நியூஸ் வியூஸ் - வாயாலே வடை சுடுறதுன்னா இதுதான்!‘சரஸ்வதி சபதம்’ படத்தில் வாய் பேச முடியாத சிவாஜியின் நாக்கில் சூலம் கொண்டு எழுதுவார் சரஸ்வதி. அதன்பிறகு மடை திறந்த வெள்ளமாக ‘அகர முதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி...’ என்று பாடி ரசிகர்களை பரவசப்படுத்துவார் சிவாஜி.ஐந்து ஆண்டுகளாக பத்திரிகையாளர்களை சந்திப்பதையே தவிர்த்து வந்த இந்தியப் பிரதமரின் நாக்கிலும் சூலத்தால் ஏதோ எழுதியிருக்கிறார் போல சரஸ்வதி. தேர்தல் நடந்து வரும் வேளையில் பிரதமர் அடுத்தடுத்து பேட்டிகளாக கொடுத்துத் தள்ளிக் கொண்டிருக்கிறார்.

சில நாட்களுக்கு முன்புதான் நடிகர் அக்‌ஷய்குமாருக்கு பேட்டி அளித்தார். இப்போது தொலைக்காட்சி நிறுவனம் ஒன்றுக்கும் பேட்டி கொடுத்திருக்கிறார்.ஆனால் -‘சரஸ்வதி சபதம்’ சிவாஜி போல பாடி, நாட்டு மக்களை பரவசப்படுத்தவில்லை பிரதமர்.

மாறாக -வாய்க்கு வந்ததையெல்லாம் அடித்து விடுகிறார் என்று நெட்டிஸன்களால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாகி இருக்கிறார். தேர்தல் நடைபெறும் வேளையில் தங்கள் பிரம்மாஸ்திரமே இப்படி ‘புஸ்’ஸாவதைக் கண்டு பதைபதைத்து நகம் கடித்துக் கொண்டிருக்கிறார்கள் பாஜகவினர்.

டிவி சேனல் பேட்டியில் பிரதமர் சொன்ன இரண்டு விஷயங்கள் கேலிக்கு உள்ளாகி இருக்கின்றன.

1. பாலகோட் தாக்குதல் நடந்த தினத்தில் வானிலை மோசமாக இருந்தது. தாக்குதல் தேதியை மாற்ற வேண்டுமென நிபுணர்கள் பேசிக் கொண்டிருந்தார்கள். மேகக்கூட்டம் இருந்ததால் பாகிஸ்தான் ராடாரின் பார்வையிலிருந்து தப்பிக்க முடியுமென நான்தான் யோசனை கூறி தாக்குதல் நடத்த உத்தரவிட்டேன்.

2. 1987 - 88ம் ஆண்டுகளிலேயே நான் டிஜிட்டல் கேமிரா பயன்படுத்தினேன். அப்போது அத்வானியை படம் பிடித்து, அந்தப் படத்தை டெல்லிக்கு ஈமெயிலில் அனுப்பி வைத்தேன். அன்றைய தினமே டெல்லியில் தன்னுடைய போட்டோ கலரில் வெளியானதைப் பார்த்து அத்வானி ஆச்சரியம் அடைந்தார்.

சாதாரணமாக வாசித்தால், இதில் போய் கேலி செய்ய என்ன இருக்கிறது என்று தோன்றலாம்.‘ராடார்’ என்கிற தொழில்நுட்பத்தின் அடிப்படையே புரியாமல், இந்தியா போன்ற மிகப்பெரிய நாட்டை ஐந்து ஆண்டுகள் ஆண்டவர் பொறுப்பில்லாமல் ராணுவத்துக்கு உத்தரவிட்டு, அதையும் பெருமையாக பேட்டியில் சொல்லியிருக்கிறாரே என்று நறநறவென்று பல்லைக் கடிக்கிறார்கள் விவரம் அறிந்தோர்.

