தமிழக கோயில்களை தனியாரிடம் ஒப்படைக்க மத்திய அரசு முடிவு..?‘தமிழக கோயில்களில் இருந்து இந்து சமய அறநிலையத் துறை வெளியேற வேண்டும்’ என பாஜகவின் சில தலைவர்களும் மற்றும் பலரும் குரல் கொடுத்து வருகிறார்கள்.இது தொடர்பாக சுவாமி தயாநந்த சரஸ்வதியும், சுப்பிரமணியம்சுவாமியும் தாக்கல் செய்த வழக்கு, உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.

இந்நிலையில் சமீபத்தில் கேரளாவின் திருவனந்தபுரத்திலுள்ள பத்மநாபசுவாமி கோயில் வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்துள்ள, திருவிதாங்கூர் சமஸ்தான மன்னர் குடும்பத்துக்கே அக்கோயில் உரிமை என்ற தீர்ப்பு தமிழகத்திலுள்ள இந்து சமய அறநிலையத்துறையில் எதிரொலிக்குமா என்ற கேள்வி மீண்டும் எழுந்துள்ளது.

பரவலாக இன்று பலரும் கருதுவதுபோல் தமிழகத்திலுள்ள கோயில்கள் அரசின் ஆளுகையின் கீழ் கொண்டு வரப்பட்டது திராவிட ஆட்சியில் அல்ல. அது சுதந்திரத்துக்கு முன்பான ஆங்கி லேயரின் ஆட்சியில் இருந்தே தொடங்குகிறது.சுதந்திரத்துக்குப் பிறகான ‘தமிழ்நாடு சட்டம் 22/1959’ என அழைக்கப்படும் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சட்டம், தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களை மட்டுமல்ல... சமணக் கோயில்கள் மற்றும் சமயம் சார்ந்த அற நிலையங்களை நிர்வகிப்பதற்கான சட்ட அதிகாரத்தை அரசுக்குத் தருவது இதன் நீட்சிதான்.

இந்து சமயக் கோயில்களுக்கு ஆரம்பம் முதலே பல்லாயிரம் ஏக்கர் நிலங்களும், சொத்துகளும் இருந்து வந்துள்ளன. இவற்றை நிர்வாகம் செய்வதில் குறிப்பிட்ட சில சாதிகளின் ஆதிக்கம் மட்டுமே இருப்பதாகவும், ஊழல்கள் மிகுந்து காணப்படுவதாகவும் அப்போது ஆட்சி செய்த மன்னர்
களிடமும், கிழக்கிந்தியக் கம்பெனி நிர்வாகத்திடமும் பொதுமக்கள் ஏராளமான புகார்களைக் கொடுத்துள்ளனர்.

அதன் அடிப்படையில் 1810, 1817ம் ஆண்டுகளில் இயற்றப்பட்ட சட்டங்கள் மூலமாக கிழக்கிந்தியக் கம்பெனி இந்துக் கோயில்களின் நிர்வாகத்தை மேற்கொண்டது. இதன்பின் ஆங்கிலேய அரசின் மேலாண்மை தேவை என வலியுறுத்தப்பட்டு, 1872, 1877, 1883, 1886, 1894, 1899, 1908 ஆகிய ஆண்டு களில் இது தொடர்பாக சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டாலும், அவை சட்டமாக மாறவில்லை. இறுதியில் 1925ம் ஆண்டு கோயில்கள் மற்றும் இந்து சமய நிறுவனங்களை மேலாண்மை செய்வதற்காக இந்து சமய அறநிலைய வாரியம் ஏற்படுத்தப்பட்டது.

அந்த நேரத்தில், ‘மதத்தில் அரசு தலையிடுவதாக’ குற்றம் சாட்டிய சத்தியமூர்த்தி அய்யர், ‘ஆண்டவனை சட்டம் போட்டுக் கட்டுப்படுத்துவதா’ என ஆவேச மாகக் கேட்டார். எனினும் அப்போது மதராஸ் மாகாண முதலமைச்சராக இருந்த பனகல் அரசர், அப்போதைய வைஸ்ராய் இர்வினிடம் எடுத்துச் சொல்லி இந்த சட்டத்துக்கான ஒப்புதலைப் பெற்றார்.

இறுதியில் 1927ல் ‘இந்து சமய அறநிலைய வாரியம்’ என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. தொடர்ந்து அறநிலைய வாரியத்தினாலும் ஊழல்களைக் களைய முடியாத காரணத்தினால், வாரியத்துக்குப் பதிலாக அரசின் ஒரு துறையாக இதனை மாற்றலாம் என்று கருதப்பட்டு 1942ம் ஆண்டு, ஓய்வுபெற்ற நீதிபதி பி.வெங்கட்ரமணராவ் நாயுடு தலைமையில் ஆறு நபர்கள் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டது.

