கொரோனா சிகிச்சைகள்... மக்களின் உயிருடன் விளையாடும் அரசு!
உண்மையில் கொரோனா வைரஸ் தொற்றை ஒரு நோய் என்று தமிழக அரசு நம்ப மறுக்கிறது. இதனால்தான் ஏகப்பட்ட குளறுபடிகள். அத்துடன் கொரோனாவை ஒழிக்க தனக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று அரசு கண்ணுக்குத் தெரியாத பல்வேறு விதிகளை விதித்து வருகிறது. இதனால் அரசு மருத்துவ மனைகளும், கார்ப்பரேட் மருத்துவமனைகளுமாக சேர்ந்து கொண்டுகொரோனா தொற்றுள்ளவர்களையும், அவர்களது உறவுகளையும் சுற்றத்தார்களையும் ஏதோ தீவிரவாதிகள் போல கையாள்கின்றனர்.
இது கொரோனாவைவிட கொடுமையானது என்பதை நிரூபிக்கிறது நம் நண்பர் ஒருவரின் கதை.நண்பரின் அப்பாவுக்கு வயது 70. சர்க்கரை நோயாளி. கடந்த மாதம் அவருக்கு படபடப்பும் வேர்வையும் மிதமிஞ்சியிருக்கிறது. ஒரு தனியார் கிளினிக்குக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள். நெஞ்சில் சளி இருப்பதால் மூச்சில் பிரச்னை என்று மருத்துவர் ஆக்சிஜன் சிகிச்சை கொடுத்திருக்கிறார்.
மூன்று நாளாகியும் முன்னேற்றம் இல்லை. தலைமை மருத்துவர் சென்னைக்கு அருகே இருந்த ஒரு பிரபல கார்ப்பரேட் மருத்துவமனையின் பெயரைச் சொல்லி அங்கே கொண்டுபோக சிபாரிசு செய்திருக்கிறார். இங்கே மட்டும் மூன்று நாள் செலவு 25,000 ரூபாய். அடுத்து அந்த கார்ப்பரேட் மருத்துவமனையில் நடந்த சம்பவங்கள்...
கொரோனா சோதனைக்குப்பிறகுதான் வேறு எந்த சிகிச் சையும் அங்கே செய்யமுடியும். சாதாரண சிகிச்சைக்கு ஒருநாளில் 75 ஆயிரம் ரூபாய் என்றால் கொரோனாவுக்கு இருமடங்கு ஆகும் என்றும் சில பேப்பர்களைக் காட்டி கையெழுத்து வாங்கியிருக்கிறார்கள்.
நோயாளிக்கு பென்ஷன் மருத்துவக் காப்பீடு உள்ளது என நண்பர் சொல்ல, அதில் பணம் வராது; கையில் இருந்துதான் கட்ட நேரிடும் என பீதியைக் கிளப்பியிருக்கிறார்கள். பயந்துபோன நண்பர் தன் தங்கை அப்பாவுக்காக செலுத்தியிருந்த ஒரு தனியார் மருத்துவக் காப்பீட்டைக் காட்டியபோது அதை ஏற்றுக்கொண்டார்கள்.
அடுத்தநாள் அப்பாவின் நிலைமையை மருத்துவமனை ஊழியர்களிடம் கேட்டிருக்கிறார் அந்த நண்பர். க்ரிட்டிக்கல் கண்டிஷன் என்று முதல்நாள் சொன்ன மாதிரியே சொல்லியிருக்கிறார்கள். ஒருவேளை நம்மிடம் கேட்காமல் வென்டிலேட்டரை பயன்படுத்தி பணத்தை புடுங்கிவிடுவார்களோ என்று நினைத்த நண்பர், அப்பா பிழைக்க எவ்வளவு சாத்தியம் என்று கேட்டிருக்கிறார். வெறும் 5 சதவீதம் என்று சொல்லியிருக்கிறார்கள்.
மறுநாள் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்று மொட்டையான ஒரு ரிசல்ட்டை காட்டியிருக்கிறார்கள். இது உண்மையான ரிசல்ட்தானா என்று நண்பருக்கு இன்றுவரை சந்தேகம். அப்பாவின் உடல்நிலையில் முன்னேற்றம் இல்லாத நிலையில், மேலும் கொரோனா தொற்று என்றால் அந்த மருத்துவமனையால் அப்பாவை தேற்றமுடியுமா என்ற சந்தேகம் நண்பருக்கு.
