சுயமரியாதைக்கு தண்டனை!



அமைச்சர் பின்லாந்து சென்று வந்தது இதற்குத்தானா?

5,8ம்  வகுப்பு குழந்தைகளுக்கு கட்டாய பொதுத்தேர்வு

‘‘தேர்ச்சி பெறாத குழந்தைகளை அதே வகுப்பில் தடுத்து வைப்பது, அவர்களின் ஆன்மாவின் மீதும், சுயமரியாதை மீதும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்; குழந்தைகளை பாதிக்கும் இம்முடிவு மிகவும் துரதிர்ஷ்டவசமானது. குறிப்பாக வறுமையின் விளிம்பில் உள்ள குழந்தைகளை இது பெரிதும் பாதிக்கும்; பள்ளியில் இருந்து அவர்கள் விலகுவதற்கும் இது காரணமாகிவிடும். மீண்டும் அதே வகுப்பில் அமர்த்துவது மாணவர்களின் வளங்களை வீணடிக்க வழிவகுக்கும்; வகுப்புகளின் திறனைக் குறைக்கும்...”

இப்படி கல்வி உரிமை மன்ற தேசிய அமைப்பாளர் அம்பரீஷ் ராய் ஒரு ேபட்டியில் தெரிவித்துள்ளார்.இவரது கூற்றின் பின்னணி என்ன..?
கடந்த 2009ல் இயற்றப்பட்ட குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக்கல்வி சட்டத்தின்படி, ‘8ம் வகுப்பு வரை மாணவர்களை தேர்ச்சியடையவில்லை என்று - அதாவது தோல்வி என்று - நிறுத்தி வைக்கக்கூடாது’ என்று கூறப்பட்டிருந்தது.
இதன் பொருள், மாணவர்கள் தங்களின் வகுப்புக்குரிய தரத்திலான கல்வியைப் பெறாவிட்டாலும், அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெற வைக்கலாம் என்பதுதான். இதனைத் தடுக்கும் பொருட்டு, நாடாளுமன்றத்தில் 2018, ஜனவரி 2ல், இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் நிறைவேற்றப்பட்டது.

அதாவது, 5 மற்றும் 8ம் வகுப்பில் மதிப்பெண் அடிப்படையில் தேர்ச்சி பெறாத மாணவர்களை, அதே வகுப்பில் நிறுத்தி வைக்கும் முடிவை மாநிலங்களே தேர்வு செய்ய வழிவகை செய்தது. இந்த திருத்தத்தை, 22 மாநிலங்கள் ஏற்றுக்கொண்டதாக, அப்போதைய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் 2018 ஜூலை 18ல் மக்களவையில் தெரிவித்தார்.இதற்கு அவர் சொன்ன காரணம், ‘‘நாட்டில் பல பள்ளிகள் மதிய உணவுக் கூடங்களாக உள்ளன. பிள்ளைகள் மதியம் வந்து உணவு சாப்பிட்டு பிறகு வீட்டுக்குச் சென்று விடுகிறார்கள்...’’ என்றார்.

இந்நிலையில் 5 மற்றும் 8ம் வகுப்புகளில் கட்டாயத் தேர்ச்சி நடைமுறைக்கான சட்டத் திருத்தம், மத்திய அரசிதழில் கடந்த பிப்ரவரி 11ம் தேதி வெளியிடப்பட்டது.அதில், ‘நாடு முழுவதும் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு ஆண்டின் இறுதியில் கட்டாயம் தேர்வு நடத்த வேண்டும். தேர்வில் தோல்வியடையும் மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்கும் வகையில், தேர்வு முடிவு வெளியான 2 மாதங்களில் உடனடித் தேர்வு நடத்த வேண்டும். அதிலும் அந்த மாணவர் தோல்வியடைந்தால் அவர்களை அடுத்த வகுப்புக்கு அனுமதிக்காமல், 5 அல்லது 8ம் வகுப்பிலேயே மீண்டும் தொடர அனுமதிக்க வேண்டும். ஆனால், ஒரு மாணவர் தொடக்கக் கல்வியை முடிக்கும் வரை, எந்தக் காரணம் கொண்டும் அவரைப் பள்ளியைவிட்டு வெளியில் அனுப்பக் கூடாது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

இந்த முடிவுக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்புகள் வலுத்தவண்ணம் உள்ளன. ஆசிரியர் பணி இடம் நிரப்புதல், பள்ளி உள்கட்டமைப்புகளை மேம்படுத்துதல், மாணவர்களுக்கான திட்டங்களை (பாடப்புத்தகம், சைக்கிள், சீருடை போன்றவை) அந்தந்த கல்வியாண்டில் செயல்படுத்துதல் போன்றவற்றில் அரசுகள் கவனம் செலுத்தாமல், மாணவர்களை மட்டுமே சட்டத் திருத்தம் கொண்டு தண்டிப்பதாக உள்ளது. அனைவரும் தேர்ச்சி என்பதை நிறுத்துவது மட்டுமே இந்தப் பிரச்னைகளைத் தீர்த்துவிடாது; அடிப்படையான கற்றல் திறமைகள் மீது கவனம் செலுத்த வேண்டும் என்றும் வல்லுனர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக, பட்ஜெட் மற்றும் நிர்வாக பொறுப்பு மையம் (CBGA) மற்றும் குழந்தைகள் உரிமைகளுக்காக இயங்கும் அரசு சாரா அமைப்பான ‘க்ரை’ (Child Rights and You - CRY) ஆகியவை கடந்த 2018 டிசம்பரில் ஓர் ஆய்வை நடத்தியது.