அவரது அறிக்கையின்படி, நாடு விடுதலை பெற்ற பின்னர் 1951ம் ஆண்டு, இந்து சமய அறநிலைய நிர்வாகத் துறை என்ற பெயரில் அரசின் ஒரு துறையாக இது உருவாகியது. இந்தச் சட்டம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டது. அதன் விளைவாக புதிய சட்டம் 1959ல் ஏற்படுத்தப்பட்டது. இவையெல்லாம் வரலாறு. இந்நிலையில்தான் பத்மநாபசுவாமி கோயிலுக்கு வழங்கப்பட்ட உச்சநீதிமன்றத் தீர்ப்பை முன்னுதாரணமாக வைத்து மீண்டும் தமிழக அறநிலையத்துறையிடம் இருக்கும் கோயில்களை மீட்கவேண்டும் என்ற கோரிக்கை
தூசு தட்டப்பட்டுள்ளது.

இதனைத் தொடர்ந்து ‘‘இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து கோயில்களை மீட்டு இவர்கள் யாரிடம் கொடுக்கப் போகிறார்கள்?” என்ற கேள்விவை முன் வைக்கிறார் வழக்கறிஞர் சிகரம் செந்தில்நாதன்.‘‘சிவில் சமூகத்தினை ஆளவேண்டுமென்றால் கோயில்கள் வேண்டும். நம் நாட்டில் மக்களுக்கு பக்தி அதிகம். அரசுக் கட்டுப்பாட்டில் கோயில்கள் இருக்கும்போது சில விஷயங்களைச் செய்ய முடியாது. அதாவது சாதிய பாகுபாட்டுடன் அக்காலம் போல் இக்காலத்தில் கோயிலை நடத்த முடியாது. அரசின் விதிகள் இதற்குத் தடையாக இருக்கின்றன.

வர்ணாஸ்ரமத்தைக் கடைப்பிடிக்க முடியாதபடி அரசு பாதுகாக்கிறது. இப்படி அனைத்து சாதியினரும் கோயில்களுக்குச் சென்று வழி
படும் வழக்கத்தை ஏற்படுத்தியுள்ளது அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்து சமய அறநிலையத்துறைதான்.இதற்கு மாறாக மதவாதிகளின் கோரிக்கையை ஏற்று அவர்கள் சொல்லும் நபர்களின் கைகளில் தமிழகக் கோயில்களை ஒப்படைத்தால் பழைய மாதிரி ஊழலும், கொள்ளையுமாகத் தான் இருக்கும்.  

இதற்கு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், தமிழகத்தில் உள்ள பல கோயில்கள் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருக்கும்போது சிதம்பரம் கோயில் இப்போதும் தீட்சிதர்கள் கட்டுப்பாட்டிலும் இன்னும் சில கோயில்கள் மடாதிபதிகளின் ஆதிக்கத்தில் இருப்பதையும் குறிப்பிடலாம்.
இந்த நிலையில் ஒரு வழக்கில் சிதம்பரம் கோயிலின் வருமானம் வருடத்துக்கு வெறும் ரூ.33 ஆயிரம்தான் என்று கணக்கு காட்டப்படுகிறது. இது நம்பும்படியாக இருக்கிறதா..?’’ என்று கேட்கும் சிகரம் செந்தில்நாதன், ‘சிதம்பரம் கோயில் மட்டும் சரியாக பராமரிக்கப்பட்டால் திருப்பதி கோயில் மாதிரி பெரிய கோயிலாக இருக்கும்’ என்று நீதிபதி பானுமதி குறிப்பிட்டுள்ளதை நினைவுபடுத்துகிறார்.

‘‘தீட்சிதருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றமும், பெஞ்சும் தீர்ப்பு தந்தபோது, அதை உச்சநீதிமன்றத்துக்கு எடுத்துச் சென்று  தீட்சிதர்களுக்கு சாதகமாக அத்தீர்ப்பை மாற்றினார் சுப்பிரமணியம் சுவாமி... இந்த உண்மைகளை எல்லாம் நாம் ஒருபோதும் மறக்கக் கூடாது...” என்ற சிகரம் செந்தில்நாதனிடம், நீண்ட காலமாக கோயில் நிலங்களில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க சட்டத்தில் இடம் உண்டா என்று கேட்டோம்.

“இலவசமாகக் கொடுக்க முன்வரவில்லை என்றாலும், ஒரு தொகையைப் பெற்றாவது பட்டா வழங்கலாம். சில அதிகாரிகள் கடைக்காரர்களிடம் லஞ்சம் பெற்று அதற்கு இடம் தருகிறார்கள். எது தேவை, எது தேவையற்றது என்பதை ஒரு குழுபோட்டு ஆராய்ந்து அதன்படி செய்யலாம்.   
நீதிபதி மகாதேவன், கோயில் நிலங்களை வழங்கக் கூடாது என்றார். ஆனால், அதன் பேரில் எந்த அப்பீலும் போகவில்லை. அதற்காக புது சட்டம் இயற்றலாம். நீதிமன்றம் ஒன்று சொல்லிவிட்டது என்பதற்காக அதை அப்படியே விட்டுவிட வேண்டுமென்பதில்லை.

