நேச நெஞ்சம்



“ஆயாவை தொந்தரவு செய்யக் கூடாது...”  மித்யா மென்மையாகக் கூறினாள்.பவ்யமாகத் தலையாட்டினான் ரமணி. அவன் பார்வை மித்யா கையில் இருந்த பொம்மை மீதே இருந்தது.“ஆயா... நேரத்துக்கு சாப்பாடு, ஜூஸ் கொடு. சிப்ஸ் வச்சிருக்கேன். காபி கொடு. சின்ன தம்ளர்ல தராதே. கொஞ்சம் பிடிவாதம் பிடிப்பார். உன் பையன் மாதிரி நினைச்சு பாத்துக்க...” மித்யாவின் குரல் நடுங்கியது.

“கண்ணு நான் ரெண்டு வருஷமா வாரன். எனக்குத் தெரியும் கண்ணு. நீ பாத்து அண்ணன் கூட போய்ட்டு வா...” அறுபது வயதான ஆயா கனிவுடன் பேசியது.“சரி நான் கிளம்பட்டுமா?” மித்யாவின் கேள்விக்கு பதில் அளிக்கவில்லை ரமணி. பாய்ந்து அவள் கை பொம்மையை வாங்கிக்கொண்டு சோபாவில் போய் பதுங்கினான். அது பட்டன் அழுத்தினால் பாடும், ஹலோ என்று சொல்லும், விருக், விருக் என்று நடக்கும். அவன் கவனம் முழுதும் பொம்மையின் மீது பதிந்தது.

“பார் அண்ணா, நான் அவரை விட்டுக் கிளம்பறேன்னு துளிக்கூட வருத்தமில்லை...” மித்யாவிடம் ஆதங்கம். குரலில் ஏக்கம்.“அவ்வளவுதான் அவன் புத்தி வளர்ச்சின்னு தெரியுமில்லையா?” பெரிய அண்ணா அன்பாக அவளுக்கு ஆறுதல் கூறினார்.
“அவனுக்கோ அஞ்சு வயசு புத்திதான். அது தெரிஞ்சும் நீ ஏங்கறதுல அர்த்தமில்லை. கிளம்பு. பூஜைக்கு நேரமாயிருச்சி...” அண்ணாவுக்கு அவளை அங்கிருந்து கிளப்பினால் போதும் என்றிருந்தது.

மித்யா மனமில்லாமல்தான் கிளம்பினாள். அவள் இல்லாமல் பத்து நிமிஷத்துக்கு மேல் ரமணியால் இருக்க முடியாது. அவனை விட்டு எங்கும் போனதில்லை மித்யா. நேரத்துக்கு சாப்பிட வைத்து, குளிக்கவைத்து, உடை மாற்றி, தூங்க வைத்து ஒரு கைக் குழந்தையாக வைத்திருந்தாள்.

உண்மையில் கைக் குழந்தைதான். இரண்டு வருடத்திற்கு முன் திருமணம் முடிந்து ஆறு மாதம் கழித்து ஊட்டி போனார்கள் இருவரும். மழையில் சிக்கி பஸ் பாதாளத்தில் உருண்டு மித்யா பிழைத்து விட்டாள்.

ரமணிக்கு நினைவு திரும்பவில்லை. எங்கெங்கோ கொண்டு போனார்கள். பிசைந்து வைத்த மைதா மாவாய் இருந்தான். அவனுக்கு மூளையில் அடிபட்டு எல்லாம் மறந்து விட்டது. ஐந்து வயது குழந்தையின் அளவுதான் மூளை வளர்ச்சி. ஆனால், என்றேனும் ஒருநாள் நினைவு வரலாம் என்று டாக்டர்கள் கூறினார்கள்.

கோல்டு மெடலிஸ்ட். எம்.டெக் படித்த ரமணி பொம்மையாய் இருந்தான். உட்கார் என்றால் உட்கார்ந்து, நின்று எழுந்து சொன்னதைச் செய்யும் கீ கொடுத்த பொம்மை. ஆனாலும் அவனை ஆசையுடன், அன்பாக கவனிக்கிறாள் மித்யா.ரமணியின் அப்பா, அம்மாவுக்கு ஜெர்மனியில் சொந்த பிசினஸ். இங்கு வீடு வாங்கி, ரமணி பெயரில் எழுதி மாசம் பணம் அனுப்புகிறார்கள்.

