தமிழக மாணவர்களின் எதிர்காலத்தையே இந்த அரசு குழிதோண்டிப் புதைக்கிறது!



முன்னாள் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு ஆவேசம்

தமிழகத்தில் கொரோனா தொற்று இன்னும் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் அதிகரிக்கும் தகவல்களும், இறப்புகளும் அதிர்ச்சியாக உள்ளன.
இந்த அதிர்ச்சிக்கு சற்றும் குறைந்ததில்லை தமிழகப் பள்ளிக் கல்வித் துறையின் அறிவிப்புகள்.ஏனெனில், இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு அறிவிப்பை அவசரமாக வெளியிடுவதும், அதை அடுத்த நொடியே வாபஸ் வாங்குவதுமாக இருக்கின்றனர்.

இப்படி அறிவிப்பை பின்வாங்குவதற்கு முக்கிய காரணமாக இருப்பவர்கள் எதிர்க்கட்சி யினர். குறிப்பாக, முன்னாள் பள்ளிக் கல்வித் துறை அமைச்சரும், திருச்சுழி திமுக சட்டமன்ற உறுப்பினருமான தங்கம் தென்னரசின் அறிக்கைகள். தனது ஒவ்வொரு அறிக்கையையும் புள்ளி விவரங்களுடன் சுட்டிக்காட்டுபவர், பள்ளிக் கல்வித் துறைக்குப் பல்வேறு கேள்விகளையும் எழுப்பி வருகிறார்.

அதிமுக அரசின் பள்ளிக் கல்வித் துறையின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது?

கடந்த பத்து வருடங்களா இந்த அரசு, பள்ளி மாணவர்களுக்கு எந்த புதிய மாற்றங்களையும் கொண்டு வரலை. எல்லாமே வெற்று அறிவிப்புகளா மட்டுமே இருக்கு.
தவிர, அந்த அறிவிப்புக்குப் பின்னாடி கூட எந்த ஒரு திட்டமிடலும் ஆய்வும் இல்லை. ஏதாவது ஒரு அறிவிப்பை வெளியிட்டுட்டு பிறகு, அதிலிருக்கும் பிரச்னை விஸ்வரூபம் எடுத்ததும் பின்வாங்குறதுனு இருக்காங்க. தொடர்ச்சியா இப்படியான நிலையற்ற தன்மையால் இந்தத் துறையின் மீதான நம்பிக்கை போயிடுச்சு.

குறிப்பா, பள்ளிக் கல்வித்துறையிலுள்ள தேர்வுகள் இயக்ககம்தான் எப்பவும் நம்பகத்தன்மையான பிரிவா இருக்கும். ஆனா, இன்னைக்கு அதனுடைய நடவடிக்கைகளே மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் நம்பிக்கை அளிக்கலை. பிளஸ் டூ பாடப்பிரிவுகளை மாத்தினப்பவும் பெரிய குழப்பத்தை ஏற்படுத்தினாங்க. இனி, பிளஸ் டூ பாடப்பிரிவுகள்ல தமிழ், ஆங்கிலம் தவிர்த்து நான்கு பாடங்களுக்கு பதிலா மூணு பாடப்பிரிவுகள் எடுத்தால் போதும்னு சொன்னாங்க.

அப்ப இதுக்கான முதல் குரலை எழுப்பியவர் கழகத்தலைவர் தளபதி ஸ்டாலின்தான். உடனே, அதிலும் பின்வாங்கி பழைய முறையே தொடரும்னு அந்த அரசாணையை ரத்து செய்தாங்க.அதிமுக அரசின் செயல்பாடுகள் முழுக்க முழுக்க மாநில அரசின் உரிமைகளை மத்திய அரசுகிட்ட அடகு வைப்பதாக இருக்கு. 5, 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு அறிவிப்பும், புதிய கல்விக் கொள்கையை ஆதரிக்கிறதும் முழுக்க முழுக்க மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கும் செயல். அடுத்து, நீட் தேர்வுல நம் மாணவர்களைப் பலியாக்கி வருது இந்த அரசு.  

இப்ப இந்தக் கொரோனா காலத்துல இன்னும் மோசமா செயல்பட்டுட்டு இருக்காங்க. மூணு வயசுல இருந்து பதினேழு வயசு வரையிலுள்ள மாணவர்கள் இந்தப் பள்ளிக் கல்வித் துறையை நம்பியிருக்காங்க. அதனால, இந்தத் துறையின் நடவடிக்கைகளும், முடிவுகளும் தொடக்கக் கல்வி முதல் மேல்நிலைக் கல்வி வரை உள்ள சுமார் ஒரு கோடி அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாணவ - மாணவி களைப் பாதிக்கும். பிறகு, அது அவங்க ெபற்றோரையும் குடும்பத்தையும் பாதிக்கும்.

