நம்மால் முடியும்- கை கொடுக்கும் கை!



“நான் விழுந்தப்ப என்னைத் தாங்கிப் பிடித்தது நம்பிக்கைதான்...”
உற்சாகத்துடன் சொல்கிறார் பிரபு என்கிற பிரபாகரன்.

13 வயதில் தென்னை மரம் ஏறி கீழே விழுந்ததில் வலது கையினை இழந்தேன் என்றவர், மாற்றுத் திறனாளி நண்பர்களை ஒருங்கிணைத்து, ‘கை கொடுக்கும் கை’ என்கிற பெயரில் நடனக் குழு ஒன்றை உருவாக்கி நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறார்.

நடன மற்றும் திரைப்பட இயக்குநரான ராகவா லாரன்ஸ் குழுவிலும் இருக்கிறார். திரைப் படங்களிலும் நடித்து வருகிறார்.‘‘விழுப்புரத்தில் இருந்து 20 கி.மீ.தொலைவில் இருக்கும் மோட்சவலம் கிராமம் என் ஊர். பெற்றோர் விவசாயக் கூலிகள். நான் வீட்டிற்கு முதல் பையன். 8வது படிக்கும்போது நண்பர்களோடு விளையாடியதில் இந்த விபத்து நேர்ந்தது. வலது கையும் காலும் பலமாக அடிபட, கால் எலும்பு உடைந்து வெளியே தெரிந்தது.

ஒரு மாதம் கோமாவில் இருந்தேன். விழுப்புரம் மருத்துவமனை மருத்துவர்கள் கை விரிக்க, பாண்டிச்சேரி ஜிப்மரில் சேர்க்கப்பட்டேன். நினைவு திரும்பியதும் சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு என் வலது கை எடுக்கப்பட்டது. ஆபரேஷன் தியேட்டருக்குள் போகும்போது கையோடு போனவன், கண் விழித்து திரும்பியபோது,  ‘கை’ இல்லை. கதறினேன். என் கதறல் வார்டில் எதிரொலிக்க, சுற்றி இருந்தவர்கள் ஆறுதல் சொன்னார்கள். மருத்துவர்களும் அறிவுரை சொன்னார்கள்.

கரும்பு வெட்டும் இடத்தில் வட்டிக்கு கடன் பெற்று என் பெற்றோர் ஒன்றரை லட்சம்வரை செலவழித்தனர். கையின்றி நண்பர்களைப் பார்க்கவும், தெருவில் நடக்கவும் வெட்கினேன். என்னைக் கொன்று விடுங்கள் என்று அழுதேன்...’’ என ஃப்ளாஷ்பேக்கை நினைவுகூரும் பிரபுவுக்கு அப்போது அவரது அம்மாதான் ஆறுதல் சொல்லியிருக்கிறார்.

‘‘கையின்றி அதே பள்ளிக்குச் செல்ல விரும்பவில்லை. விழுப்புரத்தில் இருக்கும் செயின்ட் ஜான் மாற்றுத்திறனாளிகள் உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ந்தேன். அங்கு என்னைப்போல் கை கால்கள் இல்லாத மாற்றுத் திறனாளி மாணவ மாணவிகள் இருந்தார்கள். எதார்த்தம் புரிய, இதுதான் வாழ்க்கையென மனதில் அழுத்தமாகப் பதிய வைத்தேன். துணி துவைப்பதில் துவங்கி என் வேலைகள் பலவற்றையும் கால்களால் செய்யப் பழகினேன். இடது கையால் எழுதக் கற்றுக்கொண்டேன்.

எனக்கு நடனம் ஆடுவதில் விருப்பம் இருந்தது. பள்ளி விழாவில், ‘மழைத்துளி… மழைத் துளி... மண்ணில் சங்கமம்...’ பாடலுக்கு துணியால் ஒரு காலைக் கட்டி, ஒரு காலால் ஆடினேன். நிகழ்ச்சியைப் பார்த்த பெற்றோர் உள்பட பார்வையாளர் பலரும் எழுந்து நின்று கை தட்டி அழுதனர். இன்னும் சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் எழுந்தது அப்போதுதான்!

நடன நிகழ்ச்சிகளில் தொடர்ந்து பங்கேற்று விருதுகளை வாங்கினேன். பள்ளி நிகழ்வுகளை முன்னால் நின்று ஒருங்கிணைத்தேன். +2 முடித்து வெளியில் வந்ததும் டான்ஸராக மாறி, மாற்றுத் திறனாளிகள் நடனக் குழு ஒன்றை உருவாக்க வேண்டும் என முடிவெடுத்தேன்.அப்போது இயக்குநர் ராகவா லாரன்ஸ் ‘மஸ்தானா மஸ்தானா’ என்கிற நடன நிகழ்ச்சியை சன் டிவியில் நடத்திக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து அவர் மீது மதிப்பு வந்தது. காரணம், அவர் மாற்றுத் திறனாளிகளுக்கு நிறைய உதவிக் கொண்டிருந்தார். அந்த நிகழ்ச்சியை விடாமல் பார்த்து, நானும் லாரன்ஸ் மாஸ்டர்போல் ஒரு குழுவை உருவாக்கும் கனவு கலையாமல் பார்த்துக்கொண்டேன்.

