நிலாவில் கால் வைப்பவனுக்கு பூமியில் இருப்பவன்தானே இன்ஸ்ட்ரக்‌ஷன் தருகிறான்..? கதை இலாகாவும் அப்படித்தான்!



கம்பீரமாக அறிவிக்கிறார் கலைஞானம்

கதாசிரியர், திரைக்கதையாசிரியர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகங்களில் ஜொலிப்பவர் கலைஞானம். தமிழ் சினிமாவில் எழுபது ஆண்டுகளாக கோலோச்சும் ‘கதை’ நாயகன். கலைஞானம் தயாரித்த ‘பைரவி’யில்தான் ரஜினி ஹீரோவாக அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் அவருக்கு சென்னையில் பிரமாண்டமான பாராட்டு விழா நடந்தது. இயக்குநர் பாரதிராஜா தலைமையில் சிவகுமார், பாக்யராஜ், ரஜினிகாந்த் என திரைப்பிரபலங்கள் பலரும் பங்கேற்று கலர்ஃபுல்லாகக் கொண்டாடினார்கள்.

இன்னமும் வாடகை வீட்டில் குடியிருக்கும் கலைஞானத்திற்கு, ‘கதை சக்ரவர்த்தி’ என்ற பட்டம் வழங்கியதுடன் அவருக்கு வீடு வழங்கவிருப்பதாகவும் அந்த மேடையிலேயே ரஜினி அறிவித்தது விழாவின் ஹைலைட்.  சாலிகிராமத்தில் உள்ள கலைஞானத்தின் வீட்டிற்குச் சென்றால்... ஹாலில் எம்ஜிஆர் அவருக்கு மோதிரம் அணிவித்து மகிழும் பெரிய சைஸ் கறுப்பு வெள்ளை புகைப்படம் புன்னகைக்கிறது.

‘‘ஓர் எழுத்தாளனுக்கு விழா எடுக்கறது என்பது என் இனத்துக்கே விழா எடுத்த மாதிரி இருக்கு. 1931ல தமிழ்சினிமா பிறக்குது. நான் 1930ல பிறந்துட்டேன். என்னோட எட்டு வயசில இருந்தே நான் கதை சொல்லி பழகிட்டேன். தியேட்டர் கொட்டகைல முறுக்கு வித்து வித்து கதை சொல்ற திறமையை வளர்த்துக்கிட்டேன். இந்த வித்தை கை வந்ததுக்கு நான் வணங்கும் முருகன் அருள்தான் காரணம்...’’ நெகிழ்ச்சியுடன் சொல்லும் கலைஞானம், 1953ல் சென்னை வந்திருக்கிறார்.

‘‘அப்ப ‘பராசக்தி’ ரிலீஸாகி ஓடிக்கிட்டிருந்தது! என்ன பொருத்தம் பார்த்தீங்களா! பாலகிருஷ்ணன்தான் என் பேரு. கலைஞானம்னு நானா வச்சுக்கிட்டேன். சினிமாவுக்கு நான் வந்தப்ப நிறைய பாலகிருஷ்ணன்கள் இருந்தாங்க. நான் யார்கிட்டபோய் கதை சொன்னாலும், பாலகிருஷ்ணன்னு என் பெயரை சொன்னதும் ‘எந்த பாலகிருஷ்ணன்’னு கேட்பாங்க. அதனாலயே வித்தியாசமா இருக்கட்டுமேனு கலைஞானம்னு பெயரை வச்சுக்கிட்டேன். 64 கலைகளும் தெரிஞ்சவனுக்கு பெயர்தான் கலைஞானம்னு அப்புறம் அதுக்கு அர்த்தமும் தெரிஞ்சுக்கிட்டேன்.

எனக்கு அவ்ளோ கலைகள் தெரியலைனாலும் சினிமா சார்ந்து நாலு கலைகள் தெரிஞ்சிருக்கு! இன்னொண்ணு... முருகனுக்கும் கலைஞானம்னு ஒரு பெயர் உண்டு.திரையுலகில் எனக்கு ஏராளமான நண்பர்கள் இருக்காங்க. அதுல ரொம்பவும் பிரியமுள்ளவர்களும் இருக்காங்க.

