அம்மா @ கோவிட் 19



மணியைப் பார்த்தான். 5:30. உடனே கிளம்பினால் தேவலாம் என்று தோன்றியது. காலையிலிருந்து அடுத்தடுத்து விடாமல் தொடர் மீட்டிங்குகள். அவற்றில்தான் அன்றைய பொழுது முழுவதும் கரைந்ததே தவிர, முடிக்க வேண்டிய வேலைகள் அப்படியே இருந்தன.
களைப்பாக இருந்தது. இன்னும் ஒரு மணி நேரம் தாமதிக்கலாமா இல்லை நாளை பார்த்துக்கொள்ளலாமா என்ற சிந்தனையில் இருந்தவனை செல்ஃபோன், வைப்ரேஷனில் அழைத்தது.

தொடுதிரையில் ரெனே வெள்ளைப் பற்களுடன் சிரித்தாள். செவி உபகரணத்தைக் காதில் நுழைத்துக் கொண்டு, ‘‘ஹாய் டார்லிங்...’’ என்றான்.

‘‘இன்னும் கிளம்பலியா? இன்று அப்பாவைப் பார்க்க வேண்டும் என்று சொல்லியிருந்தேனே...’’‘‘ஷ்... மீட்டிங் ஆக்கிரமிப்பில் மறந்துட்டேன். இதோ கிளம்பிட்டேன். இருபது நிமிடங்களில் அங்கே இருப்பேன்...’’‘‘போக்குவரத்து நிலவரத்தைப் பார்த்துவிட்டு வாக்களி. எனி வே, காத்திருக்கிறேன். நாம் பயணம் கிளம்பும்முன் உன்னையும் பார்க்க வேண்டும் என்று அப்பா சொல்லியிருக்கிறார்...’’‘‘ஐ லவ் யூ...’’‘‘ஐ லவ் யூ டூ மணி...’’ என்றாள்.

கணினியை அப்படியே மடித்து, பையில் திணித்தான். கண்ணாடிச் சுவருக்கு வெளியே வானம் இருட்டி, மழை தூறிக்கொண்டிருந்தது.
பிப்ரவரி மாதத்தின் வழக்கமான சியாட்டில் குளிர். கழுத்தில் ஸ்கார்ஃபைச் சுற்றி, ஜாக்கெட்டை மாட்டிக்கொண்டு, காருக்கு விரைந்து அதைக் கிளப்பிய போது உள்ளே குளிர் சாதனப் பெட்டியை விட அதிகமாக ஜில்லென்றிருந்தது.

ஹீட்டரின் ஸ்விட்சை உச்சத்திற்குத் திருப்பிவிட்டு, வழிகாட்டித் திரையைப் பார்த்தபோது இல்லத்தை அடைய இருபத்தைந்து நிமிடம் ஆகும் என்றது அது. பாதகமில்லை. உரிய நேரத்தில் மருத்துவ நிலையத்தை அடைந்துவிடலாம்.  520ம் சாலையைக் கட்டணப் பாதையாக மாற்றி, அதன் அகலத்தையும் மேம்படுத்தி விட்டதில் முந்தைய கால நெரிசல் மட்டுப்பட்டிருந்தது. ஆனாலும் I-5 நெடுஞ்சாலையில் நுழைந்து 520ஐப் பிடிப்பதுதான் தினசரி சவால்.
எங்காவது நொடித்து நிற்கும் ஒரு கார், இடித்து விட்ட ஒரு வாகனம் போதும்... சாலையில் திருவிழா நெரிசல் உருவாக்கி, சில மைல் நீளத்திற்கு  வாகனங்கள் வரிசை கட்டிவிடும்.

பெல்வியூ புறநகரையும் சியாட்டிலையும் 35 கி.மீ. நீளமுள்ள வாஷிங்டன் ஏரி பிரித்தது. இரு கரையையும் இணைக்க 520 சாலையும் I-90 நெடுஞ்சாலையும் ஒவ்வொரு பாலம் அமைத்திருந்தன. அலுவலக நேரங்களில் அந்தப் பாலங்களைக் கடந்து சியாட்டில் வருவதும் பெல்வியூ திரும்புவதும் பகீரதப் பயணம்.

