கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் -53



பாவங்களை மன்னிக்கும் சுகந்த குந்தளாம்பிகை! அடர்ந்த காடு. சூரிய ஒளியே வெகு சிரமப்பட்டு ஊடுருவ வேண்டியிருந்தது.அந்த அளவுக்கு செழிப்பாகவும் பச்சைப் பசேல் எனவும் மரங்கள் நெருக்கமாக வளர்ந்திருந்தன.அந்த மரங்களின் ஊடே ஒரு மான் துள்ளிக் குதித்து ஓடியபடி இருந்தது. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு காற்றை மிஞ்சும் வேகத்தில் அந்த மான் ஓடியது.

அதை, வில்லேந்தியபடி ஒரு வீரன் துரத்திக் கொண்டிருந்தான். நெற்றி நிறைய பூசியிருந்த திருநீறு, அவன் உள்ளத்தில் ஈசன் குடி யிருப்பதை பறை சாற்றியது. ஞான ஒளியும் கம்பீரமும் வழியும் அற்புத வதனம் அவனுக்கு. இள வயது. ஆனால், எல்லையில்லாத வீரம். போர் செய்து சோழர்களை வென்று முடித்தே விட்டான். அதனாலேயே அவனுக்கு ‘சோழாந்தகன்’ என்று திருநாமம்.

உல்லாசமாக வேட்டையாட வந்துவிட்ட அவனைச் சுற்றிலும் ராஜ பரிவாரங்கள் சூழ்ந்திருந்தனர். அவர்களது கைகளில் இருந்த வாளிலும், வேலிலும், கொடியிலும் இருந்த மீன் சின்னம் அவன் பாண்டிய மன்னன் என்று உணர்த்தியது. பட்டத்து புரவி மீது பகலவன் போல மின்னினான் அவன்.

ஒரு வழியாக மான் அவனிடமிருந்து தப்பி ஓடிவிட்டது. அவனும் இளைப்பாற ஒரு மரத்தடியில் அமர்ந்தான். அவன் அமரவும், அவன் முகத்தில் தெரிந்த களைப்பை கவனித்தார்கள் சேவகர்கள். உடன், ஒரு தங்கக் கிண்ணம் நிறைய குளிர்ந்த நீரை பணிவாக அவன் முன்
நீட்டினார்கள்.

அதைக் கண்ட அமைச்சர், ‘அப்படிச் செய்யாதீர்கள், எடுத்துச் செல்லுங்கள்’ என்று சைகை காண்பித்தார். ஆனால், சேவகர்கள் அதை கவனிக்கவே இல்லை. தன் முன் நீட்டப்படும்  நீரைக் கண்ட மன்னனின் முகம் கோபத்தில் சிவந்தது:‘‘சுயம்பு சிவலிங்க தரிசனம் செய்யாமல் நான் துளி நீர்கூட அருந்த மாட்டேன் என்று தெரியாதா உங்களுக்கு? இது கூட தெரியாத உங்களை யார் வேலைக்கு எடுத்தார்கள்!? என்ன அமைச்சரே செய்து கொண்டிருக்கிறீர்கள் நீங்கள்?!’’ சீறினான்.

‘‘மன்னிக்க வேண்டும் மன்னா! ஏதோ தெரியாமல் செய்து விட்டார்கள்...’’ அமைச்சர் தயங்கியபடி முன்னே வந்து மொழிந்தார்.
‘‘போகட்டும் விடுங்கள்! சுயம்புலிங்க தரிசனத்துக்கு  ஏற்பாடுகள் நடக்கட்டும்...’’ கம்பீரமாகக் கட்டளையிட்டான் மன்னன்.
‘‘நடுக்காட்டில் சுயம்புலிங்க தரிசனமா?’’ தன்னையும் அறியாமல் கேட்டுவிட்டார் அமைச்சர்.

‘‘ஏன், ரிஷி முனிவர்கள் எல்லாம் காட்டில் வாழ்பவர்கள்தானே? அவர்கள் பூஜை செய்த லிங்கம் இல்லாமலா போய்
விடும்? மனம் இருந்தால் மார்க்கம் உண்டு அமைச்சரே. சென்று ஆகவேண்டியதைப் பாருங்கள்...’’ மரத்தில் சாய்ந்தபடியே ஒய்யாரமாகச் சொன்னான் மன்னன். மெல்ல நகர்ந்த அமைச்சர், காட்டில் சுற்றித் திரிந்தார். சுயம்புலிங்கம் ஒன்று கிடைத்தால் போதும். மன்னர் பூஜை செய்ய வசதியாக இருக்கும் என்று தேட ஆரம்பித்தவர்தான்.

