கொரோனா வெள்ளத்தில் நீந்தும் சிறு குறு வணிகர்கள்!



லாக்டவுன் தொடங்கியபோது ‘அப்பாடா... ரெஸ்ட் எடுக்கலாம்...’ என்று நினைத்த மக்கள் இப்பொழுது எதிர்காலம் குறித்து கவலைப்பட ஆரம்பித்திருக்கிறார்கள்.குறிப்பாக சிறு குறு வணிகர்கள். அன்றாடம் உணவருந்த நாள்தோறும் உழைத்தே ஆகவேண்டும் என்ற நிலையில் இருக்கும் இவர்கள் இந்த ஊரடங்கு காலத்தில் எப்படி மாற்றி யோசித்து தங்கள் இருப்பை தக்க வைத்துக் கொள்ள முயல்கிறார்கள்..?
‘‘வேற வழி... வாழ்ந்தாகணுமே தம்பி...’’ புன்னகைக்கும் ஜமுனா அக்கா, சென்னை தி.நகரில் முன்பு பூ வியாபாரம் செய்தவர். இப்பொழுது காய்கறி விற்கிறார்.

‘‘இதுபோல ஒரு கஷ்டமான காலம் வந்ததில்ல தம்பி.... கொரோனா எப்ப குறையும்னு தினமும் ஆத்தாகிட்ட வேண்டிட்டு இருக்கேன்.
எனக்கு ரெண்டு பசங்க. பூ வித்துதான் அவங்களை படிக்க வைக்கறேன். திடீர்னு ஊரடங்குனு சொல்லி வீட்லயே இருக்கச் சொன்னதும் திகைச்சுப் போயிட்டேன். தினசரி உழைச்சாதான் சோறு. அப்படியிருக்கச் சொல்ல வாரக் கணக்குல எப்படி வூட்ல உட்கார்றது?

பூ கட்டி கொண்டு போனா யாரும் வாங்கல. ‘பூவெல்லாம் விக்கக் கூடாது’னு போலீஸ்காரங்க கண்டிச்சாங்க. என்ன செய்யலாம்னு யோசிச்சேன். காய்கறி எல்லாம் விற்கலாம்னு தெரிஞ்சதும் பூக்கூடைல இப்ப காய்கறிங்க விற்க ஆரம்பிச்சுட்டேன்.பழைய நிலைக்கு எப்ப திரும்புவோம்னு தெரியலை... ஆனா, இந்த கொரோனா காலத்துலயே வாழ்ந்துட்டோம்... இயல்பு நிலை வந்ததும் வாழ மாட்டோமா என்ன..?’’ புன்னகைக்கும் ஜமுனா அக்காவின் மனநிலையையே கிண்டியில் மாஸ்க் விற்கும் ரமேஷ் எதிரொலிக்கிறார்.  

“பி.காம் படிச்சிருக்கேன் சார். தனியார் கோல்ட் ட்ரேடிங் கம்பெனில அக்கவுண்டண்டா இருக்கேன். ஊரடங்கு அறிவிச்சதும் வீட்லயே இருங்கனு ஆபீஸ்ல இருந்து கால் பண்ணி சொன்னாங்க. கொஞ்ச நாள் போனதும் சம்பளம் தர முடியாத சூழல்னு கையை விரிச்சாங்க.

என்னடா செய்யனு தலைல கையை வைச்சுட்டு உட்காரலை சார்... மாஸ்க் தேவைப்படும்னு புரிஞ்சு நானே மாஸ்க் தைக்க ஆரம்பிச்சுட்டேன்! தைச்சதை வைச்சு கிண்டி தெருவுல கடைய போட்டேன். கொஞ்ச நேரத்துல ஒரு போலீஸ்காரர் வேகமா வந்தார். அப்ப காவல்துறை கடுமையா நடந்துகிட்ட வீடியோ எல்லாம் பிரேக்கிங் நியூஸா ஒளிபரப்பாகிட்டிருந்த நேரம்.

