25 கார்களை அடிச்சு, உடைச்சு... ஒரு நாளுக்கு ஒரு கோடி செலவு பண்ணி…



மதி சொல்லும் சாஹோ சீக்ரெட்ஸ்

‘‘சந்தோஷம்! ஹாலிவுட் ரேஞ்சுக்கு ‘சாஹோ’ இருக்குனு சொல்றாங்க. என்ன லென்ஸ் யூஸ் பண்ணினே? என்ன ஃபில்டர் போட்டேனு துளைச்சு எடுக்கிறாங்க. ஒரு நல்ல ஸ்கிரிப்ட்தான் கேமராவோட தன்மையைத் தீர்மானிக்குது. அப்புறம் டைரக்டருக்கும் கேமராமேனுக்கும் மத்தியில் இருக்கிற புரிதல்.

டைரக்டர் சுஜித்திற்கும் எனக்கும் பிரமாதமான அலைவரிசை செட்டானது. ‘ரன் ராஜா ரன்’ ஏற்கனவே பட்டையைக் கிளப்பிய படம். அதிலிருந்தே அவர் நட்பு கிளைவிட்டது. செம ஸ்டைலிஷா, பக்கா மாடர்னா, ரிச்சான லைட்டிங்கில் வரணும்னு முடிவோடதான் கேமராவையே கையில் எடுத்தேன். நான் ஆசைப்பட்டது கிடைச்சிருக்கு. உங்களுக்கு ‘சாஹோ’வை ரொம்பவே பிடிக்கும்...’’  மொட்டை மாடியின் இளமை இசை பெருகி வழியும் காப்பி ஷாப்பில் இளவெயிலை ரசித்தபடி பேசுகிறார் மதி.

தமிழ்ச்சினிமாவிலும், இந்தியிலும் தெலுங்கிலும் கொடி கட்டிப்பறந்து இந்திய சினிமாவின் கவனத்தைக் களவாடத் துடிக்கிற ஒளிப்பதிவாளர்.வேறு வேறு மொழிகளுக்குப் போக ஆரம்பிச்சிட்டீங்களே?ஒளிக்கு ஏது மொழி! எனக்கு எல்லாம் ஒண்ணுதான். மனசுக்குப் பிடிச்சிருந்தா எங்கேயும் போய் வேலை பார்ப்பேன். நான் போகணும்னு நினைச்சதில்லை. ஆனால், இப்ப எல்லாம் மாறிக்கிட்டு வருதே!

இழுத்துட்டுப் போற கால வௌ்ளத்துல நாம் ஒரு இடத்திலேயே நின்னுக்கிட்டு இருக்க முடியாது. நமக்குனு ஓர் இடம் கிடைச்சு விளையாடிப் பார்க்கலாம்னு தோணிட்டா, எந்த மொழியா இருந்தா என்ன?

இந்தப் படம் ‘சாஹோ’ அப்படிக் கிடைச்சது. சுஜித் ஒரு சின்னப்புள்ளியாக ஆரம்பிச்சபோதே என்கிட்டே சொன்னார். கமர்ஷியலில் சும்மா காய்ச்சி எடுக்கும். பிஸினஸ், இவ்வளவு காசு செலவானால், இவ்வளவு பணம் புரட்டலாம்… இப்படி எந்தக் கணக்கும் புரடியூசர்கள் வம்சி, விக்கி, பிரமோத் மூணு பேரும் பார்க்கலை.

அவங்களுக்கு ரொம்ப நல்ல ஆக்‌ஷனில் எகிற படம் பண்ணணும் என்ற எண்ணம் மட்டுமே இருந்தது. இதுவரைக்கும் அவங்க வரவு செலவு கணக்கு பார்த்திருக்க மாட்டாங்கன்னு நினைக்கிறேன்.பிரம்மாண்டம் கண்ணைக் கட்டுதே…இப்படி ஒரு ஆக்‌ஷனை இந்தியாவில் யாரும் இதுவரை பண்ணிடலைன்னு உறுதியாகச் சொல்ல முடியும். ஒவ்வொரு பைட்டுக்கும் 20 நாட்களுக்கு மேல் ஆகியிருக்கு. எல்லோருமே பேசப்படுகிற வெளிநாட்டு பைட் மாஸ்டர்கள். 12 கேமிராக்களை வச்சு படமெடுத்ததெல்லாம் வரலாறு.

ஒரு பைட்டுக்கான தயாரிப்பு, அதை எடுத்து முடிப்பதற்கான கால அளவு, செலவு இதற்கான எல்லைகள் வைக்கல. ஆக்‌ஷன் காட்சிகளில் ஏமாத்தவே இல்லை. எல்லாம் நிஜமாக ஒரு மயிரிழையில் நிக்கும். நம்மகிட்டே இருக்கிற வசதிகளை வைச்சுக்கிட்டு ஒண்ணுமே செய்ய முடியாது. அபுதாபியில் ஒரு சேசிங் சீன் செய்தோம். 25 கார்களுக்கு மேலே அடிச்சு, உடைச்சு, மோதி, காலி பண்ணி… அதெல்லாம் மிரட்டலா இருக்கும்.

