கஷ்டங்கள் தீர்க்கும் ஆலயங்கள் -26



திருவள்ளூர் கனகவல்லித் தாயாரை வணங்கினால் எல்லா கஷ்டங்களும் தீரும்!

தர்மசேன மகாராஜாவின் அரசவை. மக்கள் எந்த குறையும் இல்லாமல் வாழும் மகிழ்ச்சியான விஷயத்தை மன்னனிடம் மந்திரிகள் கூறிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது அன்னம் போல நடையிட்டபடி ஒரு வஞ்சிக்கொடி அரசவைக்கு வந்தாள். அவளைக்கண்டதும் தொண்டை மண்டல மன்னன் தர்மசேனன் அளவிலா ஆனந்தம் அடைத்தான். ‘‘மகளே வசுமதி! தந்தையான என்னைப் பார்க்க அரசவைக்கே வந்துவிட்டாயா? சரி, சொல் மகளே, என்ன சங்கதி?’’ மன்னனின் குரலில் அவன் மகள் வசுமதி மீது அவனுக்கு இருந்த அன்பு நன்றாகத் தெரிந்தது.

‘‘அப்பா! எனக்கு அரண்மனையில் இருந்து இருந்து அலுத்து விட்டது. சற்று நந்தவனம் சென்று தோழியர்களோடு விளையாடிவிட்டு வரவா?’’ கெஞ்சியது மன்னன் பெற்ற பைங்கிளி. தன் ஆசை மகளுக்கு மறுப்பு சொல்லியே பழக்கமில்லாத மன்னன், ‘‘சென்று உல்லாசமாக விளையாடிவிட்டு வா மகளே!’’ என்று உத்தரவு தந்தான்.  

அனுமதி கிடைத்ததுதான் தாமதம், வசுமதி உடனே மான் போலத் துள்ளிக்கொண்டே விளையாடச் சென்றாள். அவள் தனது கண்னை விட்டு மறையும் வரை மன்னன் அவளைப் பார்த்துக்கொண்டே இருந்தான்.இதைக் கண்ட அமைச்சர், ‘‘பருவமடைந்து பூத்துக் குலுங்கும் நம் இளவரசியை மணக்கப் போகும் பாக்கியசாலி யாரோ... அவன் எங்கிருக்கிறானோ..? ஒன்றும் விளங்கவில்லை மன்னா!’’ என்று தன் மனதில் பட்டதைச் சொன்னார்.

  ‘‘என் மகள் யாரை விரும்பினாலும் அவனை தாராளமாக அவள் மணக்கலாம் என்று நான் அறிவித்துவிட்டேனே! எனவே அவளது வரனை அவள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். என் பயம் எல்லாம் ஒன்றுதான். திருமணமானால் என் அன்பு மகள் வசுமதியை நான் பிரிய நேரும். அந்தப் பிரிவை எப்படித் தாங்கப் போகிறேன் என்றே எனக்கு விளங்கவில்லை.

அவள் பிறந்தது முதல் இன்றுவரை நான் உணவருந்தாமல் கூட இருந்ததுண்டு... ஆனால், அவள் முகத்தைக் காணாமல் இருந்ததில்லை...’’  மன்னனின் கண்களில் லேசாகக் கண்ணீர் கசிந்தது. ‘‘கவலையை விடுங்கள் மன்னா! வீரராகவன் உங்களை நிச்சயம் கைவிட மாட்டான்!’’

‘‘அவனைத்தான் அமைச்சரே நானும் மலை போல நம்பி இருக்கிறேன்...’’ என்றபடி மன்னன் தன் விழிநீரைத் துடைத்துக் கொண்டான்.இது இப்படி இருக்க, வசுமதி இன்பமாக நந்தவனத்தில் தனது தோழிமார்களுடன் விளையாடிக் கொண்டிருந்தாள்.

