கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்



ஹைடெக் திருடர்களான இருவர் காதலிக்க முயன்றால், அதுவும் பிரச்னையாகி போலீஸ் துரத்தினால்… என்ன ஆகும்? அதுவே ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’!துல்கர் சல்மான், ரக்‌ஷன் இருவரும் திக் ஃப்ரெண்ட்ஸ். பார்ட்டி, பெண்கள் என எதையும் மனதில் போட்டுக் குழப்பிக் கொள்ளாத வாழ்க்கை. அவ்வப்போது பணத்தேவைக்கு திருட்டுகள் செய்து சொகுசாக வாழ்கிறார்கள்.

ரித்து வர்மாவை முதல் சந்திப்பிலேயே காதலிக்கத் தொடங்கும் துல்கர், அவரை திருமணத்துக்கும் சம்மதிக்க வைக்கிறார். விளைவாக, திருட்டுச் செயல்களை விட்டுத்தரவும் புதிய வாழ்க்கையை மேற்கொள்ளவும் தயாராகிறார்கள். இரண்டு தோழர்களுக்கு முறையே இரண்டு தோழிகள் கிடைக்கப் பெற அவர்கள் காதல் கைகூடியதா, காவல் அதிகாரி கௌதம் வாசுதேவ் மேனனின் தேடுதல் வேட்டை நிறைவுபெற்றதா என்பதே கிளைமாக்ஸ்.

புத்திசாலித்தனமான இளமைக் கதையில் நான்கைந்து கேரக்டர்களை மட்டும் வைத்துக்கொண்டு சின்னச் சின்ன கலகல வசனங்களில் படத்தை ரசிக்க வைக்கிறார் அறிமுக இயக்குநர் தேசிங் பெரியசாமி.

இரண்டு ஜோடிகளின் உண்மை அந்தரங்கம் தெரிய வரும்போதெல்லாம் நமக்குக் கிடைப்பது ரசனை அத்தியாயங்கள்.படம் முழுக்கவே துல்கர் செம க்யூட். ரித்து வர்மாவை எல்லா இடங்களிலும் கவனித்து காதலைச் சொல்லும்போதும், ரக்‌ஷன் - நிரஞ்சனி அகத்தியனை வாரும்போதும், நண்பர்கள் இருவரும் விட்டுக்கொடுக்காத அன்போடு அசத்துகிறார்கள்.

படம் முழுவதும் துல்கர் - ரக்‌ஷனின் ஃப்ரெண்ட்ஷிப் சிரிசிரி சிரிப்பு மேளா நடத்துகிறது. துல்கருக்கு டகால்டி ஐடியாக்களைச் சொல்வதில் ரக்‌ஷனும் சரியான இணை.நீள முகத்தின் தெளிவில் ரித்து வர்மா அழகு. ஒரு ரூபாய்க்காக கடைக்காரரிடம் வாதிடும் தருணங்களிலும் சரி, பொய்களை முகத்தில் சலனமில்லாமல் அடுக்கும்போதும் சரி ரித்து அதகளம்.

துல்கர் - ரித்து இருவருக்கும் காமெடி கெமிஸ்ட்ரி. விளைவு படத்துக்கு பம்பர் லாட்டரி!நிரஞ்சனி அகத்தியன் அசால்ட்டான புதுவரவு! தன் ஒன் லைனர்களில் ரக்‌ஷனை வறுத்தெடுக்கவும், பின் அவரிடமே பணிவதுமாக ஈர்க்கிறார். சமீப காலங்களில் இப்படியொரு ரசனையான இடைவேளைக் காட்சியைப் பார்த்ததே இல்லையென ஞாபகம் வருகிறது.

படத்தின் சர்ப்ரைஸ் அறிமுகம் டைரக்டர் கௌதம் வாசுதேவ் மேனன். ‘என்னடா ஸ்கெட்ச்சா’ என ஆரம்பிக்கும் அவர் அறிமுகமும் சரி, கிளைமேக்ஸில் அவர் கொடுக்கும் திருப்பமும் சரி… சரியான ஆக்கிரமிப்பு காட்சிகள்.

கோவா, தில்லி, சென்னையை புதுப்பார்வையோடு காட்டுகிறது ஒளிப்பதிவாளர் கே.எஸ்.பாஸ்கரனின் கேமரா. பாடல்கள் சுமார் ரகம்.இவ்வளவு மோசடி செய்தவர்களை அப்படியே விட்டுவிட்டுப் போகும் டிஜிபி… இதெல்லாம் சாத்தியம்தானா? எதிராளிகளை தொடர்ந்து முட்டாளாக்கும் லாஜிக் ஏராளம்.பரபரப்பில், வேகத்தில், சுவாரசியத்தில் நம்மை சில படங்களே இழுக்கும். இது அப்படியொரு படம்!   

குங்குமம் விமர்சனக் குழு