மணிக்கும் உடன் வாழ் தோழி ரெனேவுக்கும் அமேஸானில்தான் பணி. பணியில்தான் அவளை முதன்முதலில் ஐந்து ஆண்டுகளுக்குமுன் மணி சந்தித்தான். அது நட்பானது, காதலானது. ஐந்து மாதத்தில் பெல்வியூவில் அபார்ட்மெண்ட் பார்த்து சேர்ந்து வாழ ஆரம்பித்தார்கள்.
ரெனேவுக்கு பெல்வியூவில் இருந்த அமேஸான் அலுவலகத்தில் மென்பொருள் வல்லுநராகப் பணி. பத்து நிமிட தொலைவு. பேருந்து வசதி இருந்தது. மணிக்கு மட்டும் காரில் தினசரி சியாட்டில் பயணம்.

சென்னையில் இருந்த பெற்றோரிடம் காணொலி பேச்சில் ஒருநாள் மணி தன் பரீட்சார்த்த வாழ்க்கையை மெல்ல மெல்லச் சொன்னபோது, ‘‘பாவி! கல்யாணம் முடிஞ்சுடுச்சா?’’ என்றார் அதிர்ச்சியை மென்று முழுங்கிய அப்பா. அவர் அதிர்ந்து அவன் பார்த்ததில்லை. எல்லா பூகம்பமும் மனத்திலேயே அமுங்கி நிதானத்தை மட்டுமே கடைபிடிப்பவர். அவரே அதிரந்துவிட்டார். பாசம்.‘‘இல்லை... வி ஆர் லிவிங்டுகெதர்...’’ என்றான்.

கணவரை நகர்த்திவிட்டு திரையை ஆக்கிரமித்த அம்மாதான் ரெளத்திரத்தைக் கக்கினார். ‘‘கிராதகா! அது வாழ்க்கை இல்லேடா. வேசித்தனம். கடன் வாங்கி கஷ்டப்பட்டு, நீ கரையேறி எங்களைக் காப்பாத்துவேன்னு கடல் தாண்டி அனுப்பினா அமெரிக்காகாரியுடன் வேசித்தனம் புரிவதை எங்களிடம் பெருமையாச் சொல்றியோ? நாசமாப் போயிடுவே...’’‘‘விடுடி... அட்லீஸ்ட் பொம்பளையோடவாச்சும் வாழ்றானே... ஆம்பளையோட குடும்பம் நடத்தலியேன்னு சந்தோஷப்படு...’’ அப்பாவின் குரல் மட்டும் பின்புறத்திலிருந்து கேட்டது.

திரையில் அவர் பக்கம் திரும்பிய அம்மாவின் முகம், ‘‘நடுக்கூடத்துல தொங்கியிருப்பேன்!’’ என்றது.அன்று துண்டிக்கப்பட்ட அந்த அழைப்பிற்குப் பிறகு மணி தன் அம்மாவிடம் பேச முடியாமலே ஆகிவிட்டது. அப்பா மட்டும் அவனது தொலைபேசி அழைப்பை எப்பொழுதாவது ஏற்று ஓரிரு வார்த்தை அசுவாரஸ்யமாகப் பேசிவிட்டு வைத்துவிடுவார். அதுவும் ஆறு மாதங்கள்தான். ஒருநாள் நள்ளிரவில் அவர் மரணமடைந்த செய்தி வந்தது. தங்கை பானுதான் தகவல் தெரிவித்தாள். அன்றும் அதன் பிறகும் மணி பலமுறை தன் அம்மாவிடம் பேச முயன்றும் முடியவே இல்லை.

தங்கள் மகனின்மீது மலைபோல் வைத்திருந்த நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் நொறுங்கித் தூளாகிப் போனதன் எதிர்வினை அது.
படு சூட்டிகையான தன் மகன், பட்டதாரியாகி, நசித்துவரும் தனது ஆடை ஆபரண கொள்முதல் தொழிலைத் தூக்கி நிறுத்துவான்; நவீன காலத்திற்கேற்ப மாற்றி ஜாலம் புரிவான் என்று ஏகப்பட்ட நம்பிக்கை மணியின் தகப்பனாருக்கு.