மித்யா ஆன்லைன் மூலம் ஷேர் பிசினஸ் செய்கிறாள். அத்துடன் பெரிய அண்ணா டாக்டர். சின்ன அண்ணா ஆடிட்டர். மாதம் தங்கைக்கு பணம் தருகிறார்கள்.‘எல்லோருக்கும் தங்கை இருக்கு. எனக்கு இல்லை...’ என்று அண்ணா அழுது பதினைந்து வருடம் கழித்துப் பிறந்தவள் மித்யா. அவளின் இருபது வயதில் அப்பா, அம்மா இறந்து விட பெரிய அண்ணாதான் பெற்றோர். அண்ணிக்கு மித்யாதான் மூத்த பெண். சின்ன அண்ணி தோழி.
எல்லோருக்கும் அவளின் வாழ்வு குறித்து ஒரு கவலைதான். சின்ன வயசு. ரமணியோ இப்படி இருக்கான். இன்னும் எத்தனை காலம் என்று ஒரு கவலை.

இந்த இரண்டு வருடத்தில் அவள் அதிகம் பிறந்த வீட்டுக்கு வந்ததில்லை. பெரிய அண்ணா பையன் கல்யாணத்துக்கு வந்து விட்டு உடனே கிளம்பி விட்டாள்.  அவள் கையைப் பிடித்தபடியே அலைந்தான் ரமணி.இன்று அவளை அழைத்து வந்தே ஆகணும் என்று சின்ன அண்ணா சொல்லிவிட்டான்.

“ஒரு முடிவு எடுத்தாகணும். இன்னும் எத்தனை காலத்துக்கு அவ இப்படியே நிக்க முடியும்? அவனுடைய அப்பா மித்யா என்கிற ஏமாளி கிடைச்சான்னு எதையும் கண்டுக்கவே இல்லை. நாம அப்படி இருக்க முடியுமா? நம்ம பசங்க, பொண்ணுங்க சந்தோஷமா வாழறப்போ, இவ இப்படி நிக்கறது வேதனையா இருக்கு...” சின்ன அண்ணா அழுதான்.

“உண்மைதான். அவளுக்கு நாமதான் சகலமும். அந்த நம்பிக்கையை நாம் காப்பாத்தணும்...” என்றாள் சின்ன அண்ணி.
இந்தக் காலத்திலும் கூட்டுக் குடும்பம். ஒத்துமையாக வாழும் அவர்கள் எல்லோருக்கும் ஓர் அதிசயம். பெரிய அண்ணா சொல்லுக்கு எதிர்ப் பேச்சு கிடையாது. அண்ணா மித்யாவை அழைத்து வர முடிவு செய்தான்.

ஆரம்பத்தில் மித்யா யோசித்தாள்.“ரமணி நான் இல்லாம இருக்க மாட்டார். விட்டுட்டு எப்படி வர முடியும்?’’
“இதோ இங்கிருந்து அரைமணி நேரம். அடையாறு. சுமங்கலி பூஜைல வீட்டுப் பொண்ணுகதான் கலந்துக்கணும். ஆயாகிட்ட சொல்லி விட்டுட்டு வா. பூஜை ஒன்பதரைக்கு முடிஞ்சுரும். பத்தரைக்கு வந்துடலாம்...” அண்ணா சின்ன மாத்திரை ஒன்றை ஆயா கையில் கொடுத்தான்.

“அவனுக்கு காலை டிபன் கொடுத்துட்டு இந்த மாத்திரையைக் கொடு. ஒரு ரெண்டு மணி நேரம் தூங்குவான். அதுக்குள்ளே மித்யா வந்துடுவா...” என்றபடி அண்ணா அவளுடன் காருக்கு வந்தான். வழி முழுதும் மித்யா பேசவில்லை. அவள் நினைப்பு முழுதும் ரமணி மேல்தான் இருந்தது. வீட்டுக்கு வந்து பூஜை முடியும் வரை அமைதி இல்லாமல் இருந்தாள்.சாப்பாடு முடிந்ததும் “அண்ணா கிளம்பலாமா...” என்றாள்.“இல்லைம்மா உன்கூடப்
பேசணும்...’’“என்ன அண்ணா?”