மீண்டும் அப்பாவை வென்டிலேட்டரில் வைத்துக் காப்பாற்றக்கூடிய வாய்ப்புகள் எப்படி என்று கேட்க, அதே பல்லவியை ஊழியர்கள் பாடியிருக்கிறார்கள். உஷாரான நண்பர் தன்னிடம் கேட்காமல் அப்பாவை வென்டிலேட்டரில் வைக்கக்கூடாது என்று சொல்லி தனக்குத் தெரிந்த ஊடக நண்பர்களைத் தொடர்புகொண்டிருக்கிறார்.
அரசு மருத்துவமனைகளை முயற்சிக்கலாம் என்று அவர்கள் ஆலோசனை சொல்லவே நண்பர் இந்தத் தகவலை மருத்துவமனைக்கு சொல்லியிருக்கிறார். மருத்துவர்கள், இங்கேயே சிகிச்சை எடுக்கும்படி பல்வேறு காரணங்களைச் சொல்லி வற்புறுத்தியிருக்கிறார்கள்.
ஆனால், நண்பர் பிடிவாதமாக அரசு மருத்துவமனைக்கு ஷிப்ட் செய்ய முனைப்பு காட்டியபோது நிர்வாகம் அடுத்த மிரட்டலுக்குச் சென்றது. நோயாளியை ஆக்சிஜனுடன் ஆம்புலன்சில் ஏற்றுவது கடினம். அப்படி ஏற்றினால் போகும் வழியிலேயே மரணம் நிகழ்ந்தால் மருத்துவமனைக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்று சொல்லியிருக்கிறார்கள்.
ஆனால், நண்பர் உறுதியாக இருந்ததால் பிறகு வென்டிலேட்டரை மாட்டக்கூடியதற்கான வசதியாக தொண்டையில் குழாய் பதித்து விடுவிக்க ஒப்புக்கொண்டார்கள். ஆனால் இதற்கும் திகில் கிளப்பினார்கள். பிறகு அதை செய்துவிட்டு மருத்துவமனையின் ஆலோசனைக்கு எதிராக நோயாளியை இடப்பெயர்வு செய்கிறார்கள் என்று நண்பரிடம் எழுதி வாங்கிக்கொண்டு அடுத்த நாள் டிஸ்சார்ஜ் செய்திருக்கிறார்கள். மூன்று நாள் செலவு மட்டுமே 2.5 லட்சம் ரூபாய்.
ஆனால் டிஸ்சார்ஜ் செய்த அடுத்தநாளும் பெரிய போராட்டம். சேர்க்கப்போகும் மருத்துவமனையின் தலைமை மருத்துவரின் ஒப்புதல், அரசு மருத்துவமனையில் காலி படுக்கை என நண்பரும் ஊடகத்தினரும் சல்லடை போட்டதில் சென்னைக்குப் புறநகரில் இருந்த ஓர் அரசு மருத்துவமனையில் இடம் கிடைத்தது. அடுத்து அந்த அரசு மருத்துவமனையில் நடந்த கூத்து இன்னும் அச்சம் தருவதாக உள்ளது.
அரசு மருத்துவமனையில் பயிற்சி டாக்டர்களும், நர்சுகளும் இருந்தார்கள். நோயாளியைப் பார்த்துக்கொள்ள ஒரு அட்டண்டர் கட்டாயம் இருக்கவேண்டும் என்று நர்ஸ் பிடிவாதம் பிடித்தார். தான், சென்னையிலிருந்து வருவதாகவும், 60 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அந்த மருத்துவமனையில் தங்குமிடமில்லை என்றும் நண்பர் வாதிட்டிருக்கிறார்.
இருந்தாலும் நர்ஸ் அசையவில்லை. நண்பரும் அந்த மருத்துவமனையை ஒட்டிய பகுதிகளில் ஏதாவது ரூம் கிடைக்குமா என்று லாட்ஜுகளை தேடியிருக்கிறார். லாட்ஜ் ஏதும் இல்லை. இதை நர்சிடம் சொல்ல, மற்றவர்களைப் போல மருத்துவமனை வளாகத்திலேயே தங்கலாமே என்று நெருக்கடி கொடுத்திருக்கிறார்.