பயந்து போய் ‘என்ன சார்’னு கேட்டேன். ‘ஒரு மாஸ்க் கொடு தம்பி’னு வாங்கினவர் கைல ரூ.20ஐ திணிச்சுட்டுப் போனார்! தூய்மைப் பணியாளர்களுக்கு இலவசமா கொடுக்கறேன்.  முதல் ஊரடங்கு அப்ப போலீஸ்காரங்கதான் நிறைய மாஸ்க் வாங்கினாங்க. அவங்கள்ல பாதி பேருக்கு இப்ப கொரோனா தொற்றுனு கேள்விப்படறப்ப கஷ்டமா இருக்கு...’’ வருத்தப்படும் ரமேஷிடம், ஐந்து ரூபாயில் இருந்து ரூ.300 வரை இப்பொழுது மாஸ்க் இருக்கிறது. ‘‘சாப்பாட்டுக்கு பிரச்னை இல்லாம வருமானம் பார்க்கறேன்...’’ நிம்மதியாக சொல்கிறார் ரமேஷ்.
 
‘‘நிம்மதியா இருக்கேனானு கேட்டா பதில் சொல்லத் தெரியலை... ஆனா, வாழ முடியும் என்கிற நம்பிக்கை பலப்பட்டிருக்கு...’’ என்று ஆரம்பிக்கும் கண்ணன், வடசென்னையை சேர்ந்த ஒரு சுமை ஆட்டோ ஓட்டுநர். ‘‘சிமெண்ட், பர்னிச்சர் பொருட்கள எல்லாம் ஆட்டோல கொண்டு போயிட்டு இருந்தேன். இப்ப மொத்த விலைக்கு காய்கறிகளை வாங்கி விற்கறேன்.

என் ஆட்டோல ஸ்பீக்கர் பொருத்தியிருக்கேன். அதுல ரெக்கார்ட் செஞ்ச வாய்ஸை அடுக்குமாடி குடியிருப்பு வாசல்ல ஒலிக்க விடறேன். உடனே மக்கள் இறங்கி வந்து எங்கிட்ட காய்கறி வாங்கறாங்க.  இந்த ஐடியா தோணி அதை செயல்படுத்த நான் இறங்கினப்ப என் சக ஆட்டோ நண்பர்கள், ‘இதென்ன கிராமமா... இப்படி ஆட்டோல வித்தா யாரும் வாங்க மாட்டாங்க’னு சொன்னாங்க.

எனக்கு நம்பிக்கை இருந்தது. உள்ளுணர்வு சொன்னதை மதிச்சேன்... களத்துல இறங்கினேன்... இப்ப என்னை டிஸ்கரேஜ் செஞ்ச ஆட்டோ நண்பர்களும் காய்கறி விற்க ஆரம்பிச்சிருக்காங்க!’’ சிரிக்கும் கண்ணன் தொடக்கத்தில் பயந்தாராம்.‘‘அனுபவம் இல்லாத தொழில்... மக்கள் பேரம் பேசி நஷ்டமடைய வைப்பாங்கனு நினைச்சேன்... ஆனா, நியாயமான விலையை நான் சொல்றதால மக்கள் எதுவும் பேசாம வாங்கறாங்க.

கோயம்பேடுல கொரோனா தொற்று அதிகரிக்கறதுக்கு முன்னாடி இருந்தே செங்கல்பட்டுகிட்ட நெடுஞ்சாலைல அதிகாலைல போயிடுவேன். தென் மாவட்ட விவசாயிங்க கிட்டயிருந்து நேரடியா வாங்கறேன். சென்னை புறநகர் பகுதிகள்ல விற்கறேன்...’’ என்கிறார் கண்ணன்.

