தகர ஷீட்லயும் ஊழல் நடக்குது..!தமிழகத்தில் இதுவரை கொரோனா தொற்றால் 2 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், ஒன்றரை லட்சத்திற்கும் அதிகமானவர்கள் குணமாகி வீடு திரும்பியுள்ளனர்.
தவிர, பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்கள் எண்ணிக்கை தனி. கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் உடல்நிலையைப் பொறுத்து அவர்கள் மருத்துவமனைக்கோ அல்லது தனிமைப்படுத்தப்படும் கல்லூரிகளுக்கோ அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

இப்படி அனுப்பப்பட்டதும் அவர்கள் வசித்த வீடும், அந்தத் தெருவும் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாகிறது. இதற்காக சாலைகளில் கட்டைகளால் இணைத்த தகர ஷீட்கள் மறித்து வைக்கப்படுகின்றன.சென்னையில் ஆரம்பக் கட்டத்தில், பாதிக்கப்பட்டவரின் தெருவை மறித்து தகர ஷீட்கள் போடப்பட்டன. இப்போது, அந்த வீடு மட்டும் தகர ஷீட்களால் தனிமைப்படுத்தப்படுகிறது.

இந்தத் தகர ஷீட்களில் மட்டுமல்லாமல் அந்த வீட்டில் ஒட்டப்படும் நோட்டீஸிலும், ஃப்ளக்ஸ் வைப்பதிலும் கூட பணம் விளையாடுகிறது. தவிர, பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கப்படும் உணவிற்கான பணத்திலும் கோல்மால் நடப்பதாக தன்னார்வலர்கள் சொல்கிறார்கள்.  

இதுகுறித்து சட்டப் பஞ்சாயத்து இயக்கத்தின் தலைவர் சிவ.இளங்கோவிடம் பேசினோம்.‘‘இந்த தகர ஷீட்கள் வைக்கறது, ஃப்ளக்ஸ் மாட்டுறது, நோட்டீஸ் ஒட்டுறது, பாதிக்கப்பட்ட ெகாரோனா நோயாளிகளுக்கான உணவு வழங்கறதுனு எல்லாத்துக்கும் கான்ட்ராக்ட் எடுத்திருப்பவங்க ஆளுங்கட்சியைச் சேர்ந்த அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் உள்ளிட்ட கட்சிக்காரங்கதான். இந்த கான்ட்ராக்ட் எதுவும் டெண்டர் விட்டு முறைப்படி நடக்கல...’’ என்ற சிவ.இளங்கோ இது குறித்த தகவல்களை அடுக்கினார்.  

‘‘பாதிக்கப்பட்டவரின் வீட்டுல தகர ஷீட் வைக்க 15 நாட்களுக்கு ரூ.20 ஆயிரம்னு அரசு நிர்ணயிச்சிருக்கறதா சொல்றாங்க. இது பெரிய தொகை.
டெண்டர் விட்டா ரூ.5 ஆயிரத்துக்கு பலர் ரெடியா இருக்காங்க. ஏன்னா, இப்ப யாருக்கும் பிசினஸ் இல்ல. அதனால, இந்தத் தொழில் செய்றவங்களோட குடோன்ல கட்டை, தகர ஷீட் எல்லாம் சும்மாதான் இருக்கு. அதனால குறைஞ்ச தொகைக்கு பிசினஸ் பண்ண அவங்க தயாரா இருக்காங்க.

ஆனா, அப்படிச் செய்யாம மாவட்டச் செயலாளர், ஒன்றியச் செயலாளர், எம்எல்ஏ, அமைச்சருக்கு வேண்டப்பட்டவங்களுக்குனு இந்தக் கான்ட்ராக்ட் போகுது.  இப்ப ஒரு வீட்டுல ரூ.20 ஆயிரத்துக்கு அந்தத் தட்டி வைக்கணும்னா இவங்களுக்கு ரூ.10 ஆயிரம் கமிஷன் கொடுக்கணுமாம்! இந்தப் பணத்தை வாங்கிட்டுதான் ஒப்புதலே கொடுக்கறதா சொல்றாங்க. உதாரணத்துக்கு, ரூ.20 லட்சம் பில்னா, முதல்ல பத்து லட்சம் ரூபாய் வாங்கிட்டே பில் பாஸ் பண்றாங்க. இந்தப் பத்து லட்சம் ரூபாய் அதிகாரிகள்ல இருந்து அமைச்சர் வரை போகுது.
 