இக்கட்டான இந்தக் காலத்துலயும் மாணவர்களின் விஷயத்துல பள்ளிக்கல்வித்துறை தெளிவான முடிவுகள் எடுக்கலை. 10ம் வகுப்புத் தேர்வை எடுத்துக்கோங்க. முதல்ல, இந்தக் காலத்துல தேர்வுகள் நடத்த வேண்டாம்னு எல்லோரும் சொன்னப்ப நடத்தியே தீர்வோம்னு பிடிவாதமா நின்னாங்க. அப்புறம், எதிர்க்கட்சியினர் வலியுறுத்தல், உயர்நீதிமன்றத் தலையீடுனு வந்த பிறகு பின்வாங்கினாங்க.

இதுக்கிடையில், பள்ளி திறக்கிறது முதலில் ஜூன் மாசம்னு சொன்னாங்க. பிறகு, ஜூலைனாங்க. இப்ப எந்தத் தகவலும் இல்லை.இந்த முடிவெல்லாம் எந்த அடிப்படையில் எடுக்குறாங்கனு தெரியலை. நோய்த் தொற்று இன்னும் குறையல.

அதுபத்தி எந்த உணர்வும் இல்லாமல் தானா ஒரு முடிவு எடுத்து குழப்பமான சூழலை உருவாக்கறாங்க. அதேபோல, ஆன்லைன் கல்வி. முதல்ல ஆன்லைனில் நடத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்னு கல்வி அமைச்சர் சொன்னார். அடுத்த அரைமணி நேரத்துல அவரே ஆன்லைன் வழியே நடத்தத் தடையில்லைன்னார். இப்போது தொலைக்காட்சி வழியே பாடங்கள் நடத்தப்படும்னு சொல்லியிருக்கார்.

இப்ப, பாடங்களை ஆன்லைனில் தரவிறக்கம் செய்துக்கலாம்னு தகவல் வருது. அதுல கூட பல பாடங்களை தரவிறக்கம் செய்ய முடியல. இன்னைக்குக் கூட அதுபத்தின செய்திகள் பத்திரிகையில வந்திருக்கு. அடுத்து, பிளஸ் டூ தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் கூட ஜூலை அல்லது ஆகஸ்ட்னு சொன்னார். அப்புறம், ஊடகங்களுக்கே கூட தெரியாமல் வெப்சைட்ல முடிவுகள் வந்துச்சு.

அப்புறம், பள்ளிகளைத் திறக்கறது பத்தி அறிய ஒரு குழு போட்டாங்க. அந்தக் குழுவுல அரசுப் பள்ளியின் தலைமையாசிரியர் ஒருவர் கூட இல்ல. வேறு பாடத்திட்டங்களைச் சேர்ந்த ஆசிரியர்களெல்லாம் அதில் இருக்காங்க. தமிழகத்துல அரசுப் பள்ளிகள்தான் அதிகம். அவங்கள பிரதிநிதித்துவப்படுத்தும் ஆட்கள் ஒருத்தரும் இல்ல. பதிவு பெற்ற அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சங்கங்கள்ல இருந்தாவது ஒருத்தரை போட்டிருக்கலாம். அதுவும் இல்ல.

இதையெல்லாம் தொகுத்துப் பார்த்தா இந்தக் கொரோனா பெருந்தொற்று காலத்துல கூட எந்த ஒரு விஷயத்திலும் திட்டமிடல் இல்லாம இந்த அரசு எப்படி செயல்படுதுனு புரியும். சுருக்கமா சொன்னா, பள்ளிக் கல்வித் துறையே அதலபாதாளத்துல விழுந்துட்டு இருக்கு! ஆன்லைன் கல்வி அல்லது டிவி வழியே கற்பிக்கும் கல்வி என்பது மாணவர்களுக்கு சாத்தியப்படுமா?

ஆன்லைன் கல்வி, நிச்சயம் வகுப்பறைக் கல்விக்கு மாற்றா இருக்க முடியாது. அந்தக் கல்வி, ஒரு துணையாக இருக்க முடியும்.
இந்த ஆன்லைன் கல்வியில மிகப் பெரிய பாகுபாடும் இருக்கு. இன்னைக்கு பலபேர்கிட்ட ஸ்மார்ட்போன் வசதி கிடையாது. நம்முடைய அரசுப் பள்ளிகள் பெரும்பாலும் கிராமங்கள்ல இருக்கக் கூடிய பள்ளிகள்.