காஞ்சிபுரம் குகையில் இயக்குநர் பாலாவின் ‘நான் கடவுள்’ படப்பிடிப்பு நடந்தது. அதில் மாற்றுத் திறனாளி மாணவர்கள் 30 பேர் வேண்டுமெனக் கேட்டு, பள்ளிக்கு வந்து மாணவர்களைத் தேர்வு செய்தனர். நானும் அதில் இருந்தேன். 5 நாள் ஷூட்டிங்கில், என்னை நடிகை பூஜாவின் அருகில் வைத்து நடிப்பு வாங்கினார். அதில் எனக்கு சினிமா அனுபவம் கிடைத்தது.

விழுப்புரம் நிகழ்ச்சி ஒன்றுக்காக நடிகர் விஜய் சார் வந்தார். அப்போது ‘ஜில்லா’ படத்தில் அவர் நடித்துக் கொண்டிருந்தார். அவர் முன் டீமாக 5 நிமிடம் ஆடும் வாய்ப்பு கிடைக்க, பெரும் கூட்டத்திற்கு நடுவே ஆறு மாற்றுத் திறனாளி மாணவர்களுடன் எங்கள் நடனம் நடந்தது...’’ என்ற பிரபு, பள்ளிப் படிப்பு முடிந்ததும் நடன வாய்ப்புகளைத் தேடி அலைந்திருக்கிறார்.

‘‘அப்போது விழுப்புரம் மாவட்டத்தில் 6 இசைக் குழுக்கள் இருந்தன. அவர்களிடம் மேடை ஏற வாய்ப்புக் கேட்டேன். விக்ரம் சேட்டு என்பவருக்கு என் நடனம் பிடித்து, அவர் நிகழ்ச்சிகளில் வாய்ப்பு கொடுத்தார். நிறைய மேடைகளில் என்னை ஏற்றினார். 5 ஆண்டுகள்
அவரோடு பயணித்தேன்.

ஒரு பாட்டுக்குத்தான் ஆடுவேன். ஊதியமாக 300 தருவார். என் திறமையைப் பார்த்தவர்கள் அன்பளிப்பும் தந்தார்கள். நான் ஜெயிப்பேன் என்ற நம்பிக்கை நிறைய வந்தது. மைக் பிடிக்கவும் உடைகளைத் தேர்வு செய்யவும் குறிப்பிட்ட நேரத்துக்குள் நிகழ்ச்சியை முடிக்கவும் கற்றேன்.
நினைத்ததுபோல் மாற்றுத் திறனாளிகள் டீமை உருவாக்கினேன். வெவ்வேறு மாவட்டத்தைச் சேர்ந்த 15 பேர் குழுவில் இருக்கிறோம். இதில் இரண்டு மாற்றுத் திறனாளி பெண்களும் இருக்கிறார்கள்.

நான் படித்த விழுப்புரம் பள்ளியில் பயிற்சிக்கு இடம் கொடுத்தார்கள். சரியான வாய்ப்புகள் வரவே என் டீமை மேடை ஏற்றினேன். நிகழ்ச்சி சமூக வலைத்தளங்களில் பரவி நிறையபேருக்குத் தெரியத் தொடங்கியது. எங்கள் டீம்தான் வேண்டும் என்னும் அளவுக்கு வாய்ப்புகள் வரத் தொடங்கின.
நிகழ்ச்சிக்கான பட்ஜெட்டில் தொடங்கி, டீமை வழிநடத்துவது, அவர்களுக்கான உணவு, போக்குவரத்து, தங்குமிடம், ஊதியம் வரை பார்க்கிறேன். முதலில் டீமாக 10 ஆயிரம் கிடைத்தது. இப்போது நபருக்கு நிகழ்ச்சி ஒன்றுக்கு 5 ஆயிரம் கிடைக்கிறது. பள்ளி, கல்லூரி நிகழ்ச்சிகள், பொது நிகழ்ச்சிகள், கோயில் விழாக்கள், திருமண நிகழ்வுகளிலும் வாய்ப்பு வருகிறது. ஒரு சில அரசு நிகழ்ச்சிகளும் கிடைக்கிறது.

தொடர்ந்து லாரன்ஸ் மாஸ்டர் டீமில் இணையும் முயற்சியில் இறங்கினேன். அவர் பாண்டிச்சேரி வந்திருப்பதாக அறிந்து, அவரைச் சந்தித்தேன். அவர் டீமில் ஆடும் விருப்பத்தை தெரிவித்தேன். ஞாபகத்தில் வைத்து உதவுவதாகச் சொல்லி முகவரி மற்றும் செல்பேசி எண்களை எழுதிக்கொடுத்து போகச் சொன்னார்.

மாஸ்டரிடம் இருந்து அழைப்பே வராத நிலையில் மீண்டும் அவரைச் சந்திக்கும் முயற்சியினைக் கையிலெடுத்தேன். அவரின் வடபழனி அலுவலகம் சென்றேன். அவரது மேனேஜரிடம், என்னைப் பற்றியும் என் டீமைப் பற்றியும் சொன்னேன். தொடர் முயற்சியின் பலனாய் மாஸ்டரிடம் இருந்து அழைப்பு வந்தது.

