நீங்கள் இந்தியாவின் குடிமகன் தான் என நிரூபியுங்கள்! சர்ச்சையை கிளப்பும் என்ஆர்சி



திடீரென்று ‘நீங்கள் இந்திய நாட்டின் குடிமகன்தான் என்பதை நிரூபியுங்கள்’ என்று உங்களிடம் சொன்னால் எப்படி இருக்கும்..?
 பதற்றம் ஏற்படுமில்லையா? அப்படித்தான் கடந்த ஆகஸ்ட் மாதம் அசாம் மாநில மக்கள் நிலைகுலைந்து போனார்கள்.தங்களை நிரூபிப்பதற்காக தேசிய குடிமக்கள் பதிவு (என்ஆர்சி) தொடர்பான விசாரணைக்கு அம்மாநில மக்கள் சென்றார்கள். அவர்களில் ஒருவர்தான் விவசாயியான ஹனிப் அலி. தன்னுடைய அச்சல்பாரா கிராமத்தில் இருந்து 450 கி.மீ தொலைவில் இருக்கும் மையத்துக்கு, தன் குடும்பத்தினர் 14 பேருடன் சென்று திரும்பினார்.

வருகிற வழியில் ஹனிஃப் அலி விபத்தில் சிக்கி மரணமடைந்தார். அதேநேரம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் ஹனிஃப் அலி பெயர் இடம்பெற்றதாக தகவல் வந்தது! ஹனிஃப் அலி ஓர் இந்திய குடிமகன் என்று உறுதியானாலும் கூட, இன்று அவர் இவ்வுலகில் இல்லை என்பதே சோகத்தின் உச்சகட்டம்.

3,30,27,661 பேர் என்ஆர்சி பட்டியலில் சேர விண்ணப்பித்த நிலையில், 3,11,21,004 பேர் மட்டுமே இறுதிப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். கிட்டத்தட்ட 19 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். இந்த 19 லட்சம் பேரும் நாடற்றவர்களாக அறிவிக்கப்படும் அபாயம் இருப்பதால் அசாமில் பதற்றமும், பீதியும் நிலவுகிறது.

முன்னதாக, என்ஆர்சி பணிகள் குறித்து அசாம் மாநில சட்டப்பேரவையிலும், பேரவைக்கு வெளியிலும் சிலர் விமர்சித்ததாக அதன் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹஜேலா உச்சநீதிமன்றத்தில் தெரிவித்தார். அதற்கு உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு, ‘நீதிமன்றம் அளிக்கும் தீர்ப்புகளும், உத்தரவுகளும் எப்போதும் விவாதத்துக்கும், விமர்சனங்களுக்கும் உட்பட்டவையே. என்ஆர்சி பதிவேட்டை யார் விரும்புகிறார்கள்... யார் விரும்பவில்லை என்பது பற்றி எங்களுக்குக் கவலையில்லை. திட்டமிட்டபடி, ஆகஸ்ட் 31ம் தேதி இறுதிப் பட்டியல் வெளியிட வேண்டும்’ என்றது.

அதன்படியே இறுதிப்பட்டியல் வெளியாகி 19 லட்சம் பேர் பட்டியலில் இடம்பெறாமல் போயினர்.இதில் உள்நோக்கம் உள்ளதாக மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட தலைவர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பட்டியலில் நீக்கப்பட்டவர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டு, அவர்களை இந்தியாவில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு திட்டமிட்டு வருவதாக பரவலாக பேச்சு எழுந்தது.

இதை உறுதி செய்யும் வகையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ‘‘வங்கதேசத்தில் இருந்து இங்கு ஊடுருவியவர்கள் கரையான் போன்றவர்கள். அவர்கள் நாட்டின் வளங்களை சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அவர்களை வெளியேற்றுவோம்...’’ என்று மேற்குவங்க தேர்தல் பிரசாரத்தில் அப்போது பேசினார்.

அவரின் கூற்றுப்படியே மத்தியில் பாஜக அரசு அமைந்ததால் என்ஆர்சி இறுதிப்பட்டியலில் இடம்பெறாத 19 லட்சம் பேரை இந்தியர் அல்லாதோர் பட்டியலில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தில் பாஜக நினைத்தது நடந்து விட்டதால் இதேபோல் நாடு முழுவதும் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் நபர்களை என்ஆர்சி முறையில் அடையாளங்கண்டு அவர்களையும் இந்தியாவில் இருந்து வெளியேற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

அதற்கேற்ப, ‘‘உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி அசாமில் என்ஆர்சி கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. அதேபோல், நாடு முழுவதும் என்ஆர்சி கணக்கெடுப்பு நடத்தப்படும். என்ஆர்சி-யும், குடியரிமைச் சட்டத் திருத்த மசோதாவும் வெவ்வேறானவை. மதரீதியான தாக்குதல்களை எதிர்கொண்டு அண்டை நாடுகளில் இருந்து இடம்பெயர்ந்து வந்தவர்களுக்கு குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதா மூலம் குடியுரிமை அளிக்கப்படும்.