மூணுமாசம் அங்கேயே மொத்தக் குழுவும் இருந்து செய்தோம். நாள் ஒன்றுக்கு செலவு மட்டும் ஒரு கோடி ரூபாய். ‘சார், நீங்க ஒரு நாள் சேமிச்சா, ஒரு கோடி சேமிக்கலாம்’னு புரடியூசர் சிரிச்சுகிட்டே சொல்வார்.இவ்வளவு நாளா இருந்து படம் முடிச்சிட்டீங்க…

இந்தப் பிரபாஸ் அருமையான மனிதர். சிநேகிதம் பொங்கும். இந்தப் படம் ஆரம்பிக்கும் போதே மதிதான் கேமராமேன்னு அவரே சொல்லிட்டார். அவர் குடும்பத்தில் ஒருத்தன்னு மேடையிலேயே சொல்ற அளவுக்கு என்மேல் அவருக்குப் பிரியம் உண்டு. அவருடைய வெற்றிப் படங்களுக்குப் பின்னாடி இருந்திருக்கிறேன். அவ்வளவுதான்.

அப்புறம் இந்த சுஜித். இயக்குநர் அழகா ஒரு கதைய பிடிச்சிட்டாருன்னா அவருக்குள்ளே ஒரு கரன்ட் ஓடும். அதை அவரோட கண்கள் மின்னுறதை வெச்சே கண்டுபிடிக்கலாம். நம்மையும் ஒரு உணர்வு வேறு இடத்திற்குக் கொண்டு போகும்.

‘சாஹோ’வில் அப்படி நடந்திருக்கு. அப்படி நான் உணர்ந்ததும் அந்தப் படத்திற்காக உழைக்க ஆரம்பிச்சிடுவேன். அதுவும் இந்தப் படத்தில் முழுமையாக நடந்திருக்கு. நடிக்க வந்து சில வருஷங்களே ஆன பிரபாஸ் மாதிரி ஓர் இளைஞனுக்கு இவ்வளவு சீக்கிரத்தில் கிடைத்த உயர்வு, அவரது உழைப்புக்குக் கிடைத்த மரியாதை! இந்தப் படத்துக்குப் பின்னாடி இன்னும் டாப் கியரில் பிரபாஸ் வருவார் பாருங்க!கிட்டத்தட்ட 25 படங்கள்… எப்படி அமைஞ்சது?

வேலை பார்த்துக்கிட்டே இருப்பேன். அடுத்த கட்டம் எல்லாம் தெரியாது. இனி என்னன்னு பார்க்கிறதே இல்லை. அடுத்தடுத்து நம்மை காலம் வந்து தூக்கிப் போய்க்கிட்டே இருக்கும். அது சத்தம் போடாமல், நமக்கே உணர முடியாதபடிக்குக்கூட நடக்கும். ‘எனக்கு ஒரு சின்ன ஏணி கிடைச்சால் போதும், ஆனால், அந்த ஏணி எங்கே இருக்குதுன்னுதான் தெரியலை’னு முழிச்சக்கிட்டு இருந்ததெல்லாம் ஞாபகம் வரும்.

என்னைவிடவும் திறமையானவர்களை வெளியே பார்க்கும்போது வெற்றிக்கான ரகசியத்தை புரிஞ்சுக்க முடியலை. ஆக, நான் எந்த நோக்கமுமே இல்லாமல் போய்க்கிட்டு இருக்கேன்னு சொல்லலாம்.எப்படியிருக்கும் இனிமேல் சினிமா?சினிமா ரொம்பவே மாறும். கண்ணுக்கு முன்னாடி சடசடனு மாற்றங்கள் வந்துகிட்டே இருக்கு. இன்னும் ஐந்தாறு வருஷத்திற்குள்ளே VFX ஸ்டூடியோவோடு படத்தயாரிப்பு நிறுவனம் இருந்தால்தான் நிலைச்சு நிற்க முடியும்.

எங்கேயும் லொகேஷன் போக வேண்டாம். எந்த இடத்தையும், அழகையும், பிரம்மாண்டத்தையும் அந்த ஸ்டூடியோவில் கொண்டு வந்திடலாம். அதெல்லாம் பார்க்க நம்பும்படியாகவும் இருக்கும். கேமிராக்கள் எல்லாம் நவீனத்தின் எல்லையைத் தொட்டு தாண்டியும் நிற்குது. தொழில்நுட்பமா நாம் வேற இடத்துக்குப் போக வேண்டிய நேரம் இது.

நா.கதிர்ேவலன்