நான்...எம்.ஜே.ஸ்ரீராம்



என்னைக்கோ கிடைக்கப் போற நூறு தங்க முட்டைகளுக்கு காத்திருக்காம தினமும் கிடைக்கற வெள்ளி முட்டையைப் பயன்படுத்திக்கறதுதான் புத்திசாலித்தனம். அப்பதான் வாழ்க்கை பேலன்ஸா ஓடும். அப்படிதான் நான் வாழறேன். பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருக்கவே இல்லை. கிடைக்கற வாய்ப்புகளை எல்லாம் சரியா பிடிச்சுக்கிட்டு ஓடறேன்.

25 வருஷங்களா அப்படித்தான் ஓடிட்டு இருக்கேன். இத்தனை வருஷங்களாகியும் ஒருத்தரால ஸ்டார் அந்தஸ்து பப் பாடகர்ல ஒருத்தரா இருக்க முடியுமா..? தெரியலை. ஆனா, நான் இருக்கேன். பப்ல பாட்டு பாடுறதை ஆரம்பத்துல நண்பர்களும் உறவினர்களும் ஏத்துக்கலை. திட்டினாங்க. கிண்டலடிச்சாங்க.

எதையும் காதுல வாங்கிக்கலை. என்னைப் பொறுத்தவரை என் மனசுக்கு பிடிச்சதை பிடிச்சா மாதிரியே செய்துட்டு இருக்கேன்.

அப்பா, அம்மா... இவங்க ரெண்டு பேர்தான் எனக்கு அனுமதி கொடுக்கணும். அவங்களே சரி சொன்ன பிறகு மத்தவங்களைப் பத்தி நான் ஏன் யோசிக்கணும்..? ஆரம்பத்துல என்னைத் திட்டி கிண்டல் செய்யறவங்களே இப்ப என்னைக் கொண்டாடறாங்க. வியப்பா பார்க்கறாங்க! இதுதான் வாழ்க்கை!

என் தங்கை ரஞ்சனி, தங்கமானவ. அவ கணவர் ஃபேஸ்புக்குல நல்ல போஸ்டிங்குல இருக்கார். சந்தோஷமா வாழ்ந்துட்டு இருக்காங்க.
சொந்த ஊர் சென்னைதான். பிறந்தது 1969ம் வருஷம் சென்னை சரோஜினி நர்சிங் ஹோம்ல. 1975 வரை தி.நகர். அப்பறம் திருவல்லிக்கேணி. பிறகு ராயப்பேட்டை.

வேளாங்கண்ணி ஸ்கூல், அடுத்து டிஏவி ஸ்கூல். எட்டாவதுக்கு அப்பறம் ராயப்பேட்டை வெங்கடேஸ்வரா மெட்ரிகுலேஷன் ஸ்கூல். எம்.என்.எம் ஜெயின் பாலிடெக்னிக்ல டி.இ.சி.இ. முடிச்சேன். சுமாராதான் படிப்பேன்.  அப்பா எம்.ஜே.நாராயணன், ஆர்க்கிடெக்ட். நல்ல மியூசிக் ஆர்வம் உள்ளவர். எல்லாமே கேள்வி ஞானம்தான். முறைப்படியெல்லாம் கத்துக்கலை. ஆனா, இசை அவருக்கு கைகூடிச்சு.

அம்மா ருக்மணி, முறைப்படி சங்கீதம் கத்துக்கிட்டவங்க. வீணைல முறையான பயிற்சி எடுத்துக்கிட்டவங்க. இப்படி அப்பாவும் அம்மாவும் இசைல ஊறினதால எனக்கும் இசை ஆர்வம் வந்துடுச்சு. அஞ்சு வயசுல அம்மா சொல்லிக் கொடுத்து பாட ஆரம்பிச்சேன். ஸ்கூல்ல நடந்த எல்லா கல்ச்சுரல் போட்டிகள்லயும் கலந்து பாடியிருக்கேன். பரிசுகளும் வாங்கிக் குவிச்சிருக்கேன்.

பிளஸ் ஒன் படிக்கும்போதே லைட் மியூசிக் பாட ஆரம்பிச்சுட்டேன். அப்பவே லைட் மியூசிக் எனக்கு ஒரு வேலையா மாற ஆரம்பிச்சுடுச்சு. படிக்கிற வயசுல ஓவிய ஆர்வம் இருந்தது. இசை மேல அது அப்படியே திரும்பவும் ஓவியம் வரையறது குறைஞ்சுடுச்சு. வீட்ல சொன்னதுக்காக ஓர் அடிப்படை கல்வி வேணுமேனு படிச்சேன்.