“மித்யா, ரமணிக்கு இனி எப்போ நினைவு வரும்? அவன் பழையபடி ஆவான்னு தெரியாது. வரலாம். வராமலும் போகலாம். ஆனா, நாங்க உன் வாழ்வைப் பாக்கணும். நீ இன்னும் எத்தனை நாள் இப்படி நிக்கப் போறே?”“அதனால?”“உன்னை அங்கு திருப்பி அனுப்பறதா இல்லை. ரமணியைக் கொண்டு போய் ஒரு ஹோம்ல விடலாம். அப்படி அக்கறை இருந்தா அவன் அப்பா, அம்மா வந்து புள்ளையை கூட்டி
கிட்டு போகட்டும். உனக்கு அவன் கிட்டேர்ந்து விவாகரத்து வாங்கப் போறோம்...” சின்ன அண்ணா கடினமான குரலில் பேசினான்.
மித்யா அமைதியாக தலை குனிந்திருந்தாள்.

“மித்யா, எங்க கண் எதிர்ல நீ இப்படி நிக்கறதை எங்களால தாங்க முடியலை. நீயும் வாழணும். அவனை அம்போன்னு விடப் போறதில்லை. வைத்தியம் பார்க்கலாம். அவன் பெத்தவங்க கிட்ட ஒப்படைக்கலாம். உனக்கு நாங்க ரீ மேரேஜ் பண்றதா இருக்கோம்...” - பெரிய அண்ணி.
“ரீ மேரேஜா?” மித்யா திடுக்கிட்டாள்.

‘‘ஆமாம், அது ஒண்ணும் தப்பில்லை. நம்ம சின்ன அண்ணாவோட நண்பரோட பையன் உன்னை கல்யாணம் செஞ்சுக்க சம்மதம் சொல்லிட்டான். இதோ இன்னும் அரைமணி நேரத்துல வக்கீல் வருவார். விண்ணப்பத்துல கையெழுத்து போடு...”மித்யா பதில் பேசவில்லை. சலிப்புடன் கண்மூடி சோபாவில் சாய்ந்து கொண்டாள். பிறந்த வீட்டில் இப்படி ரிலாக்ஸாக இருப்பது கூட சுகம்தான். அங்கு எந்நேரமும் ரமணி பின்னால் ஓடிக்கொண்டே இருப்பாள். குழந்தையுடன் விளையாடுவது போல் இருக்கும். அவளைத் தூங்க விட மாட்டான்.

நள்ளிரவில் எழுப்பி விளையாட வா என்பான்.அவனுடன் ஆறு மாதங்கள் வாழ்ந்த வாழ்க்கை ஒரு மங்கிய கனவு. அது கூட நாள் கணக்குதான். பத்து நாட்கள் ஒன்றாய்த் திரிந்தார்கள். அதற்குள் அவனுக்கு தில்லியில் ஒரு டிரெய்னிங். போய்விட்டு மூன்று மாதம் கழித்து வந்தான். பிறகு ஆடி என்று பிரித்து வைத்து, விபத்து நடக்கும் ஒருவாரம் முன்புதான் தனிக் குடித்தனம் என்று இந்த வீட்டுக்கு வந்தது.

ஊட்டி போகும்போது அவனிடம் எத்தனை கனவுகள்? பேச்சுகள். உற்சாகம். அதெல்லாம் எங்கு போனது? திரும்பி வரும் என்று நம்பிக்கையுடன் இருக்கிறாள். வராது என்கிறான் அண்ணா. டாக்டர் சொல்வது பலிக்குமா? நம்பிக்கை பலிக்குமா?
மித்யாவுக்கு புரியவில்லை. ஆனால் அண்ணாக்களின் ஆதங்கம் நியாயம் என்று புரிந்தது. என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
“என்னம்மா பதிலே பேசாம இருக்கே?”

