உலகக் கோப்பை கிரிக்கெட்டின்# முப்பெரும் தேவியர்!அலிசன் மிச்செல், இசா குஹா ,மெலனி ஜோன்ஸ்

திரைப்படத்துக்குப் பின்னணி இசை எவ்வளவு முக்கியமோ அதேபோல் கிரிக்கெட்டுக்கு வர்ணனை. ஒரு காலத்தில் டோனி கிரேக், ஜெப்ரி பாய்காட் போன்ற ஜாம்பவான்களின் வர்ணனைக்காகவே கிரிக்கெட்டை ரசித்தவர்கள் ஏராளம். வானொலியில் இவர்களின் வர்ணனையைக் கேட்கும்போது மைதானத்தில் நேரடியாக கிரிக்கெட் மேட்ச்சை பார்த்த அனுபவம் கிடைத்தது.

விஷயம் இதுவல்ல.கடந்த வாரம் இங்கிலாந்தில் 12வது உலகக் கோப்பை கிரிக்கெட் திருவிழா கோலாகலமாக ஆரம்பித்து ஜெட் வேகத்தில் போய்க் கொண்டிருக்கிறது. கிரிக்கெட் வீரர்களை விட புதிதாகக் களமிறங்கியிருக்கும் மூன்று பெண் வர்ணனையாளர்கள்தான் ரசிகர்களின் மனதைக் கொள்ளையடித்து சிக்ஸராக விளாசிக் கொண்டிருக்கிறார்கள்.

இசா குஹா, மெலனி ஜோன்ஸ், அலிசன் மிச்செல் என்ற அவர்களின் பெயர்களே போதையூட்டுகிறது!

மெலனி ஜோன்ஸ்: இங்கிலாந்தில் பிறந்து ஆஸ்திரேலியாவில் குடியேறி ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணியில் இடம்பிடித்த வீராங்கனை மெலனி ஜோன்ஸ்.

வலது கை ஆட்டக்காரரான இவர் ஐந்து ஆண்டுகளிலேயே கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார். வர்ணனையின் மீதான ஆர்வத்தால் ஸ்போர்ட்ஸ் சேனல்களில் நிருபராக சில காலம் பணியாற்றினார்.

ஐபிஎல் போட்டிகளில் மெலனியின் திறமையைப் பார்த்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் வர்ணனை செய்வதற்கான வாய்ப்பு தேடி வந்தது. கிடைத்த வாய்ப்பை கச்சிதமாகவே பயன்படுத்தி வருகிறார் மெலனி.

இசா குஹா: இங்கிலாந்தில் பிறந்து வளர்ந்த இசா, 16 வயதிலேயே சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாட ஆரம்பித்துவிட்டார். வலது கை வேகப்பந்து வீச்சாளரான இவர், 2008ம் வருடம் ஐசிசியின் பந்து வீச்சாளர் தர வரிசையில் நம்பர் ஒன் இடத்தில் இருந்தார். அதே வருடம் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக 14 ரன்கள் விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளைத் தூக்கியது இவரது பெஸ்ட்.

தவிர, 2009ம் ஆண்டு இங்கிலாந்து பெண்கள் அணி உலகக் கோப்பையைத் தட்டியபோது அதன் முதுகெலும்பாக இருந்தவர் இசாதான். 2012ல் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற இசா, ‘ஸ்கை ஸ்போர்ட்ஸ்’ சேனலில் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணிபுரிந்து வருகிறார். அத்துடன் பிபிசி இணையதளத்தில் விளையாட்டு சம்பந்தமான கட்டுரைகளையும் எழுதி வருகிறார். நடந்து கொண்டிருக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இசாவின் ஸ்டைலான வர்ணனையும் கவர்ச்சியான குரலும் கிரிக்கெட் ரசிகர்களைக் கட்டிப்போட்டுள்ளது.

அலிசன் மிச்செல்: ஹாக்கி, டென்னிஸ், அத்லெட்டிக்ஸ் என எல்லா விளையாட்டுகளிலும் புகுந்து விளையாடும் அலிசன், ஒரு கிரிக்கெட் பிளேயர் அல்ல! உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் கூட இவர் விளையாடியது இல்லை!

ஆனால், பந்து வீச்சாளர்கள் வீசும் ஒவ்வொரு பந்தையும், பேட்ஸ்மேன்கள் அடிக்கும் ஒவ்வொரு ரன்னையும், மைதானத்தில் அரங்கேறும் ஒவ்வொரு சம்பவத்தையும் துல்லியமாக, சுவாரஸ்யமாக அலிசனால் வர்ணிக்க முடியும்.

இவரின் வர்ணனையைக் கேட்டாலே போதும். தொலைக்காட்சியில் மேட்ச் பார்க்க வேண்டிய அவசியமில்லை. உலகின் புகழ்பெற்ற ஸ்போர்ட்ஸ் சேனல்களில் சிறப்பு ஒலிபரப்பாளராகவும், 2007ம் வருடத்திலிருந்து சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் தொழில்முறை வர்ணனையாளராகவும் பணிபுரிந்து வருகிறார்.

த.சக்திவேல்