அப்போது அந்த நந்தவனத்தின் வழியாக ஒருவன் குதிரையின் மேல் சென்று கொண்டிருந்தான். ஆளை மயக்கும் அழகான முகம் அவனுக்கு. அதில் அவன் கம்பீரத்தைப் பறைசாற்றும் முறுக்கு மீசை. அதை தனது செங்கையால் அவ்வப்போது முறுக்கி விட்டுக்கொண்டான்.

கட்டுமஸ்தான இளம் தேகம். அது அடர் கருப்பாக இருந்த போதிலும் பொன்னைப் போல மின்னியது. இடையில் அவன் சொருகியிருந்த உடைவாள், என்னை வென்றவர் யாரும் இல்ைல என்று சொல்லாமல் சொன்னது. அவனது குதிரை சரியாக வசுமதி விளையாடும் இடத்திற்கு வந்து நின்றது.
குதிரையில் இருந்த அவன் வசுமதியை நோக்கினான். வசுமதியும் அவனை நோக்கினாள்.

இருவரும் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டு சிலை போல வெகு நேரம் நின்றனர். நொடிகள் நிமிடங்களாகி உருண்டோடின. குதிரை வீரனே முதலில் மவுனத்தை உடைத்தான். ‘‘நீ யாருடைய மகள்? உன்னைப் போன்ற ஓர் அழகியை இதுவரை நான் கண்டதே இல்லையே...’’
‘‘...’’‘‘ம்... சொல் பெண்ணே...’’

வெட்கத்தில் ஆழ்ந்திருக்கும் வசுமதியிடமிருந்து பதில் வராது என்று உணர்ந்த அவளது தோழி அந்த வீரனுக்கு பதில் தர ஆரம்பித்தாள்.‘‘இவர்தான் தொண்டை நாட்டின் இளவரசி வசுமதி நாச்சியார். மாமன்னர் தர்மசேனரின் அருமைப் புதல்வி!’’

‘‘அழகிகளின் அரசி அரசர்களின் அரசர் வீட்டில் வளர்வதில் வியப்பொன்றும் இல்லை. சுந்தரி! காலம் முழுவதும் உன்னை என் மார்பிலே வைத்துத் தாங்கும் வரம் எனக்குத் தருவாயா?’’ என்று அந்த வீரன், வசுமதியைக் கேட்டவுடன் வெட்கத்தினால் முகத்தை மூடிக்கொண்டு வசுமதி ஒரே ஓட்டமாக ஓடினாள்.

ஆனால், அவளது தோழிகள் அந்த வீரனை விடுவதாக இல்லை. ‘‘இது என்ன அய்யா விந்தை? அனைவரும் கையில் வைத்துத் தாங்குகிறேன் என்றுதான் சொல்வார்கள். ஆனால், நீயோ மார்பில் வைத்துத் தாங்குவேன் என்கிறாயே?’’

வசுமதியின் தோழிகள் கேட்டதற்கு மர்மப்புன்னகை பூத்துக் கொண்டே அந்த இடத்தை விட்டு நகர்ந்தான் அந்தக் குதிரை வீரன். பிறகென்ன... அன்று முதல் வசுமதி தவறாமல் அந்த நந்தவனத்திற்கு விளையாட வருவாள். அந்த வீரனும் அவளைக் காண வருவான். இருவருக்குள்ளும் காதல் மலர்ந்து விருட்சம் போல வளர்ந்தது.

மன்னன் இந்த விஷயத்தை அறிந்ததும் மகளின் விருப்பப்படியே மணமுடிக்க தீர்மானித்தான். மகளை அழைத்து நாளை வரனை வீரராகவன் கோயிலில் சந்திக்க ஏற்பாடு செய்யச் சொன்னான். வசுமதியும் அகமகிழ்ந்து ஏற்பாடுகளைச் செய்தாள். பொழுது விடிந்தது. தர்மசேன மன்னன் மருமகனைக் காண ஆலயத்திற்குள் பிரவேசித்தான். தந்தையை, தான் காதலிக்கும் வீரனருகில் அழைத்துச் சென்றாள்.

