ரத்த மகுடம்-68



பிரமாண்டமான சரித்திரத் தொடர்

கரிகாலனும் சிவகாமியும் இமைக்கவும் மறந்து பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.எத்தனையோ சிகிச்சை முறைகளை தங்கள் வாழ்நாளில் இருவருமே பார்த்திருக்கிறார்கள். ஏன், காயம்பட்டபோதும் உடல்நலம் சரியில்லாமல் போனபோதும் தாங்களும் சிகிச்சையும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், எல்லாமே பச்சிலை மூலிகை சித்த வைத்தியங்கள்தான். அல்லது ஆயுர்வேத வைத்தியம். சூரணமும் கஷாயமும் பச்சிலைகளும் மட்டுமே அவர்கள் அறிந்தது; அனுபவித்தது.இதற்கு மாறாக சீனனான யாங்சின்னின் நடவடிக்கைகள் அனைத்தும் இருவருக்கும் புரியாத புதிராக இருந்தது. அதுவும் ஊசியை வைத்து அவன் மேற்கொண்ட சிகிச்சைகள் அவர்கள் இருவரையும் திக்பிரமை அடைய வைத்தன.
அதுபோன்ற சிகிச்சை முறையை இருவருமே பார்த்ததுமில்லை; கேள்விப்பட்டதும் இல்லை.

அதுகுறித்து கேட்க வேண்டும் என இருவருக்குள்ளும் ஆர்வம் பெருக்கெடுத்து ஓடியது. என்றாலும் அமைதியாகவே நின்றார்கள். யாங்சின் அப்படித்தான் இருவரையும் பேசாமல் நிற்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான். ‘‘நீங்கள் பேச்சுக் கொடுத்தால் என கவனம் சிதறிவிடும்... சிகிச்சை கெட்டுவிடும்...’’ என குரலில் அழுத்தம் கொடுத்திருந்தான்.

எனவே நடப்பதை அமைதியாகவும் துடிக்கும் இதயத்துடனும் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.
கரிகாலனுக்குள்ளும் சிவகாமிக்குள்ளும் என்ன மாதிரியான சிந்தனைகள் ஓடுகின்றன என்பதைக் குறித்தெல்லாம் யாங்சின் கவலைப்படவும் இல்லை; பொருட்படுத்தவுமில்லை.

கடமையே கண்ணாக தன் வேலையில் மூழ்கி இருந்தான். அதுவும் உற்சாகத்துடன் ரசித்து ரசித்து சோழ மன்னருக்கு சிகிச்சை செய்தான்.சுடுநீர் பாத்திரத்துக்குள் இருந்த மெல்லிய நீண்ட ஊசிகளை எடுத்து இடது கையில் வைத்துக் கொண்டு, ஒன்றன் பின் ஒன்றாக ஊசிகளை பல இடங்களில் பொருத்தத் தொடங்கினான்.

இரண்டு ஊசிகளை சோழ மன்னரின் இடது காதில் குத்திச் சரசரவென்று திருகி நரம்புகளில் புகுத்தினான்.மேலும் இரண்டு ஊசிகளை சோழ மன்னரின் இரண்டு கைகளில் முழங்கைகளுக்குக் கீழே அடிப்புறத்தில் செருகினான்.இன்னும் இரண்டு ஊசிகளை அவரது கைகளின் கட்டை விரலுக்கும் ஆள்காட்டி விரலுக்கும் இடையில் இருந்த இடைவெளியில் செருகினான்.பிறகு அந்த ஆறு ஊசிகளையும் ஒவ்வொன்றாக சில கணங்களுக்கு வேகமாகச் சுழற்றினான்.

இத்தனை ஊசிகளை சீனன் செருகியும் சோழ மன்னர் தன் முகத்தைச் சுளிக்கவில்லை! ஒருவேளை மயக்கத்தில் இருந்ததாலா..?
கரிகாலனாலும் சிவகாமியாலும் உறுதியாக எதையும் சொல்லவும் முடியவில்லை; எந்த முடிவுக்கும் வரவும் இயலவில்லை.
ஊசிகளைக் குத்தி முடித்ததும் சீனன் புதுக் கத்தியை எடுத்தான். அதை உயர்த்திப் பிடித்து அதன் கூர்மையைப் பரிசோதித்தான்.
சூரிய ஒளியில் கத்தியின் கூர்மை சுடர் விட்டது!