தேடினார் தேடினார் தேடிக் கொண்டே இருந்தார். ஓரிடத்திலும் உருப்படியாக ஒரு லிங்கம் கூட கிடைக்கவில்லை. தூரத்தில் இருந்தபடியே மன்னரைப் பார்த்தார். உச்சி வேளை ஆகிவிட்டது. இன்னும் பல்லில் பச்சைத் தண்ணீர் படாமல் இருக்கிறார் மன்னர். அதனால் மிகவும் சோர்ந்து காணப்படுகிறார் என்றும், இன்னும் சில நேரத்தில் மயங்கவும் வாய்ப்பு இருப்பதையும் உணர்ந்தார்.

அமைச்சருக்கு பழுக்கக் காய்ச்சிய ஈட்டி மார்பில் பாய்ந்தது போல இருந்தது. என்ன செய்வது என்று யோசிக்க ஆரம்பித்தார்.
‘நன்மை விளையும் என்றால், பொய் சொல்வதில் தவறேயில்லை...’ என்று அவரது உள் மனது சொன்னது. உடன் சுற்றும் முற்றும் பார்த்தார். ஒரு மரக் கட்டை தென்பட்டது. அதைக் கண்டதும் மனதில் சட்டென ஒரு யோசனை பளீரிட்டது.

அந்தக் கட்டையை மணலில் நட்டு அழகாக பட்டை அடித்தார். சுற்றி நான்கு கற்களை முட்டுக் கொடுத்து நிற்க வைத்து அதை ஒரு சுயம்புலிங்கம் போல அலங்கரித்தார். பிறகு பணிவாக மன்னனிடம் சென்றார்: ‘‘மன்னா! மிகுந்த சிரமத்துக்குப் பிறகு ஒரேயொரு சுயம்பு லிங்கம் மட்டும் கண்ணில் பட்டது! தாமதத்துக்கு மன்னிக்கவும்...’’ கேட்ட மன்னனுக்கு பரம சந்தோஷம். சட்டென எழுந்தான். ஆனால், உணவின்மையால், அவனது உடல் தள்ளாட ஆரம்பித்தது. அமைச்சர் கைத்தாங்கலாக அவனைப் பிடித்துக் கொண்டார். மெல்ல இருவரும் லிங்கத்தின் அருகே வந்தார்கள்.

சிவலிங்கத்தைக் கண்டதும் பக்திப் பரவசத்தில் ஆனந்தக் கூத்தாடினான் மன்னன். இதற்கு மட்டும் எங்கிருந்து சக்தி வந்தது என்று விளங்காமல் அனைவரும் விழித்தார்கள். அமைச்சருக்கு மட்டும் மன்னனின் ஆழ்ந்த சிவ பக்திதான் இதற்குக் காரணம் என்று நன்கு விளங்கியது.
ஒரு வழியாக பூஜையை முடித்து மன்னன் உணவு அருந்தினான். மன்னன் உணவருந்தும் வரை காத்திருந்த அமைச்சர், இப்போது மெல்ல உண்மையைப் போட்டு உடைத்தார்.

தான் வணங்கியது ஒரு சிவலிங்கமே இல்லை என்பதை அறிந்த மன்னன் துடிதுடித்துப் போனான். வெகு நாட்களாகக் கடைப்பிடித்து வந்த விரதம் இன்று பாழாகிவிட்டதே என்று கலங்கினான். ‘‘பசி என்ற எதிரியை வயிற்றிலேயே கட்டிக்கொண்டு சோழனையும் சேரனையும் வென்று என்ன பயன்! இப்படிக் கேவலமாக உண்டுதான் உயிர் வளர்க்க வேண்டும் என்றால் எனக்கு இந்த உயிரே தேவையில்லை...’’ என்றபடி மன்னன் தனது உடைவாளை உருவி தனது சிரசை, தானே சீவ முற்பட்டு, வாளை ஓங்கினான்.

