லவ் ஸ்டோரி-வாழ்க்கைக்கு புத்தி முக்கியம்...வாழ்வதற்கு மனதே முக்கியம்..!இயக்குநர் சுசி.கணேசன்

தமிழ் சினிமாவில் மிகவும் விரும்பப்படுகிற இயக்குநர், சுசி. கணேசன். ‘பைவ் ஸ்டார்’, ‘விரும்புகிறேன்’ என ஆரம்பப் படங்களிலேயே புத்துணர்ச்சியான இளமையான படங்களுக்காக கவனிக்கப்பட்டார்.
தொடர்ந்து ‘கந்தசாமி’, ‘திருட்டுப் பயலே’,  ‘திருட்டுப் பயலே 2’ என முத்திரை பதித்தவர். இப்போது மும்பையில் தங்கியிருந்து ஒரே நேரத்தில் தமிழ், இந்திப் படங்களில் கவனம் செலுத்துகிறார். அவரின் ‘வாக்கப்பட்ட பூமி’ தொடர் கிராம கலாசாரம் கூறும் துல்லிய படைப்பு.

தன் லவ் ஸ்டோரி குறித்து அவரே சொல்கிறார்...‘இப்படித்தான் நான் ஒன்பதாவது படிக்கும்போது’ என ஆரம்பித்து சொல்லத் தக்க, ஒரு குறிப்பிட்ட பெண்ணுக்காக ஏங்கித் தவித்து தேடியலைந்த தீவிரமான காதல் அனுபவம் எதுவும் எனக்குக் கிடையாது.
எனக்கு முதல் பெண்ணாக என் அம்மாவை நினைவிருக்கிறது. அம்மான்னு சொல்லும்போதே ஒரு நேசம் வரும். ‘நல்லா சாப்பிடுடா’னு அசர அசர சோறு வைச்சு சந்தோஷப்படுகிற அம்மாவைப் பார்த்தால் கோயிலுக்குள்ளே இருக்கிற தெய்வம் அப்படியே இறங்கி நம்ம பக்கத்தில் உட்கார்ந்து இருக்கிற மாதிரி தெரியும்.

நமக்குக் கூட நம்ம மனசு, உடம்பு பத்தித் தெரியாது. ஆனால், அம்மாவுக்கு அப்படியே தெரியும். உலகம் முழுக்க அம்மாக்களோட உழைப்பு, பெருந்தன்மை எல்லாம் சேர்ந்து தான் பிள்ளைகளோட வாழ்க்கையாக மாறிக்கிடக்கு.அதுக்குப் பிறகு வெளியே வந்தால், கல்லுப்பட்டியில் இருக்கிற காந்திநிநேகிதன் பள்ளி. பள்ளிக்கூடத்தை கூட்டிப் பெருக்க ஊழியர்கள் இல்லை. தன்னோட இடத்தை, தானே சுத்தப்படுத்திக்கிறதில் என்ன கேவலம் வந்திட முடியும்! அருமையாகச் செய்தோம்.

நாலு முழ சுத்தமான வேட்டி கட்டி அங்கே திரியும்போது பெண்கள் பற்றி நினைவெல்லாம் இல்லை. கொஞ்சம் கரடுமுரடாக இருக்கும்போது, சுயமரியாதை மேலோங்கி நிற்கும்போது காதலுக்கு இடமே இல்லாமல் இருந்தது. காதல் குறித்த மிகத் தீவிரமான அனுபவம் எனக்கு இல்லையென்றாலும் என்னோடு இருந்த நண்பர்களுக்கு இருந்திருக்கிறது. பஸ் ஸ்டாப்களில், அந்தப் பெண்கள் வசிக்கிற தெரு முனையில், கொடும் வெயிலில், கொட்டும் மழையில், அதிகாலைகளில், அந்திமாலைகளில் அவர்கள் தேடிப் போகும்போது பார்த்து வியந்திருக்கிறேன்.

ஆனால், பிறகு அந்தக் காதலே அவர்களுக்கு கசந்து, வெறுத்து, விலக்கி, வீட்டை உதறி வந்ததையெல்லாம் பார்த்திருக்கிறேன்.வாழ்க்கையின் சுவாரஸ்யம், அது எப்போது கிடைக்கும் என்பதில்தான் இருக்கு. நாம் காதலில் விழ முடியாது. ஆனால், கல்யாணம் செய்துகொண்டு அதற்கான சாத்தியங்களை ஆராயலாம் என முடிவு செய்கிறேன்.

‘த இந்து’ பத்திரிகையில் செய்தி வெளியிட்டு வந்தால், இறுதியில் ஒரு விண்ணப்பம் விசாரிப்புக்கு வருகிறது. ‘உங்களைச் சந்திக்கலாமா’ என கேள்வி கேட்டு ரெஸிடென்ஸி டவரில் அந்தப் பெண், அவள் பெற்றோர் வந்து பேசுகிறார்கள்.

அவர் எம்பிஏ படித்து விட்டு பெரிய கார்ப்பரேட்டில் பெயர் சொல்லும் பதவியில் இருக்கிறார். நான் ஏற்ற இறக்கத்தில், அவரை விட சற்றே குறைவான இடம்தான். ஆச்சரியம் தாங்காமல் ‘எதற்காக என்னைப் பார்க்க வந்தீங்க’ என்கிறேன். அவளுக்கு திகைப்பு. ‘என்ன இப்படி கேட்கிறார்’ என்பது போல் ஆளுக்கு ஆள் முகம் பார்க்கிறார்கள்.

