அணையா அடுப்பு - 10அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

இல்வாழ்க்கை தடைக்கல்லா?

சிதம்பர மாமுனியின் வற்புறுத்தலுக்காகத்தான் திருமணம் செய்து கொண்டார் இராமலிங்கம்.யார் இந்த சிதம்பர மாமுனி?
திருவொற்றியூர் நந்தி ஆசிரமத்தின் தலைவர்.

சிறுவயதில் அடிக்கடி நண்பர்களோடு இராமலிங்கம் திருவொற்றியூர் செல்வார் இல்லையா?ஒருமுறை அங்கு திருவிழா நடந்தது.சாதாரண நாட்களிலேயே அங்குதான் இருப்பார்.திருவிழா என்றால் சொல்லவா வேண்டும்?

திருவிழாக் கூட்டத்தில் உடன் வந்த நண்பர் ஒருவரைக் காணவில்லை.அவரை திருவொற்றியூர் முழுக்க தேடித்தேடிக் களைத்து விட்டார் இராமலிங்கம்.
அந்த தேடுதல் முயற்சியில் நந்தி ஓடை அருகே இருந்த அந்த ஆசிரமத்தைக் கண்டார்.நண்பரின் பெயரைச் சொல்லி குரல் கொடுத்துக் கொண்டே ஆசிரமத்துக்குள் நுழைந்தார்.அங்கே ஏராளமான துறவிகள் இருந்தனர்.

வேதம் கற்பித்தல், மந்திரங்கள் ஓதுதல் என்று நிறையப் பணிகள் சுறுசுறுப்பாக நடந்து கொண்டிருந்தன.அந்தத் துறவிகளின் தலைவர்தான் சிதம்பர மாமுனிவர்.இளைஞரான இராமலிங்கத்துக்கு தன் வாழ்க்கையின் முக்கியமான நபர் ஒருவரை சந்திப்பதான உள்ளுணர்வு ஏற்பட்டது.தேடிவந்த நண்பனை மறந்து முனிவரையே பார்த்துக் கொண்டிருந்தார்.சற்று நேரம் கழித்து அவர் காலில் விழுந்து வணங்கினார்.

“தம்பி, நீ யார்?” முனிவர் கேட்டார்.
“நான் இராமலிங்கம். பிரசங்கியாக இருக்கிறேன்…”
“நல்லது. இங்கே என்ன செய்து கொண்டிருக்கிறாய்?”
“இன்றுதான் இந்த ஆசிரமத்தைப் பார்த்தேன். இங்கிருக்கும் துறவிகளைப் போல நானும் இங்கேயே வசிக்க ஆசைப்படுகிறேன்…”
“துறவியாக விரும்புகிறாயா?”

“சரியாக சொல்லத் தெரியவில்லை. இங்கு இருக்க விரும்பு கிறேன்…”
“நீ இங்கே தங்கலாம்...”
“மகிழ்ச்சி சாமி…”
“ஆனால்..?”
“சொல்லுங்கள் சாமி…”
“இங்கே தங்க விரும்புபவர்கள் பிச்சையெடுத்து உண்ணவேண்டும். நீ எடுத்த பிச்சையை உன்னோடு தங்கி
யிருப்பவர்களுக்கும் பகிர்ந்து தரவேண்டும்…”

இராமலிங்கத்துக்கு ‘தான்’ என்கிற அகங்காரம் இருக்கிறதா என்பதை அறிய கொக்கி போட்டார் முனிவர்.
“உங்கள் நிபந்தனையை மகிழ்வோடு ஏற்றுக்கொள்கிறேன் சாமி...” தன்னடக்கமாக பதிலளித்தார் இராமலிங்கம்.
“உனக்குப் பிரச்னையில்லை என்பது மட்டுமே போதாது…”
“பிறகு?”

“உன் பெற்றோர் ஒப்புக்கொள்ள வேண்டுமே?”
“எனக்கு தந்தை இல்லை. தாய் மட்டும்தான். அண்ணன் இருக்கிறார். அண்ணியார் இருக்கிறார்கள். அவர்கள் நிச்சயமாக நான் பிச்சையெடுத்து வாழ்வதற்கு ஒப்புக்கொள்ள மாட்டார்கள் சாமி!” வேதனையோடு சொன்னார் இராமலிங்கம்.
“உனக்காக ஆசிரம விதிகளைத் தளர்த்திக்கொள்ள முடியாதே...”

“பசியோடு இருக்கும் புலியின் குகைக்குள் சென்றுவிட்டு உயிரோடு வா என்பதைப் போல சொல்கிறீர்களே சாமி...”“பிரசங்கி ஆயிற்றே? பேச்சிலேயே மடக்குகிறாய்…” சிரித்த முனிவர், தன்னுடைய ஆசிரமத்துக்கு எப்போது வேண்டுமானாலும் வரலாம், எவ்வளவு நாட்கள் வேண்டுமானாலும் தங்கலாம் என்று அனுமதி அளித்தார்.