1986ல இருந்து லைட் மியூசிக்ல பயணம். நிறைய வாய்ப்புகள் அதுலயே வர ஆரம்பிச்சது. இப்ப மாதிரி அப்ப நிறைய ஆர்க்கெஸ்ட்ரா இசைக்குழு இல்ல. அஞ்சாறுதான் இருக்கும். ஸ்ரீதர் நாகராஜ், அபிசிவன் ராம்ஜி, ரகுராஜ் சக்கரவர்த்தி... இப்படி ஒரு அஞ்சாறு ஆர்க்கெஸ்ட்ரா டீம்ஸ். இதுல எதுலயாவது பாடியிருந்தாதான் அடுத்த டீம்ல சேர்த்துப்பாங்க.

நான் அப்ப இருந்த எல்லா மியூசிக் குழுக்கள்லயும் பாடினேன். பின்னணிப் பாடகரா மாற எந்த முயற்சியும் எடுக்கலை! எனக்கு லைட் மியூசிக், லைவ் ஷோஸ்லதான் ஆர்வம் அதிகமா இருந்துச்சு. தொடக்கத்துல வாய்ப்புகள் கேட்டுப் போனேன். அப்ப, ஒரு எஸ்பிபி ஏற்கனவே இருக்கார்... எதற்கு அவர் குரல்லயே இன்னொருத்தர்... இப்படி கேள்விகள் வர ஆரம்பிச்சது.

அப்புறம்தான் பின்னணி பாடகர் ஆகவேண்டாம்னு முடிவு செய்தேன். ரெக்கார்டிங் பாடல்களைவிட அப்பப்ப அந்தந்த நேரத்துல கிடைக்கற கைதட்டல்கள் பிடிச்சிருந்தது இதுக்கு காரணமா இருக்கலாம்.நான் முதன்முதல்ல பாட ஆரம்பிச்சது ராஜுகிருஷ்ணா ஆர்க்கெஸ்டிரால. வீரமணி ராஜு அதை நடத்திட்டு இருந்தார். அவர் குடும்ப நண்பர். புதுப் பாடகரா, கூட்டமெல்லாம் போக ஆரம்பிச்சதும் நான் பாட ஒண்ணு ரெண்டு வாய்ப்பு கிடைக்கும். அப்படி விளையாட்டா பாட ஆரம்பிச்சது.

எனக்கு லைட்மேனும் ஒண்ணுதான்... பெரிய சீனியர் பாடகரும் ஒண்ணுதான். வேலை இல்லாத நேரத்துல எல்லார் கூடவும் உட்கார்ந்து அரட்டை அடிச்சு சிரிச்சுப் பேசுவேன். அதனாலயே தொடர்புகள் அதிகரிச்சது. நாம் ஒருத்தரை சந்திக்கிறோம்னா அதுக்குப் பின்னாடி ஏதோ ஒரு காரணம் இருக்குனு ஆத்மார்த்தமா நம்பறேன். அதனாலயே எந்த நபரையும், தொடர்பையும் வேண்டாம்னு ஒதுக்க மாட்டேன்.

அப்படியே தர் ஆர்க்கெஸ்ட்ரா வரை முன்னேறினேன். அந்த வேளைலதான் முதன்முறையா சிங்கப்பூர்ல அக்ரிமென்ட்படி பாடுறதுக்கான வாய்ப்பு வந்தது. அங்கே ஒரு பப். 1994ல நண்பர் மூலமா போனேன். 2003 வரை கான்ட்ராக்ட். அதாவது ஆறு மாசம் தொடர்ந்து தினமும் பாடுவேன். ஒரு நாள் மட்டும் லீவு இருக்கும். திரும்ப ஆறு மாசம் இந்தியா. இப்படியே போயிட்டு இருந்தது.

ஆறு மாசமும் சிங்கப்பூர்லதான் குழுவா இருப்போம். அந்த சிங்கப்பூர் டிரிப்தான் எனக்கு மிகப்பெரிய வொர்க்‌ஷாப்னு சொல்லலாம். அஞ்சு மணி நேரம் பாடணும். ஒவ்வொரு நாளும் நமக்கே தெரியாம ஏகப்பட்ட பாடல்கள், ஏகப்பட்ட புது முயற்சிகள் செய்திருப்போம்.அப்படித்தான் எனக்கு இந்த பாடல் மிமிக்ரி கூட சாத்தியப்பட்டது. அதாவது, யாருடைய பாடல் பாடுகிறோமோ அவர் குரல்ல பாடல் பாடுவது! எனக்குன்னு ஒரு ரசிகர் வட்டம் உருவாச்சு.  

எனக்கு மூன்று குருக்கள். இசைக்கு ராஜா சார். குரலுக்கு எஸ்பிபி சார். நடிப்புன்னா கமல் சார். ஒருமுறை சிங்கப்பூர்ல நடந்த நிகழ்ச்சில எஸ்பிபி சார் மெயின் பாடகர். நான் சப்போர்ட்டுக்காக கூட போயிருந்தேன். அங்க ராஜா சார், கமல் சார் நிகழ்ச்சி. போதாதா... என் வாழ்க்கையுடைய குறிக்கோள் நிறைவாகிடுச்சு. மூவர் கூடவும் சேர்ந்து வேலை செய்தேன்.

