அணையா அடுப்பு-4



அருட்பெருஞ்ஜோதி
அருட்பெருஞ்ஜோதி
தனிப்பெருங்கருணை
அருட்பெருஞ்ஜோதி

அண்ணியே அன்னை!

பிற்பகல் வேளை. சபாபதி பிள்ளை சற்று நேரம் கண்ணுறங்குவார். அச்சமயத்தில்தான் கொல்லைப்புறமாக வந்து மதிய உணவு அருந்துவது இராமலிங்கத்தின் வழக்கம்.வழக்கம்போல வந்தார். அவருக்கு உணவு வைக்கப்பட்டது.எதுவுமே பேசாமல் அண்ணியார் விருந்தோம்பல் செய்துகொண்டிருப்பதை உணர்ந்தார் இராமலிங்கம்.எப்போதும் அன்பாகப் பேசி, தலை கோதியவாறே தன்னை பசியாற்றும் அன்னையாக வாழும் அண்ணி ஏதோ மனவருத்தத்தில் இருக்கிறாரே?“அண்ணி, நான் ஏதாவது தவறு செய்கிறேன் என்று நினைக்கிறீர்களா?”

உடைந்துபோனார் அண்ணி பாப்பாத்தி அம்மாள். “தம்பி, வீட்டின் நல்லது கெட்டதில் கூட நீ பங்கேற்க முடியாமல் போனதுக்காக எனக்கும், அத்தைக்கும் ரொம்ப வருத்தம்...” சொல்லிவிட்டு விசும்பினார்.அண்ணியின் கண்ணீர் அவரது தன்மான அணையை உடைத்தது.
“நீங்கள் என்னை வயிற்றில் சுமக்காத அன்னை. நீங்கள் என்ன ஆணையிட்டாலும் அதைச் செய்து முடிப்பது என் கடமை. சொல்லுங்கள். உங்கள் வருத்தம் தீர நான் என்ன செய்ய வேண்டும்?”“நான் என்ன கேட்கப் போகிறேன் தம்பி? உன் அண்ணன் உன் நல்லதுக்குதானே கல்வி கற்கச் சொல்கிறார்? அதைச் செய்ய உனக்கு என்ன கஷ்டம்?”

“அண்ணியின் ஆணை. சிரமேற்கொண்டு செய்கிறேன். ஆனால்…!”
“என்ன ஆனால்?”“எல்லோரும் கற்றுக்கொள்ளும் ஏட்டுக் கல்வி எனக்கு ஆகாது…”பாப்பாத்தியம்மாளுக்கு கல்வி பற்றியெல்லாம் பெரியதாகத் தெரியாது. ஆனால், தன் மைத்துனர் இறங்கி வருகிறார் என்பது புரிந்தது.“சொல்லு தம்பி. உனக்கு என்ன மாதிரி கல்வி வேண்டும் என்று உங்கள் அண்ணனிடம் பேசுகிறேன்...”“எனக்கு நானே ஆசிரியன். நான் என்ன கற்கவேண்டும் என்று விரும்புகிறேனோ, அதை நானே கற்றுக் கொள்வேன்...”
“ஆசிரியரின்றி, சிறு குழந்தையான நீ எப்படி கற்றுக் கொள்ள முடியும்?”“பறவை எப்படி பறக்கிறது? பறப்பதற்கு எந்த ஆசிரியர் சொல்லிக் கொடுக்கிறார்?”தத்துவார்த்தமாக சிறு குழந்தை இராமலிங்கம் பேசுவது அண்ணிக்கு புரியவில்லை. எனினும் இராமலிங்கம் தங்களோடு இருந்தால் சரியென்கிற முடிவுக்கு வந்தார். தன் கணவரிடம் பேசினார்.

தம்பியிடம் கோபம் குறைந்திருந்த அண்ணன் சபாபதியும் ஒப்புக் கொண்டார்.இராமலிங்கம் கேட்டுக் கொண்டதின்படி சென்னை ஏழுகிணறு பகுதியில் (அப்போது பெத்தநாயக்கன் பேட்டை என்று குறிப்பிடுகிறார்கள்) அவர்கள் வசித்த வீராசாமிப் பிள்ளைத் தெருவின் 38ம் இலக்க வீட்டின் மாடியறை தயார் செய்யப்படுகிறது.அவர் கேட்டிருந்த ஏடுகள் வாங்கித் தரப்பட்டன.

ஒரு பெரிய கண்ணாடி கேட்டார்.ஏனென்று கேட்காமல் சபாபதி பிள்ளை வாங்கிக் கொடுத்தார்.தினமும் காலையில் அந்த அறைக்குள் சென்று கதவை மூடிக் கொள்வார் இராமலிங்கம்.அவர் ஏதோ வாசிக்கும் குரல் மட்டும் அவ்வப்போது கேட்கும்.தங்கள் கட்டுப்பாட்டில் தங்கள் பிள்ளை வந்துவிட்ட மகிழ்ச்சி அண்ணனுக்கும், அண்ணிக்கும்.அப்போது சபாபதி பிள்ளைக்கு ஏராளமான பிரசங்க வாய்ப்பு வந்துகொண்டிருந்தது.
கிட்டத்தட்ட தினமும் ஏதோ ஒரு மேடையில் பிரசங்கம்செய்துகொண்டிருப்பார்.

