மின்சாரமோ வேறு எந்த வசதியுமோ இல்லாமல் வாழும் Ph.D பேராசிரியர்!



ஆச்சர்யமாக இருக்கிறது. ஹேமா ஷனேவின் வயது 79. தாவரவியல் படிப்பில் டாக்டரேட் வாங்கியவர். கல்லூரியில் பேராசியராகப் பணிபுரிந்தவர். அப்படிப்பட்டவர் சொகுசாக குறைந்தபட்சம் டபுள் அல்லது டிரிபுள் பெட்ரூம் ஃப்ளாட்டில் வாழ்வார் என்றுதானே நினைக்கிறீர்கள்..?இல்லை. வெகு வெகு சாதாரணமான வீட்டில்தான் ஹேமா ஷனே வசிக்கிறார்.

சரி... எளிமையை, தானே ஹேமா ஷனே தேர்வு செய்திருக்கலாம். ஆனால், இவர் வீட்டில் குறைந்தபட்ச ஃபர்னிச்சர்ஸ் இருக்கும்தானே என்று கேட்கிறீர்களா..?இல்லை. எதுவுமே இல்லை. மின்சாரமோ வேறு எந்த வசதியுமோ இல்லாமல்தான் வாழ்ந்து வருகிறார்!
புனேவின் புத்வர்பெத் பகுதியில் வசித்து வரும் ஹேமா ஷனே, சாவித்ரிபாய் புலே பல்கலைக்கழகத்தில் தாவரவியல் பிரிவில் டாக்டர் பட்டம் வாங்கியுள்ளார். பிறகு, புனேவில் கர்பானே கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளார்.

சிறுவயது முதலே இவரது குடும்பத்தில் ஏழ்மைதான். கஷ்டப்பட்டு படித்துள்ளார். மின்சார இணைப்பு இல்லாமலேேய வளர்ந்துள்ளார். பிறகு மின்சாரம் இவருடைய வீட்டுக்கு வழங்கப்பட்டாலும் ஏனோ அதை இவர் விரும்பியதில்லை. இன்றுவரை பயன்
படுத்தியதுமில்லை.இயற்கை மற்றும் பறவைகள் மீது காதலும் நேசமும் கொண்ட ஹேமா ஷனே, தன் வாழ்க்கையையே இவற்றுக்காக அர்ப்பணித்துள்ளார் என்பதுதான் ஹைலைட்.

உணவு, உடை, இருப்பிடம் மட்டுமே மனிதர்களுக்கு முக்கியம்; அவசியம். தொழில்நுட்பக் கருவிகளான செல்போனோ மின்சாரமோ அல்ல என்பது இவர் கொள்கை! இயற்கை மீது காதல் வயப்பட்டதால் தன்னிடம் இருந்த சிறிய வீட்டை தனது செல்லப்பிராணிகளுக்கும், பறவைகளுக்கும் எழுதி வைத்துவிட்டார்!

சுற்றி இருப்பவர்கள் பலவிதமாக இவரையும் இவரது வாழ்க்கையையும் விமர்சித்தபோதும் எதையும் தன் காதில் இவர் போட்டுக் கொள்ளவில்லை. தானுண்டு தன் வீடு உண்டு, தன் வீட்டில் சுதந்திரமாக உலாவும் பறவைகளுண்டு என வாழ்ந்து வருகிறார்!            
 

காம்ஸ் பாப்பா