உலகை உலுக்கிய உயிர்கொல்லி நோய்கள்!மினி தொடர் 15

மதராஸுக்கு வந்தது பிளேக் பாஸ்போர்ட்!


பம்பாய் மாகாணத்தில் முதன் முதலாக பிளேக் தொற்று 1896ம் ஆண்டு கண்டறியப்பட்டது. அதற்கடுத்த இரண்டே ஆண்டுகளில் பிளேக் தமிழகத்துக்கு வந்துவிட்டது. அன்றைய பெயர் மெட்ராஸ் மாகாணம். இதில், இன்றைய ஆந்திரப்பிரதேசம், கர்நாடகத்தின் ஒரு பகுதி, கேரளத்தின் ஒரு பகுதி, ஒட்டுமொத்த தமிழ்நாடு ஆகிய நிலப்பகுதிகள் அடக்கம்.

தமிழகத்தில் முதன் முதலாக பிளேக் எங்கே வந்தது என்று பார்த்தால் நமக்கு ஆச்சர்யமாக இருக்கும். கடற்கரை நகரான சென்னையாகத்தான் இருக்கும் என்று பெரும்பாலானவர்கள் நினைக்கக்கூடும். ஆனால், தமிழகத்தில் பிளேக் முதன் முதலாக சேலத்தைத்தான் தாக்கியது. கிடைத்திருக்கும் ஆவணங்களின்படி 1898ம் ஆண்டு சேலத்தில்தான் முதல் பிளேக் தொற்று உறுதிசெய்யப்பட்டது.

வீட்டில் உத்திரத்திலிருந்து ஓர் எலி கீழே விழுந்து கரகரவென சுற்றும். கொஞ்ச நேரத்தில் இறந்துபோகும். தூக்கிக்கொண்டு போய் குப்பையில் வீசிவிட்டு வந்தால் இரண்டே நாட்களில் வீட்டில் ஒவ்வொருவராக நோயில் விழுவார்கள். கால் மூட்டுகள், கை மூட்டுகள், அக்குளில் பெரிய பெரிய கொப்புளங்கள் வந்து உடலில் நீர் வற்றி இறப்பார்கள்.
வீட்டில் ஒவ்வொருவராய் வேட்டையாடிய பின் பிளேக் அடுத்த வீட்டில் நுழையும்.
சங்கிலித் தொடர்போல் ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு வீதியாக, ஒவ்வொரு ஊராக பிளேக் பரவிக்கொண்டே போனது.

மக்கள் கொத்துக் கொத்தாக செத்தார்கள். இறந்தவர்களை எடுத்து அடக்கம் செய்துவிட்டு வந்தால், மறுநாளே சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்களில் சிலர் சவமாகச் சரிந்தார்கள். இதனால், இறந்தவர்களை எடுத்து அடக்கம் செய்யவும் அஞ்சினார்கள்.

ஊரெங்கும் பிணவாடை வீசியது. மக்கள் சிரிப்பை மறந்து சவக்களை கொண்டனர். யாருக்கு யார் ஆறுதல் சொல்வதெனத் தெரியவில்லை. இயலாமையிலும் துயரத்திலும் மனஉளைச்சலிலும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டார்கள்.   

இறந்த உறவினர்களை அப்படியே விட்டுவிட்டு, போட்டது போட்டபடி மக்கள் ஊர்களை விட்டு ஓடினார்கள். உயிர் பிழைக்க வேண்டும் என்று பலர் ஊர்களைவிட்டு காடுகளுக்குள் புகுந்துகொண்டார்கள். அங்கு தாமரைத் தண்டையும், மூங்கில் அரிசியையும் தின்றார்கள். கிடைத்ததை எல்லாம் உணவாக்கிக் கொண்டார்கள்.