இதில் கிடைத்த உண்மை என்ன தெரியுமா..?
2014 - 2015 முதல் 2017 வரையில் 3 ஆண்டுகளில் உத்தரப்பிரதேசம், பீஹார், மேற்குவங்கம், சட்டீஸ்கர், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாடு ஆகிய 6 மாநில கல்வி பட்ஜெட் திட்டங்களை ஆய்வு செய்தபோது, நிதி ஒதுக்கீடு அதிகரித்தும் கூட, மாநிலங்கள் தங்கள் செலவினத்தை மாற்றியமைக்க பட்ஜெட் திட்டத்தை பயன்படுத்தவில்லை!

இப்படி பல மாநில பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்புகளில் குளறுபடிகள் உள்ள நிலையில், மாணவர்களை மட்டும் மதிப்பெண் அடிப்படையில் உளவியல் ரீதியாக தனிமைப்படுத்துவது அல்லது துன்புறுத்துவது ஏற்புடையது அல்ல என்றும் தெரிவிக்கப்படுகிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை, 5, 8ம் வகுப்புக்கு பொதுத் தேர்வு திட்டத்திற்கு ஆளும் அதிமுக அரசு ஆரம்பத்தில் எதிர்ப்பு தெரிவித்தது.

அப்போது, மாநில பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், ‘‘தமிழகத்தில் கட்டாயத் தேர்ச்சி முறையை ரத்து செய்தால், கிராமப்புற மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படும்; இடைநிற்றல் அதிகரிக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்தனர். பொதுத்தேர்வு நடத்துவதா, வேண்டாமா என்பது குறித்து கொள்கை முடிவு எடுக்கப்படும்...’’ என்று கூறியிருந்தார்.

இதனை அடுத்து 5, 8ம் வகுப்புக்கு பொதுத்ேதர்வு அமல்படுத்தப்படாது என்று எதிர்பார்த்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் தமிழக அரசு இவ்விவகாரம் தொடர்பாக ஓர் அரசாணையை திடீரென வெளியிட்டது.அதில், ‘தமிழகத்தில் மாநிலப் பாடத்திட்டத்தைப் பின்பற்றி வரும் பள்ளிகளில், நடப்பாண்டு (2019 - 2020) முதல் 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடைபெறும்.

மாநில தொடக்க அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள், சுயநிதிப் பள்ளிகள், மெட்ரிக் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும், மாநிலப் பாடத் திட்டத்தைப் பின்பற்றும் இதர துறைகளின் கீழ் வரும் ஆதி திராவிடர் நலத்துறை பள்ளிகள், கள்ளர் சீரமைப்பு பள்ளிகள், மாநகராட்சிப் பள்ளிகளில் 5 மற்றும் 8ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கும் அரசு பொதுத் தேர்வு நடத்தப்படும். அந்தத் தேர்வு முடிவின் அடிப்படையில் முதல் 3 ஆண்டுகளுக்கு மாணவர்களின் தேர்ச்சியை நிறுத்தி வைக்க வேண்டாம்...’ என்று ஆணையிட்டுள்ளது.

ஆக, பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளுக்கும், நீட், ஜேஇஇ போன்ற நுழைவுத் தேர்வுகளுக்கும் கோச்சிங் சென்டர்கள் இருப்பது போல், இனி 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கும் சிறப்பு கோச்சிங் சென்டர்கள் உருவாகும். கல்வி மேலும் வணிகமயமாகும்.
இவை எல்லாம் சமுதாயத்தை மீண்டும் கற்காலத்துக்கு திருப்பும் என சமூக ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.

கடந்த சில வாரங்களுக்கு முன், மாநில கல்வி அமைச்சர் ேக.ஏ.செங்கோட்டையன், பின்லாந்து நாட்டுக்கு தனது அதிகாரிகள், சகாக்களுடன் சென்றார். அமைச்சரின் இந்தப் பயணம் கல்வித்துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் என்று, ஆசிரியர்களும் கல்வியாளர்களும் எதிர்பார்த்தனர்.

