செல்போனில் படம் இயக்கியிருக்கிறார் ஸ்ரீப்ரியா!தமிழ்சினிமாவில் பொன்விழா காணவிருக்கிறார் ஸ்ரீப்ரியா. கறுப்பு வெள்ளை காலத்தில் ஆரம்பித்து இந்த டிஜிட்டல் யுகம்வரை கலக்கியவர், கலக்குபவர். எப்பொழுதும் அப்டேட் ஆக இருப்பது இவரது ப்ளஸ். அதனாலேயே சின்னத்திரையிலும் இவரால் வெற்றிபெற முடிந்தது; தமிழில் நித்யாமேனன் நடிப்பில் ‘மாலினி 22 பாளையங்கோட்டை’, தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் ‘துருஷ்யம்’ உட்பட பல படங்களை இயக்கி கைதட்டல் வாங்கவும் முடிந்தது.  

அப்படிப்பட்டவர் லாக்டவுன் சீஸனில் ‘யசோதா’ என்ற குறும்படத்தை இயக்கி, நடித்து அசத்தியிருக்கிறார். முழுக்கவே மொபைல் போனில் ஷூட் செய்யப்பட்ட படம் இது!‘‘லாக்டவுன் வந்ததும் அப்பாடா குடும்பத்தோடு இருக்கலாம்னுதான் ஆரம்பத்துல நினைச்சேன். ஆனா, ஊரடங்கு எக்ஸ்டென்ட் ஆக ஆக ஒருவகையான மனஅழுத்தம் வந்தது.

முன்னாடி வீட்டை விட்டு எங்கயும் போகலைனா சந்தோஷப்படுவேன். அப்படிப்பட்ட எனக்கே இப்ப மூச்சு முட்டற நிலை. மனிதர்களைப் பார்க்க முடியாம சிரமப்பட்டேன். கிட்டத்தட்ட எல்லாருக்கும் இந்த நிலைமைதான். வசதியானவங்க... வசதியில்லாதவங்கனு பாகுபாடே இல்லாம எல்லாருமே இந்த லாக்டவுனால மனதளவுல பாதிக்கப்பட்டிருக்கோம்.

அதேநேரம் இந்த ஊரடங்கு காலம் புதிய புதிய வழிமுறைகளை நோக்கியும் மக்களை நகர வைச்சிருக்கு. என் குறும்படமான ‘யசோதா’ அதனோட விளைவுதான்...’’ புன்னகைக்கும் ஸ்ரீப்ரியா, எக்காலத்திலும் எந்தச் சூழலிலும் திரைப்படத்துறை அழியாது என்கிறார்.‘‘சூழலுக்கு ஏற்ப தன்னை புதுப்பிச்சுக் கிட்டே இருக்கும் துறைல சினிமாவும் ஒண்ணு. சும்மா ரீல் விடலை... எப்படி ஒர்க் ஃப்ரம் ஹோம் மெத்தடுக்கு மற்ற துறைகள் மாறுதோ அப்படி சினிமாவும் இந்த லாக்டவுன்ல மாறியிருக்கு! அதுக்கு உதாரணம் ‘யசோதா’.

அவங்கவங்க வீட்ல இருந்தபடியே இந்த குறும்படத்தை ஷூட் பண்ணியிருக்கோம். இது காலத்துக்கு ஏற்ற மாறுதல்...’’ என்ற ஸ்ரீப்ரியா, 1973ம் ஆண்டு திரைத்துறைக்குள் நுழைந்திருக்கிறார். ‘‘அந்தப் படம், 74லதான் ரிலீஸ் ஆச்சு. ஆக்சுவலா எங்க ஃபேமிலில அக்காதான் நடிக்க முயற்சி செய்தாங்க. எதிர்
பாராதவிதமா நான் நடிகையாகிட்டேன்.

நான் டான்ஸ் ஆடற ஃபோட்டோவை நாகராஜராவ் சார் டெவலப் பண்ண எடுத்துப் போனார். அவர்கிட்ட வேற சில போட்டோஸை கலெக்ட் பண்ண டைரக்டர் பி.மாதவன் சார் கம்பெனில இருந்து வந்தாங்க. அவங்க கண்ல என் போட்டோ பட... மாதவன் சார்கிட்ட விஷயத்தை சொல்லியிருக்காங்க.

எங்க பெரியப்பா தண்டாயுதபாணி பிள்ளை அந்தக்கால டான்ஸ் கோரியோகிராஃபர். ஏவிஎம் படங்கள்ல மாஸ்டரா இருந்தவர்.
அதனால ‘அட நம்ம மாஸ்டர் வீட்டுப் பொண்ணு’னு நடிக்க கேட்டு வந்தாங்க. ‘மாணிக்கத் தொட்டில்’ என்கிற படத்துல அஞ்சு பெண்கள்ல ஒருத்தரா என்னை ஒப்பந்தம் செய்தாங்க.  

அப்ப நான் ஸ்கூல் படிச்சிட்டிருந்தேன். படத்துல நடிக்க விருப்பமில்ல. ஸ்கூல் முடிஞ்சதும் நேரா மாதவன் சார் கம்பெனிக்கு போய் அவரைப் பார்த்தேன்.‘படிப்பை எல்லாம் விட்டுட்டு வரேன். அதனால பத்தோடு பதினொண்ணா நடிக்க முடியாது. நான் மட்டும்தான் கதாநாயகினா உங்க படத்துல நடிக்கறேன்’னு சொன்னேன்.

