உயிரோடு நான் இருப்பேன்...



சென்ற வாரத் தொடர்ச்சி...

விபா கார் கதவைத் திறந்து விட்டாள். அவன் இக்னிஷனை உசுப்பிவிட்டுக் கொஞ்ச நேரம் முயற்சி செய்தான். கார் வீம்புடன் ஒரு உம்மணாமூஞ்சியைப் போல கமுக்கமாய் இருந்தது. மானின் மேல் மோதி குலுங்கி நின்றதில் காரின் உள் பாகங்களுக்கு ஏதோ ஆகியிருக்க வேண்டும்.

அவளைத் திரும்பிப் பார்த்தான்: “டூல்ஸ் வேணும். கராஜில் இருக்கு. போய் எடுத்துட்டு வரலாமா?’’

“நான் இங்கே இருக்கேன். நீங்க போய் எடுத்துட்டு வாங்க...” என்றாள் விபா.அவன் மறுத்தான்: “இப்பதானே சொன்னேன்? கார் ஸ்டார்ட் ஆகலை. ஹீட்டர் ஆன் பண்ண முடியாது. அடிபட்டு செத்துக் கிடக்கும் மானை அப்புறப்படுத்தி, காரை ஸ்டார்ட் பண்ணி, நிறைய வேலை இருக்கு. ரொம்ப நேரம் ஆயிடும். நீ ரொம்ப லைட் ஜாக்கெட் போட்டிருக்கே. இந்தக் குளிரெல்லாம் தாங்க முடியாது. மைனஸ் செவன் டிகிரீஸ்...”

“என் ஃபோன்ல சிக்னல் இல்லை. உங்ககிட்ட போன் இருக்கா? நான் ட்ரிப்பிள் ஏ சர்வீஸ் கூப்பிடறேன். அவங்க காரை டோ பண்ணி கொண்டு போய் விடுவாங்க...”உதட்டைப் பிதுக்கினான்: “இந்த ஏரியா பூராவும் செல்போன் எடுக்காது. வீட்ல லேண்ட்லைன் இருக்கு. ஆனா, நேத்து அடிச்ச புயல்காத்துல இன்டர்நெட், போன் லைன் எல்லாமே கட்டாயிருச்சு. சரி பண்ண ரெண்டு நாள் ஆகும்...”அவன் சொல்கிற எல்லாவற்றையும் அவளால் நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

காரில்தானே ஆபீஸ் வந்து போகிறோம் என்கிற தைரியத்தில் லேசான ஓவர் கோட் ஜாக்கெட் மட்டுமே அணிந்திருந்தாள். அடிக்கிற குளிரை அதைக்கொண்டு தாக்குப் பிடிக்க முடியாமல் ஏற்கெனவே உதடுகள் உலர்ந்து வெடவெடவென நடுங்க ஆரம்பித்திருந்தாள்.
“யோசிக்க வேண்டாம். குளிர்ல ரொம்ப நடுங்கறே. கமான்...”கிட்டத்தட்ட ஆர்டர் மாதிரியே சொன்னான். மந்திரத்துக்கு கட்டுப்பட்டது போல் காரைவிட்டு இறங்கி விட்டாள் விபா. இருட்டான பள்ளத்தாக்கில் இறங்கிச் செல்லும் மண் தடம். டார்ச் ஒளியில் அவளைக் கூட்டிப் போனான். அவள் உடம்பு குளிரை எதிர்த்துத் தீவிரமாய்ப் போராடிக் கொண்டிருந்தது. கதகதப்பான ஓர் இடம் உடனே தேவை என்று மனம் ஏங்கியது.

காட்டேஜ் ஸ்டைலில் இருந்த அந்தக்காலத்துப் பழைய மர வீடு. நடந்தால் கிரீச் கிரீச் என்று சத்தம். உள்ளே நுழைந்தபோது ஃபயர் பிளேஸ் தீ மூட்டப்பட்டு எரிந்துகொண்டிருந்தது. அங்கிருந்த சின்ன சோஃபாவைக் காட்டி, “இதிலே உட்காரு...” என்றான். ஃபயர் ப்ளேஸ் வெப்பத்தையும் சேர்த்து வாங்கி சோஃபா நல்ல கதகதப்பாக இருந்தது.அவன்பாட்டுக்கு உள்ளே சென்று விட்டான். சில நிமிஷங்கள் கழிந்ததும் விபா அவஸ்தையாய் உணர்ந்தாள். ஃபோனை மறுபடியும் உயிர்ப்பித்துப் பார்த்தாள். சிக்னல் கிடைக்காமல் இன்னமும் அது சுற்றிக் கொண்டேதான் இருந்தது.