இளங்கலைப் படிப்பை முடித்ததும் மேற்படிப்புக்கு அமெரிக்கா என்று அவன் ஆசைப்பட்டதும், ‘நல்லது. நமது நிறுவனத்துக்கு அயல்நாட்டுப் பட்டம் பெற்ற முதலாளி பெரும் முதலீடு’ என்று பல இடங்களில் தன் ஆஸ்தியை அடமானம் வைத்து கடன் வாங்கி ஆஸ்திக்குப் பெற்றிருந்த மகனை விமானமேற்றினார்.  

‘‘பெண் ஒன்றும் பெத்து வெச்சிருக்கோம். இப்ப சின்னவள்தான். சடுதியில் பெரியவளாகி கல்யாணத்துக்கு நிற்பா. அவளுக்கு என்ன வெச்சிருக்கீங்க?’’ என்று மனைவி கேட்டபோதுகூட, ‘‘மணி பார்த்துப்பான்...’’ என்று புன்னகையுடன் சொல்லிவிட்டார்.கிளம்சன் பல்கலைக்கழகத்தில் முதுகலை, பின்னர் எம்பிஏ முடித்தவனை, ‘‘எப்போ வர்றே?’’ என்று கேட்டார்கள்.

‘‘சியாட்டில் அமேஸானில் மார்க்கெட்டிங் டீமில் நல்ல வாய்ப்பு வந்திருக்கு. H1-B விஸா மாற்றித் தருவதாகச் சொல்றாங்க. நல்ல அனுபவம் கிடைக்கும். அதையும் பார்த்துட்டு சில வருஷத்தில் வந்துடறேனே...’’ கெஞ்சினான்.அப்பா அதை அரை மனத்துடன் ஏற்றுக்கொண்டார். ‘‘நீ கிளம்பிப் போய் எத்தனை வருஷமாச்சு. ஒருமுறையாவது வந்து பாத்துட்டுப் போயிடேன்...’’ என்றாள் அம்மா.

‘‘இந்த விஸா மாற்றல் முடிந்தவுடன் சென்னை வர்றேன். உங்களையும் ஒரு டிரிப் இங்கே கூட்டிட்டு வர்றேன். தயாரா இருங்க...’’ என்ற போது உள்ளுக்குள் ஆசையிருந்தாலும், ‘‘அதெல்லாம் வேண்டாம். நீ வந்துட்டுப் போனா அதுவே போதும்...’’ என்றார்கள். ஆனால், அவன் வாழ்க்கையில் நுழைந்த ரெனேயின் வரவு அனைத்தையும் புரட்டிப் போட்டு விட்டது.  தந்தையின் மரணம் தவிர வேறு எதுவும் ரெனேவுக்குத் தெரியாமல் பார்த்துக்கொண்டான் மணி. ‘‘பழமைவாதிகள். பேசிக்கொண்டிருக்கிறேன். மெதுவே மனம் மாறிவிடுவார்கள். நாம் இருவரும் சென்னை சென்று வருவோம்...’’ என்று மட்டும் சொல்லி வைத்திருந்தான்.

‘‘எனக்குப் புரிகிறது. உனது தமிழ்ப் படங்கள் உங்களது பழைய - புதிய கலாசாரத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன...’’ என்றாள்.
‘‘அதென்ன புதிய கலாசாரம்?’’ ‘‘உடைகளில் தொடங்கி பலவற்றில் நீங்கள் உங்களது தனித்தன்மையைத் தொலைத்துவிட்டு மேற்குலகை க்ளோன் செய்து விட்டீர்கள். சில சமயங்களில் இரண்டுக்கும் இடையில் சிக்கிக்கொண்டு தவிக்கிறீர்கள் எனத் தோன்றுகிறது...’’சற்று கோபம் வந்தது. சமாளித்துக்கொண்டு, “பழையது கழிந்து புதியதாக வருவதை எங்கள் நாட்டு வெர்ஷனுக்கு மாற்று
கிறோம்...” என்றான்.

