கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் -29



உயர் பதவியும் வெற்றியும் அள்ளித்தரும்
திருசேறை சாரநாத பெருமாள்!

மாலை வேளை. நாகராஜனின் வீட்டில் மதுரமான தமிழ் கானம் ஒலித்தது. அந்த இசையில் நாகராஜன், ஆனந்தவல்லி தம்பதியரின் பக்தியும் இழைந்தோடியது.

அவர்களது இனிமையான கானத்தை உள்வாங்கி, கண்ணனும் அழகாக அவர்கள் கூடவே பாடிக் கொண்டிருந்தான். நாகராஜனின் ஞான போதனையால் கவரப்பட்டு அவரது சீடனாகவே இப்போது மாறியிருந்தான். தினமும் தேவாரம், திவ்ய பிரபந்தம் என்ற அமுதை அவனுக்கு அள்ளி அள்ளி அவர் ஊட்டினார். கூடவே அந்த தமிழ் பாமாலைகளில் உள்ள சுவையான அர்த்தங்களையும்.
இன்றும் அதுபோலவே வகுப்பு நடந்துகொண்டிருந்தது.‘‘கண் சோர வெம் குருதி வந்து இழிய வெம் தழல்போல் கூந்தலாளைமண் சேர முலை உண்ட மா மதலாய்! வானவர்தம் கோவே! என்றுவிண் சேரும் இளந் திங்கள் அகடு உரிஞ்சு  மணி மாடம் மல்கு செல்வத் - தண் சேறை எம் பெருமான் தாள் தொழுவார் காண்மின் என் தலைமேலாரே...’’என்ற திருமங்கை ஆழ்வாரின் ஞானத் தமிழை கண்ணனுக்கு உபதேசித்தார் நாகராஜன்.இந்தப் பாடலை பாடும் போதே அவரது முகத்தில் பக்தியால் ஏற்பட்ட ஆனந்த நிலை தெரிந்தது. அவரது இதழில் இள நகை அரும்பியது.

அதை கண்ணன் கவனிக்கத் தவறவில்லை. ‘‘நீங்க இப்படி உணர்ச்சி வசப்படுவதை பார்த்தா இந்த பாசுரத்துக்கு பின்னாடி ஒரு சுவாரஸ்யமான சம்பவம் இருக்கும் போல தெரியுதே... அது என்னன்னு சொல்லுங்க தாத்தா...’’ நாகராஜன் மெல்ல நகைத்தார். ‘‘கண்ணா! திருவாரூர் பக்கத்துல இருக்கிற திருசேறை  சாரநாத பெருமாள் மேல திருமங்கை ஆழ்வார் பாடின பாசுரம் இது... பகவத் பக்தர்களோட பெருமையை சொல்லக்கூடிய பாசுரம்...’’‘‘சாரநாத பெருமாளா? பேரே அமர்க்களமா இருக்கே தாத்தா!’’

‘‘பேரு மட்டுமில்ல கண்ணா... அந்த பேருக்கு பின்னாடி இருக்கிற கதையும் அமர்க்களமானது தான். அதுமட்டுமில்ல... ஒரு மிகப்பெரிய கஷ்டத்தைப் போக்கும் சக்தியும் அந்தப் பெருமாளுக்கு உண்டு! அதை தாத்தா சொல்லுவார்...’’ புன்னகைத்தபடி தன் கணவர் நாகராஜனை ஏறிட்டாள் ஆனந்தவல்லி. தலையசைத்தபடி நாகராஜன் சொல்லத் தொடங்கினார்...

வான மார்க்கத்தில் விந்திய மலைக்கு அருகில் பறந்து கொண்டிருந்தது அந்த விமானம். அசாத்திய வேகத்துடன் சென்று கொண்டிருந்த அந்த விமானம் நுணுக்கமான வேலைப்பாடுகளுடன் சுவர்ணமயமாக ஜொலித்தது. விஸ்வாவசு என்ற கந்தர்வ ராஜனைச் சுமந்து, உலா வந்து கொண்டிருந்தது அந்த தேவ விமானம். அந்த விமானத்தின் எழிலுக்கு சற்றும் சளைக்காமல் தங்க வைர ஆபரணங்களோடு அவனும் பிரகாசித்தான். கம்பீரமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அவனது விழிகள் ஓர் இடத்தில் நிலைத்தன.  

விந்திய மலையின் அடிவாரத்தில் ஏழு நங்கைகள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அதைக் கண்டதும் ஆச்சரியத்தின் உச்சிக்கே சென்றான். ‘‘சாரதியே! அங்கு விளையாடுவது யார் என்று தெரிகிறதா?’’‘‘இல்லையே பிரபோ...’’ விமானத்தைச் செலுத்தியபடியே சாரதி பதிலளித்தான்.