என்னைத் தனியாக உட்கார வைத்து விட்டு எங்கே போனான்? குழப்பமாய் யோசித்துக் கொண்டிருந்தபோது, சூடாக ஆவி பறக்கும் டீ கோப்பையோடு அவள் முன்னால் தோன்றினான்.“குளிருக்கு இதமாக இருக்கும். இது உனக்கு இப்ப தேவை...”அருகில் வந்து கோப்பையை நீட்டிய அவனை அப்போதுதான் வெளிச்சத்தில் கவனித்தாள். இளைஞன். கட்டுக்கோப்பான உடல். வசீகரிக்கும் குரல். இவ்வளவு வாஞ்சையாக நடந்து கொள்ளும் இவனைப் போய் தவறாக நினைத்துவிட்டோமே என்று கொஞ்சம் நெகிழ்ந்துதான் போனாள். அதேசமயம் அவளுக்குள் ஒரு ஜாக்கிரதை உணர்வு எச்சரிக்கை உரை வாசித்தது. வெட்டுகிற வரைக்கும் ஆடு, மாடு, கோழியை எல்லாம் இப்படித்தானே கவனிப்பார்கள்.

அவள் மனசுக்குள் நிகழும் பட்டிமன்றம் பற்றி எல்லாம் அவன் கவலைப்படுகிற மாதிரி தெரியவில்லை: “நீ இந்த டீயை சாப்பிட்டு இங்கே உட்கார்ந்திரு. அதுக்குள்ள நான் போய் அந்த மானை அப்புறப்படுத்தி, டூல்ஸ் வெச்சு காரை ஸ்டார்ட் பண்ண முடியுதான்னு பார்க்கிறேன்...”
“இல்ல. நானும் வரேன்...” சட்டென எழுந்தவளைத் தோளை அழுத்திக் கீழே உட்கார வைத்தான்: ‘‘டோன்ட் ஒர்ரி. நோ கில்ட்டி ஃபீலிங்ஸ். என்கிட்ட இறைச்சியை அறுக்கும் மெஷின் இருக்கு. செத்துக் கிடக்கும் அந்த மானை அறுத்து ஃப்ரீசரில் போட்டு ஒரு மாசத்துக்கு நான் சாப்பிட வச்சிப்பேன். என்னோட உதவிக்கும், உன்னோட உதவிக்கும் சரியாப் போச்சு...”

அங்கிருந்து சென்று விட்டான். இறைச்சி அறுக்கும் கருவி… குளிர்சாதனப்பெட்டி இதையெல்லாம் கேட்டதும் அவளுக்கு முந்தாநாள் நியூஸ் சேனலில் பார்த்த இன்னொரு செய்தி ஞாபகத்துக்கு வந்தது.உயிருடன் இருந்ததாகக் கருதப்பட்ட ஒரு நபர் 10 ஆண்டுகளுக்கு முன்பாகக் கொல்லப்பட்டு ஒரு வீட்டின் பேஸ்மென்ட் ஃப்ரீசரில் இருந்ததை இப்போது கண்டுபிடித்திருக்கிறார்கள் அமெரிக்க போலீசார். என்னை பலாத்காரம் செய்து முடித்து, மானை அறுக்கிற இயந்திரத்தில் என்னையும் அறுத்து பிளாஸ்டிக் பேக்கில் போட்டு ஃப்ரீசரில் வைத்தான் என்றால் நூறு வருஷம் ஆனாலும் யாருக்கும் தெரியப்போவதில்லை.

நினைத்தாலே விபாவுக்கு சகலமும் நடுங்கியது. தன்னைத்தானே சமாதானப்படுத்திக் கொண்டு டீ கோப்பையை முழுதாகக் காலி செய்து வைத்தபோது அவன் வந்துவிட்டான். அடிபட்ட மானை மூட்டையாய்க் கட்டி ஒரு  வண்டியில் இழுத்து வந்ததில் நிறைய மூச்சு வாங்கினான்.
அந்த மூச்சுத்திணறலோடே அவளுடன் பேசினான்: “எவ்வளவோ முயற்சி பண்ணினேன். என்னால காரை ஸ்டார்ட் பண்ண முடியல...’’
விபாவுக்கு திக்கென்றது. அவள் கண்களில் சட்டென எரிந்த பயத்தைப் பார்த்து விட்டுப் புன்னகைத்தான்: “பட்  யூ ஆர் லக்கி.

இங்கே ஒரு அண்டை வீட்டுக்காரர் இருக்கிறார். அவர் ஒரு கார் மெக்கானிக். இப்பதான் அவரோட மனைவியோட பேசிட்டு வரேன். வேலை முடிஞ்சி அவர் இன்னும் வரலையாம். அரை மணி நேரத்தில் அவர் வீட்டுக்கு வருவார்ன்னு அவங்க சொன்னாங்க. அவர் எப்படியும் காரை ஸ்டார்ட் பண்ணிக் கொடுத்துருவார்...”

