அப்பா இயக்குநர் + நடிகர்... அம்மா டான்ஸ் மாஸ்டர்... மகள் ஹீரோயின்!



சமீபத்தில் கவனம் ஈர்த்த ‘கன்னி மாடம்’ படத்தில் இயல்பான நடிப்பின் வழியே ‘அட... யார் இவர்...’ என்று கேட்க வைத்தவர் புதுமுக ஹீரோயின் சாயாதேவி. மாநிறம். பாந்தமான, களையான முகம். வட இந்திய நடிகைகளே ஹீரோயினாக வலம் வரும் நேரத்தில் அச்சு அசல் தமிழ் முகத்துடன் நம் வீட்டுப் பெண்ணாகப் புன்னகைக்கிறார் சாயாதேவி.இயக்குநரும் நடிகருமான ‘யார்’ கண்ணன் மற்றும் டான்ஸ் மாஸ்டரான ஜீவா தம்பதியரின் செல்ல மகள் இவர் என்பது சர்ப்ரைஸ் நியூஸ்.

‘யார்’ கண்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. வெள்ளித்திரையிலும் சின்னத்திரையிலும் கலக்கி வருபவர். சன் டிவியில் த்ரில்லர் ஹிட்டடித்த ‘ஜென்மம் எக்ஸ்’ உள்பட பல தொடர்களை இயக்கியும், சமீபத்திய ‘ரன்’ வரை இருபதுக்கும் மேற்பட்ட சீரியல்களிலும் நடித்தவர், நடிப்பவர். தவிர ‘அள்ளித்தந்த பூமி அன்னையல்லவா... சொல்லித் தந்த வானம் தந்தையல்லவா...’ உட்பட இன்றும் கவனம் கொள்ள வைக்கும் பல திரைப்படப் பாடல்களை எழுதியவர்; திரைப்பட எழுத்தாளர் சங்கத்தின் துணைத்தலைவர் என பன்முகம் கொண்டவர்.

‘‘விவசாயியோ, டாக்டரோ, வழக்கறிஞரோ தனது மகனையோ, மகளையோ தாங்கள் நேசிக்கிற துறைக்கே கொண்டு வர்றாங்க இல்லையா... அப்படி நாங்களும் எங்க மகளை சினிமாவுக்கு கொண்டு வந்திருக்கோம்...’’ பெருமிதமாகச் சொல்லும் கண்ணனும் ஜீவாவும் தங்கள் மகள் சாயாதேவியை மகிழ்ச்சி பொங்க அறிமுகப்படுத்துகிறார்கள்:

‘‘எங்களுக்கு ரெண்டு பொண்ணுங்க. பெரியவ இப்ப ஹீரோயினா அறிமுகமாகியிருக்கா. சின்னவ, மீரா திரிபுரசுந்தரி ஸ்கூல் படிக்கறா. அவளுக்கு டைரக்‌ஷன் கனவு!சாயா அறிமுகமான ‘கன்னி மாடம்’ படத்தை தியேட்டர்ல போய் பார்த்தோம். அவ்ளோ அருமையா நடிச்சிருக்கா. மீடியாக்களும் ரசிகர்களும் தங்கள் பாராட்டு வழியா அதையே எதிரொலிக்கறாங்க. ஒரு நல்ல படத்துல எங்க மக அறிமுகமாகி இருக்கா. நிச்சயம் ஒருநாள் தேசிய விருது வாங்குவானு நம்பறோம்... அப்படி ஒரு பர்ஃபாமென்ஸ் அவகிட்ட ஒளிஞ்சிருக்கு. ‘கன்னி மாடம்’ அதை நிரூபிச்சிருக்கு...’’ நம்பிக்கையில் புன்னகைக்கிற அப்பாவையும், அம்மாவையும் பார்த்து ஆச்சரியத்தில் புருவம் உயர்த்துகிறார் சாயாதேவி!