ஏனெனில் பின்லாந்து நாட்டின் கல்வி முறை உலகளவில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. ஆம். மாணவர்களின் திறனை மேம்படுத்துவதுதான் அந்நாட்டின் கல்விமுறை. பின்லாந்து பள்ளிகளிலும் தேர்வுகள்நடக்கின்றன. ஆனால், அது மாணவர்களை மதிப்பிடுவது போல இருக்காது. ஒரு மாணவரை இன்னொரு மாணவரோடு ஒப்பிடுவதற்காக இருக்காது.

ஒரு மாணவருக்கு என்ன சிறப்பாக வருகிறது, எதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஆசிரியர் அறிந்துகொள்வதற்
காகவே அத்தேர்வுகள் அங்கு நடத்தப்படுகின்றன.ஒரு மாணவர் எடுத்த மதிப்பெண் அந்த மாணவருக்கு மட்டுமே சொல்லப்படும். எக்காரணத்தைக் கொண்டும் மற்ற மாணவர்களுக்குச் சொல்லமாட்டார்கள். யாரையும் யாரோடும் ஒப்பிட்டுக் கொள்ளக் கூடாது என்பதில் மிக தெளிவாக இருக்கிறார்கள்.

பின்லாந்தில் குழந்தைகளுக்கான ‘டே கேர்’ பள்ளி ஒரு வயதிலேயே தொடங்கிவிடும். குழந்தைகளை கட்டாயம் சேர்க்க வேண்டிய அவசியம் எல்லாம் இல்லை. குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படும். இது நம் ஊர் பால்வாடி போலத்தான். ஆனால், அதே நேரம் அங்கு கற்பிக்கும் முறை மற்றும் கற்பிக்கப்படும் விஷயம் நம்மூர் பால்வாடி போல அல்லாமல், வாழ்க்கைக்குத் தேவையானதாகவும், சமூகத்திற்குத் தேவையானதாகவும் இருக்கும்.

முறையான கல்வி முறையானது 6 வயதில்தான் அங்கு குழந்தைக்கு தொடங்குகிறது. அந்தக் கல்வியும் வாழ்க்கைக்குத் தேவையான அடிப்படை விஷயங்கள், தனக்கு என்ன தேவை, எதில் ஆர்வம் இருக்கிறது... என்பதைப்புரிந்துகொள்ளவே முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

நுழைவுத் தேர்வு பின்லாந்து பள்ளிகளிலும் இருக்கின்றது. ஆனால், பொதுவான நுழைவுத் தேர்வு இல்லை. சில பள்ளிகளே தங்களுக்குத் தேவையானபோது, ஏற்றவாறு, பாகுபாடு இல்லாமல் நுழைவுத் தேர்வுகளை நடத்துகின்றன.சுவீடன் நாட்டின் கல்வி முறையும் இப்படித்தான் உள்ளது. அன்றாட வாழ்வுக்கு என்ன தேவையோ அதைக் கற்பிக்கிறார்கள்.

அரசுக்கு மனு எழுதுவது எப்படி? கடையில் பொருட்கள் வாங்குவது எப்படி? பருவநிலை மாற்றம் என்றால் என்ன? இவை அனைத்தும் நடைமுறைப் பயிற்சியில் தொடக்கப்பள்ளியில் இருந்தே கற்பிக்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு வாழ்க்கை குறித்த அவநம்பிக்கையை விதைக்காமல், வாழ்தல் குறித்த நம்பிக்கையையும், சக மனிதர்கள் மீது பாசத்தையும் ஏற்படுத்துகின்றனர்.

இதையெல்லாம் தனது பின்லாந்து நாட்டுப் பயணத்தில் பார்த்து, கேட்டு அறிந்துவிட்டு தமிழகம் திரும்பியதும்தான் 5, 8ம்  வகுப்புக்கு பொதுத்தேர்வு முறையை அரசாணையாக வெளியிட வைத்திருக்கிறார் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்!லாஸ்ட் பட் நாட் லீஸ்ட் -‘தாய்மொழியில் கல்வி கிடைக்காததால்தான் பலர் பள்ளியைவிட்டு இடை நிற்கின்றனர். உலகெங்கும் 40% மாணவர்களுக்கு, குறிப்பாக ஆப்ரிக்கா மற்றும் தென் அமெரிக்காவில் தாய் மொழியில் கல்வி கிடைப்பதில்லை.

இதனால், அவர்கள் புரிந்துகொள்ள சிரமப்படுகிறார்கள்...’ என்று யுனெஸ்கோ கூறுகிறது. என்ன பயன்..? இன்று இந்தியாவில் பிராந்திய, தாய் மொழிகள் மீதான அழிப்பும், இந்தித் திணிப்பும் அதிகரித்து வருவதால் மாணவர்களின் கல்வித்தரம்
பின்னோக்கிச் ெசல்வதுடன் சமூக அமைப்பே  கூட சிதைக்கப்பட்டு வருகிறது!                             

செ.அமிர்தலிங்கம்