சரி என்பதுபோல் தலையை ஆட்டினாள் விபா. இப்போதைக்கு அவளுக்கு அவனை நம்புவதைத் தவிர வேறு வழியில்லை.
“அதுவரைக்கும் என்ன செய்வது? கீழே பேஸ்மென்ட் போலாமா? இந்த மானை அறுத்து துண்டு துண்டாக்கி ஃப்ரீசரில் போடலாம்...’’
“பரவால்ல. நான் இங்கேயே இருக்கேன்...” என்றாள் விபா.“நூறு பவுண்ட் எடை இருக்கும். கூட ஒரு கை இருந்தா வேலை சுலபமாக முடியும். நான் உனக்கு செய்யும் உதவிக்கு கைமாறாக நீ எனக்கு உதவி செய்ய மாட்டாயா?”

இப்படி அவன் கேட்ட போது அவளால் மறுக்க முடியவில்லை. இது பெண்களுக்கான பலவீனமா? ப்ரோக்ராம் செய்யப்பட்டது போல அவனைப் பின்தொடர்ந்து பேஸ்மென்ட் படிக்கட்டில் இறங்கிச் சென்றாள். அடிபட்டு சதைக்குவியலாக இருந்த அந்த மான் மூட்டையைத் தூக்கி இயந்திரத்தின் மேடையில் வைக்க உதவினாள். ஸ்விட்சைத் தட்டியதும் ரிப்பன் மாதிரி சுழலும் இயந்திரத்தின் கத்தியில் அறுபட்டு மானின் சதையும், எலும்புகளும் துண்டுதுண்டாக ஆகின,ஒரு கத்தை ஃப்ரீசர் பேக்குகளை அவள் முன்னால் போட்டான்: “இதுல போட்டு உள்ளே வைக்கிறியா?’’
குளிர்பதனப்பெட்டியைத் திறக்கும்போது உள்ளே பத்து வருடப் பிணம் ஒன்று இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அவளையுமறியாமல் ஏற்பட்டது. இதுவரை எல்லாமே சரியாகவே நடந்து கொண்டிருக்கிறது. இருந்தாலும் ஏன் இவ்வளவு எதிர்மறை எண்ணங்கள் தோன்றிக்கொண்டே இருக்கின்றன? ஃப்ரீசர் காலியாகவே இருந்தது.

அடுத்த அரை மணி நேரத்தில் யாரோ கதவைத் தட்டினார்கள். அந்த மெக்கானிக்தான்.“வா போலாம்...” என்றான். கைகளைக் கழுவிக்கொண்டு மேலே சென்றார்கள். டூல் பாக்சை எடுத்து மெக்கானிக்கிடம் கொடுத்தான். குளிர் தாங்க அவளுக்கு ஒரு கம்பளிச் சால்வையையும் எடுத்து நீட்டினான்.
மெக்கானிக் ஸ்பானர், ஸ்க்ரூ டிரைவர் கொண்டு பதினைந்து நிமிடங்கள் காருடன் போராடியதில் கார் ஸ்டார்ட் ஆகிவிட்டது.

விண்ட்ஷீல்டையும் சுத்தம் பண்ணிக் கொடுத்தார்கள். அவர்களுக்கு நன்றி சொல்லும்போது விபாவுக்கு அழுகையே வந்துவிட்டது. எவ்வளவு பெரிய உதவி செய்திருக்கிறான். அதற்குள் இந்த ஒரு மணி நேரத்தில் இவனைப்பற்றி என்னமாதிரி எல்லாம் கற்பனை செய்துகொண்டிருக்கிறேன்.
பெரும்பாலும் உலகம் நல்லபடியாகவே இயங்குகிறது.

ஒரு மைல் தொலைவுக்கு இருந்த அந்த அத்துவானக் காட்டைக் காரில் கடந்ததும், போன் சிக்னல் வந்துவிட்டது. குறுஞ்செய்திகள், மிஸ்டு கால்கள், வாட்ஸப் செய்திகள், ஃபேஸ்புக் தகவல்கள் எல்லாமே சட் சட்டென திரையில் அரும்பி நின்றன. நின்றுபோன உலகம் திரும்ப சுழல ஆரம்பித்தது போல ஆசுவாசமானது.வீட்டை அடைந்ததும் ரூம்மேட் நளினா, “என்னடி இவ்வளவு லேட்?” என்றாள்.