‘‘வீட்ல அப்பாவும் அம்மாவும் எப்பவும் சினிமா பத்திதான் பேசிட்டிருப்பாங்க. ‘யார்’ படத்துக்கு அப்புறம் ராமராஜன் சார் படங்களை அப்பா அதிகம் இயக்கியிருக்கார். ‘கண்ணே கனியமுதே’, ‘உன்னை ஒன்று கேட்பேன்’, ‘பௌர்ணமி நாகம்’னு அப்பா டைரக்‌ஷன்ல வெளியான படங்களின் பட்டியல் நீளும்.

ஆனா, எப்பவும் அவரோடபடங்கள்ல ‘யார்’தான் என் ஃபேவரிட் மூவி. அவர் இப்ப நடிகராகிட்டார். சினிமா, சீரியல்னு பிசியா இருக்கார். அவர் நடிப்பில் ‘கும்கி’ ரொம்பப் பிடிக்கும்...’’ என்ற சாயாதேவி, அப்பா டைரக்ட் செய்த படங்களில் எல்லாம் தன் அம்மா டான்ஸ் மாஸ்டராகவும் அசோசியேட் இயக்குநராகவும் பணிபுரிந்திருக்கிறார் என்கிறார்.

‘‘‘கண்ணே கனியமுதே’ படத்துல வர்ற ‘கண்ணா... வருவாயா...’ பாடலுக்கு அம்மாதான் கோரியோகிராஃப். அப்பா படங்கள் தவிர மற்ற படங்களுக்கும் டான்ஸ் மாஸ்டரா இருந்திருக்காங்க. பாலுமகேந்திரா சார் டைரக்‌ஷன்ல வெளியான ‘ரெட்டைவால் குருவி’ல செம ஹிட் அடிச்ச ‘கண்ணன் வந்து பாடுகிறான்... காலமெல்லாம்...’ பாடலுக்கும், தேசிய விருது பெற்ற ‘மூன்றாம் பிறை’ல கமல் சாரும் சில்க் மேடமும் ஆடின ‘பொன்மேனி உருகுதே...’ பாடலுக்கும் அம்மாதான் டான்ஸ் மாஸ்டர்!

இப்படி இருதுறைகள்ல ஜாம்பவான்களா இருக்கிற ரெண்டு பேருக்கும் மகளா இருக்கறதுல உண்மைல சந்தோஷப்படறேன்...’’ நெகிழும் சாயா, கதக், வெஸ்டர்ன் டான்சஸ் கற்றவர்.‘‘ஆனா, விளையாட்டாதான் இதையெல்லாம் கத்துக்கறேன்னு வீட்ல நினைச்சாங்க! ஏன்னா, சின்ன வயசுல இருந்தே சினிமால நடிக்கணும்னு நான் விரும்பினதை - விரும்பறதை - அவங்ககிட்ட சொல்லலை! எங்க அப்பாவும் அம்மாவும் சம்மதிக்க மாட்டாங்களோனு பயந்தேன். அதனால ஆசையை மனசுக்குள்ள பூட்டி வைச்சுட்டு ப்ளஸ் 2 வரை சின்சியரா படிச்சேன்...’’ என்றபடி அப்பாவையும் அம்மாவையும் ஓரப் பார்வையில் பார்த்துச் சிரித்துவிட்டு தொடர்ந்தார்:

‘‘போஸ் வெங்கட் சார் எங்க ஃபேமிலி ஃப்ரெண்ட். அப்பப்ப வீட்டுக்கு வருவார். அப்பா, அம்மாவோட பேசிட்டுப் போவார். அப்படி வர்றப்ப என்னைப் பார்ப்பார். ‘நல்லா படிக்கணும்’னு சொல்லுவார். அவருக்குள்ள இயக்குநராகணும்னு வெறி இருந்தது. அதனாலயே ‘கன்னி மாடம்’ ஸ்கிரிப்ட்டை எழுதினார். அந்தக் கதைக்கு நான் பொருத்தமா இருப்பேன்னு அவர் நினைச்சிருக்கணும்... திடீர்னு ஒருநாள் அப்பாகிட்ட ‘உங்க பொண்ணை நடிக்க வைக்கலாமா’னு கேட்டார்.