மாதவன் சார் சிரிச்சார். ‘இப்படியெல்லாம் பேசினா சினிமாலயே நுழைய முடியாம போயிடும்மா...’ என்றார். நான் கூலா, ‘பரவால்ல சார்... எனக்கு சினிமா வேண்டாம். இதைச் சொல்லத்தான் இங்க வந்தேன்’னு சொல்லிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்!ரெண்டு மாசம் கழிச்சு மாதவன் சாரே கூப்பிட்டு, ‘அன்னிக்கு தைரியமா பேசின பாரு... அதே மாதிரி ஒரு ரோல் கொடுக்கறேன்’னு சொல்லி ‘முருகன் காட்டிய வழி’ படத்துல கமிட் பண்ணினார்...’’ மலரும் நினைவுகளில் மூழ்கியவர் பெரும்பாலான மொழிகளில் நடித்திருக்கிறார்.  

‘‘கலைக்கு மொழி கிடையாது. திறமை இருந்தா, எந்த இண்டஸ்ட்ரீலயும் நுழைந்து ஜெயிக்க முடியும். தமிழ்ல சரளமா பேசறதால கோலிவுட் கம்ஃபர்டபுளா இருக்கு. அதற்கடுத்து டோலிவுட். அங்க எனக்கு அவ்வளவு மரியாதை தர்றாங்க...’’ என்றவர் சட்டென தன் தலையை உதறிக் கொண்டார்.

‘‘நூத்துக் கிழவி மாதிரி பழசை பேசிட்டு இருக்கேன்! ஸ்டில் ஐ’ம் யூத்! நடப்பைப் பத்தி பேசலாம்!’’ கோலிக் குண்டுகளை உருட்டி விட்டதுபோல் சிரித்தவர், ‘யசோதா’வுக்கு வந்தார். ‘‘எப்படி இந்தப் படத்தை செல்போன்லயே ஷூட் பண்ணினோமோ அப்படி டப்பிங்கையும் ஐபோன்லதான் முடிச்சோம். சினி இண்டஸ்ட்ரீ அந்தளவுக்கு மாடர்ன் ஆகியிருக்கு! ‘யசோதா’ திடீர்னு ஸ்பார்க் ஆன விஷயம். ஊரடங்கு நேரத்துல வீட்டுப் பணியாளர்களை அவங்கவங்க வீட்லயே இருக்கச் சொல்லிட்டேன். ஸோ, வீட்டு வேலைகளையும் நானே செய்துட்டு இருந்தேன்.

ஒரே மாதிரி ஒர்க், சலிப்பை ஏற்படுத்திச்சு. அப்பதான் நாசர் சார் வொய்ஃப் கமீலாகிட்ட ‘நாம ஒரு ஷார்ட் ஃபிலிம் பண்ணலாமா... அதுவும் மொபைல்லயே’னு கேட்டேன்.உடனே ‘வாவ்’னு எக்ஸைட் ஆகி செய்யலாம்னு சொன்னாங்க. நான், நாசர் சார், நித்யா ரவீந்தர், சோனியா, சிவா, பானுபிரகாஷ், ஸ்ரீகாந்த்னு மடமடனு ஆர்ட்டிஸ்ட்ஸ் சேர்ந்தாங்க. யாருக்கும் சம்பளம் கிடையாது!

கதை ரெடியானதும் ‘உங்களுக்குப் பிடிக்கலைனா நடிக்க வேண்டாம்’னு நாசர் சார்கிட்ட சொன்னேன். ‘இதுதான் ஃபியூச்சர்... அதுக்கான ஆரம்பம்
‘யசோதா’. இதுல நானும் இருக்கேன்... அது போதும்’னு சிரிச்சார். என் போர்ஷனை என் மகள் ஷூட் பண்ணினாங்க. நாசர் சார் போர்ஷனை அவர் பையன் எடுத்தார். நித்யா போர்ஷனை அவர் கணவரும், சிவா போர்ஷனை அவர் அண்ணனும், சோனியா போர்ஷனை அவர் கணவரும் ஷூட் பண்ணினாங்க.

‘யசோதா’ போஸ்டரை கமல் சார் வெளியிட்டு, ‘இது ஒரு ட்ரெண்ட் ஆகும்’னு சொன்னதும் எங்களுக்கு பொறுப்பு அதிகமாகிடுச்சு.

நானும் நாசரும் உள்ள காம்பினேஷனை என் வீட்ல எடுத்தோம். ரூபன் எடிட் பண்ணினார். சவுண்ட் மிக்ஸிங் எல்லாம் உதய்குமார் செய்து கொடுத்தார். எஃபெக்‌ட்ஸ் சேது. மியூசிக் க்ரிஷ். சினிமா மாதிரியே பக்காவா டீம் அமைஞ்சது.

என் போர்ஷனை தினமும் ஒரு மணிநேரம் ஷூட் பண்ணினோம். வொயிட் பேக் ட்ராப்ல எடுத்து மேட்ச் பண்ணினோம்.மொபைல்ல ஷூட் பண்ணினா கூட, கலர் கிரேடிங், கலர் கரெக்‌ஷன், டப்பிங்னு சினிமாவுக்கான எல்லா வேலைகளும் நடந்தது.

இந்த குறும்படத்தை ஆறே நாட்கள்ல ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டவங்க பார்த்திருக்காங்க. இதை நாங்களே எதிர்பார்க்கலை. சந்தோஷமா இருக்கு...’’ மலர்ச்சியுடன் சொல்கிறார் ஸ்ரீப்ரியா.

ஸ்ரீப்ரியா - ராஜ்குமார் சேதுபதி தம்பதிக்கு நாக் அர்ஜுன் என்கிற மகனும், சினேகா என்கிற மகளும் இருக்கிறார்கள். மகன் லண்டனில் ஸ்போர்ட்ஸ் மேனேஜ்மென்ட் படித்து வருகிறார். மகள், லண்டனில் சட்டம் படித்து முடித்திருக்கிறார்!

மை.பாரதிராஜா