அவங்களுடைய பொருளாதார நிலையில் ஒரு வீட்டில் ரெண்டு ஸ்மார்ட்போன் வச்சிக்க முடியுமா?  மலைப் பிரதேசங்கள்ல, ரிமோட் ஏரியாக்கள்ல உள்ள அரசுப் பள்ளிகள்ல இன்டர்ெநட் வசதி இருப்பது ரொம்பக் கஷ்டம். கேரளாவுல ஒரு பொண்ணு கூரை மேல ஏறி உட்கார்ந்து படிக்கிற செய்தியைப் பார்த்தோம்.

ஆக, ஆன்லைன்ல இந்தப் பிரச்னைகளெல்லாம் இருக்குதுனு அரசுகிட்ட சொன்னோம். அவங்க உடனே தொலைக்காட்சி வாயிலா மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப் போறோம்னு மாறினாங்க. இதுலயும் நிறைய கேள்விகள் எழுந்துச்சு. தொலைக்காட்சிகள் வாயிலாகப் பாடம் நடத்தப்
படும்னா, எத்தனை தொலைக்காட்சிகள்ல, எந்தெந்த வேளைகள்ல, எவ்வளவு நேரம் பாடங்கள் நடத்த உத்தேசிக்கப்பட்டிருக்கு? எந்தெந்த தொலைக்காட்சி நிறுவனங்களுடன் அதற்கான ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கு? தமிழக அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் பங்கு இதிலென்ன? அடுத்து, எந்தெந்த வகுப்புகளுக்குத் தொலைக்காட்சி வாயிலாகப் பாடம் நடத்த முடிவெடுக்கப்பட்டிருக்கு?

தவிர, அரசு கேபிள் டிவியின் இணைப்புகள் ஒரு லட்சத்துக்கும் குறைவுதான். அவங்க எஸ்சிவி அல்லது வேறு ஏதாவது ஒரு சர்வீஸ் புரொவைடர்கிட்ட போகணும். அதை செய்தாங்களானு தகவல் இல்ல. அப்புறம், அரசு போட்ட அட்டவணையிலயும் ஒரு குழப்பம் நடந்துச்சு. அதாவது, ஏழாம் வகுப்பு எடுக்கற நேரத்துல வேறு ஒரு பாடத்துக்கான வகுப்பை எடுத்தாங்க.

தொலைக்காட்சி மூலம் பாடம் எடுக்கறது எப்பவும் ஒருவழிப்பாதையாதான் இருக்கும். ஆசிரியர் சொல்லுவார். மாணவர்கள் குறிப்புகளை எடுத்துக்கலாம். அவ்வளவுதான். இப்படியிருந்தா மாணவர்களின் சந்தேகங்களை எப்படி தீர்த்துக்க முடியும்?பிளஸ் டூவுல பொதுவா கணக்குப் பாடத்துல சந்தேகம் நிச்சயம் வரும். ஸ்டெப்ஸ் புரியலன்னா அதை எப்படி தீர்த்து வைப்பாங்க? அதுக்கான ஏற்பாடுகளா இந்த அரசு என்ன செய்திருக்கு?

சரி, பாடங்களைச் சொல்லித் தருவதற்காக மாணவர்களுக்கான வாட்ஸ்அப் குழுக்கள் ஆங்காங்கே உருவாக்கியிருக்கீங்
களா? இதுக்காக என்ன முயற்சி எடுத்து இருக்கீங்க? மாணவர்களை எப்படி நெறிப்படுத்துவீங்க? இப்படி நிறையக் கேள்வி களுக்கு விடையே இல்லை!
இன்னொரு வேடிக்கை, கல்வித் தொலைக்காட்சியை போன வருஷம் ஆகஸ்ட் மாதமே முதல்வர் துவக்கி வச்சிட்டார். ஆனா, இந்த வருஷம் பாடத்தை
ஒளிபரப்ப மறுபடியும் துவக்கி வச்சு, ஏதோ புதுசு போல ‘ஆஹா ஓஹோ’னு புகழ்றாங்க!

இந்தத் ெதாலைக்காட்சிக்காக ஏறத்தாழ அஞ்சு கோடி ரூபாய் செலவுல நவீன தொழில்நுட்பக் கருவிகள் வாங்கப்பட்டு, பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அண்ணா நூற்றாண்டு நூலகத்தின் ஒரு தளம் முழுமையுமே இயங்குகிறதா சொல்றாங்க.அன்றிலிருந்து இப்ப வரை என்னென்ன பாடங்களுக்கு எல்லாம் தயார் செய்தாங்க? இந்தக் கொரோனா காலத்துல என்ன பாடங்களுக்கு வீடியோ ரெடி பண்ணியிருக்கீங்க? எத்தனை ஆசிரியர்களை நியமிச்சு இருக்கீங்க? அந்த ஆசிரியர்களுக்கு முறையான பயிற்சி அளிச்சு இருக்கீங்களா? இப்படி இதிலும் கேள்விகள் கேட்டோம். இதுவரை அரசு பதில் சொல்லல.