இதனைத் தொடர்ந்து யாங்சின் செய்த வேலையைக் கண்டு கரிகாலனும் சிவகாமியும் அதிர்ச்சியின் உச்சிக்கே சென்றார்கள்!
ஆம். தன் கையில் இருந்த கத்தியினால் மன்னரின் மார்பிலும் வயிற்றுப் பகுதியிலும் இருந்த கட்டுகளை அறுத்துப் பிரித்தான்.
பிறகு வயிற்றுக் காயத்தை ஊன்றிக் கவனித்துவிட்டு அந்தக் காயத்தில் இருந்த பச்சிலைச் சாற்றை சுடுநீரில் துணிகொண்டு துடைத்தான்.
பின்னர் காயத்தை மீண்டும் தன் கையில் இருந்த கத்தியால் கிழித்தான்!

அதிலிருந்து வந்த குருதியைத் துணியால் அழுத்தித் தடுத்துவிட்டு பட்டு நூல் கோர்த்திருந்த ஊசியை எடுத்து கத்தி கிழித்த இடத்தை பட்டு நூலால் வேகமாகத் தைத்தான்!இதன் பின்னர் சற்றும் தாமதிக்காமல் பட்டுப் பையில் இருந்து ஒரு மெழுகுத் துணியை எடுத்து நூல் தைத்த இடத்தில் அழுத்தி விட்டான்.மெழுகுத்துணி அந்த இடத்தை இரும்பென பிடித்துக் கொண்டது!

இதற்கு மேல் கட்டு ஏதும் போடாத யாங்சின், சோழ மன்னரின் காதிலும் கையிலும் செருகியிருந்த ஊசிகளை எடுத்து பட்டுப் பையில் பழையபடி வைத்துக் கொண்டான்.பிறகு தன் கைகளை சுடுநீரிலும் சாதாரண நீரிலும் கழுவிவிட்டு கரிகாலனை நோக்கி புன்னகைத்தான். ‘‘இனி உங்கள் தந்தையார் பழையபடி எழுந்து நடமாடுவார்! அவருக்கு மயக்கம் தெளிந்துவிட்டது!’’

கரிகாலனின் முகத்திலும் சிவகாமியின் வதனத்திலும் நம்பிக்கை ஏதும் இல்லை.யாங்சின் அதுகுறித்து கவலைப்படவும் இல்லை. அலட்சியத்துடன் சோழ மன்னரின் அருகில் சென்று அவரது கைகளைப் பிடித்து எழுப்பி உட்கார வைத்தான். ‘‘மஞ்சத்தை விட்டு இறங்கி நடவுங்கள்...’’
எதற்கும் அஞ்சாத சோழ மன்னரும் மஞ்சத்தை விட்டு இறங்கினார்!

பதறிப் போய் தன்னைப் பிடித்துக் கொள்ள வந்த கரிகாலனையும் சிவகாமியையும் ஒதுக்கிவிட்டு அந்தக் குடிசையில் பத்தடி நடந்துவிட்டு திரும்பி வந்தார்!அப்படி நடந்து வந்தவரை யாங்சின்னைத் தவிர மற்ற இருவரும் வியப்புடன் பார்த்தனர்.கரிகாலனின் தந்தையான சோழ மன்னரின் முகத்திலும் வியப்பு பூத்தது. ‘‘எனக்கு வயிற்றில் கத்திக் குத்து பட்ட காயத்தின் வலி கூடத் தெரியவில்லை!’’கரிகாலனின் பிரமிப்பு உச்சநிலையை அடைந்தது. ‘‘இது என்ன சிகிச்சை?’’ என்று வினவினான் சீனனை நோக்கி.‘‘நரம்பு சிகிச்சை!’’ என்றான் யாங்சின்.

‘‘நரம்புகளை என்ன செய்தாய்?’’
‘‘நமது உடலில் பல இடங்களில் மர்ம ஸ்தானங்கள் இருக்கின்றன. நரம்புகளுக்கும் அத்தகைய மர்ம ஸ்தானங்கள் உண்டு. அந்த இடங்களை ஊசியினால் அடைத்துவிட்டால் உடலின் எந்தப் பாகத்தை அறுத்தாலும் வலி தெரியாது! பிறகு நாங்கள் ஆயுத சிகிச்சையை ஆரம்பிக்கிறோம்.
காயம் பட்ட பகுதியைக் கிழித்துப் பட்டு நூலால் தைத்துவிடுகிறோம். அதற்குப் பிறகு ரத்த விரயம் நின்றுவிடுகிறது. காயத்தின் வலியும் தடுக்கப்படுகிறது. ஆகவே, காயம் அடைந்தவரின் சக்தி பழைய நிலைக்குத் திரும்புகிறது..!’’