டீமைப் பற்றிச் சொல்லி படங்களையும், வீடியோவையும் காண்பித்தேன். பொறுமையாகப் பார்த்தார். என்மீது நம்பிக்கை வைத்து, ‘எப்போது அழைத்தாலும் சென்னைக்கு வரணும்’ என்றார். அனைவரையும் பாஸ்போர்ட் எடுக்கச் சொன்னார்.

எங்களின் முதல் ஷோ லாரன்ஸ் மாஸ்டரின் தம்பி எல்வின் வினு சாருடன் இணைந்து நடந்தது. பார்வையாளர்கள் பகுதியில் க்ளாப்ஸ் பறக்க, கேலரியில் இருந்த லாரன்ஸ் மாஸ்டர் மேடை ஏறிவந்து எங்களைக் கட்டி அணைத்து பாராட்டினார். அனைவரும் எழுந்து நின்று ஆர்ப்பரித்தனர்.
தொடர்ந்து மாஸ்டர் எங்களுக்கு ஷோக்களை கொடுக்கத் தொடங்கினார். இப்போது எங்கள் டீம் இல்லாமல் லாரன்ஸ் மாஸ்டரும், எல்வின் வினு சாரும் ஷோக்களை நடத்துவதில்லை எனும் நிலைக்கு மாறியிருக்கிறோம்!  

சூப்பர் ஸ்டார் ரஜினிக்காக, லாரன்ஸ் மாஸ்டரே கோரியோகிராஃப் செய்து எங்களை ஒரு ஷோ பண்ண வைத்தார். முன் வரிசையில் ரஜினி சார், தனுஷ் சார், மற்றும் திரையுலக பிரபலங்கள் பலர் அமர எங்கள் நிகழ்ச்சி சிறப்பாக நடந்தது. நிகழ்ச்சி முடிந்ததும் எழுந்து நின்று கை தட்டிய ரஜினி சார், மேடைக்கே வந்து அனைவருக்கும் தனித்தனியாகக் கை கொடுத்து, எங்களுடன் குரூப் போட்டோ மற்றும் செல்ஃபி எடுத்த பிறகே கீழிறங்கினார்.

ராகவா மாஸ்டர், சூப்பர் ஸ்டாரை எல்லாம் அருகில் பார்க்க முடியுமா என நினைத்த நிலையில், அவர்களே எங்கள் பக்கத்தில் நின்றபோது அந்த பிரமிப்பை விவரிக்க வார்த்தைகள் இல்லை...’’ நெகிழும் பிரபு, இதுவரை 15க்கும் மேற்பட்ட பிரமாண்ட ஷோக்களை லாரன்ஸ் மாஸ்டர் உதவியால் நடத்தி விட்டார். ‘‘எந்த நிகழ்ச்சி வந்தாலும் நாங்கள் விடுவதில்லை. தெருவில் இறங்கி ஆடு என்றாலும் ஆடுவோம்!’’ நெஞ்சை நிமிர்த்திச் சொல்லும் பிரபு, இப்பொழுது ‘காஞ்சனா 3’ல் லாரன்ஸ் மாஸ்டருடன் நடித்திருக்கிறார்.

‘‘மாஸ்டர் இதை மேடையில் சொன்னதும் நிறைய கை தட்டல்கள் எனக்குக் கிடைத்தது. படத்தின் இசை வெளியீட்டு விழாவில் எங்கள் நிகழ்ச்சியும் இருந்தது. அந்நிகழ்ச்சி சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானபோது, என் குடும்பமும், நண்பர்களும், ஊர் மக்களும் என் வளர்ச்சியை டி.வி.யில் பார்த்து வியந்தார்கள்.

இதுவரை சன் டிவியில் 6 ஷோ வரை கொடுத்துவிட்டேன். தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழியிலுமே நிகழ்ச்சிகள் கொடுத்தாச்சு. மலையாளத்தில் ஒரு படமும் செய்துவிட்டேன், இரண்டு தமிழ்ப் படத்தில் கமிட்டாகி இருக்கிறேன்...’’ எனப் புன்னகைக்கிறார்.‘‘மாற்றுத் திறனாளிகளின் அடிப்படைக் கஷ்டம் என்னவென எனக்கு நன்றாகவே தெரியும்.

எங்கள் ஷோவைப் பார்க்கும் எந்த மாற்றுத் திறனாளியும் முடியாது என்கிற வார்த்தையை இனி சொல்லவே கூடாது! மாற்றுத் திறனாளி நண்பர்கள் யாருக்காவது நடனமாட விருப்பம் இருந்தால் என்னைத் தொடர்பு கொள்ளலாம்!’’ கம்பீரமாக அறிவிக்கும் பிரபுவின் கனவு, மாற்றுத் திறனாளிகளுக்கான நடனப் பள்ளி ஒன்றை உருவாக்குவது!  

மகேஸ்வரி

ஆ.வின்சென்ட் பால்