‘நல்ல உத்தியோகத்தில் இருக்கிறீர்கள். அதன் சம்பந்தமாக, தொடர்பாக ஒருவர் உங்களுக்கு அமைந்தால் அதுவே உங்களுக்கு வசதி. நானிருக்கிற சினிமா ஏற்றத்தாழ்வு கொண்டது. என்னை ஏன் பார்க்க நினைத்தீர்கள்...’ என்கிறேன். பின்னாளில் ‘என்னை உனக்குப் பிடித்த கணம் எது’ என அவளைக் கேட்டபோது ‘நீங்கள் நேரடியாகக் கேட்ட அந்தக் கேள்வி’ என்கிறாள். இவரையே நாம் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என அந்தக் கணமே நினைத்து விட்டேன் என்கிறாள் என் மஞ்சரி. அதுதான் அவளது பெயர்.  

‘எனக்கு உங்கள் மேல் நம்பிக்கையிருந்தது. பிடிச்சிருந்தது’ என்று சிம்பிளாக சொல்கிறாள். எங்கள் திருமணம் முடிவாகி நடுவில் 25 நாட்களுக்கு மேல் நாட்கள் இருக்கிறது. அவளிடமிருந்து ஒரு போன் வராதா… அவரிடமிருந்து ஒரு போன் வராதா என அவளுக்கும் எனக்கும் இருந்த நாட்கள் அருமையானவை.

ஒவ்வொரு நாளும் புதிதாக இருப்பதும், கரிசனமும் அன்பும் சேர்ந்து வருவதும், அந்த காதலின் அருகாமையும், நேசமும் காலமெல்லாம் அப்படியே கிடக்கிறது.கல்யாணம் முடிஞ்சதும் நாங்க உட்கார்ந்து பேசினோம். எந்த ஒரு மனத்தாங்கல் வந்தாலும், வார்த்தைகள் தவறிப் போய் விழுந்தாலும், எதற்கோ சொன்ன வார்த்தை எப்படியோ பொருள் கொண்டாலும், எதையும் அன்றைய இரவுக்கு மேலே கொண்டு செல்லக் கூடாது என சேர்ந்து முடிவெடுத்தோம்.

இன்று வரைக்கும் அப்படித்தான். ஒவ்வொரு நாளும் படுக்கைக்கு போறதுக்கு முன்னாடி எல்லாத்தையும் சரி பண்ணிட்டு அருமையா உறங்கப் போகிறோம். பூனைக்குட்டியின் மெல்லிய உரசல்கூட இரண்டு பேருக்கும் இடையில் இருந்ததில்லை. அவங்க தன் அன்பால் என்னை தோற்கடிக்கிற இடங்கள் அனேகம்.

கல்யாணம் ஆன புதுசில… நாலைஞ்சு நாளுக்குள்ளே ஒரு புதுப்படம் ‘சர்க்கரை’னு ஷூட்டிங் போறேன். இரண்டு நாள் கழிச்சு அந்தப் படம்
அப்படியே டிராப் ஆகுது. என்னோட மஞ்சரி, அப்பா அம்மாவோட தாம்பரம் பகுதிக்கு வந்து ஷூட்டிங் பார்க்க வர்றாங்க. எப்படி எனக்கு இருக்கும் பாருங்க…  

இந்த தேசம் இருக்கே, வந்த பொண்ணு வந்த வாய்ப்பை பறிச்சிடுச்சு பார்த்தியான்னு சொல்லி வைக்குமே... அதற்காகவே அவளை சமாதானப்
படுத்துறேன். சொல்லி வைத்த மாதிரி நாலைந்து வருடங்களாகக் கொடுக்காமல் இருந்த மாநில விருதுகளை ‘விரும்புகிறேன்’, ‘பைவ்
ஸ்டார்’க்கு வழங்குகிறார்கள்.

அவளை அழைத்துப் போய் ‘எல்லாம் உன்னால் வந்தது. நீ வந்த நேரமே’ என்கிறேன். புரிந்து என் தோள் மேல் சாய்கிற பக்குவம் மஞ்சரிக்கு உண்டு.
சின்ன கவலையில் இருந்தால் கூட, என்னை Reset பண்ணி என்னை இயக்கியிருக்கிறாள். எனக்கான சோஷியல் மீடியாவின் அனைத்து கடவுச் சொற்களும் அவளிடம் இருக்கின்றன. அவளுடையதும் அப்படியே. ஒளிவு மறைவே இல்லை. இந்த நெகிழ்ச்சிதான் எனக்கான வரம்.

காதல் எதையும் தனக்கென்று சுருக்கி வைத்துக் கொள்வதன்று! உள்ளங்கையில் வைத்து இறுக்கமாக மூடிக்கொண்டு ‘தப்ப முடியாது’ என்பதல்ல. நாம் நேசிப்பதை அதன் குணமும், போக்கும் மாறாதபடி வாழவிடுவதுதான். ஒருவரை ஏன் உங்களுக்குப் பிடிக்கிறது? உன்னுடைய விருப்பங்களும், அவளுடைய விருப்பங்களும் ஒன்றாகும்போது. வாழ்க்கைக்கு புத்தி முக்கியம். வாழ்வதற்கு மனதே அவசியம். நாங்களும் அவ்விதமே!

நா.கதிர்வேலன்