‘‘நன்கு கவனி... வளைந்து வளைந்து துள்ளி அவர்கள் விளையாடுவது நதியின் நீரோட்டத்தைப் போல் இல்லை? அது மட்டுமா? ஜலஜல என்னும் அவர்கள் சிலம்போசையும், கலகல என்னும் அவர்கள் சிரிப்போசையும், கண்ணாடி வளையோசையும் நதி நீரின் சலசலப்பை ஒத்திருக்கிறது பார்!’’ விஸ்வாவசுவின் குரல் உத்தரவிடும் த்வனியில் இருந்தது.

சாரதி நன்கு கவனித்த பிறகு சொன்னான். ‘‘ஆமாம் சுவாமி! அவர்கள் பெண்கள் இல்லை... இந்த வையகத்தை வாழ்விக்கும் நதி தேவதைகள்! இவர்கள் அனைவரையும் ஒரே சமயத்தில் காண்பதே மகா புண்ணியம் சுவாமி!’’‘‘பார்த்தால் மட்டும் போதுமா! அவர்கள் பாதத்தில் விழுந்து நம் பாவத்தை போக்க வேண்டாமா? உடன் விமானத்தை தரையிறக்கு!’’ ஆணையிட்டான் கந்தர்வன்.

விமானமும் தரையிறக்கப்பட்டது. விஸ்வாவசு கம்பீரமாக விமானத்தை விட்டு இறங்கி நதி நங்கைகள் விளையாடும் இடத்தை பக்தியுடன் வலம் வந்தான். கை இரண்டையும் குவித்து வணங்கி, தரையில் விழுந்து சேவித்து பின் அவர்களது தனிமையைக் குலைக்காமல் அகன்றான்.

அவன் சென்றதை பார்த்துக்கொண்டே இருந்த கங்கை, “பார்த்தீர்களா என் பெருமையை. கந்தர்வ ராஜனே என்னை வணங்கிவிட்டுச் செல்கிறான்!’’ என்றாள். ஒய்யாரமாக ஒரு மரத்தில் சாய்ந்தபடி அவள் சொன்ன விதமே அலாதியாக இருந்தது.

‘‘ஜகத் பிதா வாசுதேவனின் பாத தீர்த்தம் என்ற ஆணவத்தில் பேச வேண்டாம் கங்கா! எந்த மாயவனின் பாதத்தில் இருந்து நீ உதித்தாயோ, அந்த கேசவன் கிருஷ்ணாவதாரம் எடுத்து எனது கரையில் நித்தம் ஓர் அற்புத லீலை நடத்தினான் என்பதை மறந்து விடாதே! ஆகவே சூர்ய புத்ரி, யம தர்ம ராஜ சகோதரி, யமுனை, நானே சிறந்தவள்! விஸ்வாவசுவின் நமஸ்காரம் என்னையே சேரும்!’’ கண்டிப்பான குரலில் சொன்னாள் யமுனா.

‘‘கவுதம மகரிஷியின் மீது பொய்யாக கோ ஹத்தி தோஷப் பழி சுமத்தப் பட்ட போது, அவரது பழியைப் போக்க மகாதேவனால் படைக்கப்பட்ட இந்த கோதாவரியும் இங்கு இருக்கிறாள் என்பதை நீங்கள் யாரும் மறந்துவிட வேண்டாம்!’’ கோதாவரியின் குரலில் கம்பீரம் கரை புரண்டு ஓடியது.
‘‘இங்கே பாருங்களடி! நான் சாட்சாத் அந்த நாமகளின் அம்சம். அதை யாரும் மறந்து விட வேண்டாம்!’’ சரஸ்வதி கொந்தளித்தாள்.

இப்படியே பேச்சு வளர்ந்தது. சாதாரண ஒரு விஷயம் மிகப் பெரிய போட்டியாக உருவெடுத்தது. இறுதியாக உலகை படைக்கும் பிரம்ம தேவனிடமே சென்று நதிகளில் யார் சிறந்தவர் என்று அறிந்துகொள்ள வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டது. ஏழு நதிகளும் தங்களில் யார் சிறந்தவர் என்பதை அறிய பிரம்ம லோகத்தை நோக்கி பயணப்பட்டார்கள்.

பி ரம்ம லோகத்தை அவர்கள் நெருங்கி விட்டதை அவர்கள் காதில் விழுந்த வாணியின் வீணா நாதம் உணர்த்தியது. கலைமகளின் வீணையில் ஒலித்த கல்யாணி ராகம் ஏழு நதிகளையும் வரவேற்றது போல இருந்தது.பிரம்ம லோக நந்தவனத்தில் பூத்த பூக்கள் அழகாக சாலையில் விழுந்திருந்தது. அது அந்த வனமே நதிகளின் பாதத்திற்கு அஞ்சலி செய்தது போல இருந்தது. ஆனால், இத்தனையும் அவர்களது மனதை மயக்கவோ மாற்றவோ இல்லை. அவர்கள் அனைவரின் மனதிலும் தானே ஜெயிக்க வேண்டும் என்ற எண்ணம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்தது.

