RBI அதிகாரத்தில் கூட்டுறவு வங்கிகள்...ஏழைகளின் ரத்தத்தை உறிஞ்சுகிறது பாஜக!



ஆளும் மத்திய பாஜக அரசு நாளொரு சட்டத் திருத்தமும், பொழுதொரு நடைமுறையுமாக எல்லா துறைகளிலும் அதிரடி மாற்றங்களை நிகழ்த்திக் கொண்டிருக்கிறது.
இதில் பல சட்டங்கள் மற்றும் சட்டத் திருத்தங்கள் அவ்வப்போது கடும் விமர்சனத்துக்கும் கண்டத்துக்கும் உள்ளாவது வழக்கமாகிவிட்டது. அப்படித்தான், மத்திய அரசு சமீபத்தில் கொண்டுவந்துள்ள ‘வங்கி நடைமுறைகள் ஒழுங்கமைப்புத் திருத்தச் சட்டம் 2020’ என்ற புதிய சட்டத் திருத்தமும் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

குறிப்பாக, அந்தச் சட்டத் திருத்தத்தில் கூட்டுறவு வங்கிகளை இனி மத்திய அரசின் ரிசர்வ் வங்கிக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது என்ற திருத்தம் கடும் ஆட்சேபங்களை எழுப்பியுள்ளது. இந்தியாவின் அரசியல் - சமூக அமைப்பு என்பதே ஃபெடரல் சிஸ்டம் எனப்படும் மேலிருந்து கீழாக அதிகாரப் பரவல் என்ற கட்டுமானத்தைக் கொண்டதுதான். இதில் பலவிதமான சமூக அமைப்புகளின் அதிகாரமும் உள்ளது. இந்தப் பன்முக அதிகாரம் வண்ணமயமான ஒரு ஜனநாயக சமூகமாக இந்தியாவை வைத்துக் கொண்டிருக்கிறது.

ஆனால், இப்போதைய மத்திய அரசு எல்லா அதிகாரங்களையும் தனது கையில் வைத்திருக்க வேண்டும் என்ற மனப்பான்மை உடையதாக இருக்கிறது. இது பன்முக அதிகாரம் என்ற ஜனநாயகத்துக்கு மாற்றாக மையப்படுத்தப்பட்ட எதேச்சதிகாரத்துக்கு வழிவகுக்கிறது.மாநிலங்கள் கையில் இருக்கும் அதிகாரங்களை ஒவ்வொரு துறையாகப் பறித்தும் குறைத்தும் சட்டத்திருத்தங்களை உருவாக்கியதைப் போலவே கூட்டுறவுச் சங்கங்கள் போன்ற மக்கள் அதிகார அமைப்புகளையும் தங்கள் நேரடிக் கட்டுப்பாட்டில் கொண்டுவர முயல்கிறது.

எல்லா விஷயத்திலும் மத்திய அரசை ஆதரிக்கும் சிலர் இந்த விஷயத்திலும் ஆதரிக்கவே செய்கிறார்கள். நகரங்களிலும் பெரு நகரங்களிலும் இயங்கும் மிகப் பெரிய கூட்டுறவு வங்கிகளைத்தானே ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கிறார்கள்... எல்லா வங்கிகளையும் அல்லவே என்கிறார்கள்.

இங்குதான் நமக்கு சந்தேகமே வருகிறது.மக்கள் பணம் பத்திரமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யவே இந்த ஏற்பாடு என்று சொல்பவர்கள், அது உண்மையானால் எல்லா கூட்டுறவு வங்கிகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவர வேண்டியதுதானே..? அது ஏன் குறிப்பிட்ட சில வங்கிகளை மட்டும் குறிவைக்கிறார்கள்..?கூட்டுறவுச் சங்கங்கள் இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஏழாவது ஷெட்யூலில் உள்ள இரண்டாவது பட்டியல்படி, மாநிலங்களின் கட்டுப்பாட்டில் இயங்கி வருபவை.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் இருக்கும் மக்களிடம் சிறிது சிறிதாக நிதி வாங்கி, கூட்டுறவுச் சங்கங்கள் தொடங்கி சிறு சிறு தொழில்கள் செய்யவும், வாய்ப்பிருந்தால் அவை வங்கிகள் போல் செயல்படவும் அரசு அனுமதியளிக்கிறது. ஏழை, எளிய மக்களுக்கு இது ஒரு மிகப் பெரிய வாய்ப்பு. வங்கிகள் நெருங்கவியலாத ஊர்ப்புறங்களில் உள்ள மக்கள் தங்கள் சேமிப்பை மிச்சப்படுத்தவும், எதிர்காலத் தேவைகளுக்காக சேர்த்து வைக்கவும், நகைக்கடன் பெறவும் இந்த வங்கிகளையே பயன்படுத்து கிறார்கள்.

இன்றும் இந்தக் கூட்டுறவு வங்கிகள் மக்களின் வங்கிகளாகவே உள்ளன. இங்கு உள்ள சேமிப்புகளில் பெரும்பாலானவை விவசாயிகளுடையவை அல்லது அது சார்ந்த தொழில்களுக்கானவை. அறுவடை முடிந்த உபரியில் அடுத்த பயிருக்குத் தேவைப்படும் என்றுதான் ஒவ்வொரு விவசாயியும் பணத்தை வீட்டில் வைக்க பயந்து கூட்டுறவு வங்கிகளில் வைக்கிறார்.