அவனது கழுத்தைக் கட்டி கன்னத்தில் இலேசாய் உரசிவிட்டு அகன்றாள் ரெனே. அவளிடம் அவனுக்கு மிகவும் பிடித்ததே அதுதான். வாக்குவாதமாய் மாறக்கூடிய எந்த விஷயத்தையும் ஒதுக்கிவிட்டு, நகர்ந்து விடும் அவளது இயல்பு.  ரெனே ஆப்பிரிக்க அமெரிக்க வம்சாவளி. அவளது சிறு வயதிலேயே தாய் அவளை கணவர் கீத்திடம் விட்டுவிட்டு யாருடனோ சென்றுவிட்டாள். மறுமணம் புரிந்துகொண்ட கீத், மகளை பிரியமுடன் வளர்த்தார். ஆளாக்கினார். இதனிடையே இராணுவம் அவரை பணிக்கு அழைக்க, ஈராக்கில் அவருக்குச் சில காலம் கழிந்தது.

திருப்பி அழைக்கப்பட்ட படைகளுடன் அவர் சியாட்டில் திரும்பியபோது ரெனேயின் மாற்றாந் தாய் கேன்சரிடம் தோற்றாள். அப்பிரிவுடன் சேர்த்து கீத்தை PTSDயும் பற்றியது. போரிலிருந்து திரும்பும் வீரர்களைத் தொற்றும் மன அழுத்தம். களத்தில் கண்ணெதிரே கொலையுண்ட நண்பர்கள், கண்ணி வெடிகளும் கிரனேடுகளும் சிதறடித்த அங்கங்கள், உடலை விட்டுப் பறந்த தலைகள் எல்லாம் அவரது மண்டையிலும் மனத்திலும் ஆழமாய்ப் பதிந்து, நிலைகுலைந்திருந்தார் கீத்.

அரசாங்கம் அவரது சேவையைப் பாராட்டியிருந்ததுதான். ஹீரோவாகக் கொண்டாடியதுதான். ஆனால், அவையெல்லாம் அவரது பாதிப்புக்குக் களிம்பாகக்கூட அமையவில்லை. நாளாக ஆக, அவரது நிலைமை மோசமானது. தவறி விழும் பாத்திரம்கூட அவரை அதிர்ச்சிக்கு ஆளாக்கி, கட்டிலுக்கு அடியில் பதுங்க ஓடுவார் கீத். பகலில் கட்டிலுக்கு அடியில் தூங்கி இரவெல்லாம் விழித்திருந்தார். தெருவில் தென்படும் ஆசியர்களின் எந்த
ஒரு முகமும் அவரை சலனப்படுத்தியது. நிவாரணத்தை சாராயத்திலும் போதைப் பொருளிலும் தேடப் போக அது நிலைமையை மேலும் மோசமாக்கியது.

ரெனேதான் அத்தனை சிரமங்களையும் சமாளித்து ஒரு குழந்தையைப்போல் அவரைப் பார்த்துக்கொண்டாள். ஆனால், வெறுமே ஆறுதலும் பணிவிடையும் மட்டும் அதைக் குணப்படுத்தாது என்பது தெரிந்தது. மனநல ஆலோசகரின் உதவி, தெரபி சேவை தேவைப்பட்டன. ஓரிரு நாள் மருத்துவம் போலன்றி நீண்ட கால சிகிச்சை.

பெல்வியூவை அடுத்து அமைந்திருந்த கிர்க்லேண்ட் லைஃப் கேர் சென்டரில் அவரை அனுமதிக்கும்படி இருந்தது. சிறப்பு வசதி களுடன் இருந்த அந்நிலையம் முதியோர் இல்லத்து அக்கறையுடன் தமது நோயாளிகளைப் பராமரித்தது. தகுந்த ஏற்பாடு செய்துவிட்ட நிலையில்தான் ரெனேவுக்கு மணி அறிமுகமாகி அவளது வாழ்க்கையின் அடுத்த கட்டம் துவங்கியது. இணைந்து வாழ ஆரம்பித்தார்கள்.

2020ம் ஆண்டு பிறந்ததைக் கொண்டாடிவிட்டு மறுநாள் அலுவலகத்திற்குச் சென்ற ரெனேவுக்கு புதுச்செய்தி காத்திருந்தது. சென்னையிலுள்ள அமேஸான் அலுவலகத்திலுள்ள ஊழியர்களுடன் புதிய ப்ராஜெக்ட் குறித்துப் பேசி சிறப்புப் பயிற்சி அளித்துவிட்டு வா என்றார்கள். பிப்ரவரி மாத இறுதியில் செல்ல வேண்டியிருக்கும் என்று தெரிவித்தார்கள்.