அதுல ஒருத்தர் டைரக்டர் பாரதிராஜா. அவரது அன்பு எப்போதும் என்னை நெகிழ வைக்கும். எனக்கு அவர் எடுத்திருக்கும் இந்த பாராட்டு விழா, 30 வருஷத்துக்கு முன்பே சொன்னதுதான்...’’ என சஸ்பென்ஸ் வைத்த கலைஞானம், சில நொடிகளுக்குப் பின் தொடர்ந்தார்.  

‘‘‘கடலோரக் கவிதைகள்’ படத்துக்கு அப்புறமா கண்ணன் என்பவர் எழுதிய ஓரங்க நாடகத்தை பாரதிராஜா பார்த்தார். அதுல மொத்தம் நாலே நாலு சீன்ஸ்தான். ஊர்ப் பஞ்சாயத்து நடக்கும். அதுல ஒருத்தர் இன்னொருத்தரை சாதியைச் சொல்லி திட்டிடுவார். ஒருத்தன் பண்ணின தப்புனால அது ஊர்பிரச்னையாகி, சாதிக் கலவரமாகிடும். கடைசில பாரதியாரின் ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ பாடலோடு அந்த ஓரங்க நாடகத்தை முடிச்சிருப்பாங்க.

அந்த நாடகத்தை படமா எடுக்க பாரதிராஜா விரும்பி ரைட்டர்ஸை எல்லாம் கூப்பிட்டு அந்த நாலு சீன்ஸை டெவலப் பண்ணச் சொன்னார். வந்திருந்தவங்க கோரசா, ‘இது தேறாது’னு சொன்னாங்க. பாரதிராஜாகிட்ட ஓர் இயல்பு உண்டு. முடிவு பண்ணிட்டார்னா பின்வாங்க மாட்டார். அதனால மத்த ரைட்டர்ஸ் சொன்னதை அலட்சியப்படுத்திட்டு என்னைக் கூப்பிட்டார்.

‘மண்வாசனை’ல இருந்து அவர்கூட நான் டிராவல் பண்றேன். அந்த உரிமைல ‘உன்னால முடியுமா’னு கேட்டார். எனக்கொரு பாலிசி உண்டு. எப்பவும் ‘முடியாது’னு சொல்ல மாட்டேன். இந்த அடிப்படைல அந்த நாலு சீன்ஸையும் டெவலப் பண்ண ஆரம்பிச்சேன்.

அப்பவெல்லாம் பாம்குரோவ் ஹோட்டல்ல ஸ்டோரி டிஸ்கஷன் நடக்கும். டைரக்டர், ரைட்டர் கண்ணன்னு பலரும் அங்க இருந்தாங்க. ஒருநாள் நைட் பத்து மணி இருக்கும். ‘உனக்கு என்ன வேணும்’னு பாரதிராஜா கேட்டார். ‘ரெண்டு இட்லி... ஒரு காபி. நீங்க நாளை காலைல பதினொரு மணிக்கு வந்தா போதும்’னு சொல்லி அத்தனை பேரையும் அனுப்பிட்டேன். ராத்திரி முழுக்க தூங்காம அசை போட்டேன். மளமளன்னு நாற்பது சீன்ஸ் புடிச்சிட்டேன். நைட் ரெண்டு மணிக்குத்தான் அந்த ரெண்டு இட்லியை சாப்பிட்டேன்.

மறுநாள் பாரதிராஜா படைசூழ வந்தார். கதையைச் சொன்னேன். அவர் விழிகள் விரியற அழகை ரொம்ப சிலர்தான் வியந்து பார்த்திருப்பாங்க. அதுல நானும் ஒருத்தன்!கதையைக் கேட்டுட்டு ‘எக்ஸலண்ட்’னு சொல்லி என்னைக் கட்டிப் புடிச்சு ஒரு கட்டு பணத்தை திணிச்சார். ‘உன்னை விட சிறந்த ரைட்டரை நான் பார்த்ததில்ல’னு சொல்லி நெகிழ்ந்து, ‘எனக்கு ஒரு நேரம் வந்தா உனக்கொரு விழா எடுப்பேன்’னு அன்னிக்கு சொன்னார். அதை இப்ப நிறைவேத்தி இருக்கார்...