Radio Detection and Ranging என்பதின் சுருக்கமே Radar ஆகும். மின்காந்த அலைகளை பயன்படுத்தி விமானங்கள், கப்பல்கள், மோட்டார் கவச வாகனங்கள் உள்ளிட்டவற்றின் நடமாட்டம், திசை, வேகம் போன்றவற்றை ராடார் மூலமாக ராணுவங்கள் கணித்து, அதற்கேற்ப தற்காப்பு யுக்திகளை மேற்கொள்வது இரண்டாம் உலகப்போரிலிருந்து வழக்கம் ஆகியிருக்கிறது.

ராணுவத்துக்கு மட்டுமின்றி ராடார் தொழில்நுட்பம் பல்வேறு துறைகளுக்கும் பயன்படுகிறது. உதாரணத்துக்கு ராடார் மூலமாக கடலில் உருவாகும் புயல் உள்ளிட்டவற்றின் போக்கையும் கண்காணிக்கிறார்கள். புயல் உருவாவது, நகரும் திசை, மழை மேகங்கள் போன்றவற்றை துல்லியமாக கணிக்க ராடார் தொழில்நுட்பம் பயன்படுகிறது.

அவ்வளவு ஏன்?

வெள்ளி கிரகத்தின் நிலப்பரப்பைப் பற்றிய தெளிவுக்கு நாம் வருவதற்கே கூட ராடார் இமேஜிங்தான் பயன்பட்டது.அப்படியொரு துல்லியமான தொழில்நுட்பத்தை, மேகத்தை வைத்து மறைத்து ஏமாற்ற முடியுமென ஒரு பிரதமர் ராணுவத்துக்கே யோசனையாகக் கூறியிருக்கிறார் என்றால், இது எவ்வளவு கேலிக்குரிய விஷயம்?

நிஜமாகவே பிரதமர் சொன்ன யோசனையை, உத்தரவை ஏற்றுத்தான், மேகங்களை அரணாக வைத்து ‘ராடாரை ஏமாற்றி’ பாலகோட் தாக்குதல் நடந்திருக்கிறது என்றால்…? நினைக்கவே விபரீதமாக இருக்கிறது.“விமானி அபிநந்தன் பாகிஸ்தானில் சிக்கிக் கொண்டதற்கு அதுவே காரணமாக இருந்திருந்தால்…?” என்று நெட்டிஸன்கள் பிரதமரை சமூகவலைத்தளங்களில் வறுத்தெடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.

ஒரு தொழில்நுட்பம் குறித்து நமக்குத் தெரியாதது ஒன்றும் தவறல்லதான். எல்லாருமே எல்லாத் துறையிலும் நிபுணர்களாக இருந்துவிட முடியாது.
ஆனால் -ஒரு பிரதமர் இப்படியா தன்னுடைய அறியாமையை உலகமறிய பறைசாற்றுவார்? அதிலும் மிகவும் சென்சிட்டிவ்வான
இராணுவம் தொடர்பான பிரச்னை ஒன்றில்.சரி, அடுத்த விஷயத்துக்கு வருவோம். அதுதான் டிஜிட்டல் கேமிராவால் அத்வானியை படம் பிடித்து டெல்லிக்கு ஈமெயில் அனுப்பிய கதை.

1987 - 88ம் ஆண்டுகளில் இது நடந்ததாக பிரதமர் சொல்கிறார்.கம்ப்யூட்டர்கள் பரவலான பின்புதான் டிஜிட்டல் கேமிரா என்பதற்கான தேவையே உருவாகிறது. வணிகரீதியாக தொண்ணூறுகளின் மத்தியிலிருந்துதான் டிஜிட்டல் கேமிராக்கள் புழக்கத்துக்கு வந்தன.