அப்பாவுக்கு ஷாக். ஆனா, வெளிக்காட்டிக்காம ‘வீட்ல கேட்டுச் சொல்றேன்’னு சொல்லிட்டார். அதேமாதிரி வீட்ல வந்து அப்பா சொன்னப்ப எனக்கு உள்ளூர ஹேப்பி. ஆனாலும் அப்பா சொன்னதைக் கேட்டு அம்மா என்ன பதில் சொல்லப் போறாங்கனு தெரியாம முழிச்சேன். கூடவே அப்பாவோட முடிவும் தெரியாம தவிச்சேன்.ஆனா, அப்பாவும் அம்மாவும் ‘நீ என்ன நினைக்கறே’னு கேட்டாங்க. நடிக்கற ஆசையை சொன்னேன். அவங்க தடுக்கலை. ‘உன் விருப்பம் அதுனா நாங்க குறுக்க நிற்க மாட்டோம்’னு கைகுலுக்கினாங்க.

போஸ் வெங்கட் சார் எங்கிட்ட கதையைச் சொன்னார். ரொம்ப பிடிச்சிருந்தது. அறிமுக ஹீரோயினுக்கு நடிப்புக்கு ஸ்கோப்புள்ள படம் கிடைப்பது குதிரைக் கொம்பு. அப்படியிருக்கறப்ப எனக்கு அந்த வாய்ப்பு கிடைச்சது. நான் சரியா செய்வேன்னு போஸ் வெங்கட் சார் நம்பினார். அந்த நம்பிக்கையை நான் காப்பாத்தியிருக்கேன்னு நம்பறேன்...’’ புன்னகைக்கும் சாயாதேவி, ‘கன்னி மாட’த்துக்கு முன்பே நித்யானந்தம் இயக்கத்தில் ஒரு ஆல்பத்தில் நடித்திருக்கிறாராம்.

‘‘சாயாவுக்கு ஹீரோயின் வாய்ப்பு தேடி வந்ததும் என்னையும் அறியாம நான் கடந்த காலத்துக்குப் போயிட்டேன்...’’ மகளை அணைத்த படியே ஆரம்பித்தார் ஜீவா:‘‘மகேந்திரன் சாரின் ‘உதிரிப்பூக்கள்’ல அவர் (கண்ணன்) உதவி இயக்குநர். நான் சுந்தரம் மாஸ்டரின் அசிஸ்டண்ட். அந்தப் படத்தின் கிளைமேக்ஸ்ல ஒரு கான்சப்ட் பாடலுக்கு நான் நடனம் அமைச்சிருப்பேன். ‘உதிரிப்பூக்கள்’ சமயத்துலதான் நானும் அவரும் பழக ஆரம்பிச்சோம். அவரை மாதிரியே நானும் நாவல்கள், சிறுகதைகள் அதிகம் படிப்பேன். அதனாலயே ரெண்டு பேரும் ஷூட்டிங் முடிஞ்சதும் மணிக்கணக்கா பேசுவோம். எங்க நட்பு காதலாச்சு... திருமணத்துல முடிஞ்சுது.

நான், மகேந்திரன் சார், கே.பாலசந்தர் சார், பாலுமகேந்திரா சார் படங்களுக்கு டான்ஸ் மாஸ்டரா இருந்திருக்கேன். அப்ப நிறைய பேர் என்கிட்ட ‘படத்துல நடிக்கறீங்களா’னு கேட்டிருக்காங்க. ‘உங்க கண்ணுல அவ்வளவு எக்ஸ்பிரஷன் இருக்கு’னு சொல்லுவாங்க. ஆனா, எனக்கு நடிப்புல இன்ட்ரஸ்ட் இல்ல. மறுத்துட்டேன்.