அதுபோலவே விவசாயத் தேவைக்களுக்கான பயிர்க்கடன் முதல் அவசரத் தேவைக்கான நகைக்கடன் வரை இந்தக் கூட்டுறவு வங்கிகள்தான் ஏழை விவசாயிகளின் ஆபத்பாந்தவனாக இருக்கின்றன. இவை மக்களின் வங்கிகள் என்பதால் இங்கு, நகைக்கடன், பயிர்க்கடன்களுக்கு வட்டி விகிதங்கள் குறைவு. டெபாசிட் மீதான வட்டிகளுக்கு டிடிஎஸ் (TDS) பிடித்தமும் கிடையாது.

கூட்டுறவு வங்கிகள் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இல்லை என்பதால் ஒவ்வொரு வங்கியும் அந்தந்தப் பிராந்திய நலன்களுக்கு ஏற்ப இந்த வட்டிவிகிதங்களை நிர்மாணித்துக் கொள்வதற்கான சுதந்திரம் இருக்கிறது. நாளை இவை மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டுக்குச் செல்கிறபோது மையப்படுத்தப்பட்ட வட்டி விகிதங்களில் நுழையும்.

வறட்சி அதிகமான நிலப்பகுதிகளில் வசிக்கும் விளைச்சல் குறைந்த விவசாயி ஒருவரும், செழிப்பான டெல்ட்டா பகுதி விவசாயி ஒருவரும் தாங்கள் வாங்கிய கடனுக்கு ஒரே வட்டி விகிதத்தைக் கட்ட வேண்டி இருக்கும். இது எவ்வகையில் சரியான அணுகுமுறையாக இருக்கும் என்ற கேள்விக்கு மத்திய அரசின் ஆதரவாளர்கள் பதில் அளிக்காமல் மவுனம் சாதிக்கிறார்கள்.

இந்தியாவில் 1,932 கூட்டுறவு வங்கிகள் களத்தில் இருக்கின்றன. இவற்றில் 7.27 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. இதில், விவசாயிகளும் மத்தியவர்க்க குடும்பத்தவர்களும்தான் அதிகம் என்பதைச் சொல்ல வேண்டியதில்லை. மக்களிடமிருந்து பெறப்பட்ட டெபாசிட்கள் அடிப்படையில் இந்தக் கடன்கள் கொடுக்கப்பட்டிருப்பதால் இவற்றில் முறைகேடுகள் நடப்பதைத் தடுக்கவே ரிசர்வ் வங்கி வசம் இவை ஒப்படைக்கப்படுகின்றன என்கிறார்கள்.

இதற்கு உதாரணமாக, பஞ்சாப் மற்றும் மஹாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கிகளில் ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் சேமிப்பை இழந்ததால்தான் இந்த நடவடிக்கை என்றும் சொல்கிறார்கள்.

அது உண்மைதான். ஆனால், உரிய விசாரணை நடத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனைகள் வழங்கி, பணத்தை இழந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுதான் சரியான நடவடிக்கையாக இருக்க முடியுமே தவிர கூட்டுறவுச் சங்கங்களை அப்படியே மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் எடுப்பது பெரிய தீர்வாக இருக்காது.

ஏற்கெனவே இந்தியாவின் மிகப்பெரிய அரசு வங்கிகளில் நடைபெற்றிருக்கும் பல லட்சம் கோடி ஊழல்கள் எல்லாம் வெட்ட வெளிச்சமாகி இருக்கின்றன. அந்த வங்கிகள் எல்லாம் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில்தானே இருந்தன..? என்ன செய்ய முடிந்தது அவர்களால்..? உண்மையில் மத்திய ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் ஒரு வங்கி செல்வதற்கும் அங்கு நிதி மோசடிகள், ஊழல்கள் நடைபெறுவது கட்டுப்படுத்தப்படுவதற்கும் பெரிய தொடர்புகள் ஏதும் இல்லை.

அப்படி இருக்குமானால் இந்தியாவின் மிகப் பெரிய வங்கி களில் இவை தணிக்கையின் போதே கண்டுபிடிக்கப்பட்டு தடுக்கப்பட்டிருக்கும்!
பெருந்தலைகளின் ஆசீர்வாதத்தோடு நடக்கும் இத்தகைய ஊழல்களைக் களைய விஞ்ஞானபூர்வமான கண்காணிப்பு அமைப்புகளை நாம் உருவாக்க வேண்டியுள்ளது.

அதே சமயம், அதிகாரப் பரவல், ஃபெடரல் சிஸ்டம் போன்றவற்றின் அடையாளமாக இருக்கும் கூட்டுறவுச் சங்கங்களை மத்திய அரசு கையில் எடுப்பது வரவேற்கப்பட வேண்டிய முடிவுதானா என்பதை உறுதியாகச் சொல்வதற்கில்லை. கூட்டுறவு வங்கிகளில் உள்ள பணம் வெறும் பணம் அல்ல. அன்றாடம் பாடுபடும் ஏழை எளியவர்கள் ரத்தம் சிந்திச் சேர்த்த மக்களின் வியர்வை அவை!அவற்றைப் பொறுப்பாக பார்த்துக்கொள்ள வேண்டிய கடமை வங்கிகளுக்கும் உண்டு, அரசுக்கும் உண்டு.

இதை விட்டுவிட்டு மக்களின் பெயரால் அதிகார முற்றுரிமைப் போட்டியில் மத்திய அரசு இறங்குவது துரதிர்ஷ்டமானது.

இளங்கோ கிருஷ்ணன்