அப்படியிருக்க டிஜிட்டல் கேமிராக்கள் இந்தியாவில் புழக்கத்துக்கு வருவதற்கு ஏறத்தாழ எட்டு, பத்து ஆண்டுகளுக்கு முன்பாகவே அத்வானியை படமெடுத்து, ஈமெயிலில் தில்லிக்கு அனுப்பி, அன்றே வண்ணத்தில் பிரசுரித்து அத்வானியை ஆச்சரியப்படுத்தியதாக மோடி சொல்வது ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய். அல்லது பிரதமருக்கு வேறு ஏதோ நினைவுப்பிழை ஏற்பட்டிருக்கலாம்.

அதிலும், ஈமெயிலில் அனுப்பினேன் என்று சொல்லுவது சாத்தியமற்றது.ஏனெனில் 87 - 88ம் ஆண்டுகளில் யாருக்கும் ஈமெயில் முகவரியே கிடையாது. இந்தியாவில் இணையசேவை என்பதே 1995 ஆகஸ்ட்டில் இருந்துதான் நடைமுறைக்கு வருகிறது. அதற்கும் முன்பாக educational research network என்கிற பெயரில் பெரிய கல்வி ஆய்வு நிறுவனங்களுக்கு மட்டும் தங்களுக்குள் தொடர்புகொள்ள ஒருமாதிரியான இணையம் போன்ற ஒரு நெட்வொர்க் இருந்திருக்கிறது.

ஆய்வு மாணவராக இல்லாத பட்சத்தில் நிச்சயமாக மோடியால் அந்த நெட்வொர்க்கை பயன்படுத்தி இருக்க முடியாது. அப்படியே பயன்படுத்தி இருந்தாலும் டிஜிட்டல் கேமிராவால் எடுக்கப்பட்ட அத்வானியின் படத்தை, டெல்லியில் இருந்த யாருக்கோ ஈமெயில் அனுப்பியிருக்க வாய்ப்பே இல்லை. ஏனெனில், அப்போது டிஜிட்டல் கேமிராவும் பயன்பாட்டில் இல்லை.

ஒருவேளை பிரதமர் வருடங்களைத் தவறாகச் சொல்கிறாரா அல்லது இப்படியொரு சம்பவம் அவரது கனவில் நடந்திருக்கிறதா என்று சொல்லத் தெரியவில்லை.ஆனால் -ஒன்றுக்கு பத்து முறை யோசித்துப் பேசவேண்டிய பொறுப்பில் இருக்கும் ஒருவர், ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று இதுபோல பேசுவது அவர் மீதான நம்பிக்கை இளைஞர்கள் மத்தியில் முற்றிலுமாக தகருவதற்கு வழிவகுக்கும்.

இப்படி ஏதாவது ஏடாகூடமாக ஆகிவிடும் என்பதற்காகத்தான் இவ்வளவு நாட்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்துப் பேசுவதை மோடி தவிர்த்தார் என்று இப்போது எதிர்க்கட்சிகள் இதை சாதகமாக எடுத்துக் கொண்டு தேர்தல் மேடைகளில் பேசிவருகிறார்கள்.

பிரதமர் மோடி, தன் ஆட்சிக்காலத்தில் எடுத்த பணமதிப்பிழப்பு போன்ற நடவடிக்கைகளின் பின்னாலும் இப்படிப்பட்ட கேலிக்குரிய ஏதேனும் காரணங்கள் இருக்கலாமோ என்று பத்திரிகைகள் கிண்டலாக கட்டுரைகள் எழுதிவருகின்றன.முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் போன்றவர்கள், ஏன் தங்கள் ஆட்சிக்காலம் முழுக்க பேசாமலேயே காலம் கடத்தினார்கள் என்கிற ‘ராஜதந்திரம்’ இப்போதுதான் புரிகிறது.இவ்வளவு நாட்களாக பேட்டி கொடுக்காத நீங்கள், இந்த மாதமும் அந்த விரதத்தை தொடர்ந்திருக்கலாம் பிரதமரே!