‘‘ஆபீஸ்ல கொஞ்சம் வேலை முடிக்க வேண்டியதா போச்சு...”“காலைல அஞ்சு மணிக்கே கிளம்பணும். நாலு நாள் கேம்ப் ட்ரிப். நாங்க எல்லாரும் பேக் பண்ணிட்டோம். நீ எல்லாம் எடுத்து வெச்சிட்டயா?”“இல்லடி. நான் இந்த கேம்ப்புக்கு வர்ல...”நளினா திகைப்புடன் அவளை நிமிர்ந்து பார்த்தாள்.
“நீதானேடி இந்த கேம்ப்பே அரேஞ்ச் பண்ணினே? இன்டர்நெட், டி.வி, மொபைல் போன் இது எல்லாத்துக்கும் நாம ரொம்ப அடிமை ஆயிட்டோம்.

நாலு நாளைக்கு இதெல்லாம் இல்லாம ஒரு மலை வாசஸ்தலத்தில் கேம்ப் போயிட்டு வரணும்னு நீதானே சொன்னே?”
“இப்ப என்னோட எண்ணத்தை மாத்திக்கிட்டேன். அறிவியலில் நாம முன்னேறிக் கொண்டே போகும்போது மறுபடியும் திரும்பிப் பார்க்கக் கூடாது. அறிவியல் கண்டுபிடிப்புகள் மோசம், அந்தக்காலம்தான் பெஸ்ட் அப்படின்னு நினைக்கிறதும் ஒரு வகையான மனோவியாதிதான்.

கற்காலத்தில் வாழ்ந்தவன் ஆயுதம் இல்லாமல் வெளியே போயிருக்க மாட்டான். அதே மாதிரிதான் இந்தக் காலத்திற்கு எது தேவையோ அதோடு நாம வாழ்ந்துதான் ஆகணும். இப்ப இருக்கிற சூழ்நிலைக்கு இன்டர்நெட், மொபைல் போன், சோசியல் மீடியா எல்லாமே நமக்கு அத்தியாவசியம். ஒரு விரல்நுனி அசைவில், ஒரு குறுஞ்செய்தி அழைப்பு தூரத்தில், ஒரு மொபைல் கால் தூரத்தில் யாரையாவது அழைக்க முடிந்தால் அதுதான் நமக்குப் பாதுகாப்பு. கொஞ்ச நேரத்துக்கு முன்னால் எனக்குக் கிடைச்ச ஞானம் இது. உலகத்தோட தொடர்புகளைத் துண்டிச்சிக்கிற ஒரு கேம்ப் எனக்குத் தேவையில்லை. நீங்க வேணா போய்ட்டு வாங்க!”  

மிமிக்ரி

‘‘உங்களிடம் மறைந்திருக்கும் ஒரு திறமை எது?’’ என தமன்னாவிடம் கேட்டால் குஷியாகிவிடுவார். ‘‘எப்பவாவது கவிதை எழுதுவேன். அதுவும் ஆங்கிலத்தில்தான்...’’ என புன்னகைப்பவர், பெட் அனிமல்ஸின் குரல்களையும் நன்றாக மிமிக்ரி செய்கிறார். அதிலும் ஆடு மாதிரி ‘ம்பே’ என அச்சு அசலாக அப்படியே கத்துவதில் எக்ஸ்பர்ட்.   

டிக் டாக்!

தமிழில் ‘கடைசி பெஞ்ச் கார்த்தி’யில் பரத்தின் ஜோடியாக நடித்தவர் ருஹானி ஷர்மா. இமாச்சல பிரதேச ஆப்பிள். பஞ்சாபி ஆல்பத்தில் பளபளத்தவர், மாடலிங் வழியே கோலிவுட் வந்தார். பிறகு டோலிவுட் பறந்தார். அங்கே சமீபத்திய ரிலீஸ் ‘ஹிட்’ (த ஃபர்ஸ்ட் கேஸ்) என்ற த்ரில்லரில் பரபரத்திருக்கிறார். அதையெல்லாம் விட ஹாட்கேக் மேட்டர், ‘டிக் டாக்’கில் ருஹானி கடற்கரை மணலில் பிகினியில் வாக்கிங் போனதுதான்! அப்படி ஒரு பிகினி, அப்படி ஒரு வாக்!  

மியூசிக்

ஆண்ட்ரியா இனி முழுநேர இசைக்குயில் போல. சினிமா தவிர மியூசிக் கன்சர்ட்டில் பர்ஃபார்ம் பண்ணுவதிலும் அதிக ஆர்வம் செலுத்துகிறார்.
அவரது மியூசிக் டீமில் அவரைப் போலவே யங்ஸ்டர்ஸ் அதிகம் உள்ளனர். கன்சர்ட்டில் டான்ஸ் ஆடிக்கொண்டே பாடல்கள் பாடும் ஆண்ட்ரியா, கல்லூரிகளில் கூட லைவ் கன்சர்ட் நடத்துவதில் கவனம் செலுத்துகிறார். வருகிற ஏப்ரலில் திருவனந்தபுரத்தில் கலக்கவிருக்கிறாராம்!

சத்யராஜ்குமார்