அவனும் மன்னனுக்கு வந்தனங்கள் செய்தான். அந்த வீரணைக் கண்டதும் தன் மகளின் முடிவு சரியானதே என்று மன்னன் முடிவு செய்தான். தன் வருங்கால மருமகனின் விவரங்கள் அறிய ‘‘தங்களுக்கு எந்த ஊர்... என்ன பெயர்... தங்களது தாய் தந்தையர்கள் யார்... தாங்கள் யாரிடம் குருகுல வாசம் செய்தீர்கள்..? அனைத்தையும் அறிய என் உள்ளம் விரும்புகிறது. மறைக்காமல் சொல்லுங்கள்...’’ என்று கேட்டான் மன்னன்.

‘‘மன்னர் மன்னவா! எனக்கு பல பெயர்கள் உண்டு. ஆனால், இங்கிருப்பவர் அனைவரும் என்னை ராகவன் என்று அழைப்பார்கள். எனக்கு தாய் தந்தை என்று யாரும் இல்லை. நான் ஓர் அனாதை. ஆனால், எனக்கு தொண்டர்கள் ஏராளம்!நான் யாரிடமும் குருகுல வாசம் செய்யவில்லை. ஆனால், என்னிடம் பாடம் பயில்பவர்கள் அநேகம்!’’ என்றபடி மீண்டும் ஒரு மர்மப் புன்னகை பூத்தான் அந்த வீரன்.

இந்த பதில்களைக் கேட்டு மன்னன்  வாயடைத்துப் போனான். அதைக் கண்ட வீரன், “மன்னா! வசுமதியைத் தவிர எனக்கென்று யாருமில்லை. ஆகவே, திருமணம் நடந்து முடிந்தபின் இங்கேயே வீட்டோடு மாப்பிள்ளையாகத் தங்கிவிடலாம் என்றிருக்கிறேன்...’’ என்று கம்பீரமாகச் சொன்னான்.

கடைசியாக அவன் சொன்ன வார்த்தைகளைக் கேட்ட மன்னன் ஆனந்தத்தின் உச்சிக்கே சென்றான். உடன் திருமணத்திற்கு சம்மதித்தான்.
சுபயோக சுபதினத்தில் திருமணமும் இனிதே நடந்து முடிந்தது.

திருமணம் முடிந்ததும் புதுமணத் தம்பதிகளை அழைத்துக் கொண்டு மன்னன் வீரராகவ பெருமாள் சன்னதிக்கு வந்தான். ‘‘மருமகனே! இவர்தான் எங்கள் குல தெய்வம் வீர ராகவன்! இவரை நன்கு வேண்டிக்கொள்ளுங்கள்....’’இதைக் கேட்ட ராகவன் என்ற அந்த வீரன் வசுமதியின் தளிர்க்கைகளைப் பிடித்துக்கொண்டு சன்னதிக்குள் பிரவேசித்தான்.
கண்ணிமைக்கும் நேரத்தில் இருவரும் கற்பூரம் போல கரைந்து மறைந்து போனார்கள்!

பார்த்துக் கொண்டிருந்த மன்னனுக்கு ஒன்றும் விளங்கவில்லை. ‘‘கண்ணே வசுமதி, மகனே ராகவா...’’ என்று புலம்ப ஆரம்பித்து விட்டான். அப்போது, ‘‘தர்மசேன வேந்தே! உன் பக்தியை மெச்சி என் மனைவி திருமகளையே உனக்கு மகளாக பிறக்கச் செய்தேன். வசுமதியாக உன் இல்லத்தில் இருந்தது சாட்சாத் மகாலட்சுமிதான்! இனி உன் மகளாகப் பிறந்த அவள் கனகவல்லி என்ற பெயரோடு இங்கு எழுந்தருளி, வையகத்தின் துயர் அனைத்தையும் தீர்த்து வைப்பாள்! ’’ என்ற மாதவனின் குரல் மட்டும் கேட்டது.