அப்ப ஓர் இயக்குநர் சொன்னார். ‘நீ எவ்வளவு பெரிய வாய்ப்பை இழந்துட்டேனு இப்ப உனக்கு தெரியாது... உன் முப்பதாவது வயசுல இந்த உண்மை தெரியும். அப்ப உன் கண்ணுல இருந்து ஒரு சொட்டு கண்ணீர் சிந்தும்...’

அது பலிச்சது! நல்ல வாய்ப்பை இழந்துட்டோமேனு ஃபீல் பண்ணியிருக்கேன்; இப்பவும் பண்றேன். இந்த நிலைல என் மகளுக்கு நடிப்பு ஆசை இருப்பதும், அவ ஹீரோயினா மாறியிருப்பதும் உண்மையிலயே சந்தோஷத்தைத் தருது...’’ நெகிழ்ந்த ஜீவாவின் தோள்களைப் பற்றியபடி பேச ஆரம்பித்தார் கண்ணன்:‘‘எனக்கொரு ட்ரீம் ப்ராஜெக்ட் இருக்கு.

இரண்டாம் உலகப் போர் சமயத்துல ஜப்பான்காரங்க சயாம் - பர்மா இடைல ஒரு ரயில்பாதையை அமைக்க முடிவு செய்தாங்க. அதுவும் குறுகிய காலத்துல. இதுக்காக பல லட்சம் தமிழர்களை வேலைக்கு நியமிச்சு கசக்கிப் பிழிஞ்சாங்க. தினமும் 20 மணி நேரம் வேலை. கொஞ்சம் அசந்தாலும் அடி விழும்.

இந்தக் கொடுமை தாங்காம ஒரு லட்சம் பேர் வரை இறந்திருக்காங்க. இந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையா வைச்சு ‘உயிர் பாதை’ என்கிற தொடர் ‘தினகரன் வசந்தம்’ இணைப்பிதழ்ல வந்தது.வாரா வாரம் அதை விடாம படிச்சேன். மனசை உலுக்கிடுச்சு.

அதை அப்படியே படமா இயக்கணும்னு முடிவு செய்தேன். மலேசிய தமிழ் எழுத்தாளர்கள் பலரும் இதுபத்தி எழுதியிருக்காங்க. அத்தனை நூல்களையும் படிச்சு, ரிசர்ச் பண்ணி ஸ்கிரிப்ட் ரெடி பண்ணிட்டிருக்கேன். அதை படமா பண்ணினா உலகமே கோலிவுட்டை திரும்பிப் பார்க்கும்...’’ கண்களில் கனவு மின்ன இதைச் சொன்ன கண்ணன், சட்டென நடப்புக்கு வந்தார்:

‘‘என் ரெண்டாவது மகளுக்கு டைரக்‌ஷன் ஆர்வம் இருக்கறதால வீட்ல இப்பவே அவளுக்கு ‘டிராலி’ன்னா என்னா... க்ளோஸ் அப் ஷாட் எப்ப ஏன் வைக்கணும்னு  சொல்லிக் கொடுக்க ஆரம்பிச்சுட்டேன். சாயா நடிப்பில் பெஸ்ட் ஆக வருவா. ‘கன்னி மாடம்’ பார்த்ததுமே அது புரிஞ்சுடுச்சு. நான் நடிப்புல பிசியா இருக்கறதால தன் அம்மாவோட கைடன்ஸ்ல சாயா நல்லா வருவானு நம்பறேன்...’’ என்ற கண்ணன், தன் மகளை வைத்து தானே படம் இயக்கவும் செய்யலாம் என்கிறார்!  

வெல்கம் சாயா!

செய்தி:மை.பாரதிராஜா

படங்கள்:ஆ.வின்சென்ட் பால்