ஆவின் பால்... பாக்கெட் பால்... கோல் மால்!பெரும்பாலான சிறு விவசாயிகளின் குறைந்தபட்ச வருமானத்தையும், வாழ்வாதாரத்தையும் உத்தரவாதம் செய்து வருவது கறவை
மாடுகள்தான்.1991ம் ஆண்டு 55.6 மில்லியன் டன்களாக இருந்த இந்திய பால் உற்பத்தி, 2018 - 19ல் 187.7 மில்லியன் டன்களாக - மூன்று மடங்குக்கு மேல் அதிகரித்தது.

இதே காலகட்டத்தில் தினசரி சராசரி பால் உற்பத்தி 4,698 லட்சம் லிட்டர் என்ற அளவிலும், சராசரி தனிநபர் பால் நுகர்வு 178 கிராமிலிருந்து 394 கிராம் எனவும் அதிகரித்தது. இன்று உலக பால் உற்பத்தியில் இந்தியாவின் பங்கு 18.5%. இது சற்றேறக்குறைய ஐந்தில் ஒரு பங்கு. மட்டுமல்ல. இந்திய அளவில், பால் உற்பத்தியில் தமிழ்நாடு நான்காவது இடத்தை வகிக்கிறது!

இந்நிலையில் கொரோனாவால் எல்லாத் திசைகளிலும் எல்லாத் துறைகளிலும் ஏற்பட்ட பாதிப்புகள் பால் உற்பத்தியாளர்களையும் விட்டு
வைக்கவில்லை. எனவே, அரசு, பால் உற்பத்தியாளர்களுக்கும், பால் பொருட்களுக்கும் மானியம் வழங்கி பாதுகாக்க வேண்டிய தருணம் இது.
‘‘ஆனால், இந்திய அரசு கடந்த ஜூன் மாதம் 23ம் தேதி, 15% இறக்குமதி வரியோடு 10,000 மெட்ரிக் டன் பால் பவுடர் பொருட்களை இறக்குமதி செய்ய அனுமதித்துள்ளது.  

நாடு முழுவதும் உள்ள அனைத்து பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு ஒன்றியங்களிலும் பால் பொருட்கள் தேவைக்கு மேல் கையிருப்பு உள்ள இந்நேரத்தில், ஏன் வெளிநாட்டிலிருந்து பால் பொருட்களை இறக்குமதி செய்ய வேண்டும்?

இது ஒருபுறம் என்றால்... ஆவினில் நிறைய முறைகேடுகள் நடக்கின்றன. பால்வளத்துறை அமைச்சர் வெறும் பொழுதுபோக்கு அமைச்சராக மட்டுமே செயல்படுகிறார்...” என ஆவேசமாக பேசத் தொடங்குகிறார் தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கத்தின் மாநிலத் தலைவரான சு.ஆ.பொன்னு சாமி.

“இந்த கொரோனா காலத்தில் டீக்கடைகள், ஹோட்டல்கள், தங்கும் விடுதிகள், தனியார் நிறுவன கேன்டீன்கள்… என பெரும்பாலான வணிக நிறுவனங்கள் முழுமையாக இயங்கவில்லை. பார்சல் மட்டுமே இருக்கும் காரணத்தால் தமிழகத்தில் நாளொன்றுக்கு சுமார் 30% முதல் 40% வரை வணிக ரீதியிலான பால் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் ஆவின் மற்றும் தனியார் நிறுவனங்கள் பால் கொள்முதல் விலையை தன்னிச்சையாக குறைத்துள்ளன.  

தமிழகத்தில் நாள் ஒன்றுக்கு இரண்டே கால் கோடி லிட்டர் பால் உற்பத்தி ஆகிறது. அதில் பாக்கெட் பாலாக, ஒன்றரைக் கோடி லிட்டர் விநியோகம் ஆகிறது. இதில் ஆவின் சேல்ஸ் வெறும் 25 லட்சம் லிட்டர் மட்டுமே. அதாவது 16.4% ஆவின் மூலமாகவும் 84.6% தனியார் மூலமாகவும் பால் விநியோகமாகிறது.

ஆவினைப் பொறுத்தவரை கூட்டுறவு சங்க உறுப்பினராக இருப்பவர்களிடம் மட்டும்தான் கொள்முதல் செய்வார்கள். பால் தட்டுப்பாடாக இருக்கும் நேரங்களில் மட்டுமே வெளி ஆட்களிடம் வாங்குவார்கள்.இப்போது ஆவினில் சேல்ஸ் குறையாமல், அதேநேரம் ஒரு லட்சம் லிட்டருக்கு மேல் அதிகமாகியுள்ளது. அப்படி இருந்தும் பல இடங்களில் கொள்முதல் எடுக்காமலும், வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை விடுவதுமாக… மங்காத்தா ஆடுகிறார்கள்.  