மணியிடம் பேசினாள். ஒருவாரம் விடுப்பும் எடுத்துக்கொண்டு இருவரும் சென்னை செல்வது, மணியின் அம்மாவைச் சந்திப்பது, பேசுவது என்று திட்டமிட்டார்கள்.“கிளம்பும் முன் அப்பாவுக்கும் உன்னை அறிமுகப் படுத்த விரும்புகிறேன் மணி. அவரும் உன்னைப் பார்க்க விரும்பகிறார்...” என்றாள் ரெனே.“என்னைப் பார்த்ததும் அவருக்கு மீண்டும் ஏதாவது பிரச்னை...” என்று யோசித்தவனிடம், “இப்பொழுது பெருமளவு மீண்டு விட்டார். அனைத்தையும் தெரிந்துகொண்டு அவர்தான் உன்னை அழைத்துவரச் சொன்னார்...” என்றாள்.மணி அப்பார்ட்மெண்ட்டை அடைந்தபோது ரெனே தயாராகக் காத்திருந்தாள்.

கீத் தங்கியிருந்த மருத்துவ நிலையத்தை 15 நிமிடங்களில் அடைந்து, அவரைச் சந்தித்தபோது, ‘‘ஹலோ மணி... ஹவ் ஆர் யூ?’’ என்றார்.
அன்றுதான் அவரை முதன் முதலில் சந்திக்கிறான். சிறு பதற்றம் இருந்தது. ஆனால், அவர் இயல்பாக இருந்தார். ஒரு மாதம் கழித்து சந்திக்கும் நண்பனிடம் பேசுவதைப் போல் உரையாடினார்.ரெனே அவரது தலையை வருடிவிட, ஆர்வமுடன் அவர்களது பயண விவரங்களைக் கேட்டுக்கொண்டார். ‘‘இந்திய உணவு பிரமாதம். வகைகள் ஏராளம். நன்றாக அனுபவித்துக்கொள்...’’ என்றார் மகளிடம்.

மணியின் கையைப் பற்றி, ‘‘என் ஏஞ்சல்... கவனமாகப் பார்த்துக்கொள். ஆங்... நிறைய லஸ்ஸி, இளநீர் வாங்கிக்கொடு. காரம் அவளுக்கு ஒத்துக்கொள்ளாமல் போகலாம்...’’மன அழுத்தத்திலிருந்து அவர் வெகுவாக விடுபட்டு விட்டதாகவே தோன்றியது. வீடு திரும்பும்போது, ‘‘இந்தியாவிலிருந்து வந்தபின், அவரை டிஸ்சார்ஜ் செய்து, நல்லதொரு முதியோர் இல்லத்தில் சேர்க்க வேண்டும்...’’ என்றாள் ரெனே.

பிப்ரவரி 28ம் நாள் சென்னை வந்து இறங்கினார்கள். ஆழ்வார்பேட்டையில் இருக்கும் தன் வீட்டிற்கு அண்மையில் இருந்த ரீஜண்டா ஹோட்டலில் ரூம் புக் செய்திருந்தான் மணி. ‘‘நாளை நாம் இருவரும் நேரே சென்று நிற்போம். அம்மாவின் கோபத்தைச் சமாளித்துவிடுவேன்...’’ என்றவனிடம், ‘‘உன் தங்கைக்காவது நாம் வருவது தெரியுமா?’’ என்று கேட்டாள் ரெனே.‘‘இல்லை. வியப்பை அளிப்போம்!’’ஹோட்டல் வரவேற்பு மையத்தில் இருந்த யுவதியின் கண்களில் தென்பட்டு உடனே மறைந்த ஆச்சரியத்தை மணி கவனித்தான். வெளிநாட்டுப் பயணிகளின் புழக்கத்திற்கு அவள் பழக்கப்பட்டிருந்தாலும் சென்னைவாசி ஒருவன் கறுப்பினப் பெண்ணுடன் வந்து தங்குவதைப் பார்ப்பது அவளுக்கு முதல் அனுபவமாக இருக்கலாம்.