புன்னகைத்த சீனன், ‘‘இனி உங்கள் தந்தைக்கு ஆகாரம் கொடுக்கலாம். யார் உதவியும் அவருக்குத் தேவையில்லை!’’ என்றான்.
‘‘இந்த சிகிச்சை முறை..?’’ கரிகாலன் இழுத்தான்.‘‘எங்கள் நாட்டில் தொன்றுதொட்டு நாங்கள் கடைப்பிடித்து வரும் சிகிச்சை முறை... இதன் பலனைத்தான் இப்பொழுது கண்கூடாகப் பார்க்கிறீர்களே...’’யாங்சின் இப்படிச் சொன்னதும் கரிகாலனும் சிவகாமியும் பிரமிப்புடன் அவனைப் பார்த்தனர்.

சோழ மன்னரின் வியப்புதான் ஆகாயம் அளவுக்கு விரிந்தது. ‘‘சஸ்திர சிகிச்சைக்கு பாரத நாடுதான் புகழ்பெற்றது என இதுநாள் வரை நினைத்திருந்தேன். சீனர்கள் நம்மை மிஞ்சிவிட்டார்கள்! உண்மையிலேயே இருபது வயது குறைந்தது போல் உணர்கிறேன்!’’
‘‘இதற்கு நீங்கள் சிவகாமிக்குத்தான் - இந்தப் பெயரில்தானே நீங்கள் நடமாடுகிறீர்கள்! உண்மை வெளிப்படும் வரை அப்படியே உங்களை அழைக்கிறேன்! - நன்றி சொல்ல வேண்டும்...’’ தன் உதட்டின் நுனியில் வளர்ந்திருந்த மீசையை நீவியபடி யாங்சின் சிரித்தான்.

‘‘சிகிச்சை செய்தது நீங்கள்... அப்படியிருக்க எதற்காக எனக்கு நன்றி..?’’ சிவகாமி கேள்வியுடன் யாங்சின்னை நோக்கினாள்.
‘‘சோழ மன்னரின் வயிற்றுப் பகுதியில் சரியாகக் குத்தியதற்காக! விளையாட்டுக்குச் சொல்லவில்லை. மன்னரின் வயிற்றுக்குள் சிறு கட்டி ஒன்று வளரத் தொடங்கியிருந்தது.

அது மேலும் வளர்ந்திருந்தால் அவரது உயிருக்கே ஆபத்தாக முடிந்திருக்கும்! நல்லவேளையாக அந்த இடத்தில் நீங்கள் குத்தியதால் அதற்கும் சேர்த்தே மன்னருக்கு சிகிச்சை அளிக்க முடிந்தது!’’‘‘யாங்சின்...’’ உணர்ச்சிப் பெருக்குடன் சீனனின் அருகில் சென்று அவனைக் கட்டிப் பிடித்தான் கரிகாலன். ‘‘என்ன சொல்வதென்று தெரியவில்லை. என் தந்தையை பழைய சோழ மன்னராக திருப்பிக் கொடுத்திருக்கிறாய்! இதற்கு உனக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன். என்ன வேண்டுமென்று தயங்காமல் கேள்!’’‘‘கண்டிப்பாக செய்வீர்களா..?’’ யாங்சின்னின் கண்கள் கூர்மையடைந்தன.

‘‘என் உயிரைக் கொடுத்தாவது நீ விரும்பியதை நிறைவேற்றுகிறேன்!’’
‘‘அப்படியானால் உங்கள் ஆத்ம நண்பரான பல்லவ இளவலிடம் பேசுங்கள் கரிகாலரே...’’
‘‘என்னவென்று..?’’‘‘காஞ்சியில் புத்தக் கோயில் ஒன்று எழுப்பப்பட வேண்டும்!’’
‘‘அவ்வளவுதானா..?’’‘‘ஆம்...’’‘‘கண்டிப்பாக பல்லவ இளவரசரிடம் சொல்கிறேன். காஞ்சியில் அந்த சர்வேஸ்வரனுக்கு, அதுவும் கைலாசநாதனுக்கு ஆலயம் எழுப்ப வேண்டுமென்பது அவர் ஆசை - கனவு - விருப்பம். அதைக் கட்டி முடித்ததும் அல்லது அந்த ஆலயத்தை எழுப்பும்போதே புத்த பிரானுக்கும் விஹாரம் ஒன்றை எழுப்பச் சொல்கிறேன்!’’

