விஜய் சேதுபதியின் தர்பார்!மனசுக்குள் ஒரு கதை ஓட ஆரம்பிச்சதும், கூடவே அதுக்கான ஒரு கற்பனை முகமும் பூக்கும். அப்படி மலர்ந்த முகம் விஜய் சேதுபதி.

‘துக்ளக் தர்பார்’  உங்களுக்குப் பிடிக்கும். அரசியல் கலந்த சரித்திரத்தில் இருந்த ஒருத்தரை முன்வைச்சு படம் பேசும்.
இந்த தலைப்பிலேயே படத்திற்கான முன்னோட்டம் இருக்கு. மக்களை இந்தப்படத்தோட இணைய வைக்கிற இடங்கள் நிறைய இருக்கு. படத்துக்கு பெரிய எதிர்பார்ப்பு எல்லா இடத்திலும் இருக்கு. நிச்சயம் எதிர்பார்ப்பை நிறைவு பண்ணும்.

நல்ல கதை. எந்த நல்ல நடிகரும் ‘இதை நான் செய்யணும்’னு ஆசைப்படுகிற கதை. விஜய் சேதுபதி வாழ்ந்திருக்கார். அவர் கேரியரில் இன்னும் பளிச்னு சொல்லக்கூடிய விஷயம். இந்த கேரக்ட்ரை பண்றது அவ்வளவு ஈஸி கிடையாது. விஜய் சேதுபதி இருக்காரேன்னு நம்பிக்கையில் எழுதினேன்.
இதில் இருக்கிற சிரமங்களைக் கூட சந்தோஷமாக மாற்றுவார் சேது. ரசித்து பண்றோம் என்பதால் வருகிற மனோபாவம் அது. எனக்கு சேதுகிட்ட பிடிச்சதே அவர் சிரமங்களை ரசிப்பதுதான்...” சின்ன சிரிப்போடு பேசுகிறார் இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன்.

அரசியல், சடையர்னு சொன்னது ஆர்வம் அதிகமாகுது… இந்தக் கதையை முன்னாடியே அவர்கிட்டே சொல்லிட்டேன். ‘டெல்லி, அப்படியே கதையை வைச்சிருப்பா’னு சொல்லி ஒவ்வொரு தடவையும் நலன் விசாரிப்பு இருக்கும். என்னை ரொம்ப தாங்கி நிற்பார். பாலாஜி தரணிதரன்தான் வசனங்களை எழுதினார். நான், பாலாஜி, பிரேம்குமார், மருதுபாண்டியன், ஆறுமுககுமார், கார்த்திக், ஆர்த்தி, ஜான்சி, சதிஷ், ‘மனசெல்லாம்’ பாலாஜினு ஒரு பெரிய நண்பர் கூட்டம் இருந்து பேசுவோம். அதில் பாலாஜியின் அனுபவம் அப்படியே தனியாகத் தெரியும்.

பக்ஸ், பிரேம், எல்லோரும் என் கதைக்குள் வந்திட்டாங்க. நம்ம டெல்லி பண்றான்னு வருகிற சந்தோஷம் அது. ஒரு வார்த்தைக்காக தரணிதரன் வெயிட் பண்றது எல்லாம் நடந்திருக்கு. ஓர் அரசியல்வாதி எப்படியும் முன்னுக்கு வந்திடணும், சட்னு ஓர் இடத்தை அடைஞ்சிடணும்னு நினைக்கிறான். அதுவும் குறுகிய காலத்தில் வரணும். அதற்கான துரோகங்கள், சிறு வஞ்சகங்கள்... காலை வாரிவிடுவதற்கு அஞ்சுவது இல்லை.

அதன் அடுத்தடுத்த சம்பவங்கள் அழகாக விரிவதுதான் கதை. இந்தப்படத்திற்காக சேதுவின் சிரமத்திற்கு, ஆர்வத்திற்கு, உழைப்பிற்கு, நடிப்பிற்கு பெரிய பலன் கிடைக்கும். சொல்லும்போதே இந்தப்படத்தில் சேதுபதியின் ஸ்பெஷல் தெரியுது...    யாருக்குத் தெரியுமோ தெரியாதோ, சேதுபதி ஒரு ரைட்டர். கமல் சார் மாதிரியான ஓர் இடத்துக்கு பக்கத்தில் இருக்கிறவர். இன்னும் அனுபவம் கூடும் போது அவர் வெளிவருகிற அழகு தெரியும்.
இன்டர்வெல்ல சேதுவோட ஒரு நடிப்பு இருக்கு. ஒன்பது நிமிஷம். டிராமாதான். ஒற்றை ஆளாக நின்னு விளையாடணும். இப்படி ஒரு டைமென்ஷன் கொடுக்க முடியுமான்னு திகைச்சு நின்ன இடம் அது.

