பகூத் அச்சா மாலும் ஹை!



கொஞ்சம் லேட்தான். ஆனால், லேட்டஸ்ட்டாக என்ட்ரி ஆகியிருக்கிறார் நித்யா மேனன்.

யெஸ். முதன்முறையாக ‘மிஷன் மங்கல்’ படத்தின் மூலம் பாலிவுட்டில் கால் பதிக்கிறார். அக்‌ஷய்குமார் தயாரித்து நடித்து வரும் அந்தப் படத்தில் வித்யாபாலன், சோனாக்‌ஷி, டாப்ஸியுடன் நித்யா மேனனும் கைகோர்த்திருக்கிறார். இந்திய விண்வெளி ஆய்வு மையத்தால் செவ்வாய் கிரகத்தை ஆய்வு செய்ய வெற்றிகரமாகச் செலுத்தப்பட்ட ஆளில்லாத விண்கலம்தான் ‘மங்கல்யான்’. அதைப்பற்றிய படமாக ‘மிஷன் மங்கல்’ உருவாகி வருகிறது.
இதற்கு முன்னர் மலையாளத்தில் நித்யா நடித்த ‘பிராணா’, தமிழ், தெலுங்கு, கன்னடம் தவிர இந்தியிலும் ரிலீஸ் ஆனது. அந்த ‘பிராணா’வைத்தான் தன் முதல் இந்திப்படம் என நினைத்து இவர் மகிழ்ந்ததுண்டு!

இந்நிலையில் நேரடி இந்திப் படம் கிடைக்கவே நித்யா ஹேப்பியோ ஹேப்பி! ஏனெனில் நித்யாவுக்கு ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னட மொழிகள் தவிர இந்தியும் ‘பகூத் அச்சா மாலும் ஹை’! ஸோ, ‘மிஷன் மங்கல்’ டப்பிங்கையும் அவரே பேசஇருக்கிறார்.

‘‘என் படங்கள்ல என் கேரக்டருக்கு நானே பேசிடணும்னு நினைப்பேன். அப்பதான் என் நடிப்பு முழுமை பெறும்னு நம்பறேன். கலைக்கு மொழி தடையா இருக்கக் கூடாது. மொழி தெரியறப்பதான் கேரக்டரை இன்னும் உள்வாங்கி உணர்வுகளைப் பிரதிபலிக்க முடியும். அதனாலதான் முடிஞ்சவரை எல்லா லேங்குவேஜையும் கத்துக்கறேன்!’’ ஃப்ரெஷ் பொக்கே புன்னகையில் மின்னுகிறார் நித்யா மேனன்.

இதனாலதான் தமிழ்ப் பெண் மாதிரியே பேசறீங்களா?

இதுக்கு எங்கப்பாவுக்குதான் தேங்க்ஸ் சொல்லணும். சின்ன வயசில இருந்தே என்னைச் சுத்தி இருக்கறவங்க பேசற மொழியை பேசிடுவேன். நாங்க பெங்களூர்ல வசிச்சாலும் எங்க வீட்ல மலையாளத்தை விட தமிழ்லதான் நல்லா பேசுவோம். அப்பா ரொம்ப அழகா தமிழ் பேசுவார். யாராலும் அவரை மலையாளினு சொல்ல முடியாது. அதுவே அவர் மலையாளம் பேசினா, ‘தமிழா நீங்க’னு கேட்பாங்க! அம்மா பாலக்காடு. அவங்களுக்கும் தமிழ் வரும்.

ஆனா, நான் கன்னட ஸ்கூல்லதான் படிச்சேன். ஸோ, கன்னடம் ஈஸியாகிடுச்சு. தெலுங்குல முதன்முதல்ல நடிச்சப்ப நானே டப்பிங் பேசினேன். அதுக்கு எக்கச்சக்க பாராட்டு கிடைச்சது. அந்த உற்சாகத்தோடு முறைப்படி தெலுங்கு கத்துக்கிட்டேன். எந்த இண்டஸ்ட்ரில நடிச்சாலும் அந்த மக்களோடு பேசறப்ப அவங்க தாய்மொழிலதான் பேசணும்னு விரும்புவேன்.

ஏன் தமிழ்ப் படங்கள்ல அதிகம் நடிக்கறதில்ல..?

உண்மையை சொல்லணும்னா ரெஸ்ட்டே இல்லாம ஓடிட்டு இருக்கேன். தமிழ்ல மட்டும் கவனம் செலுத்தினா நிறையப் படங்கள் பண்ணியிருப்பேன். ஆனா, இது என் ஏரியா... என் இண்டஸ்ட்ரீனு ஃபோக்கஸ் பண்ணிக்காம ஓடிட்டிருக்கேன். மல்லுவுட், சாண்டல்வுட், டோலிவுட்னு பல லாங்குவேஜிலும் படங்கள் பண்ணிட்டுத்தான் இருக்கேன். வருஷத்துக்கு நாலு படங்களாவது பண்ணிடறேன். இப்பக்கூட ‘பாகுபலி’ எஸ்.எஸ்.ராஜமவுலி, மிஷ்கின், பிரியதர்ஷன் படங்கள்ல நடிச்சுட்டு இருக்கேன்.

இங்க ரெண்டு வகை சினிமா இருக்கு. வசூலைக் குவிக்கணும்... பணம் சம்பாதிக்கணும்னு நினைச்சு எடுக்கற சினிமா ஒரு வகை. இன்னொரு வகை சினிமாவை ஸ்கிரிப்ட்தான் முழுக்க முழுக்க முடிவு பண்ணும். இந்த ஸ்கிரிப்ட் ஒன்லி படங்களுக்கு அதிக முக்கியத்துவம் தரேன்.   
டோலிவுட் பட விழாக்கள்ல மேடைலயே பாடி அசத்தறீங்களே..?

பாடப் பிடிக்கும். ஆக்சுவலா சின்ன வயசுல மியூசிக்லதான் ஆர்வம் இருந்தது. நடிப்புப் பக்கம் கவனம் போனதில்ல. எதிர்பாராம ஆக்டிங் சான்ஸ் வர... நடிகையாகிட்டேன்! பட், உள்ளூர பாடற ஆசை இருந்துகிட்டே இருக்கு. சொல்றதுக்கில்ல... எதிர்காலத்துல இசைத்துறைலயும் நான் சாதிக்கலாம்!  

மை.பாரதிராஜா