புன்னகையுடன், ‘‘என்ஜாய் யுவர் ஸ்டே ஸார்...’’ என்று ரூம் கார்டைத் தந்தாள்.மறுநாள் காலையிலேயே ஏழு மணிக்கெல்லாம் தயாராகி, ஓலா டாக்ஸி ஒன்றைப் பிடித்து, வீட்டு வாசலை அடைந்தார்கள். மணி காலிங்பெல்லை அமுக்கினான்.‘‘யார் அது?’’ என்றவாறு அம்மாதான் வந்து கதவைத் திறந்தார். இருவரையும் பார்த்து, நம்பமுடியாமல், ஸ்தம்பித்து அதிர்ச்சியுடன் நின்றார்.

யோசித்து வைத்திருந்த வசனமெல்லாம் சுத்தமாக மறந்து போய் எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ‘‘அம்மா...’’ என்றான்.
ஆங்கில நெடியுடன், ‘‘வணக்கம்...’’ என்று கை கூப்பினாள் ரெனே.பதில் ஏதும் வராமல் பார்வை மட்டும் மகன் மேல் பதிந்திருந்தது. அம்மாவின் முகபாவம் வெகுவிரைவில் கோபமாக மாறுவதைக் கவனிக்க முடிந்தது.அதற்குள் வாசலுக்கு வந்த பானு, அதிர்ச்சியும் மகிழ்ச்சியுமாய், ‘‘ஹய்யோ அண்ணா! அட அண்ணியுமா?’’ என்றவளின் குரலில் குதூகலம்.

திரும்பி மகளைப் பார்த்து, ‘‘கல்யாணம் ஆயிடுச்சாமா? உரிமை கொண்டாடுறே. போடி உள்ளே...’’ என்று முறைத்தார்.‘‘உள்ளே கூப்பிடும்மா...’’ என்றாள் பானு.‘‘நீ உள்ளே போடி. முன்னாடியே உனக்கு வாட்ஸ்அப் அனுப்பியிருப்பான். சொல்லாமல் இருந்திருக்கே. கல்லுளிமங்கி...’’‘‘இல்லேம்மா. சத்தியமா இது சர்ப்ரைஸ். உள்ளே கூப்பிடும்மா...’’அமங்கல முகமாய் அம்மா. வயதும் வாழ்வின் அயர்ச்சியும் தேகத்தைப் பாதித்த அம்மா. அவரை அப்படிப் பார்ப்பது அவனுக்கு வலித்தது.

சுயநலத்திற்கும் இச்சைக்கும் அடிபணிந்து விட்டேனோ என்று முதல் முறையாக யோசித்தான். மணியின் கண்களில் கண்ணீர் எட்டிப் பார்த்தது.
போன் மணி ஒலித்தது. ரெனேயின் போன். என்ன செய்வது என்று தெரியாமல் அக்காட்சியில் அசந்தர்ப்பமாய் நின்று கொண்டிருந்தவளுக்கு அது ஆசுவாசமாக இருந்தது. ‘‘எக்ஸ்கியூஸ் மீ...’’ என்று அங்கிருந்து விலகினாள்.‘‘வெள்ளைக்காரின்னு நினைச்சா, ஒரு கருப்பியோடு வந்து நிக்கிறானே பானு...’’
‘‘அம்மா அவ ஆப்பிரிக்கன் - அமெரிக்கன்...’’ என்றான் மணி.

‘‘கருப்பா இருந்தாலும் களையா இருக்கா அண்ணா...’’ என்றாள் பானு.‘‘டிஸ்கிரிமினேஷன் அதிலேயே ஆரம்பிச்சுடுது...’’ என்றான் தங்கையிடம்.
‘‘என்ன அவளுக்கு வக்காலத்து வாங்குறானா உன் அண்ணன்? செத்துப்போன அப்பாவும் அவர் நம்பிக்கையும் அவனுக்கு நினைவிருக்காமா? பெத்த கடன் கிடக்க, இவன் படிப்புக்குப் பட்ட கடனுக்கு வியாபாரச் சொத்து முழுவதையும் எழுதிக் கொடுத்து போய்ச் சேர்ந்தது இந்த தொரைக்குத் தெரியுமா...’’ என்று நீள ஆரம்பித்த அம்மாவிடம், ‘‘மொதல்ல உள்ளே கூப்பிடும்மா...’’ என்றாள் பானு.

