படத்தையும் நல்ல ஒரு சினிமா அனுபவமாக மாற்ற முயற்சிப்பதில் அவருக்கு இருக்கிற சிரத்தைதான் எனக்குப் பிடிக்கும்.

‘வர்ணம்’ படத்தில் அஸிஸ்டெண்டாக வேலை செய்யும்போது ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கும்போது சந்திச்சேன். பழகின பிறகு நாசரின் ஒரு டாகுமெண்டரியில் அவர் ராஜராஜசோழனாக வந்தார். இப்ப நலன் குமாரசாமி ஷூட்டிங்கில் இருக்கும்போது என்னுடைய Wild life போட்டோகிராஃபர் நண்பன் ஒருத்தன் வந்தான். அவன் எடுத்த படங்களில் ஒன்றை விஜய்க்கு அளிக்க விரும்பினான்.

அந்த அழகான படங்களில் அவர் தேர்ந்தெடுத்தது பெரிய யானை. அதற்கு அவர் ‘இந்த யானையின் வயித்துக்குள்ளே ஒரு காட்டுக்கான விதைகள் இருக்குல்ல...’ என்றார். நாம் நினைக்காத வேறு கோணத்தில் சிந்திக்கிற மனசு அவருடையது. இப்பதான் நலன் குமாரசாமி டைரக்‌ஷனில் ‘குட்டி லவ் ஸ்டோரி'யின் ஒரு பகுதியை முடிச்சோம். உணர்வுகளை ஏற்கனவே உள்வாங்கிட்டு செட்டுக்கு வர்றவங்களில் அவரும் ஒருத்தர். எளிய ரசிகனுக்கும், பழுத்த சினிமா ரசிகனுக்கும் பிடிச்சுப்போகிற விதத்தில் நடிக்கிறதுதான் அவர் ஸ்பெஷாலிட்டி.

இன்னிக்கு இருக்கிற ஒளிப்பதிவாளர்களில் யார் கவனம் ஈர்க்கிறாங்க..?

சத்யன் சூர்யன். எனக்கு தம்பி மாதிரியானவர். ஆனால், உழைப்பில், வித்தியாசத்தில் பிரமிப்பு காட்டுகிறார். என்னுடன் ஆரம்பத்தில் வேலை செய்திருக்கிறார். அவருடைய ஒவ்வொரு படத்தையும் எதிர்பார்க்கிற அளவுக்கு வைத்துவிடுகிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘மாயா’, ‘கைதி’ இப்படி எல்லாப் படங்களிலும் அவரது சிக்நேச்சரை வைத்துவிடுகிறார்.

‘96’ல், ‘லைஃப் ஆஃப் ராமி’ல் பேசப்பட்டீர்கள்...

நானே அப்படித்தான். வருஷத்திற்கு ஒரு தடவையாவது இந்தியாவுக்குள்ளே எங்கேயாவது காட்டுக்குள்ளே போயிடுவேன். பயணம் ரொம்பப் பிடிக்கும். வழக்கமான வாழ்க்கையிலிருந்து பயணங்களே நம்மை மீட்கும். உண்மையான பயணிக்கு, தான் எங்கே செல்கிறோம் என்பதே தெரியாது. அப்படிக்கூட என் பயணம் அமைந்திருக்கிறது.

ஒரு பாடலுக்காக நாங்கள் 14 நாட்கள் எடுத்துக் கொண்டோம். அதை அனுமதித்த தயாரிப்பாளரையும், உணர்வைப் புரிந்து தேதிகளைக் கொடுத்த விஜய் சேதுபதியையும், மறக்க முடியாது. ‘கண்ணாடியாக பிறந்தேன், காண்கின்ற எல்லாம் நானாகிறேன்…’ உருவான நேரங்கள் எனக்கு முக்கியமானவை.வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்க என்ன ஓடுது மனசில..?

சில முக்கியமான படங்கள் செய்திருக்கோம்னு தோணுது. இன்னும் நல்ல படங்கள் செய்வதற்கான இடங்கள் அமையும்னு நம்புகிறேன். உழைப்பு மட்டும் என்னை இவ்வளவு தூரம் அழைத்து வந்திருக்கிறது.

சின்னதாக நிலம் வாங்கி, அதில் அடர்த்தியான சிறு காட்டை வளர்க்க விரும்புகிறேன். என் நிம்மதியான வாழ்க்கைக்கு மனைவி புவனேஸ்வரி உதவியாக இருக்கிறார். காதலித்து மணந்த மாமன் மகள்தான். என் மகள் சகஸ்ரா அருமையான பெண். இவர்களுக்கு நேரம் ஒதுக்குவது எனக்கான பெரிய சந்தோஷம்.

நா.கதிர்வேலன்