விஜய் படங்களுக்கு தொடர்ந்து ஒளிப்பதிவு செய்பவர் இவர்தான்!



ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ்

‘‘எனக்கு கிரிக்கெட்னா உயிர். சின்ன வயசில பேட்டை புடிச்சு இழுத்துகிட்டு திரிஞ்சிருக்கேன் போல. அப்பா எனக்கு கிரிக்கெட் வரும்னு முடிவு பண்ணிட்டார். அவர் நெனச்ச மாதிரியே கிரிக்கெட் ஆடினேன். அஸ்வின்கூட எல்லாம் விளையாடியிருக்கேன்.
ஆனால், செலக்‌ஷன்ல உள்ள நுழையவே முடியல. அப்பதான் சினிமா பார்க்க ஆரம்பிச்சேன். ஹீரோ பெயர் எல்லாம் போட்டுட்டு டைட்டில் கார்டுல பி.சி.ஸ்ரீராம்னு பேர் வரும்போது விசில் பறக்கும். கைதட்டல் காதுகிட்ட ஙொய்ன்னு கேட்கும்.

‘அட ஒரு கேமராமேனுக்கு இவ்வளவு மரியாதையா’ன்னு ஆச்சரியமாக இருக்கும். அந்த அரையிருட்டுல எனக்கான கனவு ஆரம்பிச்சிருக்கலாம்.
இப்ப நெனச்சுப் பார்த்தால் அப்படித்தான் தோணுது...’’ சித்திரம் போல் பேசத் தொடங்குகிறார் ஒளிப்பதிவாளர் ஜார்ஜ் வில்லியம்ஸ்.
‘ராஜா ராணி’ தொடங்கி ‘கத்தி’, ‘தெறி’ எனக் கடந்து ‘இரும்புத்திரை’ வந்து, தெலுங்கில் ‘தொலிபிரேமா’ வரை முத்திரை பதித்து தென்னிந்தியாவின் கவனத்தைக் களவாடிய ஒளிப்பதிவாளர்.

அப்புறம் எப்படி சினிமாவுக்குள்ள வந்தீங்க..?

போட்டோகிராபியில் அப்பாதான் சேர்த்துவிட்டார். விளையாட்டுத்தனமா, சீரியஸா அதில் என்னென்ன முடியுமோ முயற்சி செய்திருக்கேன்.
எங்கள் குடும்ப நண்பர் கல்யாண் மாஸ்டர் மூலமா நீரவ் ஷாகிட்ட சேர்ந்தேன். மூணே படம். வொர்க் டென்ஷன் தாங்க முடியாம வெளிய வந்திட்டேன். பிறகு கார்ப்பரேட் படங்கள் செய்தேன். அப்பவும் தேடிவந்த இடம் இதுவல்லனு புரிஞ்சது.

அப்பதான் இயக்குநர் அட்லிய பார்த்து அவருடைய ‘முகப்புத்தகம்’ குறும்படத்துக்கு ஒளிப்பதிவு செய்தேன். அதில் சிவகார்த்திகேயன் நடித்தார்.
அந்த சமயம் அல்போன்ஸ் புத்ரன் டைரக்‌ஷன்ல ‘நெஞ்சோடு சேர்த்து’னு ஒரு மியூசிக் வீடியோ பண்ணினேன். அது மிகப்பெரிய வைரல் ஆச்சு. நிவின் பாலி, நஸ்ரியா, அல்போன்ஸ் புத்ரன், கூடவே எனக்கும் நல்ல பேர் கிடைச்சது.

அந்த சமயம் அட்லி ‘ராஜா ராணி’ படத்துக்கு தயாராகிறார். ஷூட்டிங் ஆரம்பிக்கிற வரைக்கும் நான் அதில் கேமராமேன்தானா என எனக்கே சந்தேகமா இருந்தது. அப்ப பார்த்து இந்த வீடியோ வெளியாக எல்லாருக்கும் என் மேல் நம்பிக்கை வந்தது. அப்புறம் ‘ராஜா ராணி’க்கு கிடைச்ச வரவேற்பு.

அதனால் எனக்கு வந்த தெளிவு. இப்ப மனைவியா, அப்ப சினேகிதியா இருந்த சுனிதா திருச்சபைக்கு கூட்டிட்டு போறாங்க. அங்கே எனக்காகவே வந்து விழுகிற வார்த்தைகள் டிவைன் உணர்வைத் தருது. எனக்கு அந்த வார்த்தைகள் தேவகுமாரனோட நிழலைப்போல, ஓர் ஆசிரியனைப் போல, ஒரு மேய்ப்பனைப் போல ஒலிக்குது.

அந்த மியூஸிக் வெளியானதும், இப்படியான நல்ல வார்த்தைகள் கேட்டதும் ஏதோ ஒண்ணுபோலவே நடந்தது.விஜய்யோட தொடர்ந்து படங்கள் பண்றீங்க…‘ராஜா ராணி’ பார்த்துட்டு இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் கொடுத்த சான்ஸ்தான் ‘கத்தி.’ அந்த வாய்ப்பை அவருக்கும் விஜய்க்கும் புடிச்ச மாதிரி பயன்படுத்திக்கிட்டேன்.

அபிப்ராயங்கள் சொல்றதுல உறுதியாயிருப்பேன். இப்படி வெளிப்படையா இருக்கிறது அவங்களுக்கு பிடிச்சிருக்கலாம். விஜய் சார் நல்ல மனுஷன். கொஞ்சம் கூட சோர்வு கிடையாது. இவ்வளவு படம் பண்ணியாச்சேன்னு அசால்ட் கிடையாது. அத்தனை பெர்பெக்‌ஷன். பெரிய இடத்துக்கு போக திறமை மட்டும் போதாது, நல்ல மனசும் முக்கியம் என்பதற்கு அவர் ஓர் உதாரணம்.ஒளிப்பதிவு பற்றி உங்கள் எண்ணம்தான் என்ன..?