இப்ப ஜூலையில் இருந்து மாவட்டம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிச்சிருக்கு. ஆரம்பத்துல சென்னைல பண்ணினதுபோல இப்ப மாவட்டங்கள்ல அந்த சாலை முழுவதுமே பிளாக் பண்றாங்க. பெரிசா சம்பாதிக்கிறாங்க. இதேமாதிரி ஃப்ளக்ஸ் அடிக்கிறதிலும், நோட்டீஸ் ஒட்டுறதிலும் கான்ட்ராக்ட் விட்டு கமிஷன் பார்க்கறாங்க.

ஒரு சாலையை மூட இருபது கம்பும் நாலு தகரமும் தேவை. வீட்டை அடைக்க இவ்வளவு கூட தேவைப்படாது. ஆனா, எல்லாத்துக்குமே ரூ.20 ஆயிரம்தான்.இந்த தகரத்தையும், கம்பையும் விலைக்கு வாங்கினாலே ரூ.3 ஆயிரத்துல முடிஞ்சுடும். ஒரு டின் தகரம் ஆயிரம் ரூபாய்னு வைங்க. இரண்டு டின் தகரம் ரூ.2 ஆயிரம். சவுக்கு கட்டை ரூ.500. கூலி ரூ.500. மொத்தமா எவ்வளவுனு நீங்களே கணக்குப் போடுங்க.

இவை எல்லாம் சொந்தமா ஆகறதால இன்னொரு தெருவை - வீட்டை - பைசா செலவில்லாம கூலி காசை மட்டும் கொடுத்து அடைக்கலாம்.
ஆனா, இவங்க 15 நாள் வாடகைக்கு ரூ.20 ஆயிரம் வாங்கறாங்க. இப்படி ஒவ்வொரு தெரு - வீட்டுக்கும் வசூல் பண்றாங்க. இது எவ்வளவு பெரிய கொள்ளை!  உணவுலயும் இதே ஊழல்தான். என் நண்பர் ஒருத்தருக்கு நெகட்டிவ் வந்திடுச்சு. ஆனா, டெஸ்ட் எடுத்ததுல இருந்து நாலு நாட்கள் அவரைத் தனிமைப்படுத்தும் இடத்துல இருந்து விடல. அந்த ரிசல்ட்டை தள்ளிப்போடறாங்க.

ஏன் தெரியுமா..? மக்கள் பணத்தை கொள்ளையடிக்க!ஊர்ல ஒரு நாளைக்கு ஒரு நபருக்கு மூணு வேளை சாப்பாடு, டீ, ஸ்நாக்ஸ், கசாயம் எல்லாம் சேர்த்து ரூ.1200ஐ அரசு கொடுக்குதுனு சொல்றாங்க. சென்னைல ஒருநாளைக்கு நபர் ஒருவருக்கு ரூ.1500 ரூபாய். எந்த ஹோட்டல் கமிஷன் தருதோ அவங்களுக்கு உணவு சப்ளை கான்ட்ராக்ட் கொடுக்கப்படுது.

உண்மைல இந்த உணவை ஒரு நபருக்கு ஒரு நாளைக்கு ரூ.400ல தரமாவே தரலாம். முந்நூறு ரூபாய் கான்ட்ராக்ட்காரருக்கு லாபம்னு வச்சாலும், மீதி 800 ரூபா கமிஷனா கட்சிக்காரங்களுக்குப் போகுது. அப்ப நூறு பேரை ஒருநாள் எக்ஸ்ட்ராவா வச்சிருந்தா 80 ஆயிரம் ரூபா கமிஷன் கிடைக்கும்!

ஒருநாளைக்கு இப்படினா பதினாலு நாட்களுக்கு..? 2 லட்சம் பேருக்கு மேல பாதிக்கப்பட்டவங்கன்னா எவ்வளவு..? கணக்குப் பாருங்க!

அதேமாதிரி, கொரோனாவால் பாதிக்கப்பட்டவங்க ஆஸ்பத்திரி, கல்லூரிகள்ல உள்ள தனிமைப்படுத்தும் வார்டுகள்ல இருக்காங்க. அவங்க 14 நாட்கள் இருக்கணும். ஆனா, நோய் சரியாகி ஒரு வாரம், பத்து நாட்கள்ல அனுப்பப்பட்டவங்க நிறைய. அவங்களுக்கும் 14 நாட்கள்னு கணக்குக் காட்டி பணத்தை சுருட்டறாங்க. இப்படி திட்டமிட்டே டெண்டர் இல்லாம ஆளுங்கட்சிக்காரங்க அரசுப் பணத்தை கொள்ளை அடிக்கறாங்க. இதெல்லாமே மக்கள் பணம்...’’ என்கிறார் சிவ.இளங்கோ.

செய்தி: பேராச்சி கண்ணன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்