அரசு மக்கள் கூடவேண்டாம் என்று சொல்கிறது... ஆனால், நீங்கள் மருத்துவமனையிலேயே தங்க சொல்வது என்ன நியாயம் என்று நண்பர் வாதிட்டிருக்கிறார். அடுத்த அஸ்திரமாக நோயாளியைத் துடைக்கவேண்டும் என்றும் அதற்கு நண்பர் உதவ வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தியிருக்கிறார். கொரோனா வார்டில் நர்ஸ்களும் டாக்டர்களும் பாதுகாப்பு உடையுடன் இருக்க, தான் எந்த பாதுகாப்பு உடையிலும் இல்லாமல் அதைச் செய்வது சரியாகுமா என்று நண்பர் கேட்டிருக்கிறார்.
வேண்டுமென்றால் அதே உடையை நண்பருக்கும் தருவதாக ஆசை காட்டியிருக்கிறார் நர்ஸ். நண்பர் மசியவில்லை. அங்கிருந்து நகர்ந்து, பத்திரிகையாளர்களிடம் இந்த விஷயத்தைப் பற்றி ஃபோனில் ஆலோசனை கேட்க, அவர்கள் தலைமை மருத்துவருக்கு இந்த நிலையை மெசேஜ் மூலம் விளக்கியிருக்கிறார்கள்.
செவிலியர்கள் ஒப்பந்தக்கூலிகளாக வேலை செய்வதால் அவர்களுடன் தங்களுக்கே வேலை செய்வது கடினமாக இருப்பதாக தலைமை மருத்துவர் சொல்ல, நண்பரும் அன்றைய தினம் அந்த இடத்தைவிட்டு அகன்றிருக்கிறார். ஆனால், இரண்டு நாள் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றவர் மூன்றாம் நாள் முன்னேற்றம் இல்லாமல் இறக்கவே நான்காம் நாள் அவரைப் புதைப்பதே பெரும் பாடு ஆகிவிட்டது நண்பருக்கு.
ஒருவர் கொரோனாவில் இறந்தால் நோயாளி வசித்த இடத்தில் இருக்கும் நகராட்சியின் சுகாதார இன்ஸ்பெக்டர்தான் எல்லாவற்றையும் கவனிக்கவேண்டும். இன்ஸ்பெக்டர் சென்னையிலிருந்து புறநகருக்கு காரில் வந்த வாடகை, புதைக்க குழி தோண்டிய செலவு, புனிதச் சடங்குகள் ஏதுமில்லாத அடக்கம் என்று இதற்கான செலவுகள் மட்டும் 37 ஆயிரம் ரூபாய்.
வீட்டில் இருந்தோரை மூன்று நாட்களுக்குப் பிறகுதான் நகராட்சி ஆட்கள் விசாரித்தார்கள். வீட்டிலிருந்த அனைவருக்குமே கோவிட் நெகட்டிவ். நண்பருக்கு இருக்கும் முக்கியமான கேள்வி, வெளியே எங்கும் செல்லாத அப்பாவுக்கு எப்படி கோவிட் பாசிட்டிவ் வந்தது அல்லது காற்று, ஏதாவது பொருட்கள் மூலமாக தொற்றிக்கொண்டிருக்குமோ என்ற கவலை அல்ல.
இதுவரை சளி, இருமல், காய்ச்சல் என்று வீட்டு மருந்தையே எடுத்து சமாளிக்ககூடியதாக இருந்த ஒரு நோயை இப்படி ஒரு கண்ணுக்குத் தெரியாத சங்கிலியால் கட்டி அதை ஒரு மர்ம தேசமாக மாற்றி பணமும், உளைச்சலையும் அலைச்சலையும் மரியாதையை இழக்கும்படியான ஒரு விளைவுக்கான பொறுப்பு யார் என்பதே!ஒவ்வொரு முறையும் தவறுகள் நிகழும்போது அரசு மக்களைக் கைகாட்டுகிறது. உண்மையில் இந்த நோயை எதிர்கொள்ள மக்களுக்கும், சாதாரண மருத்துவர்களுக்கும் அதிகாரம் இருந்தால் இந்த நோயை இலகுவாக சமாளிக்கலாம் என்பதைத்தான் இந்தியாவின் சில மாநிலங்களும், சில நாடுகளும் நமக்கு பாடமாகக் காட்டுகின்றன.
இதை தமிழக அரசு உடனடியாக உணர்ந்துகொண்டு அடுத்தகட்ட நடவடிக்கைகளில் இறங்கவில்லை என்றால் இதற்கான விலையை மக்கள் மட்டுமல்ல அரசியல்வாதிகளும் கொடுக்க நேரிடும்.கொரோனா சிகிச்சை செலவை நோயாளி அல்ல... அரசே ஏற்க வேண்டும்!