லாக்டவுனால் வீட்டிலேயே மாணவர்கள் இருந்தால் எதிர்காலம் பாதிக்கப்படும் என அரசு சொல்கிறதே...?
2011ல் அதிமுக அரசு பதவி ஏற்றதும், திமுக அரசு கொண்டு வந்தது என்ற ஒரே காரணத்திற்காக சமச்சீர் பாடத்திட்டத்தை முடக்கியது.
கிட்டத்தட்ட மூணு மாசம் புத்தகங்கள் இல்லாம பள்ளிகள் நடந்துச்சு. அப்ப மாணவர்கள் பாதிக்கப்படலையா? சென்ைன யில வெள்ளம் வந்தப்பவும் இதேமாதிரி பள்ளிகள் நடைபெறா மல்தானே இருந்துச்சு. அப்பெல்லாம் எந்த மாற்றுமுறையை பள்ளிக்கல்வித் துறை கொண்டு வந்துச்சு?

பிளஸ் டூ தேர்வு எழுதுகிறவர்களின் எண்ணிக்கையைக் கொண்டு இடைநிற்றல் அதிகரித்துள்ளதாகக் கூறியிருக்கிறீர்களே..?
ஆமா. கடந்த மூணு வருஷங்களா பிளஸ் டூ எழுதும் மாணவர்களின் எண்ணிக்கையில பெரும் சரிவு ஏற்பட்டிருக்கு. இதைக் கவனிச்சுப் பார்த்தால் தெரியும்.

2017ல 8,93,262 பேர்களும்; 2018ல் 8,60,434 பேர்களும்; 2019ல்  8,42,512 பேர்களும்; 2020ல் 7,79,931 பேரும் எழுதியிருக்காங்க. அதாவது, ஏறத்தாழ 1.14 இலட்சம் மாணவர்கள் படிப்படியாகக் குறைஞ்சு வந்திருக்காங்க. இவ்வளவு பெரிய சரிவு தொடர்ச்சியா ஏற்பட என்ன காரணம்?

ஆக, பத்தாம் வகுப்புல வெற்றி பெறும் மாணவர்கள் மேல்நிலைக் கல்விக்குச் செல்லும் முன்னரே இடைநிற்றல் நிகழுதோனு சந்தேகம் வருது. அதனால, கடந்த மூணு வருஷங்கள்ல ஒவ்வோர் வருஷமும் பத்தாம் வகுப்பு தேர்ச்சிக்குப்பின் 11ம் வகுப்புல சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை என்ன? அதில் எத்தனை மாணவர்கள் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதினாங்கனு கேள்வி எழுப்பினேன்.

ஏன்னா, இவங்கள்ல பலர் அரசுப் பள்ளிகள்ல படிச்சவங்களாதான் இருக்க முடியும். அதனால, இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை என்ன நடவடிக்கை எடுத்திருக்குனு தெரிய வேண்டாமா..? ஆனா, இதுக்கும் இதுவரை  விடையில்லை.11ம் வகுப்பு பொதுத்தேர்வும், மாணவர்கள் மீது திணிக்கப்பட்ட பாடச்சுமையும் இதுக்கான காரணிகளாக இருக்கலாம். பாடச்சுமை காரணமாகப் பல மாணவர்கள் கணிதம், உயிரியல், இயற்பியல் போன்ற முக்கிய பாடங்கள் அடங்கிய முதல் பாடப்பிரிவுகளில் சேராமல் தவிர்ப்பதாகச் சொல்லப்படுது.

அந்தப் பாடப்பிரிவுகள்ல மாணவர்களின் எண்ணிக்கை குறைஞ்சா மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள்ல சேரும் மாணவர்களின் எண்ணிக்கையும் குறையும். இப்படியே போனா உயர்கல்விக்குச் செல்லும் நம் மாணவர்களின் எண்ணிக்கை கணிசமா குறைஞ்சு அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிடும்.