‘‘சொந்த ஊர் திருச்சி பக்கம் டால்மியாபுரம். புரோக்கர் வேலை செஞ்சுட்டு இருந்தேன்... வருமானம் இல்ல. வறுமையை சமாளிக்க முடியல. சென்னை போனா பொழச்சுக்கலாம்னு என் டூ வீலர்ல மூணு மாசத்துக்கு முன்னாடி சென்னை வந்தேன்...’’ என்று ஆரம்பிக்கும் ரவி, தேங்காய் வியாபாரம் செய்து வருகிறார்.

‘‘சென்னைல நான் கால் வைச்ச ரெண்டாம் நாள் ஊரடங்கை அறிவிச்சுட்டாங்க! சில நாட்கள் பொறுத்துப் பார்த்தேன்... ஊரடங்கு முடியறா மாதிரி தெரியலை... சாப்பாட்டுக்கு காசு வேண்டாமா..? இருந்த பணத்துல ஒரு மூட்டை தேங்காய் வாங்கி என் பைக்குலயே தெருத் தெருவா விற்க ஆரம்பிச்சுட்டேன்! இப்ப பிழைக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்திருக்கு...’’ என்கிறார் ரவி.

‘‘எல்லார் மாதிரியும் ஊரடங்கு அறிவிச்சதும் வீட்ல முடங்கிக் கிடந்தேன்... டைலர் தொழில்... துணி தைச்சாதான் வருமானம்... என்னடா செய்யனு மண்டையை பிய்ச்சுகிட்டப்ப ஒரு பையன் வந்தான்...’’ என்று ஆரம்பித்த டேனியல், மயிலாப்பூரில் டைலராக இருக்கிறார்.
‘‘ஊரடங்குக்கு முன்னாடி அந்தப் பையன் எங்கிட்ட சட்டை தைக்க துணி கொடுத்திருந்தான். லாக்டவுன் சமயத்துல என்னைத் தேடி வந்தவன், ‘எங்கயும் மாஸ்க் கிடைக்கலண்ணே... சட்டை தைக்க நான் துணி கொடுத்திருந்தேன் இல்லையா..? அதுல ஒரு பிட்டுல மாஸ்க் தைச்சு கொடுண் ணே’னு சொன்னான்.

கப்புனு ஸ்பார்க் அடிச்சுது. மாஸ்க் தைக்கற தொழிலை வீட்ல இருந்தே தொடங்கிட்டேன்! ஒரு கட்டத்துல மாஸ்க் தைக்க துணியே இல்ல. கடைல போய் வாங்கலாம்னா எந்த ஜவுளிக்கடையும் திறக்கலை.ரொம்ப சிரமப்பட்டு நண்பரோட கடையைத் திறந்து எனக்கு தேவையான துணிகளை அவர்கிட்ட இருந்து வாங்கினேன்.இப்ப 10 ரூபாய்ல இருந்து 30 ரூபா வரை மாஸ்க் தைக்கறேன். இதுவரை 10 ஆயிரம் மாஸ்க் தைச்சு வித்திருக்கேன்.

சீக்கிரமா கொரோனா முடியணும்... ஸ்கூல் யூனிஃபார்ம், தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் துணிகளை தைக்க ஆரம்பிக்கணும்... நாங்க அன்றாடங்காய்ச்சிங்க... கடவுள் இதைப் புரிஞ்சுகிட்டு நல்லதை செய்யணும்...’’ என்கிறார் டேனியல். கொரோனா தாக்குதலைத் தவிர்க்க தூய்மையாக இருக்க வேண்டும்... வெளி இடங்களில் அதிக நேரம் இருக்கக்கூடாது... என்பதெல்லாம் இவர்களுக்கும் தெரிந்திருக்கிறது. ‘‘அதுக்காக வெளில அலையாம இருக்க முடியுமா..? கால் வயிறு கஞ்சியாவது எங்க குடும்பம் குடிக்கணும்னா வெளில நாங்க சுத்திதான் ஆகணும்...’’ என்கிறார்கள் ஒரே குரலில்!    

செய்தி: திலீபன் புகழ்

படங்கள்: ஆர்.சி.எஸ்