அப்போதெல்லாம் ஏதேனும் நூலில் இருந்து, தங்கள் கருத்துக்கு ஆதரவாக மேற்கோள் காட்டி பிரசங்கிப்பார்கள்.பிரசங்கம் செய்பவர் ஒவ்வொரு முறையும் நூலைப் புரட்டி செய்யுளையோ, பாக்களையோ வாசிக்க முடியாது.பெரும்பாலும் தேவாரம், திருவாசகத்திலிருந்து மறைகளை வாசிக்க வேண்டும். இதற்கென அவருக்கொரு உதவியாளர் இருப்பார். இந்த வேலையைச் செய்பவரை ஏடு வாசிப்பாளர் என்பார்கள்.

துல்லியமான பெரும் ஒலியோடு கூடிய உச்சரிப்பு. தமிழில் நல்ல புலமை. இத்தன்மை வாய்த்தவர்களே ஏடு வாசிப்பாளர்களாக முடியும்.
இன்றைய காலக்கட்டத்தில் தொலைக்காட்சிகளில் செய்தி வாசிப்பவர்களின் முன்னோடிகளே இந்த ஏடு வாசிப்பாளர்கள்தான்.
சபாபதி பிள்ளைக்கு அம்மாதிரி ஏடு வாசிப்பாளராக இருந்தவர் ஒரு பெண்.பணிக்காக பெண்கள் வீட்டுப்படி தாண்ட முடியாத கட்டுப்பாடுகள் இருந்த அக்காலத்தில், சபாபதி பிள்ளை சற்றே முற்போக்காளராக இருந்திருக்கிறார். தன்னுடைய உறவினர் பெண் ஒருவர் இளம் வயதிலேயே விதவையாகி விட்டார்.

அவருக்கு பொருள்ரீதியாக உதவும் பொருட்டு, தமிழ் வாசிக்கத் தெரிந்திருந்தமையால் அவரையே தன்னுடைய ஏடு வாசிப்பாளராக நியமித்துக் கொண்டார். விதவை என்பதால் பிரசங்கத்தைப் பார்க்க வரும் பார்வையாளர்கள் சிலர் அபசகுனமாக அதை எடுத்துக் கொண்டார்கள்.
விதவைகள் எதிர்ப்படக் கூடாது என்கிற அளவுக்கு அக்காலத்தில் மூடநம்பிக்கை கோலோச்சிக் கொண்டிருந்தது.

எனவே பிரசங்கம் நடக்கும் மேடைகளில் இந்த ஏடு வாசிப்பாளருக்காக தனி திரை போட்டார் சபாபதி பிள்ளை. அவருடைய குரல் மட்டும்தான் பார்வையாளர்களுக்குக் கேட்குமே தவிர, அவர் பெண்ணா, சிறுபிள்ளையா, விதவையா என்பதெல்லாம் பார்வைக்குத் தெரியாது.இவ்வாறு ஏடு வாசித்துக் கொண்டிருந்த பெண், திடீரென நோய்வாய்ப்பட்டார். சபாபதி பிள்ளையின் பிரசங்கங்களில் ஏடு வாசிப்பு இல்லாமல் நிகழ்ச்சி களை கட்டாது.ஒப்புக்கொண்ட நிகழ்ச்சிகளை நடத்த முடியாமல் சிரமப்பட்டார்.வாட்டத்துடன் இருந்த கணவரின் முகத்தை பாப்பாத்தி அம்மாள் கண்டார். என்ன விஷயமென்று விசாரித்தார்.

“நிறைய நிகழ்ச்சிகள் இருக்கின்றன. ஏடு வாசிக்கும் அம்மாள் கடுமையான நோயில் படுக்கையில் இருக்கிறாள். நான் மட்டும் தனியாகச் சென்று பிரசங்கித்தால் சரி வராது… வேறு ஏடு வாசிப்பாளரை இப்போது திடீரென எங்கே போய்த் தேடுவேன்?”

“கையில் வெண்ணெய் இருக்க நெய்க்கு அலைகிறீர்களே?”
“என்ன சொல்கிறாய் பாப்பாத்தி?”“இராமலிங்கம்…”

இப்பெயரை உச்சரித்தபோதே மாடியறைக் கதவு திறந்தது.படியிறங்கிக் கொண்டிருந்தார் இராமலிங்கம்.மாலைச் சூரியன் அவருக்குப் பின்னால் எழுப்பிய ஒளியால் அவரது தலைக்குப் பின்னே ஒளிவட்டம் தெரிந்தது.அண்ணன் சபாபதிக்கு பாலமுருகனே தரையிறங்கி வருவதைப் போலத் தோன்றியது.

(அடுப்பு எரியும்)

தமிழ்மொழி

ஓவியம்: ஸ்யாம்