‘‘இந்த நோயை மாவட்ட ரீதியாக கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளில் அரசு இயங்கினால் பலன் கிடைக்கும். மாவட்டங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் தொடங்கி பல்வேறு மருத்துவமனைகள் உண்டு. இவற்றையெல்லாம் இந்த நோய்க்கு எதிராக முழுமூச்சுடன் பயன்படுத்தலாம். ஆனால், கொரோனா நோயை ஒரே மாதிரியாக அரசு பார்ப்பதால்தான் இந்த படுக்கைப் பிரச்னை எழுகிறது.
கொரோனா நோயாளிகளை 4 வகையாக பிரித்துக்கொள்ளலாம். முதலாவதாக வெறும் காய்ச்சல், இருமல் இருந்து கோவிட் நெகட்டிவாக இருந்தால் வீட்டில் வைத்தே அவர்களை குணமாக்கமுடியும். இதை ஒரு போன் மூலமே செய்யமுடியும். இரண்டாவதாக ஒருவருக்கு இருமலும், காய்ச்சலும் இருந்து கோவிட் பாசிட்டிவாக இருந்தால் அவரை மருத்துவமனையில் அட்மிட் செய்து மாத்திரை, மருந்து கொடுத்து மூன்று நாட்களில் உடல் நிலையைப் பார்த்து வீட்டுக்கு அனுப்புவது.
மூன்றாவதாக ஒருவருக்கு மூச்சுத்திணறல் இருந்து கோவிட் பாசிட்டிவும் இருந்தால் மருத்துவமனைக்கு கொண்டுவந்து அவரது ஆக்சிஜன் லெவல், நுரையீரலின் எக்ஸ்ரே படங்களை வைத்து ஆக்சிஜன் சிகிச்சை அளிப்பது. ஒருவேளை அவரது மூச்சில் முன்னேற்றம் இருந்தால் தகுந்த மாத்திரைகளைக் கொடுத்து அவரை வீட்டுக்கு அனுப்பலாம்.
நான்காவதாக மூச்சுத்திணறலில் முன்னேற்றம் இல்லாவிடில் வென்டிலேட்டரில் வைத்து சிகிச்சை அளிக்கலாம். இப்படிப் பிரித்துச் செய்தாலே படுக்கை வசதி இல்லை என்ற பிரச்சனை வராது.ஒருவேளை அரசுக்கு இந்த 4 வகையான நோயாளிகளையும் கவனிக்க மருத்துவர்களும் ஊழியர்களும் வசதி களும் இல்லாவிடில் தனியார் மருத்துவமனைகளை அரசு இதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
இது பேரிடர் என்பதால் ஒரு பூகம்பத்தைப் போல கொரோனாவையும் கருதி அரசு நோயாளிகளுக்கு இலவசமாக சிகிச்சை அளிக்க வேண்டும். இலவசம் என்றால் கூட அதுவும் மக்களிடமிருந்து வசூலிக்கும் வரியிலிருந்தே செலவு செய்கிறது என்பதை அரசு உணர்ந்து செயல்படவேண்டும். இதைத்தான் தமிழக அரசு மருத்துமனைகள் செய்கின்றன. ஆனால், இதிலும் ஏகப்பட்ட செலவுகள் மக்களுக்கு. தனியாரில் சிகிச்சை மேற்கொண்டால் அரசு மருத்துவமனைகளில் ஒரு நோயாளிக்கு எவ்வளவு செலவு ஆகுமோ அந்த செலவை தனியாருக்கு அரசு வழங்க முன்வரவேண்டும்.
ஆனால், தமிழக அரசோ தனியார் மருத்துவமனை சிகிச்சைக்கும் நோயாளிதான் செலவு செய்யவேண்டும் என்று நிர்ப்பந்திப்பது அரசின் அலட்சியத்தைத்தான் காண்பிக்கிறது...’’ என்கிறார் வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் வைராலஜி என்னும் நுண்ணியல் கிருமி துறையில் தலைவராக இருந்து ஓய்வு பெற்ற மருத்துவரான ஜேக்கப் ஜான்.