இப்படி அவர் சொல்லக் காரணமா இருந்த... நாலு சீன்ஸை நான் டெவலப் செஞ்ச கதைதான் ‘வேதம் புதிது’ படம்!இதுக்கு அப்புறம் அவரோட எல்லா பட கதை விவாதத்துக்கும் போயிருக்கேன். பல நேரங்கள்ல சொல்றது ஒர்க் அவுட் ஆகும். சில நேரங்கள்ல தப்பும். நானும் மனுஷன்தானே! ஆனா, ‘உனக்கொரு விழா எடுப்பேன்’னுசொல்லிட்டே இருப்பார்... சொன்னபடியே செஞ்சுட்டார்!’’ உணர்ச்சியுடன் தழுதழுத்த கலைஞானத்திடம் இப்பொழுது கதை இலாகா என்பதே காணாமல் போயிருப்பது குறித்த வருத்தம் இருக்கிறது.

‘‘கதை ஞானம் எனக்கு முருகன் கொடுத்த அருள். அதனாலயே, அறிமுகமில்லாதவங்க தேடி வந்து அவங்க கதையை சரி செய்து கொடுக்கச் சொன்னாலும் தயங்காம செஞ்சு கொடுக்கறேன். காசு பணத்தை பெருசா எதிர்பார்க்க மாட்டேன். கே.பாலசந்தரின் ‘அவள் ஒரு தொடர்கதை’க்குக் கூட முதல்ல நான்தான் ஸ்கிரிப்ட் பண்ணினேன். இது ரொம்ப பேருக்கு தெரிஞ்சிருக்காது.

எம்.எஸ்.பெருமாள் எழுதின ‘வாழ்க்கை அழைக்கிறது’கதையைத்தான் ‘அவள் ஒரு தொடர்கதைத்’யா எடுத்தாங்க. அதை சினிமாவுக்கு ஸ்கிரிப்ட் ஆக்கிக் கொடுத்தவர் அரங்கண்ணல். அதை பெட்டர்மெண்ட் பண்ணிக் கொடுத்தேன். இப்படி நிறைய சம்பவங்கள் இருக்கு.
அப்பல்லாம் கதை இலாகாக்கள் இருந்தது. சினிமா ஒரு சூதாட்டமா இருந்தாலும் பிறந்த குழந்தையை ஒழுங்கா வளர்க்கறது எப்படி என்பதை கதை இலாகாதான் கத்துக் குடுக்கும்.

அந்தக் காலத்துல ரொம்ப சுமாரான படங்களுக்குக் கூட ரெண்டு வாரம், நாலு வாரம்னு போஸ்டர் ஒட்டுவாங்க. இப்ப அப்படி பார்க்க முடியாம போனதுக்கு காரணம் படங்கள்ல கதை இல்ல. கதை இருந்தாதான் படம் ஓடும். படம் பார்த்த ரசிகர்கள் அந்தக் கதையைப் பத்தி வீட்டுக்குப் போயும் பேசணும்.

அதுதான் வெற்றி. தொழில்ல அசிஸ்டென்ட்டா பல வருஷங்கள் இருந்தவன் தாக்குப் பிடிச்சு நிப்பான். ஏன்னா இரண்டு படங்கள் ஓடி மூணாவது சொதப்பினாலும் நாலாவதுல அவனால அந்த சொதப்பலை சரிக்கட்டி எழுந்து நிற்க முடியும். அசிஸ்டென்ட்டா இருந்தப்ப கிடைச்ச அனுபவங்கள் அதுக்கு உதவும்.