சேது அதற்கு வேறு விஸ்வரூபம் கொடுத்தார். அதை நாம் யோசிச்சிருக்கவே மாட்டோம். ஒரு நல்ல ஆக்டர் பறவை மாதிரி. அதை பறக்கவிட்டு எவ்வளவு தூரம் பறக்குதுன்னு பார்க்கணும். நான் அசந்து நிற்க... அவரே கட் சொன்னார். இது எல்லாமே அவர் என் மேல் வைச்சிருக்கிற நம்பிக்கை. அதற்கெல்லாம் சாட்சி கூடி நின்னவங்களும், கைதட்டி ரசிச்ச லைட்மேன்களும்.

பார்த்திபன் சாரும் இருக்கார்... நல்ல போட்டி இருக்குமே...நான் அவர்கிட்டே பணிவாக ‘இதில் நீங்க தெரியக்கூடாது. புது ஆளாகப் பார்க்கணும். புது கலர் வேணும்’னு கேட்டுக்கிட்டேன். அவர் சிரிச்சார். அவர் ஒரு கிரியேட்டர் இல்லையா, பிரமாதமா பண்ணியிருக்கார். எங்க படத்தோட லைனை அவர் ரொம்ப அருமையா நல்லாப் புரிஞ்சுக்கிட்டார்.

சேதுவும் அவரும் ஃப்ரெண்ட்லியா இருந்தாங்க. ‘அவர் சொன்னதைக் கேட்கறீங்க... நான் சொன்னா கேட்க மாட்டீங்களா’னு பார்த்திபன் சார் சொல்ல, ‘என் பேச்சைக் கேட்க மாட்டியா... அடுத்த படம் உனக்கில்லை’னு சேது சொல்வார்! அது ரசனையான அனுபவம் சார்ந்தவர்களோட விளையாட்டு.

ரெண்டு பேருக்குமான நடிப்புப் போட்டி திரையில் கிடைக்கலாம். பார்த்திபன் சார் ரொம்ப ஃப்ளக்ஸிபிள். அவரை வைத்து வேண்டியதைப் பெறலாம்.
பெண்கள்பத்தி பேசவேண்டாமா பிரதர்..?அதிதி ராவ்தான் ஹீரோயின். இன்னும் அவங்க போர்ஷன் பாக்கியிருக்கு. அவங்க வருகிற நாளுக்காக இந்த லாக்டவுன் முடிவை எதிர்பார்த்து காத்திருக்கோம். மஞ்சிமா மோகன், சேதுவிற்கு தங்கச்சி. நல்ல கேரக்டர். அவங்க இப்படி ஒரு முக்கியமான கேரக்டரில் நடிச்சிட்டோம்னு பெருமையாகவும் இருந்தாங்க.

ஒரு  சீனில் வந்து எப்படி நடிக்கணும்னு கேட்கிறதே இல்லை. எந்த மாதிரி ஃபீலிங் வேணும்னு கேட்கிற ஸ்டைலுக்கு வந்திட்டாங்க!
பாடல்கள் நல்லாயிருக்கு...கோவிந்த் வஸந்தாவின் ஆர்வமும், தேடலும்தான் காரணம். எல்லாப் பாடலும் பிரயாசைப்பட்டு உருவானது. எல்லோருக்கும் பிடிக்கும் என்பது என்  நம்பிக்கை. படத்தோட கலரை புரிஞ்சுக்கிட்டு கிடைத்த பாடல்கள்னு சொல்லணும்.

கேமராமேன் மனோஜ் பரமஹம்சா ஒரு தூண் மாதிரி இருந்தார். அளவு கடந்த சந்தோஷத்தில் இதைச் சொல்றேன். ஒவ்வொரு இடத்தையும் பிரமாதமாக அவர் கொண்டு வருகிற மாயம், கைங்கர்யம் பெரிய விஷயம். எதற்கும் காம்ப்ரமைஸ் ஆகமாட்டார். என்னையும் அப்படி ஆக விடமாட்டார். அப்படியே மனதில் நினைச்சதை, ‘பார்த்துக்கோ’னு கொண்டாந்து காண்பிப்பார்.

பகவதி பெருமாள், கருணாகரன் நல்ல கேரக்டர்களில் நிலைச்சு நிற்கிறாங்க. ‘நீ படத்துக்கு நினைச்சதை எல்லாம் கேட்டு வாங்கிக்க. நல்ல படம் மட்டும் எடுத்துக் கொடு’னு சொல்ற செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோ தயாரிப்பாளர் லலித்குமார் சாரை மறக்க முடியாது.  இவரே கோப்ரா படத்தையும், மாஸ்டர் படத்தை இணைந்தும் பெரும் பொருட் செலவில் தயாரிக் கிறார்.ஒரு தெளிவான படமாக துக்ளக் தர்பார் இருக்குமென உங்களை அழைக்கிறேன்!
                
நா.கதிர்வேலன்