கார்ப்பரேட் மருத்துவமனை படுக்கைகளில் பாதியை அரசு ஏற்க வேண்டும்!கொரோனா அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறியுள்ளவர்களுக்கு 5 ஆயிரம் முதல் 7500 ரூபாய் வரையும், தீவிர அறிகுறியுள்ளவர்களுக்கு 15 ஆயிரம் வரைக்கும் ஒருநாளில் தனியார் மருத்துவமனைகள் வசூலிக்கலாம் என தனியார் மருத்துவமனைகளின் கொள்ளைக் கட்டணத்துக்கு எதிராக அரசு விதி வகுத்திருக்கிறது.
இதன்படி பார்த்தால்கூட ஒரு தீவிர கொரோனா நோயாளி 17 நாள் சிகிச்சை எடுத்தால் கூட 2.55 லட்சம் ரூபாய் செலவாகும். தனியார் இரண்டு மூன்று நாட்களில் இந்த இரண்டு, மூன்று லட்ச ரூபாயை வசூலித்திட அரசின் இந்தக் கட்டுப்பாட்டுக்கு தனியார் மசிவார்களா என்று ‘மக்கள் நல்வாழ்வுக்கான மருத்துவர் அரங்கம்’ எனும் அமைப்பின் மருத்துவரான காசியிடம் கேட்டோம்...
‘‘தனியார் மருத்துவமனைகளில் மூன்று வகை உண்டு. சிறு மருத்துவமனைகள், நடுத்தர மருத்துவமனைகள் மற்றும் கார்ப்பரேட் மருத்துவமனைகள். முதலிரண்டு மருத்துவமனைகளுக்கும் கொரோனா சிகிச்சைக்கான அனுமதியில்லை. காரணம் கொரோனா சிகிச்சைக்கான வசதிகள் அங்கே இருக்காது என அரசு நினைப்பது. இப்போதைக்கு கார்ப்பரேட் மருத்துவமனைகளுக்குத்தான் அனுமதி உண்டு. கார்ப்பரேட் மருத்துவமனைகள் சாதாரண நோய்களுக்கே உயர் கட்டணத்தில்தான் சிகிச்சை கொடுத்து வந்தார்கள். இப்போது அசாதாரணமான கொரோனா நோய் வந்திருக்கிறது. ஆகவே இதைச் சமாளிக்க ஏற்கனவே இருந்த கட்டணங்களோடு கூடுதலாக வசூலிக்கிறார்கள்.
இவைதான் புகார்களாக வருகிறது. இன்றைய தேதியில் மருத்துவர்களுக்கான சம்பளக் குறைவும், ஊழியர்கள் வேலையிழப்பு, கொரோனா சிகிச்சைக்கான கருவிகளின் அதிகபட்ச விலை என்று கார்ப்பரேட் மருத்துவமனைகளும் திண்டாடுகின்றன. இந்த நிலையில் அரசு நிர்ணயித்த கட்டணத்தில் மீண்டும் நஷ்டத்தை சந்திக்க கார்ப்பரேட் மருத்துவமனைகள் முன்வருவார்களா என்பது சந்தேகம்தான்.
இதற்கான தீர்வு கார்ப்பரேட் மருத்துவமனைகள் கொரோனாவுக்காக ஒதுக்கும் படுக்கைகளில் பாதியளவுக்காவது அரசு எடுத்துக்கொள்ள வேண்டும். தனியார் மருத்துவர்கள், ஊழியர்களுடன் அரசே நோயாளிகளை அனுமதிக்க வேண்டும். அரசு சொல்லும் கட்டணத்தில் கொஞ்சம் சலுகை விலையில் தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை செய்ய வேண்டும். இந்த ஏற்பாடுகளை செய்ய அரசு முயற்சித்தால்தான் சமாளிக்க முடியும்...’’ என்கிறார் காசி. மூன்றாம் நாள் முன்னேற்றம் இல்லாமல் இறக்கவே நான்காம் நாள் அவரை புதைப்பதே பெரும் பாடு ஆகிவிட்டது நண்பருக்கு.
ஒவ்வொரு முறையும் தவறுகள் நிகழும்போது அரசு மக்களைக் கை காட்டுகிறது
கொரோனா நோயை ஒரே மாதிரியாக அரசு பார்ப்பதால்தான் இந்த படுக்கைப் பிரச்னை எழுகிறது.
கார்ப்பரேட் மருத்துவமனைகள் ஒதுக்கும் படுக்கைகளில் பாதியை அரசு எடுக்கவேண்டும்.
டி.ரஞ்சித்
|