‘‘மிக்க நன்றி கரிகாலரே... நீங்கள் சொன்னால் அவர் கேட்பார் என்று தெரியும்... எனவே புத்தர் பிரானுக்கு விஹாரை எழுப்பப்பட்டு விட்டது என எங்கள் மன்னருக்கு செய்தி அனுப்பி விடுகிறேன்!’’‘‘பொறு யாங்சின்... விஹாரை எழுப்பப்பட்டபின் தகவலைத் தெரிவி...’’
‘‘அவசியமில்லை கரிகாலரே... நீங்கள் வாக்குத் தவற மாட்டீர்கள்... உங்கள் வேண்டுகோளை பல்லவ இளவல் தட்ட மாட்டார்... எனவே என் ஆசை நிறைவேறியது போல்தான்...’’ என்ற யாங்சின் மூவரையும் வணங்கிவிட்டு அந்தக் குடிசையை விட்டு அகன்றான்.

‘‘எவ்வளவு தெளிவாக தமிழில் பேசுகிறார்..!’’ சிவகாமி தன் புருவங்களை அகல விரித்தாள்.
‘‘இதில் ஆச்சர்யப்பட என்ன இருக்கிறது சிவகாமி...’’ சோழ மன்னர் சிரித்தார். ‘‘எந்த நாட்டுக்குச் செல்கிறார்களோ அந்த தேசத்தின் மொழியைக் கற்பது சீனர்களின் வழக்கம். அதனால்தான் அவர்களால் உலகம் முழுக்க பயணப்படவும் வணிகம் செய்யவும் முடிகிறது... கரிகாலா... நீ வனத்தைச் சுற்றிப் பார்த்துவிட்டு வா... சிவகாமியிடம் சற்று நான் பேச வேண்டும்...’’
‘‘தந்தையே... இவள்...’’

‘‘அறிவேன்! மயக்கமும் நினைவுமாக நான் படுத்திருக்கையில் இவளை நீ கைது செய்து வந்த விவரம் குறித்து வீரர்கள் பேசியதைக் கேட்டேன்... சாளுக்கியர்களின் ஒற்றர் படையைச் சேர்ந்த இவள், நம் பல்லவ மன்னரின் வளர்ப்பு மகளாக வேடமிட்டு உன் மனதை வசப்படுத்தியதையும் தெரிந்து கொண்டேன்...’’‘‘தந்தையே...’’‘‘வெளியே செல் கரிகாலா... பல்லவ மன்னர் விசாரித்து நீதி வழங்கும் வரை இவள் குற்றம்சாட்டப்பட்டவள்தான்... குற்றவாளி அல்ல... தவிர...’’ என்றபடி தன் மகனைப் பார்த்து விஷமத்துடன் புன்னகைத்தார். முன்னால் வந்த புரவி நின்றது.

இதனைக் கண்டு அடுத்து வந்த இரு புரவிகளும் நின்றன.‘‘இனி அடர் வனத்துக்குள் நுழையப் போகிறோம்... பல்லவ வீரர்கள் இங்கு நிரம்பி இருப்பதாக நம் ‘ஒற்றர் படைத் தலைவி’ தகவல் அனுப்பியிருக்கிறார்! எனவே எச்சரிக்கையாக வாருங்கள்... ஒருவேளை நான் பிடிபட்டாலும் நீங்கள் இருவரும் சென்று விடுங்கள்... நமக்கு காரியம்தான் முக்கியம்...’’ சொன்ன முதல் வீரன் தன் வலது கையை முன்னால் நீட்டினான்.

மற்ற இருவரும் அந்தக் கையின் மீது தங்கள் கைகளை வைத்தார்கள்.ஆறு கண்களும் சந்தித்தன; உறவாடின.அடுத்த கணம் முதல் வீரன் தன் புரவியின் வயிற்றை உதைத்தான். குதிரை பாய்ந்தது. மற்ற இருவரும் முதல் புரவியைப் பின்தொடர்ந்தார்கள்.இந்த மூவரின் தலைக்கு மேல் ஐந்து புறாக்கள் பறந்தன!

(தொடரும்)

கே.என்.சிவராமன்

ஓவியம்: ஸ்யாம்