அதிலிருந்து திருவொற்றியூர் செல்லும்போதெல்லாம் நந்தி ஆசிரமத்துக்கும் சென்று வருவார்.பல நாட்கள் அங்கேயே தங்கியிருந்து நிறைய பாடல்களை இயற்றியிருக்கிறார்.தமிழுக்கு சிறப்பு சேர்க்கும் இலக்கியங்களை இராமலிங்கம் படைக்க தன்னுடைய ஆசிரமம் ஒரு களமாக அமைந்ததில் சிதம்பர மாமுனிகளுக்கும் மகிழ்ச்சி.இந்த சிதம்பர மாமுனிவரிடம்தான் இராமலிங்கத்தின் கல்யாணப் பஞ்சாயத்து வந்தது.

இராமலிங்கத்தின் அன்னையும், அண்ணனும் ஆசிரமம் வந்து முனிவரைப் பார்த்தார்கள்.“சாமி, இராமலிங்கத்துக்கு இருபத்தேழு வயது ஆகிவிட்டது. எங்கள் சொந்த பந்தத்தில் இந்த வயதில் இருக்கும் ஆண்களெல்லாம் குழந்தையே பெற்று விட்டார்கள். இவனோ கோயில், குளம் என்று சுற்றிக் கொண்டிருக்கிறான். கால்கட்டு போட்டு விட்டால் என் கடமையை நிறைவேற்றிய திருப்தி இருக்கும்...” என்று முறையிட்டார் அம்மா
சின்னம்மாள்.

இராமலிங்கமும் அப்போது அங்கேதான் இருந்தார்.“இராமலிங்கம்... நீ துறவியல்ல. இல்வாழ்க்கையில் ஈடுபடுவதில் உனக்கு என்ன தயக்கம்?” என்று
கேட்டார்.“இன்று வரை நான் துறவியல்ல. ஆயினும், என் ஞானவாழ்க்கை தொடங்குவதற்கு மோகம் ஒரு தொல்லையாக இருக்கும். மோகத்தை துறந்திருக்கிறேன். மோகம் இல்லாதவனுக்கு எதற்கு இல்வாழ்க்கை?” என்று பதிலளித்தார்.“இறைவனுக்கே இல்லறம் உண்டே இராமலிங்கம்! ஆண், பெண் என்று இரு இனத்தை இறைவன் படைத்தது எதற்காக? இருவரும் இணைந்து வாழத்தானே? அதை ஏன் மறுக்கிறாய்?”

“சிவன் பாதி சக்தி பாதி என்பது தத்துவம். தாங்கள் அறியாததா? என்னை திருமணத்துக்கு வற்புறுத்த அதையெல்லாம் தாங்களே சொல்லலாமா?”
முனிவரும், இராமலிங்கமும் தத்துவார்த்தமாக விவாதித்துக் கொண்டிருக்க அம்மா ஏதும் புரியாமல் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்.
“சாமி, என் பிள்ளை கல்யாணம் பண்ணிக்கணும். அது மட்டும்தான் என் கோரிக்கை...” என்று மீண்டும் வலியுறுத்தினார்.
இராமலிங்கத்தின் அண்ணனும் முனிவரிடம் இதையே திருப்பிச் சொன்னார்.

“பெற்றெடுத்த அன்னை, வளர்த்த அண்ணன் இருவர் மனமும் புண்படலாமா இராமலிங்கம்?”
“அதற்காக நான் ஒரு பெண்ணின் வாழ்க்கையை பாழ்படுத்த முடியுமா சாமி?” இராமலிங்கமும் விடுவதாக இல்லை.கடைசி அஸ்திரத்தை எய்தார் முனிவர். “இராமலிங்கம், எல்லாமே இறைவன் செயல் என்று நம்புகிறோம். உன் வீட்டில் திருமண ஏற்பாடு செய்யட்டும். இறைவனுக்கு உன் திருமணத்தில் விருப்பமில்லை என்றால் அவனே தடுத்து விடட்டும்…”இதற்கு என்ன பதில் சொல்வ தென்று இராமலிங்கத்துக்குத் தெரியவில்லை.
அரைமனதாக ஒப்புக் கொண்டார்.

இறைவன் தன் திருமணத்தை தடுத்து நிறுத்திவிடுவார் என்றும் நம்பினார்.ம்ஹூம்.இறைவனுக்கும் இராமலிங்கத்தை மணக்கோலத்தில் காண ஆசை போலிருக்கிறது.இராமலிங்கத்தின் அக்கா உண்ணாமுலை அம்மாளின் மகள் தனக்கோட்டிதான் மணப்பெண்.எளிய முறையில் சிறப்பாக நடந்தது திருமணம்.முதலிரவிலேயே கூட தனக்கோட்டி அம்மையாருக்கு திருவாசகம் படிக்க சொல்லிக் கொடுத்தாராம் இராமலிங்கம்.

எட்டு ஆண்டுகள் அவர் இல்வாழ்க்கையில் ஈடுபட்டிருக்கிறார்.ஞானவாழ்க்கைக்கு இல்வாழ்க்கை எவ்வகையிலும் தடையாக இருக்காது என்பதை அனுபவத்தில் உணர்ந்தார்.தன்னுடைய முப்பத்தைந்தாவது வயதில் முழுக்க ஞானவாழ்வை நாடி சென்னையைத் துறக்கும்போது அவரால் எவருக்கும் எந்த மனக்குறையும் ஏற்படவில்லை.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்