என்ஆர்சி-யில் மதவேறுபாடுகள் இன்றி அனைத்து இந்திய குடிமக்களும் இடம்பெறுவர்...’’ என்று சமீபத்தில் மாநிலங்கள் அவையில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா தெரிவித்திருக்கிறார். முந்திய பாஜக கூட்டணி ஆட்சியின்போது மக்களவையில் நிறைவேற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத் திருத்த மசோதாவை (சிஏபி) மாநிலங்களவையில் நிறைவேற்ற முடியவில்லை. அதனால், இப்போதைய கூட்டத் தொடரில் இந்த மசோதாவை நிறைவேற்றுவதற்கு மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.

எனினும், வடகிழக்கு மாநிலங்களைச் சேர்ந்த அரசியல் தலைவர்களும், மாணவ அமைப்புகளும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனை அடுத்து கடந்த நவம்பர் 29, 30ம் தேதிகளில் வடகிழக்கு மாநில பிரதிநிதிகளுடன் அமித் ஷா ஆலோசனை நடத்தினார். திரிபுரா, மிஸோரம், அசாம், அருணாசலப் பிரதேசம், மேகாலயா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்த மாநில முதல்வர்கள் மற்றும் பிரதி
நிதிகள் இதில் பங்கேற்றனர்.

‘குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவை அமல்படுத்துவதால், வடகிழக்கு மாநிலங்களில் வசிக்கும் பழங்குடிச் சமூகத்தினர் வெகுவாக பாதிக்கப்படுவர்’ என்று ‘போடோ’ மாணவர் சங்கம் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கு, ‘இந்த திருத்த மசோதாவினால், பாதுகாக்கப்பட்ட வரம்புக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பழங்குடிச் சமூகத்தினரும், பூர்வ குடிகளும் பாதிக்கப்பட மாட்டார்கள்’ என்று அமித் ஷா உறுதியளித்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 1955ம் ஆண்டு இயற்றப்பட்ட குடியுரிமைச் சட்டத்தில், ‘பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய நாடுகளில் இருந்து மத ரீதியிலான துன்புறுத்தல்களால் குடிபெயர்ந்து 12 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தியாவில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர், பௌத்தர், சமணர், பார்ஸி, கிறிஸ்தவர் ஆகியோருக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம்’ என்றிருந்தது.

இப்போது உரிய ஆவணங்கள் எதுவுமில்லை என்றாலும், இந்தியாவில் ெதாடர்ந்து 7 ஆண்டுகள் வசித்தாலே அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்க குடியுரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. என்ஆர்சி ஆகட்டும், சிஏபி ஆகட்டும் இரண்டும் ஒன்றுதான். குறிப்பிட்ட சமூகத்தினரைக் குறிவைத்து அவர்களை வெளியேற்றவே, மத்திய பாஜக அரசு திட்டங்களை வகுத்து வருவதாக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், மா.கம்யூ உள்ளிட்ட அரசியல் கட்சிகள்  எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

என்ஆர்சி - சிஏபி என்று, இந்திய குடியுரிமை விவகாரம் ஒருபக்கம் இருக்க, என்ஆர்சி கணக்ெகடுப்பு நடந்ததில் மிகப்பெரும் முறைகேடு நடந்துள்ளதும் இப்போது அம்பலமாகி உள்ளது.அதன் நீட்சியாகத்தான், என்ஆர்சியின் முன்னாள் ஒருங்கிணைப்பாளர் பிரதீக் ஹ ேஜலா மீது, கடந்த நவம்பர் கடைசி வாரத்தில் சிபிஐ-யின் ஊழல் தடுப்புப் பிரிவு வழக்குப்பதிவு செய்தது.

குற்றம்சாட்டப்பட்ட பிரதீக் ஹ ேஜலா, என்ஆர்சி கணக்கெடுப்புக்காக ஒதுக்கப்பட்ட ரூ.1,600 கோடியில் கைவரிசை காட்டி உள்ளார் என்பதை மத்திய கணக்கு தணிக்கை குழு (சிஏஜி) தனது ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது. அதாவது, அவர் என்ஆர்சி கணக்கெடுப்பின்போது ஏராளமான பள்ளி ஆசிரியர்கள், தன்னார்வலர்களை நியமித்துள்ளார்.

பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட ரூ.22,500 மதிப்புள்ள லேப்டாப்புக்கு ரூ.44,500 ‘பில்’ வைத்துள்ளார். கிட்டத்தட்ட 10,000 லேப்டாப்புகள் வாங்கப்பட்டன. மேலும், ஜெனரேட்டர் உள்ளிட்ட ஸ்டேஷனரி பொருட்கள் வாங்கியதிலும் பெரும் ஊழல் நடந்துள்ளது. வேலை செய்தவர்களுக்கு சம்பளம் கூட சரியாகத் தரவில்லை.

இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட ரூ.1600 கோடிக்கான செலவு விவரங்களைக் கேட்டபோது, தனக்கு கொலை மிரட்டல் வருவதாகவும், அதனால், தான் தீக்குளித்து தற்கொலை செய்து கொள்வதாகவும் பிரதீக் ஹ ேஜலா மிரட்டல் விடுத்தார். இவ்விவகாரம் உச்சநீதிமன்றம் வரை சென்றதால், அவர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு அசாமில் இருந்து மத்தியப்பிரதேசத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டார்.

பாஜகவின் அரசியல் பிரசாரப் பட்டியலில் இருந்த முத்தலாக் சட்டம், காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து ரத்து, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுதல் போன்ற இலக்குகள் அக்கட்சிக்கு சாதகமாக முடிந்துள்ளன. இந்நிலையில், 2024 மக்களவைத்தேர்தலில் புதிய தேசிய குடிமக்கள் பதிவு கணக்கெடுப்பு பிரசாரத்தை அக்கட்சி கையில் எடுக்க முடிவு செய்திருக்கிறது.நிச்சயம் இது நாடு தழுவிய அளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்!                
என்ஆர்சி 1950 முதல் 2019 வரை

1950: கிழக்கு பாகிஸ்தானில் (இன்றைய வங்கதேசம்) இருந்து அதிக எண்ணிக்கையில் அசாமுக்கு மக்கள் வந்ததால், அகதிகள் சட்டம் அமலுக்கு வந்தது.
1951: முதலாவது மக்கள் தொகை கணக்கெடுப்பில் என்ஆர்சி தொகுக்கப்பட்டது.
1957: அகதிகள் சட்டம் ரத்தானது.
1964 - 65: கிழக்கு பாகிஸ்தானில் இருந்து மீண்டும் அகதிகள் அதிக எண்ணிக்கையில் வந்தனர்.
1971: பாகிஸ்தானின் பிடியில் இருந்த கிழக்கு பாகிஸ்தான் அந்நாட்டிடம் இருந்து விடுபட்டு வங்கதேசம் உருவானது.
1979 - 1985: வெளிநாட்டினரைக் கண்டுபிடித்து வெளியேற்றக்கோரி 6 ஆண்டுகள் போராட்டம் நடந்தது.
1983: அசாமின் மத்தியப் பகுதி
யில் நடைபெற்ற இனப்படுகொலையில் 3,000-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். தொடர்ந்து சட்ட
விரோத அகதிகள் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
1985: முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி முன்னிலையில் மத்திய - மாநில அரசு, ஏஏஎஸ்யு, ஏஏஜிஎஸ்பி இடையே ஏற்பட்ட ஒப்பந்தத்தில் 1971 மார்ச் 25ம் தேதிக்குப் பிறகு அசாமில் குடியேறிய வெளிநாட்டினர் வெளியேற்றப்படுவர் என்று உறுதி செய்யப்பட்டது.
2005: சட்டவிரோத அகதிகள் சட்டம் செல்லாது என்று உச்சநீதிமன்றம் அறிவித்தது.
2009: என்ஆர்சி பட்டியலை மேம்படுத்தக்கோரி உச்சநீதிமன்றத்தில் அசாம் பொதுப் பணிகள் அமைப்பு வழக்கு தொடர்ந்தது.
2013: என்ஆர்சி பட்டியலை மேம்படுத்த மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
2015: என்ஆர்சி பட்டியலை மேம்படுத்தும் பணி தொடங்கியது.
2017: என்ஆர்சி வரைவுப் பட்டியலின் ஒரு பகுதி வெளியானது.
2018: ஜூலை 30: என்ஆர்சி வரைவுப் பட்டியலின் மற்றொரு பகுதி வெளியானது.
2019: ஜூன் 26: கூடுதல் வரைவு நீக்கப்பட்டோர் பட்டியல் வெளியிடப்பட்டது.
2019: ஆகஸ்ட் 31: என்ஆர்சி இறுதிப் பட்டியல் வெளியானது.

செ.அமிர்தலிங்கம்