Mrs. ஜானகி... ஆன்லைன் அலப்பறைகளின் பயோடேட்டா
லாக்டவுன் காலத்தில் பலரும் சேனல்கள், பிளாக்ஸ், வீடியோக்கள்... என விதவிதமாக யோசித்து டிரெண்டடிக்க முயற்சி செய்தனர். அதில் வாட்ஸ்அப் வரை இறங்கி டிரெண்டானது இந்த Mrs.ஜானகி ஹைஸ்கூல் டீச்சரும், ஆன்லைன் ஐடி மீட்டிங்கில் நடந்த உண்மைச் சம்பவங்களையே வீடியோ கான்செப்ட்டுகளாக வெளியிட்ட ‘சர்டிஃபைட் ராஸ்கல்ஸ்’ சேனலும்தான்.
‘‘10வது படிச்சுட்டு இருந்த சொந்தக்காரப் பொண்ணு, பரீட்சை கேன்சல் ஆனதும் செம குஷியானா. எங்களுக்கு போன் போட்டு, ‘நீங்கல்லாம் விழுந்து விழுந்து படிச்சீங்களே... எங்களைப் பாருங்க’னு கலாய்ச்சா!நாம வேற 90ஸ் கிட்ஸ் ஆச்சே! சும்மா இருப்போமா... ‘ச்சே… நமக்கு இப்படியெல்லாம் எதுவுமே நடக்கலையே’னு இதையே கான்செப்ட் ஆக்கி வீடியோ செய்தேன்.பாட்டு பாடற நம்ம மூஞ்சியை எல்லாம் எவன் பார்ப்பான்னு ஏற்கனவே ஐபோன்ல இருக்கற அனிமோஜி ஆப்ஷனை வெச்சு எனக்குனு ஒரு கேரக்டர் உருவாக்கி வெச்சிருந்தேன்.
அதையே கொஞ்சம் என் பழைய டீச்சர்களை இன்ஸ்பிரேஷனா வைச்சு டிசைன் செஞ்சு மாடிஃபை பண்ணி ஜாலியா ஒரு வீடியோ போட்டேன். சத்தியமா டிரெண்ட் ஆகும்னு நினைக்கலை. வைரலாகிடுச்சு!முதல் வீடியோவுக்கு பெரிசா யோசிக்கல. ஆனா, அடுத்தடுத்ததுக்கு ஸ்கிரிப்ட் எழுதி, கொஞ்சம் வேலை செய்து அப்லோட் செய்தேன்.
இப்ப குழந்தைங்க நான் பேசினதை மனப்பாடம் பண்ணி செய்யறாங்க. பெருமையா இருக்கு. அப்பா பிஸினஸ்மேன், அம்மா ஹவுஸ்ஒயிஃப். நடிப்பு மேல ஆர்வம். அதனால ஸ்டேஜ்பிளே, ஸ்டேண்டப் காமெடின்னு வந்திட்டேன். பட வாய்ப்புகள் கிடைச்சா முத்திரை பதிப்பேன்...’’ என்கிறார் Mrs.ஜானகி கேரக்டருக்குப் பின்னால் இருக்கும் அபிஷேக் குமார். இது தனி மனிதன் டிரெண்ட் ஆன கதை.
சர்டிஃபைட் ராஸ்கல்ஸ்!
‘சர்டிஃபைட் ராஸ்கல்ஸ்’ 10க்கும் மேற்பட்ட ஐடி ஊழியர்களின் ஒன்றிணைந்த அலப்பறை!தங்கள் நிறுவன ஆன்லைன் மீட்டிங்கில் நடக்கும் சம்பவங்களையே கன்டென்டாக மாற்றி யூ டியூபில் பதிவேற்றி டிரெண்டாகி வருகிறார்கள். ‘‘எங்க எல்லாருக்கும் ஐடி வேலைதான் பிரதானம். பொழுதுபோக்குக்கு ஷார்ட் ஃபிலிம்ஸ் எடுப்போம்...’’ என தன் குழு சார்பாக பேச ஆரம்பித்தார் சுதிர்.
‘‘நானும் என் நண்பன் அரவிந்தும் ஷார்ட் ஃபிலிம்ஸுக்காக யூ டியூப் சேனலை ஆரம்பிச்சோம். இப்ப லாக் டவுன் நேரம். குறும்படங்கள் எடுக்க முடியலை. என்ன செய்யலாம்... சேனலை எப்படி ரன் பண்ணலாம்னு யோசிச்சப்ப எங்க கம்பெனிகள்ல நடக்கற ஆன்லைன் மீட்டிங் கலாட்டாக்கள் ஸ்பார்க் ஆச்சு.
ஆனா, இதை மையமா வைச்சு ஏன் மீம்ஸ் போடக் கூடாது... மேலும் வீடியோவா பதிவேத்தணும்னும் முடிவு செய்தோம்.
ஆன்லைன் மீட்டிங்ல நடக்கற பிரச்னை, சம்பவங்கள் எல்லாத்தையும் காமெடியாக்கறோம். பெரும்பாலான ஆன்லைன் மீட்டிங்குல நடக்கற சம்பவங்கள்தான் எங்க வீடியோல இருக்கு. அதனாலயே அது வைரல் ஆகுது!
நான், அரவிந்த், சரண் தியாக ராஜன், அழகுநிதி, பிரவீன், கவின், தனலட்சுமி, அஷ்வத், ரிதுமிதா, காயத்ரி, ஸ்ரீராம் கிரிஷ், ரவிஷங்கர் விக்னேஷ், விஸ்வா, நரேஷ், பரேஷ், வித்யா... எல்லாம் ஒண்ணு சேர்ந்து ‘சர்டிஃபைட் ராஸ்கல்ஸ்’ சேனல்ல அலப்பறை பண்ணிட்டு இருக்கோம். பாலாஜி நடராஜன் கிராஃபிக்ஸ் மற்றும் டிசைன் பார்க்கறார்...’’ என்கிறார் சுதிர்.
ஷாலினி நியூட்டன்
|