இது மைதா, சர்க்கரை, டால்டா, க்ரீம், கெமிக்கல் இல்லாத கேக்!



‘‘எனக்கு கேக் சாப்பிடணும். அதுவும் கடைல சாப்பிடணும். ஆனா, அதுல மைதா இருக்கக் கூடாது. வெள்ளை வெளேர்னு சர்க்கரை..? மூச்! செயற்கையான வண்ணங்களோ, டால்டா, க்ரீம்களோ கலக்கவே கூடாது. சுவைக்காக எந்த அயிட்டத்தையும் கலக்காம இருக்கணும்...
இப்படியொரு கேக் கிடைக்குமா..?இப்படி ஆசைப்பட்டு கேட்பவரா நீங்கள்..?

கவலையே வேண்டாம். வந்துவிட்டது அப்படியான கேக் என்கிறார் ஜெமிமா மேபிள் நான்சி. ‘‘கோதுமையின் பிளீச் வெர்ஷன்தான் மைதா. அதேமாதிரி சர்க்கரையும் கெமிக்கல் கலந்த பிளீச்தான். இது ரெண்டுக்கும் என்ன மாற்று இருக்குனு ஆய்வு செஞ்சேன். அதனுடைய விளைவுதான் ‘டோஸ்டட்’ கேக் ஷாப்...’’ புன்னகைக்கும் நான்சி தொழிலில் வருமானத்துடன் கூடவே மனிதாபிமானமும் இருக்க வேண்டும் என, தான் நினைத்ததே இப்படியொரு கேக் ஷாப் தொடங்கக் காரணம் என்கிறார்.

‘‘நான் செய்யற உணவுப் பொருட்களை என் குடும்பத்துக்கு முதல்ல நான் தயக்கம் இல்லாம கொடுக்கணும். அதுதான் சரினு நினைக்கறேன்.மைதாவுக்கு பதிலா கோதுமை ரவா. அதுலயும் டபுள் டிரிபுள், ரிஃபைண்ட் இல்லாத வறுக்காத ரவா. இதுக்காக கோதுமையை சொந்தமா அரைச்சு பயன்படுத்தினேன்.

அப்புறம் சர்க்கரை. பிளீச் போய் வெள்ளையா வருமே... அதுக்கெல்லாம் முன்னாடி இருக்கக் கூடிய பிரவுன் நிற சர்க்கரையை பயன்படுத்தறேன். குழந்தைகளுக்காக இதையும் தவிர்த்து பனங்கற்கண்டு, நாட்டு வெல்லத்தை சேர்த்து கேக் செய்யறேன்.எங்க கேக்கை மூணு நாட்களுக்கு மேல வைத்திருக்க முடியாது.

ஏன்னா, நாள்பட இருக்கறதுக்கு தேவையான எந்த கெமிக்கலையும் நாங்க சேர்க்கறதில்ல. கூலர்ல எங்க கேக்கை வைச்சாலும் வீணாகிடும். ஸோ, குறைஞ்சது ஒரு நாளைக்கு முன்னாடி ஆர்டர் கொடுக்கணும்...’’ என்ற நான்சி, சிக்கன் அயிட்டங்களைக் கூட அன்றன்றே வாங்கிப் பயன்படுத்துகிறார்.

‘‘நான் சாஃப்ட்வேர் இன்ஜினியர். கல்யாணமானதும் கணவர் கூட அமெரிக்கா போயிட்டேன். எனக்கு சமையல் ரொம்ப பிடிக்கும். அங்க இத்தாலியன் ரெஸ்டாரண்ட்ல வேலை செஞ்சேன். கேக் தயாரிக்கும் முறையை கத்துக்கிட்டது அங்கதான்.இந்தியாவுக்கு நாங்க திரும்பி வந்தப்ப எங்கப்பா கேன்சரால பாதிக்கப்பட்டு கஷ்டப்பட்டார். அப்பதான் இதைப்பத்தி யோசிக்க ஆரம்பிச்சேன். அவருக்கு உணவையே மருந்தாக்கினேன்.

இப்ப அப்பாவுக்கு கேன்சர் மட்டுமில்ல... பிபி, சர்க்கரைனு எதுவும் இல்ல. குலூட்டன்ஃபிரீ கான்செப்ட்டை வெச்சுதான் பிஸினஸ் கூட இருக்கணும்னு முடிவு செஞ்சேன். பசும்பால் மூலமா செய்கிற க்ரீம், பிராய்லர் கோழியை தவிர்த்துட்டு நாட்டுக் கோழி... இப்படி பார்த்துப் பார்த்து செய்யறோம்.

டால்டாவோட எந்த வெரைட்டியையும் பயன்படுத்தறதில்ல. கேக்குக்கான கலர்களுக்குக் கூட பீட்ரூட் பொடி, கேரட் பொடி... இப்படி நாங்களே சொந்தமா தயாரிச்சு உபயோகிக்கறோம்...’’ என அடுக்குகிறார் நான்சி.

ஷாலினி நியூட்டன்