அதைக் கேட்டு தர்மசேன மன்னன் அளவிலா ஆனந்தம் அடைந்தான்.‘‘இப்படி பூமில வசுமதியா பிறந்து வளர்ந்து பெருமாளை கல்யாணம் செய்துகிட்டவங்கதான் கனகவல்லித் தாயார். இன்னிக்கும் யார் என்ன கஷ்டம்னு திருவள்ளூருக்குப் போய் நின்னாலும் மாறாத தாய்ப் பாசத்தோட அதை தீர்த்து வைக்கறா அந்த தாயார்...’’ நாகராஜனின் கைகள் அவரையும் அறியாமல் குவிந்திருந்தன.

‘‘சூப்பர் தாத்தா! இந்தக் கால ஹீரோ மாதிரி அப்பவே பெருமாள் துரத்தித் துரத்தி காதலிச்சிருக்காரு இல்ல?’’ கண்ணன் விளையாட்டாகச் சொன்னான். ‘‘அப்படி இல்ல கண்ணா! இங்க வசுமதி நாச்சியார் ஜீவாத்மா. எப்ப ஒரு ஜீவன் தன்னிலை மறந்து இந்த உலக வாழ்க்கைல மெய்மறந்து போகுதோ அப்ப பரமாத்மாவான பகவான் தானே தேடி வந்து தடுத்தாட்கொள்வார்... இதுதான் கதையோட தாத்பர்யம்!’’ நாகராஜன் புன்னகைத்தார்.
‘‘மாமா... ஒரு பதிகம் பாடி என் குழந்தையோட வயித்து வலிய போக்கி தூங்கச் செய்தீங்க இல்லையா... அது என்ன பதிகம்?’’ ஆவலுடன் கேட்டாள் கமலா.

‘‘சொல்றேன்... அதுக்கு முன்னாடி இந்தக் கேள்விக்கு பதில் சொல்லுங்க. திருவருட் பிரகாச வள்ளலாரைத் தெரியுமா உங்களுக்கு?’’‘‘ஓ தெரியுமே... ‘வாடிய பயிரைக் கண்டபோதெல்லம் வாடினேன்’னு பாடினவர்தானே?’’ கண்ணன் சட்டென்று சொன்னான்.

‘‘அவரேதான் கண்ணா. அவர் ஒரு தடவ தீராத வயித்து வலியால துடியா துடிச்சார். எந்த மருந்தும் வேலை செய்யல. அப்ப நம்ம திருவொற்றியூர் வீர ராகவர் பத்தி தெரிஞ்சி, வீர ராகவ பஞ்சகம் பாடி பெருமாள் பாதமே கதினு சரணாகதி அடைஞ்சார்.

பெருமாள் அருளால அவரோட வலி ஓடியே போய்டுச்சு! இந்த விஷயத்த சந்தோசமா வீர ராகவ பஞ்சகத்தோட கடைசி பாட்டுல அவர் பதிவு பண்றார். அந்த பதிகத்தைத்தான் நான் பாடினேன்... அதைக் கேட்டுதான் உன் குழந்தை நல்லா தூங்குது!’’

‘‘அந்த பெருமாள்தான் உங்க ரூபத்துல வந்து என் குழந்தையோட வயித்துவலியைத் தீர்த்து வைச்சிருக்கார்!’’ கையெடுத்துக் கும்பிட்டாள் கமலா. ‘‘சாதாரண விஷயத்துக்கு ஏன் பெரிய வார்த்தை எல்லாம் சொல்ற..? குழந்தை முழிச்சதும் டாக்டர்கிட்ட கூட்டிக்கிட்டு போ. சரியா?’’ என்றார் நாகராஜன்.

(கஷ்டங்கள் தீரும்)

ஜி.மகேஷ்

ஓவியம்: ஸ்யாம்