இயக்கம் to நடிப்பு



*ஈ.ராமதாஸ்

ராமராஜனின் ‘ராஜா ராஜாதான்’, ‘நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு’, மோகனின் ‘ஆயிரம் பூக்கள் மலரட்டும்’, மன்சூரலிகானின் ‘ராவணன்’, ‘வாழ்க ஜனநாயகம்’ போன்ற படங்களில் இயக்குநராகவும், ‘ராஜமுத்திரை’, ‘இனி எல்லாம் சுகமே’ ‘சங்கமம்’, ‘கண்ட நாள் முதல்’ என பல படங்களில் ரைட்டராகவும் ஜொலித்தவர் ஈ.ராமதாஸ்.

‘‘மணிவண்ணன் சார்கிட்ட அசிஸ்டென்டா இருந்தப்ப மாமன், மச்சான்னு சின்னச் சின்ன ரோல்கள்ல நடிக்க வச்சிடுவார். ‘நடி, பின்னாடி உனக்கு பெரியளவுல  யூஸாகும்’பார். இப்ப அது உண்மையாகிடுச்சு. என்னை தொழில்முறை நடிகனா மாத்தினவர் இயக்குநர் சரண்.

‘வசூல் ராஜா எம்.பி.பி.எஸ்’ல கம்பவுண்டர் ரோல் கொடுத்தார். அதுல கமலுக்கே அட்மிஷன் போடுவேன். அப்புறம் ‘யுத்தம் செய்’, ‘விசாரணை’னு 40 படங்களுக்கு மேல நடிச்சிட்டேன்; நடிச்சிட்டிருக்கேன். எங்க போனாலும் செல்ஃபி எடுக்கறாங்க. சந்தோஷமா இருக்கு...’’ கலகலக்கிறார் ஈ.ராமதாஸ்.

*மூர்த்தி

‘கருப்பசாமி குத்தகைதாரர்’, ‘வெடிகுண்டு முருகேசன்’, ‘பப்பாளி’ படங்களின் இயக்குநர் மூர்த்தி.‘‘இயக்குநர்கள் சசி சார், எஸ்.எஸ்.ஸ்டேன்லிகிட்ட அசிஸ்டென்டா இருந்தப்ப அன்னிக்கி நடிக்க வேண்டியவங்க வரலைனா என்னை நடிக்க வைச்சுடுவாங்க. அப்படி ‘சொல்லாமலே’.

‘ஏப்ரல் மாதத்தில்’, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’ல நடிச்சிருக்கேன். நான் டைரக்ட் செஞ்ச படங்கள்லயும் தலை காட்டியிருக்கேன்.
இந்நிலைல ஒருநாள் திடீர்னு சசி சாரும், ஸ்டேன்லி சாரும் என்னை தாடி வளர்க்கச் சொல்லி, ‘பிச்சைக்காரன்’ படத்துல நடிக்க வைச்சாங்க. டிமானிட்டைசேஷனுக்குப் பிறகு அந்த காமெடி பெரிய ஹிட் ஆகிடுச்சு. அப்புறம் நிறைய படங்கள் பண்ணிட்டேன். இயக்குநராக நினைச்சேன். நடிப்பு வாய்ப்பு தேடி வருது. இப்ப நடிப்புல கவனம் செலுத்தறேன்...’’ என்கிறார் மூர்த்தி.

*கே.பி.ஜெகன்

‘புதிய கீதை’, ‘கோடம்பாக்கம்’, ‘ராமன் தேடிய சீதை’, ‘என் ஆளோட செருப்ப காணோம்’ ஆகிய படங்களை இயக்கியவர் கே.பி.ஜெகன்.
‘‘நண்பரும் இயக்குநருமான ராசு மதுரவன் கேட்டுக்கிட்டதால ‘கோரிப்பாளையம்’, ‘மாயாண்டி குடும்பத்தார்’ படங்கள்ல நடிச்சேன். அப்புறம் யார்கிட்டயும் நடிக்கற வாய்ப்பு கேட்கலை. தேடி வந்தா மறுக்காம நடிச்சுக் கொடுப்பேன்.