அப்புறம், இந்த வருஷம் பிளஸ் டூ தேர்வுல நம் மாணவர்களின் வெற்றி சதவீதம் அதிகம். ஆனா, பாடவாரி யான மதிப்பெண்கள் குறைவு. இதே சிபிஎஸ்இ பள்ளிகள் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் நிறைய போட்டிருக்காங்க. இப்படி பார்க்கிறப்ப நாளைக்கு நீட் தேர்வு ரத்துனு சொல்லி, பிளஸ் டூ மதிப்பெண் அடிப்படையில் உயர்கல்விக்குப் போகணும்னா, சிபிஎஸ்இயில் பயின்ற மாணவர்களுக்குத்தான் நிறைய வாய்ப்பு கிடைக்கும். அப்ப அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள்ல படிச்ச மாணவர்களின் நிலை இன்னும் சிக்கலாகும்.

அடுத்து, மறுகூட்டல், மறுமதிப்பீடு பற்றி தேர்வு முடிவுகள் வரும்போதே ெசால்லணும். ஆனா, ஒருவாரமா எந்தத் தகவலும் அதுபற்றி பள்ளிக் கல்வித் துறையிடம் இருந்து வரல. பல கல்லூரிகள் சேர்க்கைக்கான விண்ணப்பங்களைக் கொடுக்க ஆரம்பிச்சிட்டாங்க. மறுகூட்டல், மறுமதிப்பீட்டில் கூடுதல் மதிப்பெண் கிடைக்க வேண்டியவர்களின் நிலை என்னாகும்? அப்ப, அவங்க நினைச்ச கல்லூரி கிடைக்காமல் போகலாம் இல்லையா?
இதையெல்லாம் பள்ளிக் கல்வித் துறை யோசிக்கவே இல்லை. இதையும் நாம் சொன்னபிறகே அவசர அவசரமாக அதுக்கான அறிவிப்பை வெளியிடுறாங்க.

பள்ளிகள் எப்போது திறக்கலாம்?அதுக்காக அரசு ஒரு குழு அமைச்சிருக்கு. அவங்க அறிக்கையைக் கொடுத்ததும் திறக்கிறதா சொல்லியிருக்காங்க. இதுல நாங்க சில கருத்துகளை முன்வச்சிருக்கோம். அதாவது, நோய்த் தொற்று குறைஞ்சதும் பள்ளிகளைத் திறக்கலாம்னு அரசு முடிவை எடுக்கிறப்ப எல்லா நிலைப்பள்ளி களையும் உடனே திறக்கக் கூடாது. முதல்ல மேல்நிலைப் பள்ளிகளைத் திறக்கணும். அப்புறம், 15 நாட்கள் கழிச்சு உயர்நிலைப் பள்ளிகளைத் திறக்கலாம். பிறகு, நடுநிலை, தொடக்கநிலைப் பள்ளிகளை சின்ன இடைவெளிவிட்டு துவங்கணும்.

அதுவும் நோய்த் தொற்றின் தாக்கத்தைப் பொறுத்தே இந்த முடிவை அரசு எடுக்கணும். பாலர் வகுப்புகளுக்கு பள்ளி திறக்கிறதை யோசிச்சே செய்யணும்.அரசும் பள்ளிக் கல்வித் துறையும் என்ன செய்ய வேண்டும்..?முதல்ல இந்தக் குழப்பங்களைத் தவிர்க்கணும். அதுக்கு, முறையான திட்டமிடல் அவசியம். மத்திய அரசு சொல்வதற்கு தலையாட்டாமல் தனித்தன்மையுடன் இயங்கும் தமிழக பள்ளிக் கல்வியைக் காப்பாத்தணும். தமிழ்நாட்டு மாணவர்களுக்கு எது உகந்ததோ அதைக் கொண்டு வந்து முன்மாதிரியா இருக்கணும்.

நீட் தேர்வில் விட்டுக் கொடுத்ததுபோல வரக்கூடிய புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் ஒட்டுமொத்த கல்வித் துறையும் நம்மைவிட்டுப் போயிடும். ஏற்கனவே மத்திய அரசு சொல்லி பல தொடக்கப் பள்ளி களை மூடிட்டாங்க. ஆனா, இதை மூடிட்டோம்னு சொல்லாம இன்னொரு பள்ளியுடன் இணைச்சிருக்கிறதா சொல்றாங்க.

அதனால, மாணவர்களின் நலனை முன்னிறுத்துங்கள். தெளிவான திட்டமிடலுடன் அனைத்து கல்வியாளர்கள், ஆசிரியர்கள் சங்கங்கள், பெற்றோர் எனப் பலருடன் கலந்து பேசுங்கள். குறிப்பாக, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு எது உகந்ததோ அதைச் செய்யுங்கள்!

பேராச்சி கண்ணன்