அதற்குள் மணியை நெருங்கிய ரெனேயின் கண்களில் கண்ணீர். அவனைத் தனியே அழைத்து, உடைந்த மெல்லிய குரலில், ‘‘மணி... அப்பா இறந்துட்டார்...’’ என்றாள்.‘‘மை காட். எப்போ?’’‘‘இப்போதான். கோவிட் பாஸிட்டிவ் என்கிறார்கள். மேலும் சிலருக்கும் அந்த நிலையத்தில் பரவியிருக்கு. டாக்டர் நம்மையும் டெஸ்ட் செய்ய அழைத்தார். இங்கே இருக்கோம் என்றேன். உடனே நம்மைத் தனிமைப்படுத்திக்கச் சொல்கிறார்...’’
அதிர்ச்சியில் நின்றவனிடம், ‘‘அவளையும் அழைச்சுட்டு உள்ளே வா...’’ என்றார் அம்மா.‘‘முடியாது... வெரி ஸாரிம்மா...’’ உடைந்து அழுதான் மணி.

‘டாக்டர்’ நாயகி!

தெலுங்கில் ஹிட் அடித்த நானியின் ‘கேங் லீடர்’ படத்தின் ஹோம்லி ஹீரோயின் ப்ரியங்கா மோகன், இப்போது சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ மூலம் தமிழுக்கும் வந்துவிட்டார். தியேட்டர் ஆர்ட்டிஸ்டாக தன் கேரியரை ஆரம்பித்தவர், ‘டாக்ட’ருக்கு முன்பே தமிழில் ஒரு படத்தில் நடித்திருக்கிறார். ஆனால், அதன் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.

நான் அவளல்ல!

‘‘கேரளாவுல ஒரு ஃபங்ஷனுக்கு சீஃப் கெஸ்ட்டா போயிருந்தேன். நான் மைக்ல பேசுறதுக்கு முன்னாடி, மேடையில் ஒருத்தர் என்னைப் பத்தி செம பில்டப்பெல்லாம் கொடுத்து புகழ்ந்து புகழ்ந்து பேசிட்டிருந்தார். பில்டப் எல்லாம் முடிஞ்சு என் பெயரைச் சொல்ல வரும்போது, வேற ஒரு நடிகை பெயரை சொல்லிட்டார்! நான் மட்டுமில்ல, அந்த அரங்கமே விழுந்து விழுந்து சிரிச்சது...’’ என்கிற மகிமா நம்பியாரின் கைவசம் ‘ஐங்கரன்’ மட்டுமே இருக்கிறது.

ஆக்‌ஷன் லட்சுமி!



‘‘மத்த ஹீரோயின்ஸ் எல்லாருமே ஆல்மோஸ்ட் எல்லா டான்ஸ் மாஸ்டர்களுடனும் ஒர்க் பண்ணிடுவாங்க. நான் மட்டும் எல்லா ஃபைட் மாஸ்டர்களோடும் ஒர்க் பண்றேன்! இயக்குநர்கள் என்கிட்ட கதை சொல்லும் போதே, ‘நாலு ஃபைட், ரெண்டு சேஸிங் இருக்கு மேம்’னுதான் சொல்றாங்க. ஆக்‌ஷன் படங்களாகத்தான் இருக்கு...’’ அதிர சிரிக்கிறார் வரலட்சுமி.

கிளாமரஸ் ரைட்டர் + டைரக்டர்!

அஜித்தின் ‘ஆரம்பம்’, விஜய்யின் ‘துப்பாக்கி’, ஜெயம் ரவியின் ‘போகன்’ என பல படங்களில் கிளாமர் கேரக்டரில் அசத்திய அக்‌ஷரா கௌடா, இப்போது கன்னடத்தில் பரபரக்கிறார். இந்த ஆண்டு துவக்கத்தில் எகிப்திற்கு டூர் அடித்து மகிழ்ந்தவர், லாக்டவுனால் ஹைதராபாத்தில் சிலுசிலுக்கிறார்.

கிளாமராகவே நடித்தால் ரொம்ப வருஷம் தாக்குப் பிடிக்க முடியாது என நினைத்துவிட்டார் போல. லாக்டவுன் காலகட்டத்தில் ஆன்லைனில் ‘திரைக்கதை எழுதுவது எப்படி’ கோர்ஸ் முடித்துவிட்டு, புராஜெக்ட் ஒர்க் செய்யவும் ரெடியாகிவிட்டார் அக்‌ஷரா.

நூருத்தீன்