‘பசங்க 2’, ‘நம்ம வீட்டுப்பிள்ளை’ல பாண்டிராஜ் சார் நடிக்க வச்சார். நடிகனா இருக்கறதால கூடுதல் அடையாளம், கூடுதல் பணம் கிடைக்குது. ஆனா, நடிக்கறதால கவுரவம் குறையவும் செய்யுது. இதை தப்பா சொல்லல. ஒரு இடத்துக்கு போகும்போது, நாலு பேர் நம்மளப் பத்தி பேசினால், ‘டேய் இவன் அந்தப் படத்துல நடிச்சவன்டா’ம்பாங்க. ஆனா, ஒரு இயக்குநரைக் குறிப்பிடும் போது, ‘இவர்தான் அந்த படத்தை எடுத்திருக்கார்’னு மரியாதையா பேசிப்பாங்க!’’ யதார்த்தமாகச் சொல்கிறார் ஜெகன்.l

*ஆதிக்  ரவிச்சந்திரன்

‘த்ரிஷா இல்லேனா நயன்தாரா’, ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’ படங்களை இயக்கியவர் ஆதிக் ரவிச்சந்திரன்.
‘‘என் படங்கள்ல நான் தலையை காட்டிட்டு போயிருக்கேன். மத்தபடி நடிகனாகணும்னு விரும்பினதில்ல. முன்னாடி 120 கிலோ இருந்தேன். இப்ப எடையை குறைச்சிருக்கேன். காரணம், ‘நேர் கொண்ட பார்வை’. அதுல நடிகனானது எதிர்பாராதது.

திடீர்னு ஒரு நாள் இயக்குநர் வினோத் சார்கிட்ட இருந்து போன். நடிக்க கேட்டார். அஜித் சார் படம். மறுக்க மனசில்ல. நடிச்சேன். நல்ல பெயர் கிடைச்சது. அடுத்தும் நடிக்க ஆஃபர்ஸ் வருது. இடையே பிரபுதேவா சார் கால்ஷீட் கிடைச்சது. அவரோட படத்தை இயக்கத் தொடங்கிட்டேன். அதோட ஷூட்டும் போயிட்டிருக்கு.

இடையே ஜி.வி.பிரகாஷின் ‘காதலைத் தேடி நித்யா நந்தா’வையும் இயக்கிட்டிருக்கேன். டைரக்‌ஷன்தான் என்னோட வேலை. என் பயணமும் அதை நோக்கியே போயிட்டிருக்கு...’’ என்கிறார் ஆதிக் ரவிச்சந்திரன்!

*எஸ்.எஸ்.ஸ்டேன்லி

‘ஏப்ரல் மாதத்தில்’, ‘புதுக்கோட்டையிலிருந்து சரவணன்’, ‘மெர்க்குரிப் பூக்கள்’ ‘கிழக்கு கடற்கரைசாலை’ போன்ற படங்களை இயக்கியவர் எஸ்.எஸ்.ஸ்டேன்லி.‘‘இயக்குநராகத்தான் பயணிக்க விரும்பினேன். ஆனா, ‘பெரியார்’ல அண்ணாவா நடிக்க சத்யராஜ் சாரும், ஞானராஜசேகர் சாரும் கூப்பிட்டப்ப மறுக்க முடியல. நடிச்சேன். அப்புறம் மணிரத்னம் சார்கிட்ட ‘ராவணன்’ல ஒர்க் பண்றப்ப ஒரு கேரக்டர்ல நடிக்க கேட்டார்.

அதிலும் நடிச்சேன். அப்புறம் ‘காக்கா முட்டை’ மணிகண்டனின் ‘ஆண்டவன் கட்டளை’யில் நல்ல ரோல் தேடி வந்தது. சமீபத்துல ‘சர்கார்’லயும் பண்ணினேன். இயக்குநரா பழக்கப்பட்ட எனக்கு மேக்கப் போட்டுட்டு நம்ம ஷாட் வரும் வரை கேரவன்ல ஜூஸ், டீ, காஃபினு சாப்பிட்டுக்கிட்டே சும்மா உட்காருவது ஆரம்பத்துல செட் ஆகல. அந்த ஒர்க் மோட் பழகி வர கொஞ்சம் டைம் எடுத்தது. இப்ப நடிப்பு பழகிடுச்சு...’’ புன்னகைக்கிறார்

தொகுப்பு:மை.பாரதிராஜா