விவாதத்தை கிளப்பும் ஒரு புத்தகம்



சிந்தனையைக் கிளப்பக்கூடிய சில ஆழமான புத்தகங்களை எழுதி வாசகர்களிடையே நன்கு அறிமுகமானவர் சீனிவாச ராமாநுஜம்.
சமீபத்தில் இவர் மொழிபெயர்த்த ‘தி கிராக்ட் மிரர்’ (The Cracked Mirror) என்கிற ஆங்கிலப் புத்தகம் ‘விரிசல் கண்ணாடி’ என்னும் பெயரில் ‘எதிர்’ வெளியீடாக வெளிவர இருக்கிறது.

அரசியல் அறிவியல் அறிஞர் கோபால் குரு மற்றும் தத்துவவியலாளர் சுந்தர் சருக்கை ஆகிய இருவரும் இணைந்து இந்த ஆங்கிலப் புத்தகத்தை எழுதியிருக்கிறார்கள். விரிசல் கண்ணாடியின் துணைத் தலைப்பு: அனுபவம் கோட்பாடு குறித்து ஓர் இந்திய விவாதம். புத்தகத்தைப் பற்றி ராமாநுஜத்திடம் பேசினோம்.

‘‘அனுபவத்துக்கும், வாழ்வனுபவத்துக்கும், கோட்பாடு செய்வதற்கும் இடையேயான உறவு என்ன? நாம் எல்லோரும் அனுபவங்களைப் பெற்றுக் கொண்டிருக்கிறோம்; அந்த அனுபவங்களை நாம் எவ்வாறு கருத்தாக மாற்றுகிறோம்? எல்லா அனுபவங்களையும் நம்மால் கருத்தாக மாற்ற முடிகிறதா? அப்படி கருத்தாக மாற்றும்போது அது அறத்தோடு எப்படிப்பட்ட உறவைக் கொண்டிருக்கிறது..?

இப்படி ஏராளமான கேள்வி களை இந்தப் புத்தகம் நுட்பமாக விவாதிக்கிறது. இந்தியாவில் நடைமுறைப்படுத்தப்படும் சமூக அறிவியல்களில் கோட்பாட்டுத் தளத்திலும், நடைமுறைத் தளத்திலும் சமத்துவம் என்ற கொள்கை பின்பற்றப்படுகிறதா என்ற கேள்வியை கோபால் குருவின் முதல் கட்டுரை விவாதிக்கிறது.

இன்றைய சமூக அறிவியல்களில் சமத்துவக் கொள்கை பின்னுக்குத் தள்ளப்படுவதை இக்கட்டுரை விமர்சனரீதியாக அணுகுகிறது...’’ என்கிற ராமாநுஜம் இப்புத்தகத்தின் சிறப்பு பற்றி விவரித்தார்.‘‘இப்புத்தகத்தில் மொத்தம் 8 கட்டுரைகள் உள்ளன. முதல் கட்டுரையில் ஒரு விஷயத்தைப் பற்றி சமூகவியல் ரீதியில் கேள்விகேட்கும் தொனியில் எழு தியிருந்தால் அடுத்த கட்டுரை அதற்குத் தத்துவரீதியில் பதில் அளிக்கும் விதமாக இருக்கும்.

அதேமாதிரி இன்னொரு கட்டுரையில் தத்துவரீதியில் கேள்வி எழுப்பினால், அதற்கு சமூகவியல்ரீதியான பதிலாக அடுத்த கட்டுரை இருக்கும். சமூகவியல் பார்வையை கோபால் குருவும், தத்துவப் பார்வையை சுந்தர் சருக்கையும் முன்வைக்கிறார்கள். மொத்தத்தில் இந்தப் புத்தகம் தன் துணைத் தலைப்பில் உள்ளதுபோல ஒரு விவாதத்தைக் கிளப்பும் தொனியில் இருக்கும்...’’ என்கிற ராமாநுஜம், ‘‘இந்தப் புத்தகம் உண்மையில் விரிவான விவாதத்துக்கான தளத்தையும் அமைத்துக்கொடுக்கிறது...’’ என்கிறார்.

‘‘தீண்டாமை குறித்து வெறுமனே நடைமுறைரீதியான விவரிப்புகளைக் கடந்து தத்துவார்த்த வாசிப்பை முன்வைக்க சருக்கை முயல்கிறார். பொதுவாக, தீண்டாமையை நடைமுறை சார்ந்தே பேசிவருகிறோம். அகமண முறை, தீட்டு, சுத்தம் - அசுத்தம் போன்ற கருத்துகள் கொண்டே தீண்டாமை அணுகப்
படுகிறது. ஆனால், தீண்டாமை  எப்படி இவற்றின் ஊடாகவும் அதற்கு மேலாகவும் அதை வெளிப்படுத்திக்கொள்கிறது என்று கோட்பாட்டாக்கம் செய்யப்படுவது இதுவே முதலாவதாக இருக்கிறது...’’ என்கிறார் ராமாநுஜம்.

‘‘உதாரணமாக, பிற்பட்ட வகுப்புகள் அல்லது தாழ்த்தப்பட்டோரிடையே உள்ள சாதிகள் மத்தியிலேயே பல தீண்டாமைகள் இருக்கின்றன. பார்ப்பனர்
களைவிட மற்ற சாதியினருக்கு அதிகாரம் என்பது பெரிய அளவில் இல்லாவிடினும் அதிகாரங்களுக்கு ஏற்ப தீண்டாமை இருப்பதாக ஆசிரியர்கள் எடுத்துக்காட்டுகின்றனர். வெளியில் தீண்டாமை பற்றி வெகுண்டு எழும் நம்மில் பலர், வீட்டுக்குள்ளேயே தீண்டாமையைக் கடைப்பிடிப்பவர்களாக இருக்கும் போக்குகளையும் ஆசிரியர்கள் விவாதிக்கின்றனர்.

வெளியில் தொட்டால் தீட்டு என்று சொல்லும் பலர் வீட்டுக்குள்ளேயே வயது வந்தோரை அல்லது மற்ற வேறுபாடுகளுக்காகச் சிலரைத் தீண்டத்தகாதோராக பாவிப்பதில்லையா என்னும் கேள்வியையும் அவர்கள் கேட்கிறார்கள்...’’ என்று சொல்லும் ராமாநுஜம், அனுபங்களைக் கருத்தாக்கம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்கள், அதில் அறத்தின் இடம் என்ன என்ற மிக முக்கியமான கேள்வியையும் ஆசிரியர்கள் கேட்பதால் இந்தப் புத்தகம் நிச்சயம் வாசகர்களிடையே தாக்கத்தை ஏற்படுத்தும் என்று நம்புகிறார்.

டி.ரஞ்சித்