கதைக்கு என்ன தேவையோ அதை மீறிப் போகாதவாறு ஒளிப்பதிவை கட்டுக்குள் வைப்பது நல்லது. அதையும் மீறி ஒளிப்பதிவு தூக்கலாக இருந்தால் கதை பலவீனமா இருக்குன்னு அர்த்தம். எப்போதும் கேமராமேன்கள் பயந்துடக் கூடாது. நாம் தெரியலைனு நினைக்கக் கூடாது.

படத்துல ஸ்கோர் பண்ற இடம் அவசியம் வரும். பியூட்டி ஷாட்னு கண்டிப்பா இருக்கும். முன்னாடி அசோக்குமார், பாலு மகேந்திரா, மது அம்பட், சந்தோஷ் சிவன், பி.சி.ஸ்ரீராம் பண்ணும்போது ஏன் தனியா தெரிஞ்சதுன்னா அப்போ கேமராக்களில் பெரிய விஸ்தீரணம் கிடையாது. அவங்க வேற ஒரு சினிமாவைக் காண்பிக்க முயன்றபோது நடந்தது. இப்ப அதை ஈஸியா பண்ணலாம்.

இப்ப கதைக்கு ஏற்ற ஒளிப்பதிவு பண்றதுதான் ஃபேஷன். அதுக்கும் மேல உங்கள் வேலையைக் காட்டினால் ஆடியன்ஸ் பயங்கரமா டிஸ்டர்ப் ஆகறாங்க. நான் ரசிகனை எப்பவும் ரொம்பவும் புத்திசாலினு நினைச்சுப்பேன்.‘கத்தி’ மாதிரி பெரிய படம் பண்ணிட்டு திடீர்னு ‘நானும் ரவுடிதான்’ படம் பண்றீங்க…விக்னேஷ் சிவன் என் கிளாஸ்மேட்.

கொஞ்ச நாள் கழித்துப் பார்த்தால் அவர் ‘போடா போடி’ படம் பண்ணிட்டு வந்து நிக்கிறார். நான் ‘ராஜா ராணி’ முடிச்சிட்டேன். கையில் இது மாதிரி நல்ல ஸ்கிரிப்ட்டை வெச்சிட்டு அலைஞ்சி திரிஞ்சார். அப்புறம் அனிருத் சிபாரிசில் தனுஷ் கேட்டு படம் டேக் ஆஃப் ஆச்சு. விஜய் சேதுபதிக்கு எடை குறைச்சி, மீசையை எடுத்து நடிக்க வெச்சோம்.

அல்போன்ஸ் புத்ரன் எடுத்த ஒரு குறும்படத்தில் சேதுபதி போலீஸ் கேரக்டரில் அப்படித்தான் நடித்தார். நயன்தாரா ஏற்கனவே ராஜா ரானியில் பழக்கம். மதியம் ஷூட் பண்ணாம காலை, மாலை, இரவில் மட்டுமே எடுத்தோம். கேமரா, நல்ல லைட்டிங், பாண்டிச்சேரியின் அழகு எல்லாம் சேர்ந்து படம் பெரிய ஹிட். கதையோட ஸ்கிரிப்ட்டே படம் தெளிவா இருக்குன்னு சொல்லிச்சு.    
பிடிச்ச கேமராமேன் யார்?

மூணு பேரை சொல்லட்டுமா பிரதர்... ரவி வர்மனை ரொம்பப் பிடிக்கும். அவரோட கலர், காம்பினேஷன், லுக் எல்லாமே தனியா இருக்கும். யாரையும் அந்த ரேஞ்சுக்குள் ஒப்பிட முடியாதபடிக்கு இருக்கும். மனோஜ் பரமஹம்ஸா அவருடைய ‘ஈரம்’ காலத்திலிருந்து தொடர்ந்து அழகாக வெளிப்படுகிறார். வித்தியாசமான ஃபீல், லுக்கில் சமாதானம் செய்து கொள்ளவே மாட்டார்.

அப்புறம் இந்தி கேமராமேன் மித்தேஷ் மிர்சந்தானி. ‘உரி-சர்ஜிக்கல் ஸ்ட்ரைக்’ படமெல்லாம் அவ்வளவு நேர்த்தியா உச்சத்துல இருக்கும்.
நான் இவங்க மூணு பேரையும் ரொம்ப ஸ்பெஷலா கவனிப்பேன். ஒளிப்பதிவை ஒரு தியானம் மாதிரி ரசிச்சு செய்யறவுங்க இவங்க.

வீடு எப்படி உங்களை உணர வைக்குது..?ஷூட்டிங் விட்டால் வீடு… வீடு விட்டால் ஷூட்டிங்னு வந்துடற ஆள் நான். பெண்கள் நம்மை பார்த்துக்கறதையும், சமைச்சு போடறதையும் ஏதோ பிறவிப் பெருங்கடன் மாதிரி நினைச்சுக்கிறோம்.
 
எனக்கு பொண்ணுனா பெரிய மரியாதையை கொடுக்கணும்னு தோணினது அம்மாவையும், மனைவி சுனிதாவையும் பார்த்தபிறகுதான்.
அப்பான்னு கூப்பிடும்போதே இதோ இப்ப வெளியே பெய்யுதே மழை அதுமாதிரி அன்பைக் கொட்டுவாங்க என் மகள்கள் ஹேசெல், ரேச்சல்.
இவர்களின்றி என் நாள் முழுமை பெறாது!

நா.கதிர்வேலன்