நடப்பதை உணர்ந்த அமைச்சர், மன்னனைத் தடுக்க அவர் மீது பாய்ந்தார். அமைச்சர் பாய்வதற்குள் விஷயம் வேறு திசையில் சென்று விட்டது. ஓங்கிய வாள் நொடியில் மாலையாக மாறி மன்னன் தோளை அலங்கரித்தது!அனைவரும் தங்கள் கண்களையே நம்ப முடியாமல் வாய் பிளந்தபடி இருக்க... லிங்கம் என்று நட்டு வைத்திருந்த மரக் கட்டை பேச ஆரம்பித்தது:‘‘வேந்தே கலங்காதே! சித்தம் சிவமானால் எல்லாம் ஜெயமாகும். உன் சித்தத்தில் பக்தி இருந்ததால் நட்டு வைத்திருந்த இந்தக் கட்டை... அதாவது ‘ஆப்பையும்’, என் திரு உருவமாகக் கொண்டு விட்டேன்... ஆசிகள்!’’

‘‘ஆஹா ஆஹா! என் உள்ளத்தில் நாதன் நீ இருக்க நட்ட கல்லும் பேசிவிட்டதே! பரம்பொருளே..! இந்த சிறியவனுக்காக இந்த ஆப்பில் தாங்கள் எழுந்தருளியதால் உங்களை ‘திரு ஆப்புடையார்’ என்று இந்த வையம் அழைக்கட்டும். தங்கள் அருளால் எங்கும் நீதி சிறக்கட்டும்...’’ மகிழ்ச்சியில் கரைந்தான் மன்னன்.‘‘மகனே... புண்ணிய சேனா! கண் திறந்து இந்த கங்காதரனை தரிசிப்பாயாக...’’ விடையின் மீது அமர்ந்த படி, பொங்கும் வாஞ்சையோடு மொழிந்தார் ஈசன்.

புண்ணியசேனன் என்று அவர் அழைத்த அந்த மனிதர் நல்ல பருமனாக இருந்தார். ஞான ஒளி முகத்தில் சிந்தியது. இருக்காதா பின்னே? பிரம்மனின் குமாரரான புலஸ்தியரின் பேரன் அல்லவா இவர்? போதாத குறைக்கு தந்தை விஷ்ரவஸ், அருந்தவ சீலர் ஆயிற்றே!
நெற்றியில் எங்கும் திருநீறு பூசி, தவக்கோலம் பூண்டு, பல காலம் தவமிருந்ததன் பயன் இப்போது விடை ஏறி வந்துவிட்டது!
சிவப் பரம்பொருளைக் கண்ணாரக் கண்டு, வாயாரப் போற்றி மகிழ்ந்தார் புண்ணியசேனன்.

அதைக் கண்டு அகமகிழ்ந்த ஈசன், ‘‘வேண்டும் வரம் கேள் புண்ணியசேனா!’’ என்று ஆணை பிறப்பித்தார்.
இதற்காகத்தானே காத்திருந்தார்..? ‘பெரும் செல்வந்தனாக வேண்டும்... அதற்கு ஒரு வழி சொல்லுங்கள்...’ என்று அகத்தியரை சரண் புகுந்தபோது அவர்தான் இந்த திரு ஆப்புடையாரை போற்றித் தவம் இருக்கச் சொன்னார். அகத்தியர் சொன்னபடியே தவமிருந்தார் புண்ணியசேனன்.
இப்போது வரம் வழங்க பரம் பொருள் வந்ததும் சும்மா இருப்பாரா. நொடியில் வரம் கேட்க வாயைத் திறந்தார்.
அப்போது அவரது கண்கள் ஈசன் அருகில் தங்கப் பதுமையைப் போல வீற்றிருந்த அம்பிகையின் மீது விழுந்தது. அம்பாளின் அழகில், தான் யார் என்பதையும், அவள் உலகீன்ற உமை என்பதையும் மறந்தார்.

புண்ணியசேனன் செய்த பெரும் அபசாரத்தால் அவரது கண்கள் பொசுங்கி, உயிரும் உடலை விட்டுப் போய்விட்டது.
நொடியில் நடந்துவிட்ட இந்தச் சம்பவத்தைக் கண்டு திக்பிரமை பிடித்து நின்றாள் அம்பிகை. முக்கண்ணனின் மூன்று கண்களும் எரிமலையாகச் சிவந்திருந்தன. அதைக் கண்ட அம்பிகைக்கு நடந்ததை யூகிக்க அதிக நேரம் ஆகவில்லை!‘‘பா ர்வதியையே தவறா பார்த்த அந்தப் பாவி யாரு தாத்தா?’’ கோபத்துடன் இடைமறித்தான் கண்ணன்.