காடுகளைவிட்டு பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு இறங்கி வந்து நாகரிகம் கண்ட மூத்த தமிழ்க்குடி எலிக்கு பயந்து காட்டுக்குள்ளேயே மீண்டும் பதுங்கியது. எலிக்கு பயந்து வீட்டைக் கொளுத்துவதா என்று இன்று சிலர் கேட்கிறார்கள் அல்லவா? அந்நாட்களில் அது மிக இயல்பாக நடந்தது. எலிகளை வேட்டையாடி அழிக்க முடியாதபோது வீடுகளைக் கொளுத்தினார்கள். அமிலங்களை ஊற்றி எலிகளை அழித்தார்கள். இதற்காக பேரல் பேரலாக கந்தக அமிலத்தை வெள்ளை அரசு அனுப்பிவைத்தது.

1911 - 12ம் ஆண்டில் மட்டும் சென்னை மாகாணத்தில் எழுபத்திரண்டாயிரம் பேர் இறந்ததாக ஆவணம் சொல்கிறது. ஆனால், நிஜமான எண்ணிக்கை பல லட்சங்களாக இருக்கலாம் என்றே வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள். சேலத்தில் மட்டும் பதிமூன்றாயிரத்து பனிரெண்டு பேர் இறந்திருக்கிறார்கள்.

கோவை, நீலகிரி, மதுரை, சென்னை நகரம் ஆகியவற்றிலும் பிளேக் ருத்ர தாண்டவமாடியது. கோவையில் முதன் முதலாக 1899ம் ஆண்டு பிளேக் கண்டறியப்பட்டது. கோவையில் சூலூர், வெள்ளலூர், பேரூர், இருகூர், பாப்பநாயக்கன்பாளையம் போன்ற பகுதிகளில் பிளேக் கடுமையாகப் பரவியது.
இதனால் கோவையில் பனிரெண்டாயிரத்து ஆறு பேர் இறந்ததாக ஆவணங்கள் சொல்கின்றன. இந்த எண்ணிக்கையும் குறைவான மதிப்பீடுதான் என்கிறார்கள்.

வெள்ளையர்கள் தங்களின் கோடை கால மலை வாசஸ்தலமாக நீலகிரியைப் பயன்படுத்தியதால் நீலகிரி வரை ரயில் ஏறி எலிகள் சென்றன. இதனால்,
நீலகிரியில் வாழ்ந்த பழங்குடி மக்கள் உட்பட பலரும் பிளேக்கில் பலியானார்கள். 1903ம் ஆண்டு ஊட்டிக்குள் நுழைந்த பிளேக் ஆயிரத்து நானூற்று மூன்று பேரை காவு வாங்கியது.

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை பிளேக்கால் மயானமானது. அங்கு 1905ம் ஆண்டு நுழைந்த பிளேக் 847 பேரைக் கொன்றது.
தமிழகத்திலேயே மிகமிகக் குறைந்த எண்ணிக்கையாக சென்னையில் 78 பேர் பலியானார்கள். இதற்குப் பின்னால் அரசின் கடுமையான நடவடிக்கைகள் காரணமாக இருந்தன.

பிளேக் பரவத் தொடங்கியதுமே மெட்ராஸ் மாகாணம் கடுமையான கொள்ளை நோய் தடுப்புச் சட்டத்தை 1902ம் ஆண்டு அமலாக்கியது. அதனால்தான் தலைநகரில் கட்டுப்படுத்த முடிந்தது என்கிறார்கள். ஆனால், அதை மீறியும் பிளேக் அங்கு நுழைந்தது. முதன் முதலாக வடசென்னையில் உள்ள பரச்சேரி என்ற இடத்தில் கண்டறியப்பட்டது. பிஜீத் தீவுகளுக்கு பணியாட்களை அனுப்பும் கடவுச்சீட்டு அலுவலகத்தின் முன்பு வீசப்பட்ட ஒரு செத்த எலிதான் அங்கு பிளேக்கை பரப்பியது. டி.எஸ்.ரோஸ் என்ற சுகாதார அதிகாரி இதைப் பதிவு செய்திருக்கிறார்.

உடனடியாக அந்தப் பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பாக வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டார்கள். அரசு ஊழியர்கள் எலி வேட்டையில் இறங்கினார்கள். தீவைத்து அழித்தார்கள். ஆனால், அப்படியும் ஒருசில எலிகள் தப்பித்தன. அவை, காசிமேட்டில் நுழைந்து நரவேட்டையில் இறங்கின. காசிமேடுதான் சென்னையில் பிளேக்கால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதி.