இப்போது தனியார் பால் உற்பத்தியாளர்களிடம் சேல்ஸ் இல்லாததால் சில இடைத்தரகர்கள், அந்த பாலை கூட்டுறவு சங்க ஆட்களிடம் கொடுக்கிறார்கள். அதுவும் எப்படி..? விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு கொள்முதல் செய்து, ஆவினுக்கு அதற்கு மேல் ஒரு விலை வைத்து விற்கிறார்கள். தமிழக அரசு, ஒரு லிட்டர் பசும்பாலை ரூ.32 என கொள்

முதல் விலையாக நிர்ணயம் செய்துள்ள நிலையில் ஆவின் கொள்முதல் நிலையங்களில் பணியாற்றும் ஊழியர்கள் அரசின் அனுமதியின்றி பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ.7 முதல் ரூ.10 வரை குறைத்து வழங்கி, அரசு நிர்ணயம் செய்த விலைக்கு கணக்கு காட்டி பால் உற்பத்தியாளர்
களுக்கும், ஆவின் நிர்வாகத்திற்கும் மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தி வருகின்றனர்.

அதே நேரம் தனியார் பால் நிறுவனங்கள் ஒரு லிட்டர் பாலை ரூ.32 முதல் ரூ.36 வரை கொள்முதல் விலையாக வழங்கி வந்த நிலையில் இப்போது ஒரு லிட்டர் பாலுக்கு சுமார் ரூ.15 முதல் ரூ.20 வரை வரலாறு காணாத வகையில் விலை குறைத்து, ஒரு லிட்டர் பாலுக்கு ரூ.16 முதல் ரூ.21 வரை மட்டுமே கொள்முதல் விலையாக வழங்கி வருகின்றன...” என்று பால் விவசாயிகளின் அவலங்களை கூறும் பொன்னுசாமி, ஆவினில் நடக்கும் முறைகேட்டினை
விளக்கினார்.

“ஒரு சில தனியார் நிறுவனங்களிடம் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஸ்டாக் வைக்க இடமில்லை. அவ்வாறு ஸ்டாக் வைக்கும் பாலினை பவுடராகத்தான் கன்வர்ட் பண்ண முடியும். அதற்கும் தனியாரிடம் வசதியில்லை.ஆனால், ஆவினில்தான் பவுடராக கன்வர்ட் செய்யும் முறை இருக்கிறது. ‘அங்கு தனியார் நிறுவனங்கள் இலவசமாகப் பயன்படுத்த அனுமதி கொடுங்க’ என்று அரசிடம் கோரிக்கை வைத்தோம். அரசு இதை செய்யவில்லை. ஆவினில் நடக்கும் முறைகேடுகளைத் தடுப்பதுமில்லை.

ஆவின் மற்றும் குளிரூட்டும் நிலையங்களில் பணியாற்றக் கூடிய தரக் கட்டுப்பாட்டு அதிகாரிகள் நீண்ட காலமாக ஒரே இடத்தில் இருப்பதால் அங்கு வரக்கூடிய பாலைத் திருடி விற்கிறார்கள். உதாரணமாக 10 ஆயிரம் லிட்டர் பால் குளிரூட்ட வருகிறது என்றால், அதில் 2,000 லிட்டருக்கு மேல் திருடி அதற்கு பதில் தண்ணீர் கலந்து விடுகிறார்கள். அந்த 2,000 லிட்டர் பாலை வெளியிலிருந்து வந்தது போல் கணக்கு காண்பித்து ஆட்டை போடுகிறார்கள்.

ஆவினை மட்டுமல்ல, கூட்டுறவு சங்கத்தினையும் கண்காணிக்க வேண்டும்.மதுரை பால் திட்ட ஊழியர்கள் கூட்டுறவுக் கடன் மற்றும் சிக்கன நாணயச் சங்கத்தில் கடந்த 2017 - 2018ம் நிதியாண்டில் அதிமுக பிரமுகர்களும், அச்சங்கத்தின் நிர்வாகிகளும் ரூ.7,92,41,616.00 (சுமார் எட்டு கோடி ரூபாய்) என்ற அளவுக்கு கையாடல் செய்தது தணிக்கையில் தெரிய வந்ததும், மோசடி செய்யப்பட்ட தொகையை உரியவர்களிடமிருந்து வசூலிக்க வேண்டும் என தணிக்கைத்துறை அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

இது நடந்து மூன்றாண்டுகளாகியும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அதே சமயம் தவறிழைத்தவர்கள்
அப்பொறுப்புகளில் இன்றளவும் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றனர்.எனவே தமிழக அரசு ஆவின் கொள்முதல் நிலையங்களில் நடைபெறும் முறைகேடுகளைத் தடுக்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். 84.6% பயன்பாட்டில் இருக்கும் தனியார் பால் நிறுவனங்களின் வரலாறு காணாத கொள்முதல் விலைக் குறைப்பைத் தடுக்க வேண்டும்.

கரும்பு மற்றும் நெல் போன்ற விவசாயப் பொருட்களுக்கு செய்வது போல் பால் கொள்முதல் விலைக்கும் குறைந்தபட்ச ஆதார விலையை தமிழக அரசு நிர்ணயம் செய்ய வேண்டும்...” அழுத்தமாகச் சொல்கிறார் பொன்னுசாமி.

அன்னம் அரசு