‘‘சொல்றேன் கண்ணா...’’ புன்னகைத்த நாகராஜன், தொடர்ந்தார்: ‘‘பொசுங்கி சாம்பலான புண்ணியசேனனைப் பார்த்ததும் அம்பாளுக்கு கருணை பெருக்கெடுத்தது. சிவன்கிட்ட புண்ணியசேனனுக்காக சிபாரிசு செய்தாங்க. அம்பாள் ஒண்ணு கேட்டா அதை எப்படி சிவன் மறுப்பார்..? அடுத்த கணம் புண்ணியசேனன் உயிர்பெற்று எழுந்தார். தன் தவறை உணர்ந்து அம்பாள் பாதத்துல விழுந்து மன்னிப்பு கேட்டார். அவருக்கு மன்னிப்பும் கிடைச்சது... ஆசைப்பட்ட செல்வங்களும் கிடைச்சது. சங்க நிதியையும் பதுமநிதியையும் அடைஞ்சு செல்வத்துக்கெல்லம் அதிபதி ஆனார்...’’
‘‘குபேரன்தான் புண்ணியசேனனா தாத்தா..?’’

‘‘ஆமா கண்ணா... தப்பு செஞ்சு எரிஞ்சு சாம்பலாகறதுக்கு முன்னாடி அவர் புண்ணிய சேனன்... திரும்பி உயிர்பெற்று எழுந்ததும் குபேரன்!’’ சொன்ன நாகராஜன் அன்புடன் கண்ணனைப் பார்த்தார். ‘‘எப்படித்தான் அம்பாளால புண்ணியசேனனை மன்னிக்க முடிஞ்சுதோ...’’ கண்ணனின் குரலில் ஆற்றாமை வெளிப்பட்டது. ‘‘அதனாலதான் உலகத்துக்கே அவங்க தாயாரா இருக்காங்க!’’ நெகிழ்ச்சியுடன் சொன்னாள் நாகராஜனின் மனைவி ஆனந்தவல்லி: ‘‘தாயாரோட அன்புக்கு முன்னாடி மத்த எதுவுமே எடுபடாது. அதனாலதான் திரு ஆப்புடையார் கோயில்ல இருக்கற சுகந்த குந்தளாம்பிகை மேல அணிவிக்கப்படற மலர்கள் எல்லாமே வாசனையை இழக்குது...’’‘‘என்ன பாட்டி சொல்றீங்க..?’’ கண்ணன் வியப்புடன் கேட்டான்.

‘‘ஆமா கண்ணா... குந்தளாம்பிகை மேல சாத்தப்படுகிற மலர்கள் எவ்வளவு வாசனையா இருந்தாலும் அம்பாள் மேல பட்டதும் தன் மணத்தை எல்லாம் இழந்துடும்! ‘என் அன்போட வாசனைக்கு முன்னாடி இந்த பூவெல்லாம் எம்மாத்திரம்’னு அம்பாள் கேட்கற மாதிரியே இருக்கும்...’’ ஆனந்தியின் குரல் தழுதழுத்தது. ‘‘இப்படி பெரிய தப்பு செய்த புண்ணியசேனனுக்கே குபேர பதவி கொடுத்த ஆப்புடையார், உன்னையும் நிச்சயம் காப்பாத்துவார்... அவரை வேண்டிக்க. உன் பிரச்சனை எல்லாம் பனி போல விலகிடும்...’’ தன் முன் அமர்ந்து தனக்கு ஏற்பட்டிருக்கும் பணக் கஷ்டம் தீர என்ன வழி என்று கேட்ட ஈஸ்வரியிடம் நம்பிக்கையுடன் சொன்னார் நாகராஜன்.அருகில் இருந்த கோயிலின் மணி ஒலிக்கத் தொடங்கியது!

(கஷ்டங்கள் தீரும்)

கோயிலின் பெயர்:

சுகந்த குந்தளாம்பிகை சமேத திருவாப்பனூர் கோயில்

சிறப்பு: உணவு சம்பந்தமான பிரச்னைகளும் நோய்களும் தீரும். நினைத்த எண்ணமெல்லாம் ஈடேறும். பணக் கஷ்டம் விலகும்.
அமைவிடம்: மதுரையில் இருந்து செல்லூர் செல்லும் வழியில் அமைந்திருக்கிறது. மீனாட்சி அம்மன் கோயிலில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவு.
நேரம்: காலை 6:30 முதல்
மதியம் 11 மணி வரை
மாலை 5 மணி முதல் இரவு
8 மணி வரை.

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்