அன்னம் போல நடையிட்டு பிரம்ம தேவனின் சபையில் நுழைந்த அவர்களை கவனிக்கத் தவறவில்லை பிரம்மன். அவருக்குத்தான் திசைக்கு இரண்டு கண்கள் இருக்கிறதே! அவர் கவனிக்கவில்லை என்றால்தான் ஆச்சரியம்!‘‘வரவேண்டும்... வரவேண்டும் நதி நங்கைகளே! தங்கள் வரவு நல்வரவாகுக! தங்கள் வரவால் இன்று பிரம்ம லோகமே சுத்தி பெற்றது என்பதில் எள்ளளவும் ஐயமில்லை!’’ என்று பிரம்மன் உபசார வார்த்தைகளை மொழிந்தார்.

‘‘உலகைப் படைக்கும் உன்னத பொறுப்பில் இருக்கும் ஹே பிரம்மனே! தங்கள் தவத்தைப் போலவும் படைப்பைப் போலவும் தங்களது வாக்கும் எழில் மிகுந்திருக்கிறது. நாரணனின் மகன் இவ்வாறு பேசவில்லை என்றால்தான் விந்தை...’’ ஒரே குரலில் சொன்ன நதிகளின் குரல் வாணியின் வீணா நாதத்தோடு சேர்ந்து இனிமையாகக் கேட்டது.

‘‘சொல்லுங்கள் நதிகளே! என்னால் ஆகவேண்டியது என்ன?’’ பிரம்மன் விஷயத்திற்கு வந்தார்.‘‘பிரம்மனே! எங்களுக்குள் ஒரு போட்டி. அதாவது யார் எங்களில் சிறந்தவர் என்னும் போட்டி. இந்தப் போட்டிக்கு சரியான தீர்ப்பு வழங்க தங்களால்தான் முடியும். ஆகவே சொல்லுங்கள், எங்களில் யார் சிறந்தவர்..?’’ முன்னே இருந்த கங்கை ஒய்யாரமாகக் கேட்டாள்.

‘‘நாரணனின் பாத கமலத்தில் நான் அபிஷேகித்த ஜலம் அல்லவா நீ. கங்கா! ஜகத் பிரபுவான அவனது  பாத சம்பந்தம் உடைய நீயே சிறந்தவள். அது மட்டுமா? பரமேஸ்வரன் விரும்பி சூடும் சிகை ஆபரணம் அல்லவா நீ! ஆக உனக்கு மும்மூர்த்திகளின் சம்பந்தமும் உண்டு. எனவே நீயே சிறந்தவள்!’’ பிரம்மன் தனது நான்கு நாவாலும் சற்றும் தாமதிக்காமல் பதில் சொன்னார்.

அவர் சொன்ன பதிலை கலைவாணியும் தலை அசைத்து ஆமோதித்தாள். அதைக் கண்ட கங்கை பெருமிதத்தோடு திரும்பி மற்ற ஆறு நதிகளைப் பார்த்தாள்.மற்ற ஆறு நதிகளும் அவளது பார்வையை சந்திக்க தைரியம் இல்லாமல் தலை குனிந்தார்கள். கங்கை, பிரம்மனுக்கு வந்தனம் செய்துவிட்டு அங்கிருந்து நீங்கினாள். மற்ற நதிகளும் ஒன்றும் பேசாமல் அவளைப் பின் தொடர்ந்தார்கள். காவிரி மட்டும் செல்லவில்லை! கண்களில் நீர் மல்க பிரம்மனை நோக்கினாள் அவள்.

அவளைக் கண்ட பிரம்மன், ‘‘உண்மையைச் சொல்ல வேண்டிய கட்டாயமம்மா! நான் சொன்ன உண்மை உன்னை பாதித்திருந்தால் என்னை மன்னித்துவிடு!’’ என்றார் வருத்தம் தோய்ந்த குரலில்.‘‘தங்கள் மீது தவறில்லை சுவாமி! நீங்கள் என்ன செய்வீர்கள் பாவம். அது என் துர்பாக்கியம். ம்... போகட்டும். தங்களால் எனக்கு ஒரு உதவி செய்ய முடியுமா? இந்த பேதை, கங்கையை விட உன்னத நிலையைப் பெற ஒரு வழியைக் கூற முடியுமா?’’ கெஞ்சினாள் காவிரி.

‘நீ என் மகிமையை உணரவில்லை...’ என்று கத்தி கூச்சல் போடாமல் இப்படி பண்பாக நடந்துகொண்ட காவிரியின் மாண்பு பிரம்மனைக் கவர்ந்தது. மெல்ல யோசிக்க ஆரம்பித்தார். அவரது நான்கு மூளையையும் கசக்கிப் பிழிந்து யோசித்ததில் ஓர் அற்புத உபாயம் கிட்டியது. அதை காவிரிக்கு சொல்ல சித்தமாகி தொண்டையைக் கனைத்தார்.‘‘காவிரி! நீ நினைப்பது போல் படைப்புத் தொழில் ஒன்றும் அவ்வளவு சுலபம் இல்லை!’’ பீடிகையுடன் பிரம்மன் தொடங்கினார்.

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்