பிஞ்சுகள்



வடக்கே ரயில் நிலைய மேடையில்
பசி கொன்ற தாயின் போர்வையை
இழுத்து எழுப்பும் குழந்தையை
தொலைக் காட்சியில் கண்ட தாத்தா
கண்கள் நடுங்க கண்ணீர் தெறித்தழுதார்

கைக்குழந்தை போலவே இருக்குதென
சுரைக்காயை வாழ்நாளில் சமைக்காத
காலம் பறித்துச் சென்ற துணைக் கிழவியின்

நினைவில் தடுமாறித் தவித்தார்
தொட்டிச் செடிகளில் நின்று குலுங்கும்
துளசி தூதுவளை ஓமவல்லிகளின்
கொழுந்திலைகளை பறித்துவிடுவதை
நடுங்கும் விரல்களில் அறவே தவிர்த்தார்

வாசலில் செம்பருத்தி, மல்லி, கனகாம்பர
மொக்குகள் பறிப்பதையும் விட்டுவிட்டார்
கறிவேப்பிலையில் மிகமுதிய இலைகளைத் தேடினார்

பிஞ்சுக் கத்தரி எனும் சொல் மறந்தார்
காலம் பறித்திராத வெள்ளரிப் பிஞ்சுகள்
கனவுகளில் தோட்டமென விரிய விழிக்கிறார்
போனமாதம் பிறந்த முதல் பேத்தியைப்
பார்த்ததில் இருந்து தாத்தா இப்படி பிஞ்சானார்.

பாதசாரி