எனக்குக் கிடைச்ச குருநாதர்களும் அப்படி அவ்வளவு கொட்டிக் கொட்டி சொல்லிக் கொடுத்தவங்க. அதன் காரணமோ என்னவோ, பாடும்போது 100% சரியா இருக்கணும்ங்கற எண்ணம் என்னைய பாடல் மிமிக்ரி ஆர்ட்டிஸ்ட்டாகவும் மாத்திடுச்சு. என் மனைவியின் நண்பர் சார்லஸ் சென்னை ‘தி ரெஸிடென்ஸி’ ஹோட்டல்ல மானேஜரா இருந்தார். 2009ல அவர் கிட்ட மனைவி ஸ்ரீலேகா, ‘ஏன் தமிழ் நைட் பண்ணக் கூடாது’னு கேட்டாங்க.
அப்படி ஆரம்பிச்ச தமிழ் நைட் இப்ப வரைக்கும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தவறாம ‘தி ரெஸிடென்ஸி’ல நடந்துட்டு இருக்கு.

ராஜா சார் - எஸ்பிபி சார் காம்போ பாடல்கள்தான் இந்த தமிழ் நைட்ல எப்பவும் மாஸ். இந்த கொரோனா ஊரடங்கு காலத்துலயும் ஒவ்வொரு வியாழக்கிழமையும் தவறாம ஃபேஸ்புக் தமிழ் நைட் லைவ்ல பாடிட்டு இருக்கேன்!என் மனைவி, ஸ்ரீலேகா பார்த்தசாரதி. முதல் முதலா ஸ்பென்சர் பிளாசா ஆண்டுவிழா நிகழ்ச்சியிலதான் அவங்களை சந்திச்சேன். நண்பர் நப்ரூ மூலமா கிடைச்ச நட்பு, காதலானது. என்னை விட வயசுல ரொம்ப சின்னவங்க. நான் பின்னணி பாடகரும் கிடையாது. ஆனா, அவங்க அப்ப பெரிய பாடகி.

அவங்க வீட்ல சுத்தமா எங்க காதலை ஏத்துக்கலை. ஆனா, என் மனைவிக்கும் எனக்கும் நல்ல புரிதல் உண்டு. அவங்க மூலமா எனக்கு நிறைய நிகழ்ச்சிகள் கிடைச்சது. அவங்க கொடுத்த தொடர்புகள் மூலமா தனியாகவும் பாட வாய்ப்புகள் கிடைச்சது.

அவங்க பெற்றோர் எதிர்பார்ப்பும் தப்பில்லையே... லேகா என்னை நம்பினாங்க. இதோ 14 வருஷங்கள் ஆகிடுச்சு எங்களுக்கு திருமணம் ஆகி. நடிப்பு எனக்கு அமைஞ்சதும் இதே பாடல்கள் தொடர்பு மூலமாதான். 1997ல சிங்கப்பூர்ல குட்டிபத்மினி மேடம் ஒரு சீரியல் எடுத்துட்டு இருந்தாங்க. அவங்க இருந்த ஹோட்டல்லதான் எனக்கு ரூம். ‘ஃபிரண்ட் கேரக்டர் இருக்கு... நடிக்க கேட்டிருந்த நபர் வரலை... நீ பண்றியாடா’னு வேணு அரவிந்த் கேட்டார். சம்மதிச்சேன்.

தொடர்ந்து ‘மந்திர வாசல்’, ‘பிரேமி’, ‘கிருஷ்ணா காட்டேஜ்’னு சின்னத்திரைல ஆரம்பிச்சு இயக்குநர் சசி சார் மூலமா ‘சொல்லாமலே’, பேரரசு சார் வழியா ‘சிவகாசி’, ‘ஆஹா கல்யாணம்’ பார்த்துட்டு தனுஷ் சார் மூலமா ‘விஐபி 1’ மற்றும் ‘விஐபி 2’, இப்ப ‘சர்கார்’, ‘பட்டாஸ்’, ‘வானம் கொட்டட்
டும்’னு பெரிய திரைலயும் நடிச்சுட்டு இருக்கேன்.  

ஏதோ ஒரு பெரிய வாய்ப்புக்காகக் காத்திருந்து காலத்தை வீணடிக்காம, கிடைக்கற சின்னச் சின்ன வாய்ப்பு களைக் கூட பயன்படுத்திக்கிட்டு இன்னைக்கு நாள் இனிதே போகுதுனு சொல்ற சாராசரி மனுஷன்தான் நான்.

ஓர் அசாதாரண மனுஷனா இல்லைனாலும் சாதாரண மனுஷனா நான் ஒவ்வொரு நாளும் வெற்றியாளன்னு சொல்றதுல பெருமைப்படறேன்!
ஏன்னா நேரம் ஒருமுறை கடந்துட்டா... திரும்பக் கிடைக்கவே கிடைக்காது!

செய்தி: ஷாலினி நியூட்டன்

படங்கள்: ஆ.வின்சென்ட் பால்