கோயில்களை தனியார் கைகளில் ஒப்படைக்க வேண்டும் என்று சொல்பவர்கள் இதுபோல் அப்படியே விட்டுவிடுகிறார்களா..? இல்லையே... அப்பீல்... அப்பீலுக்கு மேல் அப்பீல் என தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற என்னவெல்லாம் செய்ய முடியுமோ அதை எல்லாம் செய்கிறார்கள் அல்லவா..?
அதுபோல் கோயில்கள் அனைத்தும் அரசின் கட்டுப்பாட்டிலேயே இருக்க வேண்டும் என்று சொல்பவர்களும் தங்கள் தரப்பை நிலைநிறுத்த சட்டப்படி போராட வேண்டும்.

ஆனால், இப்போதிருக்கும் தமிழக அரசு மத்திய அரசை பகைத்துக் கொள்ளக் கூடாது என்பதற்காக எந்த ஒரு சீர்திருத்தத் தைச் செய்யவும் தயங்குகிறது.   அரசிடமிருந்து அவர்கள் கேட்கும் நபர்களிடம் கோயில்கள்  போனால் ஆலயங்களில் இருக்கும் கல்வெட்டுகள் உட்பட பலதும் மாற்றப்படலாம். வரலாறுகள் திருத்தி எழுதப்படலாம். இப்பொழுதே தமிழில் இருக்கும் பல கல்வெட்டுகள் சமஸ்கிருதத்தில் செதுக்கப்பட்டு
வருகின்றன.

எனவே அரசின் வசம் கோயில்கள் இருப்பதே பாதுகாப்பானது...’’ என அழுத்தம்திருத்தமாக சொல்கிறார் ‘சிகரம்’ செந்தில்நாதன்.
இதை முழுமையாக மறுக்கிறார் இந்து மக்கள் கட்சியின் தலைவரான அர்ஜுன் சம்பத். “நம்முடைய பாரம்பரியத்தையும், பழமையையும் பாதுகாக்க வேண்டுமென்றால், இந்து சமய அறநிலையத்துறையிடமிருந்து கோயில்கள் விடுபட வேண்டும்.

பத்மநாபசுவாமி கோயில் விஷயத்தில் இதுதான் நடந்துள்ளது. பரம்பரை பரம்பரையாக மன்னர் குடும்பத்துக்கே அக்கோயில் பாத்தியப்பட்டது. உச்சநீதிமன்றம் தன் தீர்ப்பின் வழியே அதை ஆமோதித்துள்ளது. அதேபோல்தான் தமிழகத்திலுள்ள பல கோயில்கள், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை மன்னர்கள் மற்றும் சமஸ்தானங்களுக்கும்; ஆதீனங்களுக்கும் மடாதிபதிகளுக்கும் பாத்தியப்பட்டது.

இவற்றை எல்லாம் அரசு இப்போது இந்து சமய அறநிலையத்துறை என்ற துறையின் கீழ் ஆளுகை செய்கிறது. சட்டப்படி இது தவறு என்பதைத்தான் பத்மநாபசுவாமி கோயில் வழக்கில் உச்சநீதிமன்றம் சொல்லாமல் சொல்லியுள்ளது…’’ என்று ஆவேசமான அர்ஜுன் சம்பத்திடம், அரசாங்கத்தின் வசம் கோயில்கள் இருப்பதால் என்ன சிக்கல் என்று கேட்டோம்.

“அரசாங்கம் என்பது அரசியல்வாதிகளால் நடத்தப்படுவது. எனவே நிச்சயம் அரசாங்கத்தில் அரசியல் இருக்கிறது. ஆளுங்கட்சியைச் சேர்ந்தவர்களே கோயில்களில் அறங்காவலராக நியமிக்கப்படுகிறார்கள். இதனால் கோயில் நிர்வாகம் சரிவர நடைபெறுவதில்லை.

எனவேதான், அறநிலையத்துறை, ஆலயங்களை விட்டு வெளியேறி பக்தர்களிடமும், பரம்பரை அறங்காவலர்களிடமும் கொடுக்க முன் வர வேண்டும் என்கிறோம். அப்போதுதான் அரசியல் கலப்பற்ற திருக்கோயில் நிர்வாக ஆணைய - வாரியமாக அது செயல்படும்.  

இது சம்பந்தமான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்து கொண்டிருக்கிறது. வெகு சீக்கிரத்தில் மத்திய அரசு இதை சட்டமாகவே கொண்டு வரும்!  எப்படி முஸ்லீம்களின் மசூதியும் கிறிஸ்தவர்களின் சர்ச்சும் அவர்களின் மேற்பார்வையிலேயே இருக்கிறதோ அப்படி இந்துக்களின் - தமிழர்களின் கோயிலும் இருக்க வேண்டும்!’’ என்கிறார் அர்ஜுன் சம்பத்.  

அன்னம் அரசு