இன்றைய கொரோனா போலவே அன்றும் கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுத்தது. பிளேக் இருப்பதாக சந்தேகம் ஏற்பட்டால் பத்து நாட்கள் அவரை மருத்துவமனையில் குவாரண்டைன் செய்து கண்காணிப்பில் வைத்திருப்பது, பிளேக்குக்கு என தனியாக கேம்ப்புகள் அமைப்பது, ஒவ்வொரு வீடாகப் போய் பிளேக் பரிசோதனை செய்வது ஆகிய பணிகள் முடுக்கிவிடப்பட்டன.

பிளேக் இன்ஸ்பெக்டர் என்ற பதவி உருவாக்கப்பட்டது. அவர் ஒவ்வொரு கிராமத்துக்கும் பிளேக் ரெஜிஸ்டர் ஒன்றை பராமரித்தார். அதில், பிளேக் தாக்கியவர் விவரம், மரணித்த தகவல் ஆகியவை இருந்தன.சில சமயங்களில் ஒட்டுமொத்த கிராமம் அல்லது காலனியுமே பிளேக்கால் குடிமாற வேண்டிய சூழல் உருவானது. அரசு இதற்கென பிளேக் பாஸ்போர்ட் என்ற ஆணையைக் கொண்டு வந்தது. குடிபெயர வேண்டிய ஒவ்வொருவருக்கும் இந்த பிளேக் பாஸ்போர்ட் வழங்கப்பட்டது.

சென்னை துறைமுகம், பெரம்பூர் ஆகியவை பிளேக்குக்கான பரிசோதனை மற்றும் பிளேக் பாஸ்போர்ட் வழங்கும் நிலையங்களாக இயங்கின. இங்கு பாஸ்போர்ட் வாங்கிக்கொண்டால் பத்து நாட்கள் குவாரண்டைனில் இருக்க வேண்டும்.

ஒருவழியாக தடுப்பு மருந்து சென்னைக்கு வந்தது. தமிழகம் பிழைத்தது. பல லட்சம் பேர் இறந்திருந்தாலும் எஞ்சியவர்கள் நிம்மதியடைந்தார்கள்.
மெட்ராஸ் மருத்துவக் கல்லூரி, கிங் இன்ஸ்டிட்யூட் ஆகிய நிறுவனங்கள் பிளேக்குக்கு எதிரான போராட்டத்தில் முன்னணியில் இருந்தன.
1904 - 05ம் ஆண்டுகளில் மட்டும் சுமார் பனிரெண்டு லட்சம் பேருக்கு பிளேக் தடுப்பு மருந்துகள் தரப்பட்டது அக்காலத்தில் பெரும் சாதனை.

ஆனால், பிளேக்குக்கு எதிரான வெற்றி என்பது வெறும் தடுப்பு மருந்தால் வந்தது அல்ல. அதற்குப் பின் பல நூறு சுகாதாரத்துறை ஊழியர்கள், தன்னார்வலர்களின் தன்னலம் கருதாத உழைப்பு இருக்கிறது. அவர்கள் வீதி வீதியாக அலைந்து திரிந்து பிளேக் நோயாளிகளை அடையாளம் கண்டார்கள். தனிமைப்படுத்தினார்கள். சிகிச்சை கொடுத்தார்கள். வணங்குதலுக்குரிய மகத்தான பணி அது. எல்லாவற்றுக்கும் மேல் மக்கள் மனம் உருக கண்ணீர் மல்க பிளேக் மாரியம்மன் முன்பு செய்த பிரார்த்தனை பலித்தது என்றுதான் சொல்ல வேண்டும். இயற்கை சூழல்கள் மாறி பிளேக் கிருமிகள் அழிந்தும் போயின.

(உயிர்க் கொல்லிகளுக்கு எதிரான போர் தொடரும்)

 - இளங்கோ கிருஷ்ணன்