இப்ப எனக்கு எல்லாம் தெரியும்னு பல தம்பிங்க நினைக்கறாங்க. அவங்களாலதான் கதை இலாகா, ஸ்டோரி டிஸ்கஷன் எல்லாம் குறைஞ்சிடுச்சு. பத்து படங்களைப் பார்த்துட்டு கதை பண்ணி, ஷாட்ஸ் பிரிக்கறாங்க. இதெல்லாம் பாராட்டக் கூடிய கெபாசிட்டிதான்.

அதேநேரம் நிலாவுல போய் கால் வைச்சாலும் பூமில இருக்கறவன்தான் அவனுக்கு இன்ஸ்ட்ரக்‌ஷன் கொடுக்கணும் என்பதை மறந்துடக் கூடாது! நிலாவை மிதிக்கப் போறவன் திறமைசாலிதான். ஆனா, அவனை இயக்கப் போறவன் இங்க உள்ள விஞ்ஞானிதானே?
அந்த விஞ்ஞானிதான் மூலக்கதை ஆசிரியர்! அந்தக் காலத்துலயும் ஃபெயிலியர் படங்கள் உண்டு. ஆனா, அது விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுக்குத்தான் இருக்கும். கதையை அடிப்படையா கொண்ட படங்கள் ஓரளவு தப்பிச்சு நின்னுடும்.

நம்ம கதையை யார்கிட்டயாவது சொன்னா அவன் கெடுத்திடுவான்... அது திருட்டுப் போயிடும்னு நினைக்காம ஒரு குழுவா டிஸ்கஸ் பண்ணுங்கனு தம்பிங்ககிட்ட வேண்டுகோள் வைக்கறேன். நம்பிக்கையான ரெண்டு பேரை உங்க கூடவே வச்சிக்குங்க. அவங்கள்ல ஒருத்தர் கேள்வி கேட்டாலும் கதை வளரும்... குறைகள் நீங்கும்.

தேவர் ஃபிலிம்ஸ்ல கதை இலாகா உண்டு. நவரத்தினங்களா இருப்போம். எங்களுக்கு மாச சம்பளம் உண்டு. அதே டைம்ல அந்த கதை முடிஞ்சு படமா கனியும்போது அந்த இலாகாவில் இருந்த அத்தனை பேருக்கும் பெரிய தொகை பரிசா கிடைக்கும்.

ஒரு கதையை குறைஞ்சது மூணு மாசம் யோசிப்போம். எல்லா சீனையும் தேவர்கிட்ட சொல்லுவோம். எல்லாத்துக்கும் ஜட்ஜ் அவர்தான். அதுக்கப்புறமும் ரெண்டு பேர் இருப்பாங்க. அவங்களுக்கு கதை பிடிக்கணும். இவ்ளோ கடந்தும் தேவர் தன்னோட கார் டிரைவர்கிட்ட அந்தக் கதையைச் சொல்லி ஒப்பீனியன் கேட்பார். அஞ்சு நிமிஷத்துல அவுட்லைனாதான் சொல்லுவார்.

அவர் டிரைவருக்கு கதையோ, சீனோ பிடிக்கலைனா இலாகாவில் இருக்கறவங்க மறுபடியும் வேற யோசிக்கணும். அப்பதான் சம்பளம். மக்கள் ரசனை பிடிச்சு கதை பண்ணின காலங்களும் உண்டு. அது என்னிக்கும் தப்பினதில்லை. பாரதிராஜா, பாலசந்தர், பாக்யராஜ் இவங்ககிட்ட இருந்து வந்த சீடர்கள் இன்னும் அவங்க பெயர் சொல்லிட்டிருக்காங்க.

முறையா டிரைனிங் எடுத்துட்டு வர்றவங்க லாங் ஸ்டாண்டிங்கா நிற்பாங்க. புதுசா வர்றவங்க அந்த வேகத்துலயே காணாமப் போக பயிற்சியின்மைதான் காரணம். இது என் கருத்து!’’ அழுத்தமாகச் சொல்கிறார் கலைஞானம்.                 

மை.பாரதிராஜா

ஆ.வின்சென்ட் பால்

வேமாஜி