“நீங்க சொல்றது சரிதான். ஆனா, ரமணி நான் இல்லாம இருக்க மாட்டாரே...”
“அதெல்லாம் பழகிடும். அவனுக்குத் தேவை விளையாட ஒரு ஆள்...”“தன் மனைவியைக் காணோம்னு தேட மாட்டாரா?”
“நீதான் அவன் மனைவின்னு அவனுக்குத் தெரியப் போகுதா?”“ஆனா, எனக்குத் தெரியுமே அண்ணா...” மித்யாவின் குரல் கலங்கியது. அதற்கு மேல் பேசத் தெரியாமல் கண்ணீர் வழிய நின்றாள். அவளின் மனதை அந்த ஒரு சொல் விளக்கி விட்டது.
பெரிய அண்ணா தாவி அவளை அனைத்துக் கொண்டார்.

“எதுவும் சொல்ல வேண்டாம்மா. புரிஞ்சுண்டேன். டேய்  காரை எடுத்துட்டு போய் ரமணியைக் கூட்டிண்டு வா. பொண்ணும், மாப்பிள்ளையும் சேர்ந்து இங்க சாப்பிடட்டும்...”சின்ன அண்ணா காரை எடுக்க ஓடினார். அண்ணி ஆறுதலாக அவளை கை பிடித்துக் கொண்டாள்! l

ரெண்டு!

மலையாள ‘கும்பளாங்கி நைட்ஸ்’ ஹீரோயின் அன்னா பென், அடுத்து சர்வைவல் த்ரில்லரான ‘ஹெலனி’ல் மிரட்டி இருக்கிறார்.
‘‘மொத்தம் ரெண்டு படத்துலதான் இதுவரை நடிச்சிருக்கேன். ஆனா, என்னோட ஒர்க் பார்த்து பாராட்டுகள் நிரம்பி ததும்புறது எனக்கே ஆச்சரியமாவும், சந்தோஷமாவும் இருக்கு. தொடர்ந்து நல்ல படங்கள் செலக்ட் பண்ணணும்னு பொறுப்பை கொடுத்திருக்கு...’’ என்கிறார் அன்னா.

டிக்டாக் கவுரவம்!

ராதாமோகனின் ‘கௌரவம்’ ஹீரோயின் யாமி கௌதம், இப்போது பாலிவுட்டில் பச்சக்கென ஒட்டிக்கொண்டுவிட்டார். இந்தியில் அவர் நடித்த லோ-பட்ஜெட் படமான ‘பாலா’வுக்கு செம ரெஸ்பான்ஸ் கிடைத்ததில், பொண்ணு ஹேப்பியோ ஹேப்பி. டிக்டாக்கிலும் கில்லியாக கலக்கும் யாமி, சமீபத்தில் இந்தியாவிலுள்ள டிக்டாக் நிறுவனத்திற்கே விசிட் அடித்து மகிழ்ந்திருக்கிறார்!

இந்தியாவை சுத்திப் பார்க்கப் போறேன்!

‘பிரம்மன்’, ‘மாயவன்’ என தமிழில் தடதடத்த லாவண்யா திரிபாதி, சமீபத்தில் ஜெய்ப்பூர் பக்கம் உள்ள புஷ்கர் நகருக்கு விசிட் அடித்து திரும்பியிருக்கிறார். அங்கே ரோட்டோர தாபாக்களில் விரும்பியதை ஆர்டர் செய்துருசித்து மகிழ்ந்திருக்கிறார். ‘‘புஷ்கர் போயிட்டு வரணும்கறது ரொம்ப வருஷத்து கனவு. இப்பத்தான் நனவாயிருக்கு. இதேபோல இந்தியாவில் பல இடங்களுக்கும் விசிட் அடிக்கணும்னு தோணியிருக்கு...’’ என்கிறார் லாவண்யா!

அடா... அதகளம்!

இந்தியில் ரிலீஸான ‘கமாண்டோ 3’யில் ஆக்‌ஷன் குயினாக அசத்தியிருக்கிறார் ‘சார்லி சாப்ளின் 2’ அடா சர்மா. ‘‘ஆக்‌சுவலா நான் ஒரு டான்ஸர். ‘கமாண்டோ’வுக்காக மார்ஷியல் ஆர்ட்ஸ் கத்துக்கிட்டேன். படத்துல பைக் சேஸிங்கிலும் அசத்தியிருக்கேன்...’’ என அதகளமாகிறார் அடா!

*ஜி.ஏ.பிரபா